நாக்கு மூக்கா.. நாக்கு மூக்கா


இந்த கொலெவெறி பாட்டு வரும் வரைக்கும் இந்த நாக்கு மூக்கா தான் தமிழர்களின் நாவில் வலம் வந்த மந்திர வார்த்தைகளாய் இருந்தன.

என்ன இது? எப்புடி எல்லாம் பாட்டு எழுதுறாய்ங்க என்று திட்டிக் கொண்டும் கூட அந்தப் பாட்டைக் கேட்டனர். “அப்புடிப் போடு போடு” பாட்டுக்கு அடுத்த படியாய், அதிகமாய் தமிழ் அல்லாத சேனல்களில் வந்த பாடல் இந்த “நாக்கு மூக்கு” தான். (கொலெ வெறி எல்லா ரெக்கார்டையும் முறியடித்து விட்டது என்பது சமீபத்திய கதை)

ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. இந்த நாக்குக்கும் மூக்குக்கும் என்ன சம்பந்தம்??

அடக்க வேண்டிய உன்னதமான விஷயங்களில் நாக்கு தான் முக்கியம் என்று அய்யன் வள்ளுவர் சொன்னது யாருக்கும் ஞாபகம் இல்லெ. ஆனா இந்த மேட்டரை விவேக் சொன்னதும் நிறைய மண்டை உள் வாங்கிக் கொண்டது (என் மண்டையும் இதில் அடக்கம்)

நாவை ஒழுங்கு மரியாதையா வச்சிருந்தா மூக்கும் நல்ல படியா இருக்கும் என்கிறார்களோ??

எங்க விஷயத்திலெ அனாவசியமா மூக்கை நுழைக்காதே என்கிறார்களே… பாவம்.. மூக்கு என்ன பாவம் செய்தது? அனாவசியமா திட்டு வாங்குதே..

கமல் படங்களை கவனித்துப் பார்த்து வந்தால் ஓர் உண்மை புலப்படும். சண்டைக் காட்சிகள் அல்லது கதவில் முட்டிக் கொள்வதும், பிறர் தள்ளி விடுவதும் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் மூக்கில் அடி வங்கும் காட்சியும், மூக்கில் ரத்தம் வரும் காட்சியும் இடம் பெறும்.. ஏன் இப்படி??

இன்றைய இளைய தலைமுறை…. “பிகர் சூப்பரா இருக்கு” என்று ஜொள்ளுவிடும். ஆனா அதே பிகரை, வீட்டுலெ போய் பாத்து பெருசுகள் “மூக்கும் முழியுமா லட்சனமா இருக்கா..” என்பார்கள். அங்கும் அந்த மூக்கே மூலதனம்.

மூக்குகள் பலரகம்.. பல விதம். நாசர் மூக்கு அதில் தனி ரகம். நாக்கு மேலே பல்லுப் போட்டு எப்படி பேசப்போச்சி என்று மூக்குக்கு மேல் கோபமாப் பேசுவார்கள்.. அப்பொ இந்த மூக்கு என்ன கோபமூர்த்தியின் வாகனமா என்ன??

பரமக்குடியில் ஒரு காலத்தில் முத்தாளம்மன் கோவில் திருவிழா காலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரப் பலகை வைத்து இருப்பார்கள். கரகரப்பான குரலில் “TAS ரத்தினம் பட்டனம் பொடி” விளம்பரம் தான் அது.

மூக்குப் பொடி விளம்பரம் அது. அதைப் பாத்து அந்தக் பள்ளிக் காலத்தில் திருக்குறள் சொல்வார்கள்.. இன்னும் மன்சிலெ நிக்குது.

பொடிபோட்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
சளிபிடித்துச் சாவாரே சாவர்.

இந்தப் பொடிப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது (இது மாதிரி ஒரு நாள் குடிப் பழக்கமும் போயிடுமா??) அந்தமானுக்கு தாயகத்திலிருந்து பொடி போடும் பழக்கம் உடையவர் வந்து சேர்ந்தார்.. அப்போது தேடிய போது தான் ஒரே ஒரு கடையில் பொடி கிடைக்கும் அரிய தகவல் கிடைத்தது. (மனுஷன் என்ன என்னவெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க வேண்டி இருக்கு??)

