அந்தக் கொசு செத்துப் போச்சா?


thampi raamaiyaa

சில சினிமாப் படங்கள் பாத்துட்டு வந்தா ஜம்முன்னு சில டயலாக் அல்லது பாட்டு மனசுலெ நிக்கும். (சில பேத்துக்கு சில நாயகிகள் ஜில்லுன்னு பல நேரங்களில் மனசிலெ நிக்கலாம்) ஆனால் முக்கியமானது  ஒன்று… தியேட்டரில் மட்டும் படம் பாத்துட்டு திரும்பணும். அப்பொத்தான் இந்த அனுபவங்தை உங்களால் உணர முடியும். வீட்டிலெ உக்காந்துட்டு திருட்டு வீசீடி பாத்தா எந்த எஃபெக்டும் வராது. படம் இன்னுமா பாக்கலை? என்று ரொம்ப கேவலமான பார்வையை வேண்டுமானால் இது தடுக்கலாம்.

சமீபத்தில் அந்தமான் தலைநகராம் போர்ட்பிளேயரில் இப்படி ஒரு படம் பாத்து வந்த நிம்மதி கிடைத்தது. புதிதாய் கட்டியுள்ள நவீன தியேட்டர் அது. பாத்த படம் தனி ஒருவன். (தனியா இல்லீங்கோ. குடும்பத்துடன் பார்த்த முதல் படமும் இது தான்). படம் என்னவோ நல்ல சிந்தனையை தூண்டும் செய்தியில் தொடங்கினாலும், படம் பலப்பல அதிரடி ஹைடெக்குகள் சுமந்து வந்தாலும், நல்ல இசையில் பாடல் வரிகள் கவர்ந்தாலும், அனைத்து மகளிருக்கும் மனதிலெயாவது எதிர்பார்க்கும் வரனாய் (ஒரு காலத்தில்) விளங்கிய அரவிந்தசாமி வில்லனாய் கலக்கினாலும் சரி, மனசிலெ கடைசியிலெ என்னவோ அந்த “கடைசியிலெ அந்தக் கொசு செத்துப் போச்சா?” என்ற டயலாக் தான் மனசுலெ நின்னது.

ஒரு வேளை அந்த ”தம்பி ராமையா” யாவின் அப்பாவித்தனம் தான் கதையின் மூலக்கருவோ? (நீங்க படம் பாரக்கலையா? அப்பொ புரியாது?) அப்பாவியாய் இருத்தல் என்பது ஒரு இயல்பு. குழந்தைகளிடம் தான் அந்த இயல்பு இருக்கும். வளர்ந்த பின்னர், அறிவு(??) என்னவோ வளர்ந்து விட்டதாய் நினைத்துக் கொண்டு, நாம் இயல்பிலிருந்து விலகி விடுகின்றோம். படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அப்பாவியாய் இருந்து விட்டால் மகிழ்வாய் வாழ்வினைக் கடத்தி விடலாம். மகிழ்ச்சியாக வாழ்வது தான் வாழ்க்கையின் லட்சியம்னு நானு நெனைக்கிறேன். இதெ மிஞ்சி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்கலேன். சந்தோஷமாக் கேக்போமெ! (நல்லா கவனிங்க. சந்தோஷமா…)

நேத்து ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் தொடர்பான விழாவில் பேச எனக்கும் கையில் மைக் கிடைத்தது. 100 நபர்களை அடக்கிய கூட்டம் கொள்ளும் அளவிலான கோவில் தான். அதில் 80 வரையிலும் குழந்தைகள் மாணவர்கள் இப்படித்தான். நான் உடபட இன்னொரு பேராசிரியர், ஒரு விஞ்ஞானி இப்படி மூவர் பேசிட ஏற்பாடு. (அபதுல் கலாமுக்குபின்னர் சைண்டிஸ்ட் என்று அறிமுகம் செய்த போதே கைதட்டல் பறந்தது. என் கையில் சோதனை முயல்வாய் மைக் தரப்பட்டு களத்தில் இறக்கப்பட்டேன். அப்பாவியாய்…  அவர்களே, இவர்களே.. என்று ஹிந்தியில் தொடங்கி, பின்னர் அனைவருக்கும் ஜென்மாஷடமி வாழ்த்தும் சொல்லியாச்சி. யாரும் கேக்கிற மாதிரியே இல்லெ நம்ம பேச்செ.

