தூது செல்ல ஒரு தோழி…


மொபைல், இன்டர்நெட், இமெயில் எல்லாம் வராத காலத்தில் நம்மை ஒன்று சேர்த்த பெருமை தபால் துறைக்குத் தான் சேரும். கோவையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மதியம் சாப்பாடு மெஸ்ஸில் கட்டு கட்டு என்று செமையாய் கட்டி விட்டு, எல்லாரும் மறுபடியும் வகுப்புக்கே போக, நான் மட்டும் ஹாஸ்டல் ரூமுக்கு போவேன். கதவைத் திறந்து பார்த்தால் கீழே விழுந்து கிடக்கும் கடிதங்களைப் பார்த்தாலே பரவசமாய் இருக்கும். (உள்ளே Draft இருக்கும் கடிதங்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்)

கடிதங்கள் இப்போது அப்போதைய மவுசை இழந்து இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்தமானுக்கு வந்த புதிதில் கிரேட் நிகோபார் தீவில் தான் பணி. அது கன்னியாகுமரியை விட தெற்கே உள்ள இந்தியப் பகுதி.. (சந்தேகமிருந்தா மேப் பாருங்க.. பெண்கள் மேப் பார்க்க விரும்புவதில்லை என்று சொன்ன ஒரு மேல் நாட்டு புத்தகம் சக்கை போடு போட்டு விற்கிறது – இது கொசுறுத் தகவல்) அப்போதெல்லாம் போட்டி போட்டு (இப்போது பிளாக்கில் எழுதுவது மாதிரி) எழுதுவோம். 64 பக்கங்களுக்கு எல்லாம் கடிதம் வந்துள்ளது.

பாலகுமாரன் நாவல் மூலம் அறிமுகமான ஒரு நண்பிக்கு அதிகம் கடிதம் எழுதி இருக்கிறேன். பெண்கள் புத்திசாலிகள் என்பதை பாலசந்தர் படமும் பாலகுமாரன் நாவல்களும் தான் காட்டும் என்பதில்லை. பாலகுமாரன் ரசிகைகளும் அதில் அடக்கம். கலயாணத்திற்கு பெண் பார்த்து வந்த பிறகு வழிந்து வழிந்து காதல்(????) கடிதம் எழுதியதை இப்பொ நெனைச்சா சிரிப்பா இருக்கு. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்று பாலகுமாரன் மாதிரியே கேட்டு சமாளிக்க வேண்டியது தான்.

அந்தக் காலத்தில் கடிதம் என்பது ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரமா இருந்திருக்கும். சாதாரண மக்களுக்கு எட்டாத ஒரு சாதனமாய் இருந்திருக்கும். அதனாலெ தான் தூது சொல்லும் வழக்கம் தோதாக வைத்திருப்பார்கள் என்பது என் ஊகம். அதுக்கு வண்டைக்கூட நம்ம ஆட்கள் விட்டு வைக்கலையே..!!! வண்டா?? என்ன இது வம்பா இருக்கே என்கிறீர்களா?? திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) பாடி, நக்கீரரிடம் உதை வாங்காமல் வரும் பாட்டு தான் அது. தும்பி விடும் தூது அது.

திருவாசகத்தில் நம்ம மானிக்கவாசகர் என்ன செய்றார் தெரியுமா? இந்த மாதிரி சாதாரண தும்பி எல்லாம் கதை ஆவாது என்கிறார். ஆமா மத்த ஆளுங்க காதலிக்கு தூது விடுவாங்க.. இந்த மா வாசகரோ இந்த காதலிகளைப் படைத்த ஆண்டனுக்கே தூது போகச் சொல்றார். (அவங்க ஆத்தாளுக்கு தாவனி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் என்ற டயலாக் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்குது). துளியீண்டு தேன் இருக்கிற பூவை எல்லாம் ஏம்ப்பா கொஞ்சுறீங்க… நினைக்கும் போதும், பாக்கும் போதும் பேசும் போதும் ஆனந்த தேன் தரும் சிவபெருமானின் பாதமலரைப் போய் கொஞ்ச்சுங்கப்பா..கோதும்பிகளா என்கிறார். (கோ – அரசன் என்று பொருள் கொள்க. ஓஹோ கோ பட்த்தோட அரத்தம் இதானா??)