“எனக்கு மூக்கில் வேர்க்கிறது? என்ன செய்யலாம்” என்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது கல்கண்டு தமிழ்வாணனுக்கு கேள்வி கேட்டு எழுதினேன்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??

கழுகுக்கு மூக்கிலெ வேர்க்கிற மாதிரி என்பார்கள். நிங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம்.. அந்த வேலைக்கு போகலை என்றாலும் அவர்களுக்கு … (வேண்டாமே… ஏற்கனவே கபில்சிபில் கோபமா இருக்கார்….)

“எட்டுக்கல்லு பேஸிரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு” என்று ஒரு பழைய ஹிட் பாடலில் வரும். ஏற்கனவே எடுப்பான மூக்கு அந்த நாயகிக்கு… இன்னும் எடுப்பாக்க போடும் திட்டம் அந்தப் பாட்டில் வரும்.

படத்தில் மட்டுமல்ல… எடுப்பாய் எங்கும் இருப்பது இந்த மூக்கு தான். மூக்கறுபட்ட சேதிகள் ஆயிரம் தான் இருந்தாலும் எல்லார் மனதிலும் உடனே வருவது சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட விஷயம் தான்.

எப்படியோ சூர்ப்பனகை வரைக்கும் வந்தாச்சி.. லேசா.. ஒரு எட்டு கம்பராமாயணம் பாத்துட்டும் போயிடலாமே..!! ஆனா.. நாம போற நேரத்துக்கு சூர்பனகை மூக்கு மேலே கையை வைக்க முடியாது.. அப்போ யாரோட மூக்கு பத்தி ??? வாங்க இன்னும் உள்ளே போவோம்..

அது அசோகவனம். கண்டேன் சீதையை என்றும் கண்டு கொண்டேன்…  கண்டு கொண்டேன் என்றும் அனுமன் இருந்த நேரம். ஆனால் சீதையிடம், தான் ராமனின் தூதன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

ராமன் படம் வரைந்து பாகங்களை குறி ரேஞ்சில் ராமனைப் பற்றி அக்கு வேறாய் ஆணி வேராயும் அலசும் இடம்.. அண்ணன் அனுமன் அவர்கள், ராமனின் மூக்கு மேட்டர் பத்தி சொன்ன விஷயத்தை மட்டும் சின்னதா ஒரு ஜூம் போட்டு படிக்கலாமே..

கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டிருப்பீங்க… ஆனா கொழுந்து ஒளி பாத்திருக்கீங்களா?? பிரகாசமாவும் இருக்கனும்… ஆனா சுட்டுவிடக் கூடாது.. அப்பொ, அது தான் ஒளிக் கொழுந்து. எங்கிருந்து வருதாம்?? இந்திர நீலக் கல்லில் இருந்து. (இது say X ) மரகதமணியிலிருந்து வரும் ஒளியின் ஒட்டு மொத்தம் (இது say Y).

இந்த X & Y ரெண்டும், என்னை ராமர் மூக்கு மாதிரி இருக்கு என்று சொல்லப்படாதான்னு கெஞ்சுதாம்.. அது மாதிரியா இருக்கு மூக்கு??

இன்னும் யோசிக்கிறார் அனுமன்.. சுந்தரி என்பவள் அழகி. இந்திர லோகத்து சுந்தரியோ அழகோ அழகு. கோபம் சாதாரணமானது. இந்திர கோபம் எப்படி இருக்கும்?? அந்தமாதிரி இருக்கிற பூச்சியைப் புடிக்கிற பச்சோந்தி மாதிரி இருக்குன்னு சொல்லாமா ராமர் மூக்கை??

பச்சோந்தி கலர் மாறும்.. ஐயா மூக்கு அப்படி இல்லையே… அப்பா… முடியலை என்று சொல்ல முடியாமலேயே முடிக்கிறார். அப்படி உவமையே சொல்ல முடியாத மூக்காம் அந்த மூக்கு.

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்
விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஒதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு
ஆமோ

ஆமா… மூக்கு மேலெ விரல் வைக்கிற மாதிரி உங்க லைப்லெயும் ஏதும் நடந்திருக்கா??

ஆத்தி ஆத்தி ஆத்தி..என்னாச்சி..


