எங்கே தொட்டா எங்கே வலிக்கும்??


 தொட்டுக் கொள்ளவா?? என்று செல்லமாய் கேட்கும் பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீங்க… கேக்கும் போதே தொடத் தோன்றும்… அவ்வளவு பாவனையுடன் அமைந்த பாடல் அது.

அதுக்கப்புறம் தொட்டால் பூ மலரும்…என்று சொல்லி, பதிலுக்கு தொடாமல் நான் மலர்ந்தேன் என்று போட்டு வாங்கியது.. அதுக்காக காதலன் தொடவே கூடாது என்ற அர்த்தத்தில் காதலி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை தான்.  தொடாமலேயே என் மலர் போன்ற முகம் இவ்வளவு மலர்கிறதே… நீ தொட்டால்..இன்னும் மலரும் என்று யோசிக்க வைக்குது.. (நான் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறேன்..உங்களுக்கு அப்படி ஏதும் படுதா???)

 காலங்கள் மாறின… அட சன்டாளா..உன் கண் பட்டாலே கர்ப்பம் ஆயிடுவாளே!!! என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்… இது என்ன கண்கட்டு வித்தை என்று யோசிக்க வேண்டாம்.. கர்ண பரம்பரையாக கர்ணன் பிறந்த கதையும் இந்த கர்ப்ப வகை தானே..

சரி அப்படியே… எங்கே தொட்டா எங்கே  வலிக்கும் எரியாவுக்கு வந்து ரவுண்ட் கட்டுவோம்.

கதாநாயகனை வழிக்குக் கொண்டு வர இந்த வலியினை கையில் எடுக்கும் யுத்தி. இதில் நாயகனுக்கு வேண்டிய நபர்கள் அம்மா, அப்பா, தாத்தா, தங்கை, சகோதரன் குழந்தைகள் என்று எது எதுவோ மாறி மாறி வரும்.. ஆனா மாறாத ஒரு விஷயம்… அந்த ஒரு டயலாக்.. அங்கே தொட்டா இங்கே வலிக்கும் என்பது தான்.

மேடைப் பேச்சுகளிலும் எதைத் தொட்டா ஆடியன்ஸ் காதில் சங்கதி ஏறும்? என்பதை தெரிந்து கொள்ளல் அவசியம்.. (இந்த மாதிரி போஸ்டிங்க் போடும் போது உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை நான் போடுகிறேனா?? – என்ன நான் சரியா….எழுதுறேனா???)

இன்று (17-11-2011) லிட்டில் அந்தமான் தீவுகளின் அனைத்து பள்ளிகளும் ஒன்று சேர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தினர். நான் தான் சிறப்பு விருந்தினர் இங்கு அதனைத் திறந்து வைக்க…பேச.. (புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பதில் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கிறது). மாணவர்கள் கூட்டம் எக்குத் தப்பாய். கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு அதை பார்க்கவும் பொது ஜனங்கள் வேறு.. இவர்கள் மத்தியில் அறிவியல் பற்றியும் பேச வேன்டும்.

“நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா தண்ணி குடிக்கக் கேட்டா, உடனே கொண்டு வந்து குடுப்பேன்.. இப்பொ நீங்க குடுப்பீங்களா??” இது என் முதல் கேள்வி…

நஹி… என்று உண்மையான பதில் வந்தது. குழந்தைகள் எந்த ஊரிலும் எந்தத் தீவிலும் பொய் சொல்வதில்லை.

“இதெ..இதெ தான் எதிர் பாத்தேன்.. ஏன் இப்படி?? Generation Gap என்று நான் சொல்ல மாட்டேன். This generation needs everything into scientific approach… ஏன் நான் தண்ணீர் தரனும்? நீங்களே ஏன் போய் தண்ணி புடிச்சி தரக்கூடாது?? அக்காவை அல்லது தம்பியை ஏன் கூப்பிடலை?? இவ்வளவு ஏன் எதற்கு எப்படி இப்போதைய பசங்க கேக்கிறாய்ங்க… கேளுங்க… கேளுங்க.. நல்லா கேளுங்க.. இந்த மாதிரியான கேள்விகள் தான் அறிவியலின் ஆதாரம்..” கூட்டம் ஆர்வத்துடன் கேக்க ஆரம்பித்தது.

கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம் பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல. என்னையும் உங்களையும் மாதிரி சாமானியர்கள் தான். சொல்லப் போனால்,  காதுலெ என்ன பஞ்சா வச்சிருக்கே என்று திட்டு வாங்கின பையன் தான் Ear Muff கண்டுபிடித்த சேதியும், வீட்டு வேலை செய்த பெண்மனி மேடம் கியூரி ஆகி இரண்டு நோபல் பரிசு பெற்ற சேதியும் சொல்ல… பசங்க மாத்திரமில்லெ மற்றவர்களும் நல்லா கேட்டார்கள்..

சம்பந்தம் இல்லாததை இழுத்துக் கொண்டு வந்து சம்பந்தப் படுத்தி எழுதுவது எதில் சேத்தி… நான் மட்டும் வம்படியா கம்பரை இழுக்கலையா என்ன???

இப்பொ கம்பர் வந்துட்டாரா… இவர் பாருங்க… சம்பந்தம் இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்வார்.. பாக்கலாமா???