கம்பர் இங்கே உதயமாகிறார்.

“என்ன கிருஷ்… இப்பொ என்னையெ கலட்டி விட்டு மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கே??”. அதெல்லாம் இல்லை ஐயனே… நீங்க இந்த கால டைரக்டர் ரவிகுமார் மாதிரி..கடைசிலெ தான் வருவீங்க.. கொஞ்சம் பொறுங்க… உங்களை அப்புறமா கவனிக்கிறேன். கம்பர் மறைந்து விட்டார்.

இந்த தூது விடும் நம்ம பழைய ஆட்கள் எல்லாம், ஏன் மரம், மட்டை, குளம், குட்டை, நிலா, தென்றல், அலை, மேகம் என்று தூது விட்டார்கள்?. ஆட்களை நம்ப முடியுமா என்ன? அர்விந்தசாமி மாதிரியான Handsom ஆட்கள் தாடி வைத்த பிரபுதேவா மாதிரி ஆட்களை தூது போகச் சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சி? தூது போறேன் தூது போறேன் என்று சொல்லி தோது பன்ன கதை எல்லாம் இப்பவே இருக்கே?? அப்பொ நம்ம ஆட்கள் நல்லா யோசிச்சு தான் செஞ்ச்சிருப்பாங்களோ.. இருக்கும்..

தூது போகும் ஆளை “ஒழுங்கு மரியாதையா சேதி சேக்கலே..தெரியும் சேதி” என்று மிரட்டலாம். ஆனா ஆறு மேல் கோபமாய் மிரட்டிய சேதி தெரியுமா?? Mr கம்பரே… இப்பொ உங்களை வரவழைச்சிட்டேன். சந்தோஷம் தானே..??

அனுமன் சீதையிடம் விலாவாரியாக (அப்படி என்றால் என்ன அரத்தம் என்று தெரியலை) சொல்லும் இடம். இராமன் சீதையின்றி சோகத்தில் தவிப்பதை ஆதாரத்தோடு சொல்லும் சிரமமான வேலை அனுமனுக்கு. சொல்கிறார். “ கோதாவரி ஆறைப் பாத்து, தினமும் சூரியன் உதயமாகும் போது இங்கே குளித்த்து உண்மையென்றால் நீயே அவளைத் தேடிக் கண்டுபிடித்து விடு. இல்லையென்றால் அம்பு விட்டு ஆறை அனலாக மாற்றி விடுவேன்” என்றெல்லாம் வருந்தினார் என்கிறார் அனுமன்.

போது ஆயினபோது உன தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா பவளக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! என்னா
கோதாவரியைச் சினம் கொண்டவன் கொண்டல் ஒப்பான்.

உங்களுக்கு இப்படி யார் மேலாவது கோபம் வந்திருக்கா?

என்ன இது சின்னப் புள்ளத் தனமா இருக்கு??


பாடல்களில் எத்தனையோ வகைகள் இருக்கிறதா சொல்றாங்க… நமக்குத் தெரிஞ்ச வகை எல்லாம் ஒண்ணு தான்..அது சினிமாப் பாட்டு தான். வேணும்னா.. அதிலெ எத்தனை வகையான பாட்டு இருக்கு என்று யோசிக்கலாம். (இந்த கொலைவெறி பாட்டை எந்த ரகத்தில் சேர்ப்பது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுட்டு நான் மேலே தொடர்கிறேன்.)

சில சொக்க வைக்கும் பாடல்கள்… Mid Night Masalaa  ரகமும் உண்டு.. கண் கலங்க வைக்கும் பாட்டுக்கு நடுவே அப்பப்பொ தூங்க வைக்கும் பாட்டும் வரும். தாலாட்டுப் பாடல்கள் வகை அவை.

தொப்புள் கொடி உறவு அறுந்து போய்விடாமல் இருக்க தாய் பாடும் உறவுப் பாலம் தான் அந்த தாலாட்டு.

தாலாட்டு பாடல் கேட்கும் குழந்தை, தான் ஒரு பத்திரமான இடத்தில் இருப்பதாய் உணர்ந்து அதனால் தான் தூங்குவதாய் ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் ஆய்ந்த போது, தாலாட்டுப் பாடல்களின் அமைப்புகள் குழந்தைக்கு பரிச்சயமான தாயின் இதயத்துடிப்பான லப் டப் ஓசைக்கு சமமாய் இருப்பதாகவும் சொல்லியது தெரிந்தது.

