வரும்… ஆனா வராது..


வரும்… ஆனா வராது..

தமிழ் திரையுலகம் நிறைய வார்த்தைகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதில், இந்த வரும்.. ஆனா வராது என்பதும் அடக்கும். அந்த பணிகள் இப்போது மேலும் விரிவடைந்து தமிழக எல்லை ஏன் இந்திய எல்லையையும் தாண்டி போய்விட்டது.. (இந்த கொலைவெறிக்கு தில்லி, பூனே, ஹைதராபாத், கல்கத்தா, அந்தமானிலும் அதன் அர்த்தம் சொல்லி சொல்லி அலுத்துப் போய்விட்டேன்..சமீபத்தில் நிகோபாரி ஆதிவாசிகளும் கொலைவெறி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். எனக்குப் புரியலை ஏன் இந்தக் கொலைவெறி??)

அதை விடுங்க.. இந்த Facebook வந்தாலும் வந்தது கவிஞர்கள் எல்லா இடங்களிலும் பின்னிப் பெடல் எடுக்கிறார்கள். அதிலும் தமிழ் தாயகம் குரூப்பில் வரும் கவிதைகள் அசத்தலோ அசத்தல். சமீபத்தில் Magi Mahendira னின் கவிதை வரிகள் என்னை மிகவும் ஈர்த்து வருகின்றன.

இதோ அவரின் சாம்பிள் வரிகள்..:

எல்லோருக்கும்
சூரியன் வந்தால் தான் விடியல்.
எனக்கு மட்டும்
உன் கனவு முடிந்தால்
மட்டுமே விடியல்.

கனவில் கூட அவளை பிரிந்து விடாமல் வாழ நினைக்கும் வார்த்தைகள்.. சூப்பரா இருக்கு இல்லெ?? (இருக்கா.. இல்லையா??)

இப்படியே சினிமா கவிகள் எப்படியெல்லாம் யோசிச்சி இருக்காங்க என்பதை ஒரு பார்வை பாக்கலாமா??

“மானே தேனே கட்டிப்பிடி” இப்படி ஒரு பாட்டு. மானை கட்டிப் பிடிக்கலாம். ஆனா தேனை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?

இன்னும் ஒருவர் பார்க்கிறார் காதலியின் கண்ணை. அது மான் விழி போல் தெரியுதாம். (ராத்திரி இருட்டில் பார்த்திருப்பாரோ??) அன்புள்ள மான் விழியே.. என்று மட்டும் அழைத்து அதில் திருப்தி அடைந்து விடுகிறார்.
மாத்தி யோசிப்பதில் கவிஞர்களுக்கு நிகர் கவிஞர்கள் தான். அதில் பக்திப் பாடல் பாடிய கவிஞர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்!!! அப்பா..அகாசப் புளுகுடா சாமி..
திருப்பரங்குன்றம் எங்கே இருக்கு… திருத்தணி எங்கே இரூக்கு.. ஒரு வேளை இந்தக் காலத்து மொபைல் நெட்வொர்க் ஏதும் இருந்திருக்குமோ???

சிரித்துச் சிரித்து என்னை சிறையில் இட்டாய் என்றது பழைய பாடல் வரிகள். தவறு செய்தால் தானே ஜெயிலுக்குப் போவார்கள்? காதலியைப் பாத்தாலே தவறு செய்யத் தோணுமோ?? தவறு செய்தவர்கள் மட்டுமா ஜெயிலுக்குப் போகிறார்கள். தியாகம் செய்தவர்களும் தானே..!! அப்பொ.. தன் இதயத்தை காதலிக்காய் தியாகம் செய்தவர்கள் சிறைக்குப் போவார்களோ… யாருக்குத் தெரியும்?? காதல் வந்தால் எல்லாமே வரும்.

இதே சங்கதியினை தற்போதைய பாடல் வரிகள், ஒரு படி மேலே போய் “சிரிப்பால் என்னைச் சிதைத்தாய்” என்று “கோ” வில் கோபப்படாமல் வருகிறது.

கேட்டுக் கேட்டு பழகிய ஸும்பக் சலோ பாடலை என்ன தான் தமிழில் சாருக்கான் பாடினாலும் அந்த ஹிந்தி பாடல் தான் முன்னாடி வருது.. அதிலும் தேடினால் அழகான வரிகளில் ஒன்று… புன்னகை உன் தாய்மொழியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மொழிப் பிரச்சனைக்கு எவ்வளவு நல்ல தீர்வு.

கவிஞர்கள் எவ்வளவோ சொல்ல வருகிறார்கள்.. ஆனால் முடிவதில்லை.. வார்த்தைகள் பஞ்சமா?? புத்தர் வாழ்க்கையில் நடந்த சின்ன சம்பவம் அது.

ஒரு நபருக்கு ஏனோ தெரியவில்லை, புத்தரை சுத்தமாகப் பிடிக்கலை.. (ஆமா.. நான் எழுதுறதும் எல்லாருக்கும் பிடிக்கவா செய்யுது..??) புத்தர் தெருவில் நடந்து வந்த போது வேகமாய் வந்த அந்த நபர் காரித் துப்பி விட்டு நகர்ந்தார். கூட வந்த சிஷ்யப் பிள்ளைகளுக்கோ செம கடுப்பு.. கன்னா பின்னா வென்று கட்டி ஏறி விட்டார்கள் அந்த நபரை..

சாந்தமே உருவான புத்தர் அவர்களை சமாதானப் படுத்தினார்.. அமைதி.. அமைதி.. கோபப் பட வேண்டாம்..

எப்படி சாமி.. உங்க மேலே துப்பிட்டுப் போனா… எப்படி சும்மா இருக்க முடியும்?