வந்த கூட்டம் மொத்தமுமே, போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். இன்னும் கலந்து கொள்ள இருப்பவர்கள். அவர்களின் பெற்றோர். இவ்வளவு தான் என்பது அப்போது தான் உரைத்தது. யாரும் யாருடைய பேச்சையும் கேக்க வரவில்லை என்பது புரிஞ்சது. (எல்லாமே நமக்கு மட்டும் ஏன் லேட்டாவே புரியுது?) எல்லாருடைய கவனம் முழுதும் பரிசு யாருக்கு கிடைக்கும்? ஆளுக்காள் நம்க்கும் கிடைக்காதா? என்ற ஆவலில் இருப்பதும் புரிந்தது.

sara sara

நிலைமையை சீராக்க ”ஒரு கதை சொல்லட்டுமா?” என்று கேட்டேன். சட்டென்று “ஓ” என்று பதில் வந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதும், கல்லூரியில் படித்த போதும், இல்லெ இல்லெ.. இருந்த போதும், இது மாதிரியான கேள்விக்கு ”வேண்டாம்” என்று விரட்டி அடித்து எல்லாமும் கூட ஏனோ, தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு இஞ்ஜினியர் ஆறாவது மாடியில் உள்ளார். உதவியாளர் கீழ் தளத்தில் உள்ளார். அவரை அழைக்க வேண்டும். கதை சொல்ல ஆரம்பித்தேன். எப்படி கூப்பிட? சொல்லுங்களேன்… என்றேன். ”மைக் தான் கையில் இருக்கே” என்றும், ”மைபைல் என்னாச்சி?” என்றும் நம்மை உண்டு இல்லை என ஆக்கினாலும், கதையால் ஆடியன்ஸ் கட்டுக்குள் வந்தது அப்பாடா என்று ஆனது. இன்னொரு கதையும் சொல்லி அன்று முடித்தேன்

கல்லூரிப் பேராசிரியரே, ”எப்படியோ பசங்களை சமாளிச்சிப் பேசிட்டீங்க..” என்று சொன்னது மிகப் பெரிய பரிசாய்ப் பட்டது அந்த ஆசிரியர் தின நாளில். அமர்ந்தேன் அப்பாவியான முகத்தோடு. (இருக்கிற முகம் தானே இருக்கும். அதுக்காக கமல் மாதிரி மொகத்தெ மாத்திட்டு வர முடியுமா என்ன?).

”அடப்பாவி… அப்பாவி, பாமரன், சாமான்யன் இன்னும் எத்தனெ பேரு தான் இருக்கு?” அசரீரியாய் கேள்வி வந்தது.

திரும்பி யாரென்று பார்த்தால், அட… நம்ம டிகிரி தோஸ்த் கம்பர்.

”ஹாய்” என்று அப்படியே, ”ராமாயணத்திலெ இப்படி ஒரு அப்பாவி கேரக்டெர் உங்க பார்வையில் யாரு? சொல்லுங்களேன்” என்றேன்.

appavi kulandai

“நூத்துக்கணக்கான வருஷங்களா, பட்டிமன்றங்கள் நடத்தி விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுவும் இதில் ஒன்று. சத்ருக்கணன், ஊர்மிளா, மண்டோதரி, திரிசடை இப்படி பட்டியல் தொடரும்.” pபதில் சொல்லிட்டு பறந்தார் கம்பர். அப்பப்பொ நமக்கு இப்படி டிப்ஸ் சொல்லிட்டு மறைவது பழக்கம் தானே

பரதனைப் பத்தி யோசிச்சேன். பதவி தலைக்கு வந்தாலும் கூட வேண்டாம் என்று உதறியது. அப்புறம் தான் ஆளாமல் பாதகை வைத்தே ஆண்டது. 14 ஆண்டுக்குள் வரலைன்னா, தீக்குள் இறங்க முயன்றது… அப்பா..அப்பப்பா. யுத்த காண்டத்து மிட்சிப் படலத்தில் பரதனது அப்பாவித்தனம் காட்சி கம்பன் வரியில் பாக்கலாம்.