கண்ணே கலைமானே.. கண்ணின் மணியென கேட்டுப் பாருங்கள்… நீங்கள் குழந்தை ஆகி தூங்கிவிடுவீர்கள்.

தென்பாண்டி சீமையிலே..தேரோடும் வீதியிலெ… சோகம் தெரிந்தாலும் சுகம் தான்.

புஷ்பவனம் தம்பதிகள் பாடிய ஆராரோ ஆரீரரோ கேளுங்கள்..அதில் மாமன் அடிச்சானோ..என்று தொடங்கி உறவுகளை இணைக்கும் முயற்சி முளையில் விதைக்கும் ரகசிய வித்தை தெரியும்.

தண்ணீர் தண்ணீர்…பாலசந்தர் படம் தெரிந்திருக்கும். அதில் வரும் பாடல் ஒண்று அந்த தண்ணீர் பிரச்சினையையும் இணைத்தே பாடும்..
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து,
தொட்டில் நணையும் வரை,
உன் தூக்கம் கலையும் வரை…
கண்ணான பூமகனே..கண் உறங்கு சூரியனே.. இப்படி வரும்.

சோக வெள்ளம் வரட்டும் அல்லது நீ முழிச்சிக்க whichever is earlier என்று தாய் பாடும் பாட்டு அது.

சரி நல்ல தூக்கத்தின் அடுத்த கட்டம் கனவு. ஆழமான தூக்கத்தில் தான் கனவு வரும் என்பார்கள்.. Benzeen எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடையே கனவில் தான் கிடைத்ததாய் அறிவியல் அறிஞரே சொல்லி இருக்கிறார்.

கண் விழித்துச் சொப்பனம் கண்டேன்..இது லேட்டஸ்ட் டெக்னிக்.. கனவு காண். ஆனால் தூங்கிவிடாதே.. கலாம் காணச் சொன்ன கனவும் அது தானே..

இருக்கும் சூழல் ஒட்டித்தான் பல கனவுகள் வரும்.

என் பையன் ஒரு கனவு பற்றிச் சொன்னான்.. சுனாமி வந்து..(அந்தமானில் வேறு நல்ல கனவா வரும்??) எல்லாரும் ஓட…நான் மட்டும் ஒரு நல்ல எடத்துக்கு போய் தப்பிச்சேன்.

நான் ஆர்வமா கேட்டேன்..எங்கே..எங்கே..

அதான் நீங்க தூங்க உடாமே எழுப்பிட்டீங்களே..ஸ்கூல் போகணும்னு.

இன்னும் ஒரு பத்து நிமிஷம் டயம் இருக்கு.. இன்னும் கொஞ்சம் தூங்கி கனவு continue செஞ்சி எந்த எடம்னு பாத்துச் சொல்லேன்… என்றேன்.

பையன் சொன்ன பதில் தான் இந்த போஸ்டிங்க் டைட்டில். என்ன இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு?

பையனை சமாதானப் படுத்தி, அடப்பாவி அந்த டயலாக் என்னோடது இல்லெ..கம்ப ராமாயணத்திலெ வருது என்றேன்.. அப்பொ அதை போஸ்டிங்க் போடுங்க..எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி என்று பறந்து விட்டான்.. அவன் போனா என்ன..நீங்க கேக்க மாட்டீகளா என்ன??

இலங்கை அழிவதாயும் அப்போது திருமகள் விபீடணன் அரண்மனைக்குள் நுழைந்ததாகவும் கனவு. இது பாதிக்கனவு. கண்டவள் திரிசடை அழகான இராட்சசி. கேட்டவர் சீதை. அப்புறம் என்ன ஆச்சி…ப்ளீஸ் கொஞ்சம் தூங்கிட்டு சொல்லும்மா..கெஞ்சுகிறார் சீதை…

பொன்மனை புக்க அப் பொரு இல் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன்குறை காண் என்று ஆயிழை
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள்.

நம்மளை இப்படி  யாராவது தூங்கச் சொன்னா..தாலாட்டு கேக்காமலேயே ஜாலியா தூங்குவேன்..ஆமா..நீங்க எப்படி??