செம்மொழியான தமிழ்மொழி என்ற பாடலுக்கு அடுத்து இப்போது எல்லோராலும் முனுமுனுக்க வைக்கப்படும் பாடல் இந்த ஆத்தி..ஆத்தி தான்.

நம் மக்களுக்கு கலர் என்றாலே ஒரு மயக்கம்… கிறக்கம் தான். அதுவும் செக்கச்செவேல்னு ஒரு பிகர் மாட்டாதான்னு லோ..லோன்னு அலைவானுங்க.. அப்புறமா அந்த வெளுப்பைப் பாத்து என்ன கலரு தெரியுமா???

சுண்டுனா ரத்தம் வரும்.. இப்படி டயலாக் வேறு.(எம்
ஜி ஆர் முதல் சோணியா வரை எல்லாம் கலரும் வியப்பு தான்)

செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது
சமீபத்திய வடிவேலானந்தாவின் பொன்மொழி..

இது இப்படி இருக்க… எப்புடி இம்புட்டு கலரா இருக்காக? என்ற ஆய்வின் விளைவு தான் சமீபத்திய ஆத்தி… ஆத்தி…
பாடல்.

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா??
வெயிலுக்கு காட்டாம இருந்தாகளா??”
இவைகள் கவிஞர் வியப்பின் உச்சங்கள்.

வெள்ளாவி என்பது பழுப்பான வேட்டியினை சலவைக்கு போட்டு வெள்ளையாக்கி வருவதைத் தான் பெரும்பாலும் குறிப்பிடுவர்.  ஆனால் துணி வெந்து போய் வருவது
தான் அந்த வெண்மையின் ரகசியம். (ஒரு சில வாஷிங்க் மிஷின்கள் கூட இப்படி வெந்நீர் சலவை செய்யும் வசதியை வைத்துள்ளது)

வெள்ளாவியில் வேகவைப்பது ஒரு பழங்காலத்து தண்டனை முறை என்று தான் இது வரை நினைத்து
வந்தேன். இந்தப் பாட்டு கேட்ட பிறகு அந்த நினைப்பை
மாத்திகிட்டேன்..

அதே வெள்ளாவியில் தண்டனை என்று தேவாரம் அருளிய அருளாளரை நிக்க வச்சாகளாம்.
அது அப்போ அவருக்கு அபஸ்வரம் இல்லாத வீணை, மாலை இள வெயில், வண்டின் ரீங்காரம் இருக்கும்
பொய்கை இப்படி எல்லாம் இருந்ததாம்.

அன்மையில் நடிகரும் இயக்குநருமான சேரன் அவர்கள்
அந்தமான் வந்திருந்த போது இங்கு ரம்யமான இயறகையோடு இயைந்த வாழ்வை சிலாகித்துப்
பேசினார்.

இந்த ஊரில் மூன்று நாளாய் இருக்கும் நானே கொஞ்சம் கலரா ஆய்ட்ட மாதிரி தெரியுது என்றார். பயங்கர கருப்பாய் இருந்த பக்கத்து சீட்டில் இர்ந்த நபரை பாத்து,
நீங்க இப்பவே இப்படி இருக்கீக.!!! முன்னாடி ஊர்ல
எப்பிடி இருந்திருப்பீங்க்க!!! என்று வெறுப்பேத்தினார்.

ஆக மொத்தத்தில் வெயிலுக்கு காட்டாம இருந்தா வெளுக்குமோ??

இந்தியர்களின் நிறத்தை கேலி செய்த ஆங்கிலேயருக்கு பதிலடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்தி படிச்சிருக்கீங்களா??
“இறைவன் மூன்று கேக் செய்தார். ஒன்று சுத்தமாய் கருகி
விட்டது. அவர்கள் கருப்பர்கள். இன்னொரு கேக் வேகாமலேயே எடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் அவர்கள். மூன்றாவது தான் பக்குவமாய் சமைக்கப்பட்ட சுவையான கேக். இந்தியர்கள் நிறம் அது.”

பாட்டை ரசிப்போம்..
நிறங்களையும் ரசிப்போம்…
ஆனால் பேதம் பாராட்டாமல் இருக்க பழகுவோம்.