இராவணவதம் முடிந்து, அக்னிப்பிரவேஷம் முடிந்த பின்னர் திரும்புகின்றனர் மகிழ்வோடு. மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் பரதன் பற்றிய நினைவு கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாமோ. பதைத்துப் போகிறார் ராமர். நெட்வொர்க், இமெயில் எல்லாம் இல்லாத காலம். அனுமனிடம் தான் தூது சொல்லி அனுப்பப்படுகிறது. தூது சொல்ல தோதா ஒரு ஆளு கெடெச்சா எவ்வளவு சௌகரியமாப் போச்சி? பறந்து வருகிறார் பரதனிடம் தகவல் சொல்ல அனுமன். அப்பாவியாய், ”இம்புட்டு குட்டியூண்டு குரங்கு ஒதவி செஞ்சதா சொல்லுதே, இதெல்லாம் கேக்க நல்லாவா இருக்கு?” என்று நினைக்கிறார். (கம்பர் சொன்னாரா என்று கேட்க வேண்டாம்) இந்தப் பாட்டெப் படிச்சாப் புரிஞ்சிக்கலாம்.

ஈங்கு நின்று யாம் உனக்கிசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின் உவப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான்.

பரதன் நம்ப ஏதுவாய் தன் வடிவைப் பெரிதாக்கிக் காட்டுகின்றான் அனுமன். அப்புறம் பரதன் ஏதோ சொல்ல, அது அனுமன் காதுக்கு ஏறவில்லையாம். (அவ்வளவு உயரம் காரணமாய்) ஐயா கொஞ்சம் சிறு உடம்புக்கு வாங்க, காதுலெ வாங்க என பரதன் அழைத்ததாய் கம்பன் வரைந்ததை படிக்க நான் அழைக்கிறேன்.

என்ன இப்பொ நான் சொல்றது உங்க காதுலெ ஏறுதா?

பயணங்கள் “முடி”வதில்லை…


saloon

புரோட்டா சாப்பிடாதீர்கள்.. அதன் தீங்குகளின் லிஸ்ட் இதோ என்று ஃபேஸ்புக்கில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். ஆனால் பரமக்குடிக்குப் போனால், அந்த ”சால்னா”வின் வாசம் மூக்கைக் துளைத்தால் படித்ததெல்லாம் மறந்து போகும். கொத்துப் புரோட்டா என்று ஒரு காலத்தில் “டிங்” ”டிங்” ”டிங்” என்று காதில் ரீங்காரமிட்டு வந்து சேரும் . இப்போது அந்த டிங் டிங் சத்தம் கேட்க முடிவதில்லை. சில்வர் டம்ளர் திருப்பி டிங் டிங் சத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் ஆனால், டொக் டொக் என்று தான் சத்தம் கொடுத்து புரோட்டா பிரிகிறது. அந்தமானில் புரோட்டாவை கத்தியில் கூறு போட்டு கொத்து புரோட்டாவை, கத்திப் புரோட்டா ஆக்கி உள்ளனர். சவுண்ட் பொல்யூஷன் இல்லா சமையலாய் இருக்குமோ?

அந்தக்காலத்தில் இட்லி தோசை வடை பொங்கல் என்று மட்டுமே அறிமுகமாய் இருந்த எனக்கு, முதன் முதலில் பிரட் பட்டர் ஜாம் பாத்தவுடன் தூக்கி வாரிப் போட்டது. அந்தமாதிரி ஐட்டங்களை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்த காலமும் உண்டு. பின்னர் பிரமிக்க வைத்தவை, பெரிய்ய ஹோட்டல்களின் மெனு கார்டுகள்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட ’சூப்’களின் பெயர்களே தலை சுற்ற வைத்து விடும். இளைய தலைமுறை வாரிசுகள் தலையெடுத்தபின், அவர்கள் பார்த்து ஏதோ ஆர்டர் கொடுக்க, நாம் சாப்பிட்டு, கமெண்ட் கொடுப்பதோடு அந்தக் காட்சிக்கு வணக்கம் போடுகின்றேன். சாப்பாடு விஷயம் தவிர இன்னும் கதிகலங்க வைக்கும் விவரம் பாக்கலாம்.