புத்தர் மறுபடியும் சிரித்தார்: நண்பர்களே.. உங்கள் மனது அறிவு நினைப்பதை வார்த்தையால் சொல்லி விட்டீர்கள். அவர் சொல்ல வந்த சேதிக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்க வில்லை. அதற்கு சமமாய் துப்பி விட்டுச் சென்றுள்ளார். இது அவரின் கருத்து. என் கருத்துக்கு நீங்கள் எவ்வளவு மரியாதை தருகிறீர்களோ, அதே அளவு மரியாதை அந்த கருத்துக்கும் தர வேண்டும் என்றார்.. மாமனிதர்கள்… மா மனிதர்கள் தான்.

கவிஞர்களுக்கும் இந்த வார்த்தைப் பஞ்சம் வரும்.. சொல்ல வந்ததும் .. வார்த்தைகள் வராமல் சொல்லாமல் போவதும் அப்புறம் “சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன். வார்த்தையின்றித் தவிக்கிறேன் என்பதும்… கவிதைகளில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமனி ஸ்டைலில் சொல்லமுடியும்.

சாதாரன சினிமா கவிஞர்களுக்கே இப்படி என்றால், கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு எப்படி இருக்கும்?? (வந்துட்டான்யா..வந்துட்டான்யா இலக்கியத்துக்கு என்று சொல்வது காதில் கேக்குதே…)

ஊர் தேடு படலத்தில் அனுமனின் பார்வை இலங்கையின் மாளிகைகளும் அதோடு சேர்ந்த செல்வங்கள் மேலும் படுகிறது. ஆஹா… இந்திர லோகம் மாதிரி இருக்கே என்று மலைக்கிறார் மாளிகை மட்டும் பாத்து… சீ..சீ… அப்படி சொல்வதும் கம்மி தான்.. அப்பொ அது சரின்னே வச்சிகிட்டாலும், அந்த செல்வங்களுக்கு எதை வச்சி கம்பேர் செய்ய??
முடியலை.. என்று வடிவேலு பானியில்

அனுமன் சொன்னதாய் வார்த்தைகள் வராமல் கம்பர் சொல்கிறார் தன் வார்த்தை மூலமாய்.

இணைய மாடங்கள் இந்திரர்க்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின் அச்சொல்லும் மாசுண்ணும்
அனையது ஆம் எனின் அரக்கர் தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும்

அது சரி… உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னு தோணுதா??? இப்பவே சொல்லிடுங்க…

சிரிக்கும் சிவன்


இப்போதெல்லாம் எந்த வீட்டிற்கு சென்றாலும் அங்கே
வரவேற்பரையில் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் (லாஃபிங் புத்தா) சிரிக்கும் புத்தர் சிலை தான்.

விதம் விதமான வடிவங்களில் நிறங்களில் அளவுகளில் இருந்தாலும் மாறாது பொதுவாய் இருப்பது அந்த ஒரு
சிரிப்பு மட்டும் தான்.

எந்த விழாவாக இருந்தாலும் தவறாது பரிசுப்பொருள்
பட்டியலில் இருக்கவும் இந்த சிரிக்கும் புத்தர் தவறுவதில்லை. சிலர் அதனை பூஜை அறையில் வைத்து வணங்குவதையும் பாத்திருக்கேன்.

அதுவும் தோளின் மேல் பையை சுமந்திருக்கும் சிலைக்கு
வியாபார நிறுவனங்களில் நல்லாவே கிராக்கி இருக்கு.

தத்துவம் தான் என்ன? வாய் விட்டு சிரிச்சா… நோய்
விட்டுப் போகும். அட்லீஸ்ட் இந்த சிரிக்கும் புத்தா
பொம்மை பாத்தாவது சிரிச்சி நாம சந்தோஷமா இருக்க மாட்டோமா என்ற ஒரு சின்ன நப்பாசை தான்.

சிரிக்கும் புத்தா சரி… அது என்ன சிரிக்கும் சிவன்? இதென்ன
புது கலாட்டா?? என்று கேக்கீகளா?? அதுக்குத்தானே
இவ்வளவு பெரீய்ய்ய்ய்ய பீடிகையோடு ஆரம்பிக்கேன்.

வடிவேல் அய்யோ.. அய்யோ என்று கெக்கே பெக்கேன்னு சிரிக்கிற மாதிரி திருவதிகை – ங்கிற ஊரில இருக்கிற கெடில நதிக்கரையில நம்ம சிவன் சிரிக்கிறாராம்.

அதை தன்னோட அந்தக்கால மொபைல் கேமிராவில் திருநாவுக்கரசர் படம் பிடிச்சி வச்சிருக்கார்.

அது சரி… ஏன் சிவன் சிரித்தார்??

காரணம் இது தானாம். இடப்பக்கம் இருக்கும் பார்வதி சட்டென எதுக்காகவோ திரும்பி இருக்கிறார். மயில் தான் கொத்த வருதோன்னு அப்பொ சிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு கொஞ்சம் பயந்து பின் வாங்கிச்சாம். சிவன் தலை மேலே இருக்கிற சந்திரனும் ஐயயோ தன்னை விழுங்கப் போவுதோன்னு பயந்துகிச்சாம்.

அடப்பாவிகளா… எல்லாருமே எனக்குள்ளே தானே கீரீங்க…
அப்படியும் ஏன் தான் பயந்து சாகுறீங்களோன்னு
சிரிக்கிறாராம் சிவன்…

பாட்டு பாக்கலாமா:

கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுற
கிடந்த நீர்ச்சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே

மக்களே இனி சிரிக்கும் புத்தரோடு சிரிக்கும் சிவனையும் தேடிப் பிடியுங்கள்…