அனுமனைப் பாக்கிறார்.. பாத்தா ஒரு பாய்மரம் மாதிரி தெரியுதாம்.. (எனக்கு என்னமோ Life Boat மாதிரி தெரியுது). ஓகெ Fine.. எப்பொ தெரியுமா?? ஒரு மலைமேலே அனுமன் கால் வைக்கிறார். அப்பொ அந்த மலை அப்படியே பூமிக்கும் கீழே போகுதாம்.. அதெப் பாத்தா ஒரு படகு மூழ்கும் போது பாய்மரம் வெளியே தெரியுதே…அது மாதிரி இருக்காம். இது வரை எல்லாம் சரி தான்.

நடுவில் கம்பர் ஒரு பிட்டு போட்றார் பாருங்க..

அந்த மலையில் அனுமன் கால் அழுத்தத்தால் வானத்திலெ கீற நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மேகம் இவை எல்லாம் கொஞ்சம் மெரண்டு போய் மேலே போயிட்டதாம்.. இங்கே கால வச்சா அங்கே என்ன நடக்குது பாத்தீகளா??

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிரத் தாழ்ந்து
பாரிடை அழுத்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு எனக் குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!

இன்னும் வரும்.

Pre Paid Puttu


அன்பு நெஞ்சங்களே..

ஆறு மாசமா சம்பளமே ஒழுங்கா தர்ரதில்லை என்று புலம்பும் தொழிளார்களைப் பாத்திருப்பீங்க..

சம்பளம் வராமெ  Labour Court க்கு போய் அல்லாடிப் பெறும் நிலையும் வருது சில உழைப்பாளிகளுக்கு.

கொஞ்சம் சொந்தக் கதைக்கு வருகிறேன். (சொந்தக் கதை என்றவுடன் சோகக்கதை என்பதும் தானே வந்து விடுகிறதே!!)

வேறு தொழில்களில் எப்படியோ, கைத்தறி நெசவுத் தொழிலைப் பொறுத்தவரை முதலில் கூலியுடன் அனைத்து மூலப் பொருள்களும் கொடுத்து விடுவார்கள்.. சேலை
நெய்து தந்து முதலாளியிடம் அப்புறம் தர வேண்டும்.

பிரச்சினை எங்கே என்றால், எல்லா சேலையும் தயார் செய்ய 15 நாட்கள் பிடிக்கும். ஆனால்.. வாங்கிய கூலி ஒரு வாரத்தில் தீர்ந்து விடும். நம்ம படிக்கும் செலவுகள் அந்த கூலி தீர்ந்த நாட்களில் தான் வந்து சேரும்…கையைக் கடிக்கும்… இப்படியெல்லாம் படிச்சி…

சரி… சரி… சொல்ல வந்த மேட்டருக்கு வருவோம்…

இந்த பிரி பெய்டு கூலி தரும் முறை பத்தி கொஞ்சம் புராண காலத்தைப் பாக்கலாமே…

அதுக்கு நீங்க எந்த டிக்கெட்டும் எடுக்காம ஜாலியா ஒரு ரவுண்டு பாண்டிய மன்னன் ஆட்சி செய்யும் மதுரைக்கு வரணும்…. வந்துட்டீங்களா…??

இப்பவும் எப்போவாவது வெள்ளம் வந்து கரை புரண்டு ஓடும் வைகை, அன்றும் அப்படித்தான் ஓடியது.. லோக்கல் PWD Dept மக்களால் சமாளிக்க முடியாமல் பாரா டுரூப் ஆள் இறக்கிற மாதிரி… வீட்டுக்கு ஒரு ஆள் வந்து கரை கட்டனும்னு ராசா உத்திரவு போட்டார்.

ராசா உத்திரவு யாராவது தட்ட முடியுமா என்ன???

அப்பொ வந்தி என்ற ஒரு பிட்டு விற்கும் முதலாளியம்மா இருந்தாங்க. (சிறு தொழில் செய்யும் முதலாளி). அவங்களுக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லெ.. எல்லாரும் பிசியா இருக்கிறதினாலே லேபர் வந்திக்கு கிடைக்கலே..

அப்பொ ஒரு கூலியாள் வர்ராரு…

அக்ரிமென்ட் ஆகுது. வேலைக்கு நான் ரெடி.. கூலி ரெடியா.. உதிர்ந்த பிட்டு தான் கூலி… இந்தா வாங்கிக்க..

பிட்டுக்கு மண் சுமந்த அவன்… வேறு யாருமல்ல.. சிவன்… அவன்
ஆரம்பித்தது தான் இந்த பிரி பெய்ட் கூலி..

பின் குறிப்பு:
1. உதிரிப் புட்டு தான் கூலி என்று அக்ரீமென்ட் ஆன பிறகு எல்லா புட்டும் உதிரியாக உதிர்ந்தே வந்தனவாம். சிவனின் வாயில் போக எல்லா புட்டுகளும் ஆசைப்பட்டு இப்படி ஆனதாம்..

2. இன்றும் பிட்டுத் திருநாள் வருடத்திற்கு ஒரு நாள் மதுரையில் நடக்குது. கோவையிலும் நடக்கிறதாம்.

3. பிட்டுக்கு மண்… விடுங்க.. இப்பொ, துட்டுக்கு மண் எடுத்து வைகை சோகமா இருப்பது சோகம் தான்.

இன்னும் வரும்…