என் திருமதியார்க்கு அழகுக்கலையில் ஆர்வம் அதிகம். கடற்படை அதிகாரிகளின் துணைவியார்கள் நட்த்தும் “அழகுக்கலை” சர்டிபிகேட் வேறு வாங்கிட்டாங்களா… வீட்டின் ஒரு பகுதி அழகுபடுத்தும் நிலையம் ஆகிவிட்டது. அப்படி ஆகிவிட்டதால் பல நேரங்களில் என்னாலேயே அந்த அறைக்குள் நுழைய முடியாது. அது சரி… ஏற்கனவே அழகாய் இருக்கும் பெண்களை மட்டுமே இன்னும் அழகு செய்றீங்களே… நமக்கு எல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லையா என்பேன்… ”ஆண்கள் அழகு நிலையம் இருக்கும், போய் வாருங்கள்” என்று பதில் வரும்.

ஆண்களுக்கான ஆரம்பக்காலத்து சலூனகள் எப்படி இருந்தன. சிவாஜி எம்ஜியார் சரோஜாதேவி பத்மினி இப்படி சில (மறக்காமல் புன்னகை இருக்கும்) படங்கள் இருக்கும். மெஷின் கட்டிங் கிராப் இது மட்டுமே பால பாடமாய் கற்றுக் கொண்டு, இப்பொ பிழைப்பை ஓட்டுவது கஷ்டம். அந்தமானிலும் போர்ட்பிளேயர் நீங்கலாக மற்ற தீவுகளில் அந்தப் பழைய பஞ்சாங்கங்கள் தான் இருக்கின்றன.

போர்ட்பிளேயரில் பையனை அழைத்துக் கொண்டு, ஒரு நவீன சலூனுக்குள் நுழைந்தேன். உள்ளே முடி வெட்டும் இடம் என்பதற்க்காய், கீழே கிடந்த முடிகளை விட்டால், வேறு எந்த அறிகுறியும் தென்படவில்லை. முகத்தில் எதையோ அப்பியும், பலவிதமான வண்ணங்களிலும் கிரீம்கள், பலதரப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள் பயமுறுத்தின. பையனிடம் 0.5 யா 0.25 என்று கேட்டார். பயன் பார்வை என் மேல் விழுந்த்து. எனக்கு அதுக்கான அர்த்தம் சத்தியமா தெரியலை. ஏதோ கம்மியா இருக்கட்டுமே என்று 0.25 என்றேன். மில்ட்ரி கட்டிங்கை விடவும் குறைவான அளவில் திரும்பி வந்தான் பையன். (வழக்கமாய் வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்). கிளைமாக்ஸ் எனக்கு சாதகமானது. ஸ்கூல் பிரேயரில், முடி வெட்ட வேண்டுமென்றால் இப்படி வெட்டி வர வேண்டும் என்று சொன்னார்களாம். ஒரு வேளை, ஏதாவது ஸ்கூலுக்கும் சலூனுக்கும் “கட்டிங்” இருக்குமோ?

