பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…


இப்படி சந்தோஷமா குதிப்பவர்கள் எத்தனையோ பேர். (நானும் இந்த கும்பலில் ஒருவன் தான்). அனால் வீடு இருக்கும் லட்சனத்தைப் பாத்தா… பொண்டாட்டி இல்லாத வீடு வீடே இல்லை என்று தான் சொல்லத்தோணும்.

வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு ஆளு வேணாமா???… வழக்கமான இந்த கேள்விக்கு நானும் இதுக்கெல்லாமா ஆளு வைப்பாக??? நாம விளக்கு ஏத்தினா ஆகாதா என்று… நம்மால் தீ கொளுத்தப் படுகிறது… குடும்ப விளக்கால் அது ஏற்றப்படுது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் குடுத்த வரம் என்கிறார்கள்…. மனைவிமார்களின் மத்தியில் இப்படி சொல்லிக் கொள்வார்களோ…!!! எப்படி??

புருஷன் அமைவதெல்லாம் பிசாசு போட்ட பிச்சை என்று…

ஒரு ராஜஸ்தானியருடன் கப்பல் பயணம் சமீபத்தில். ஏன் குடும்பம் அங்கேயே வைத்து விட்டு நீங்க மட்டும் தனியா கஷ்டப்படறீங்க என்று கேட்டேன்.. (நான் மட்டும் கஷ்டப்பட…அவர் ஜாலியா எப்படி திரியலாம்?? – யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்… இது தானே நம்ம பாலிசி)

ஆனா சூப்பரா ஒரு பதில் வந்தது.. அவர்களும் இங்கு வந்து விட்டால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை யாரு கவனிப்பாக??

அட… இப்படி ஒரு சேதி இருக்கா??? ராஜஸ்தானியர்களின் பிற்ப்பின் நோக்கமே விருந்தாளிகளை உபசரிப்பது தான் என்கிறார். நகரங்கள் நரகமாய் ஆன பின்னரும் கூட இன்னும் புறநகரின் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் அதைக் காணலாம் என்றார்.

நானும் என் பங்குக்கு விருந்தோம்பல் பத்தி வள்ளுவர் சொன்னதையும், ராஜாவே ஒரு புலவருக்கு சாமரம் வீசிய கதையும் சொல்லி தமிழருக்கு வக்காலத்து வாங்கி வைத்தேன்.

வாடகைக்கு வீடு கிடைப்பதிலிருந்து, கல்யாண வீட்டில் ஆசி வழங்கும் வைபவம் வரை.. கல்யாணம் ஆன ஆட்களுக்கு நல்ல மரியாதை தான்.

இந்த ஊரு இன்னுமா கல்யாணம் ஆன நம்மளை மாதிரி ஆட்களை நல்லவங்கன்னு நம்பிகிட்டு இருக்கு?? அய்யோ…அய்யோ…

அப்புடியே யொசிச்ச படி காலங்காத்தாலே வாக்கிங் போனா…. என்ன வாங்கிங் போறீயான்னு ஒரு கேள்வி பின்னாடி இருந்து… நான் கடுப்பா திரும்பிப் பாத்தா… திருவாளர் கம்பர்..

என்ன ரொம்ப ஜாலியா இருக்கிற மாதிரி தெரியுது??? வீட்டுக் காரி ஊரிலெ இல்லேயா???

அடப் பாவி … நம்ம வீட்டிலெ ஆளு இல்லேங்கிற விஷயம் கம்பர் வரைக்கும் தெரிஞ்சு போச்சே…!!! அய்யா.. கம்பரே.. எப்புடி இதெல்லாம்…??

கம்பர்: ஆமா.. தெருவிலெ வாக்கிங்க் போறப்பொ… தனியா பேசிட்டு போவது தெரிஞ்ச்சது.. காதுலெ புளு டூத் கைய்லெ செல் ரெண்டுமே இல்லை… கூட்டி கழிச்சி பாத்தா.. மறை கழண்ட கேசு… வீட்டிலெ ஆளு இல்லென்னு அப்படியே தெரியுது… இதுக்கெல்லாம் என்ன பெரிய யுனிவர்சிட்டிக்கா போய் படிக்கனும்???

கம்பரே… உங்க கால்லெ விழறேன்.. ஆளை உடுங்க… இல்லெ…. தெரியாமத் தான் கேக்கிறேன்… இந்த மாதிரி வில்லங்கமா கம்ப ராமாயண்த்தில் எங்காவது இருக்கா??

கம்பர்: ஏன் இல்லை… ஓடிப்போயி… வாலி வதம் ஏரியாவை தம்மடிக்காமெ… பதம்மா படி.. வெவரம் புரியும்…

வீட்டுக்கு ஒரே ஒட்டமா ஓடி தேடிப் பிடிச்சி பாத்தா..அட… இதே மேட்டர் தான்.

வாலியில் மார்பில் அம்பு… ஆனால் வாயில் ராமன் மீது அம்பு..
அப்போது வரும் வார்த்தைகள் தான் நான் செய்யும் வம்பு (கொஞ்சம் குறும்பும்)

சாதாரணமான மனைவியை வாச்சவங்களே கொஞ்ச நாள் பிரிவிலெ மரை கலண்ட கேஸா திரிவாக… (சிலர் மனைவி ஊருக்கு அனுபிட்டு கவிதையும் கட்டுரை எல்லாம் எழுதி Facebook ல் நல்ல பேரும் வாங்குறாய்ங்க..அது தனிக் கதை).. ஆனா ராமனுக்கு வாய்த்தவள்…அன்னம்… அமுதம் உயிர் போன்றவள்.. அப்பேற்பட்ட பார்ட்டி மிஸ் ஆனா மனுஷன் என்னத்துக்கு ஆவான்.??

இதெ..இதெத் தான் வாலி வாயில் வருது..

அரச தர்மம் காப்பாத்த வேன்டிய நீ இப்படி அம்பு எய்தது முறையா…

வீட்டிலெ ஆளு இல்லாத காரணம் தான் இந்த தவறான செயலுக்கு காரணமோ??? கேக்கிறார்… மொதல்ல ஒரு சின்ன பஞ்ச்சும் வைக்கிறார்.. ராமனே… ஓவியத்தில் எழுத முடியாத உருவ அழகை உடையவனே…அப்புறம் தான் கேள்வி வருது..

கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை.

நீதி: எப்பவும் கவனமா இருங்க…பொண்டாட்டி இல்லாத நேரத்தில் கூடுதல் கவனம் தேவை.