இந்தா.. ஒரு நிமிஷத்திலே வந்திடறேன் என்று சொல்லக் கேட்டிருப்போம். அதை விடை விரைவில் வருகிறேன் என்பவர்கள் சட்டுன்னு வருகிறேன் என்று சொல்லும் பேர்வழிகள். ஹிந்தியில் இதனை இயூ கி3யா.. இயூ ஆயா என்பார்கள். அதாவது போயிட்டு வந்திடறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் வந்துவிடுவதாய் சென்றுவிடும் போது சொல்வதுண்டு. பெரும்பாலும் டீ வாங்க சொல்லும் போது இந்த வாக்கியம் காதில் விழும். ஆனால் டீ மட்டும் என்னவோ அரை மணி நேரம் கழித்து ஆறியபடி தான் வரும்.
சரவன பவனைச் சடுதியில் வரவழைக்கும் முயற்சி கந்த சஷ்டி கவசத்தில் நடக்கிறது. இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உருகி உருகிப் பாடுகிறார் மாணிக்க வாசகர் திருவாசகத்தில். தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றிச் சொல்லும் போதும் இந்த இமை மூடும் நேரம் என்று தான் வருகிறது. (சன் டீவியின் நிரமலா பெரியசாமி, ஆகாஷ்வாணியின் சரோஜ் நாராயணசாமியின் சில உச்சரிப்புகள் இந்த நெறிக்குள் அடங்காது)
முழுவதையும் பாடலாக பாடும் பழக்கம் நம் தமிழரிடையே முன்பெல்லாம் இருந்து வந்தது. முற்றோதல் என்று அதற்க்குப் பெயர். திருவாசக முற்றோதல் பற்றி மட்டும் தான் கேள்விப்பட்டிருந்த எனக்கு, தொல்காப்பிய முற்றோதல் பற்றிய தகவல் ஆச்சரியமாய் இருந்தது. (உங்களிடம் பகிர ஒரு வாய்ப்பும் கிட்டியாகி விட்டது) இன்றைய தலைமுறையிடம் திருக்குறள் சேர ஒரே வழி அதனை ஏ ஆர் ரஹுமான் இசையமைப்பது மட்டும் தான்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என்பதை விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் பயன்படுத்திய விதம் பாத்திருப்பீங்களே…
மைசூரில் இயங்கும் மைய அரசின் செம்மொழி நிறுவனம் இந்த தொல்காப்பிய முற்றோதல் என்று ஐந்து இசைக் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது. (ரூ 250 வீதம் 1250க்குள் இசை மழையில் நனையலாம்). இதுவரையில் தொல்காப்பியத்தை தொடாதவர்களும் (நான் உட்பட) இதனை கேட்டு மகிழ நல் வாய்ப்பு. கொஞ்சம் பொறுமை காத்தால் யாராவது இலவசமாய் இணையத்தில் ஏற்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நல்ல செய்தி நாலு பேரிடம் சென்றால் சரிதானே??
சட்டுன்னு நம்ம இந்த “சட்டுன்னு” டாபிக்கிற்கு திரும்புவோம். இமைக்கும் நேரத்திற்குள் என்னென்னவோ நடந்துவிடும். படியைல் பயணம் நொடியில் மரணம் என்பது நேரில் பார்த்தவர்களால் தான் அதன் வழியினை புரிந்து கொள்ள இயலும். நடுத்தெருவில் தேங்காய் உடைத்து தன் மகங்களை காக்கும் இந்த நேரத்தில் விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் இப்படி கண் இமைக்கும் நேரத்தில் தானே நடக்கின்றன?
சட்டுன்னு நடக்கும் ஒரு அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதைவிட 1000 மடங்கு மேலான அவமானங்களை அசட்டை செய்யாமல் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதே அவமானங்களை உதறித்தள்ளி அதிலேயே வெறி கிளம்பி பின்னர் சாதனையாளனாய் உயர்ந்த சம்பவங்களும் உண்டு. மோஹந்தாஸ் கரம் சந்த் காந்தியின் அந்த தென் ஆப்பிரிக்க இரயில் பயண அவமானம் தான் சட்டென்று அவரை மஹாத்மா என்ற இலக்கு நோக்கி பயணிக்க வைத்தது. பாரதியிடம் பழகிய சிதம்பரம் தான் சட்டென்று கம்பலோட்டிய தமிழனாய் உயரவும் வைத்தது.
சட்டென்று வரும் இன்னொரு சமாச்சாரம் கோவம். எதெய்யுமே பிளான் பன்னித்தான் செய்யனும் என்பது இந்த கோவத்துகிட்டெ சொன்னா, அந்த கோவத்துக்கே கோவம் வந்திடும். ஆனால் போட்டுக் கொடுக்கும் ஆட்களின் முதல் திட்டமே உங்களை கோபத்தை தூபம் போட்டு, அதனை தனக்கு வேண்டாத ஆட்கள் மேல் திருப்பி விடத்தான். அதுவும் சட்டுன்னு நீங்க கோபமாயிட்டா அந்த எட்டப்பர்களுக்கு செமெ ஜாலிதான்.
சீதைக்கும் இப்படி சட்டென்று கோபம் வந்திருக்குமா?? நேத்து Facebook Chat வசதி வைத்து கம்பரிடம் கேட்டேன். அவரும் ஆம் என்கிறார். சட்டென்று தேடியபோது ஆமா…. கிடைத்தே விட்டது.
வீட்டில் நடந்த ஒரு ரகசியமான சண்டையும் சச்சரவுமான செய்தி. அது ராமனுக்கும் சீதைக்கும் மட்டும் தான் தெரியும். அதில் சீதைக்கு சட்டென்று கோபம் வந்ததாய் ராமன் சொல்லும் இடம். [சீதைக்கு தான் சொல்லும் சேதியாக அனுமனிடம் சொல்லிய சேதி அது]
காட்டுலெ இருப்பது கஷ்டமான வேலை. அதுவும் கொஞ்ச நாள் தானே (அட ராமா… 14 வருடம் என்பது கொஞ்ச நாளா???) அதுவரை அயோத்தியில் தாயார்களுக்கு பணிவிடை செய்து இருக்கலாமே என்று ராமன் சீதையிடம் சொல்ல, அதற்கு தனக்கு முன்பாகவே சட்டுன்னு டிரஸ் மாத்திட்டு சட்டுன்னு கோபத்தோடு வந்தாராம் சீதை.
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயார்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தீ என அச்சொற்கு
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும்
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய்.
சரி.. இப்பொ சொல்லுங்க…உங்களுக்கு சட்டுன்னு எது ஞாபகத்துக்கு வருது?