நானும் ஒரு நாள் அதே நவீன சலூனில் போய் தலையைக் கொடுத்தேன். ஏதோ கேள்வி கேட்டு எனக்குப் பதில் தெரியாமல் முழிப்பதற்க்குப் பதிலாக, முன்னமே கட்டிங் என்றேன்… முடிந்தது. ”சார் ஔர் குச்…?” என்று ஹிந்தியில் ஏதோ கேட்டார். நானும் சரி என்றேன். கண்ணை மூட வைத்து முகத்தை ஏதேதோ செய்தார். அப்பப்பொ தண்ணீர் பீச்சி அடிக்கிறார். திடீரென்று மூச்சு விட முடியாமல் தவிக்கிறேன். சூடாய் ஒரு காற்றை பீய்ச்சி அடிக்க..எல்லாம் உணரத்தான் முடிந்தது. நடுவில் ஒரு மெனு கார்டு காட்டி கேட்கிறார். கண்ணாடி வேறு கழட்டி வைத்துள்ளதால் ஒரு குத்துமதிப்பா ஒன்றைக் கை காட்டினேன். எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பாத்தேன். பழைய முகம், மூஞ்சி கழுவுன மாதிரி தெரிந்தது. பர்ஸில் கை வைத்தபோது ”ஏக் ஹஜார்” ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்ற போது மனசு என்னமோ செய்தது. வீட்டிற்க்குச் சென்றவுடன் மனைவி சொன்ன மந்திரச் சொல்: ”இனி சலூனுக்கு போகும் போது ரூபாய் 100 மட்டும் கொண்டு போனால் போதும். அதற்குள் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யட்டும்”.

வள்ளுவர் காலத்திலும் கிராப் வெடிக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறதாம். இப்படி எல்லாம் வள்ளுவரைக் கலாய்க்கிறார்கள் என்று என்று எனது பரமக்குடி தமிழாசிரியர் சமீபத்தில் கடிதம் முலம் தெரிவித்திருந்தார். எனது கம்பன் கலாய்கல் புத்தகத்தை, தமிழ் கற்றுவித்த, தமிழ்மேல் ஆர்வம் ஏற்படவைத்த தமிழாசிரியர் திரு எம் டி இராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் மேலும் விளக்கி இருந்தார். மழித்தலும் நீட்டலும் வேண்டாம், என்கிறார் வள்ளுவர். அதாவது மொட்டையும் வேண்டாம் அதாவது கிராப் போதும் என்று சொல்லாமல் சொன்னாராம். இப்படி எல்லாம் பொருள் கொள்ளாமல் கமபனை எடுத்து விளக்கிச் சொல்லி இருப்பது பாராட்டு என்பதாய் அமைந்திருந்த்து கடித வரிகள். (உண்மையில் அப்ப்டியா இருக்கு?). டிஎன்கே என்று உரிமையோடு அழைக்காமல், தாங்கள், உங்கள், என்று சொல்லி எழுதியமை கொஞ்சம் நெருடலாகவும் கௌரவமாகவும் இருந்தது.

சலூன் பற்றி எத்தனை விதமாய் சொல்ல்லாம் என்று யோசித்தால், சவரம் செய்தல், முடி வெட்டுதல், முடி திருத்தல் இப்படித்தான் பதில் வரும். ஹிந்தியில் ”தாடி பனானா” என்கிறார்கள். அதாவது முடியை எடுப்பதை, வளர்ப்பதாய் சொல்கிறது அந்த வாசகம். கம்பரிடமிருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. வேகமாய் கிளிக் செய்து பார்த்தால்,”மயிர் வினை முற்றி – இது என் பயன்பாடு”. கம்பரே சொல்லிட்டா அப்புறம் அதுக்கு ஏது அப்பீல்? ஆமா…கம்பரை சலூன் கடை வரைக்கும் கொண்டு வந்து விட்டதா என்மீது கோபப்பட வேண்டாம்… அப்படியே கம்பராமாயணம் ஒரு பார்வை பாக்கலாமே…வாங்க நீங்களும் கூடவே…

யுத்தம் எல்லம் முடிந்து, பரதனையும் பார்த்துப் பேசி முடித்து, தம்பிமார்களோடு இராமன் நந்திகிராமத்தை அடைந்தாராம். நாமெல்லாம் டிரஸ் மாட்டிக் கொண்டு செண்ட் அடித்துக்கொள்வோம். இராமரோ, மணம் வீசும் உடையை அனிகின்றாராம். அப்படியே மயிர் மழிக்கும் செயல் செய்து முடித்து, சரயு ஆற்றில் குளித்து முடித்த பின்னர் தேவரும் மகிழும் வகையில் ஃபேஸியல் செய்தார்களாம். சாரி…சீதை என்ன கமெண்ட் செய்தார் என்பதை கம்பர் சொல்லாத்தால், இந்த வம்பரும் சொல்லவில்லை. இதோ பாடல்:

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பயர் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றைத்
தம்பியரொஉ தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பச் செய்தார்.

வேறு எங்காவது கம்பர் அழைத்துச் செல்கின்றாரா என்று பின்னர் பாக்கலாம்.

இடையோ இல்லை, இருந்தாலும்…


சமீப காலமாய் வரும் பஞ்ச் டயலாக்குகள் திகைக்க வைக்கின்றன. “நான் இப்பொ கெளம்பிட்டா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” இது சமீபத்திய டயலாக். நானும், என் பேச்சை கேட்கும் நானும் வேறு வேறா?? அய்யா சாமி கொழம்புதே.. இதுக்கு பேசாமெ அத்வைதம் துவைதம் இப்படி ஏதாவது படிச்சி போற நேரத்திலெ புண்ணியமாவது தேடிக்கலாமெ!!!

இப்படித்தான் ஒரு படத்தில் செந்தில் உதைபடும் காட்சி வரும். அதான் எல்லா படதிலும் வந்ததே… அது என்ன புதுசா? என்று கேட்க வேண்டாம். ராமராஜனுடன் காரைத் தள்ளும் ஒரு கலக்கல் காமெடி. “அதெ என்னைப் பாத்து ஏன்டா கேட்டெ?” என்று திரும்பத் திரும்ப உதைக்கும் சீன் அது.

கேட்ட விஷயத்தை, விட தன்னிடம் கேட்டது தான் வீரியம் அதிகம் என்பது தான் நான் இப்பொ கையில் எடுத்திருக்கும் சங்கதி… அதில் நாம் காண வேண்டிய நீதியும் இருக்கு.

கோபம் வந்துட்டா நான், நானாகவே இருக்க மாட்டேன் என்பார்கள் சிலர். அது எப்படி ஒரு ஆள் என்பது என்ன… ஒன்பது ஆட்கள் குடி இருக்கும் வீடா என்ன?? நேரத்துக்கு நேரம், மாறி மாறி எடுத்து விட. மனம் போல் மாங்கல்யம் என்பர். அது போல் குணம் போல் மனிதன். எல்லாராலும் கோபமாய் கத்திவிட முடியாது. அதுபோல் அத்தனை பேராலும் சாந்தமாயும் பேசிவிட முடியாது.

பெண்கள் வேலை செய்யும் இடங்கள்ல சிக்கல்கள் அதிகம். ஆண் ஊழியரை திட்டுவது போல் அவர்களை திட்டிவிட முடியாது. (ஆமா அவர்கள் வீடுகளில் திட்டு தருபவர்களாய் அல்லவா இருப்பர்!!) ஒரு கட்டை குரல் உயர்த்தி சொன்னால் போதும், அணை உடைந்து வருவது போல் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து வரும். எப்போதும் எப்படித்தான் அப்படி தயாராய் கண்ணில் ஸ்டாக் வைத்திருப்பார்களோ!!! அந்த பெண் தேவதைகளுக்குத் தான் வெளிச்சம்.

சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். என்ன? என்று விசாரித்ததில் ஒரு நபர் அவரை ஊனமுற்றவர் என்று சொல்லி விட்டாராம். நான் கேட்டேன், நீங்கள் ஊனமுற்றவர் தானே? ஆம் என்று பதில் வந்தது. உண்மையை ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இல்லை என்னை கேவலப் படுத்துவதற்குத் தான் அந்த வார்த்தையை பயன் படுத்தினார்.

சரி அது நியாயமான வாதம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் பேசுகிறார். வருத்தப்பட்டால் வந்தவர் ஜெயித்த மாதிரி. நாம் சகஜமாய் அதனை எடுத்துக் கொண்டால் நாம் ஜெயிக்கலாம் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

சில மாநிலங்களில் ஊன்முற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று தான் அழைக்க வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளதாம். இதே போல் ஹிந்தி தெரியாத ஆட்களை அஹிந்திபா4ஷி என்று சொல்லி வந்தனர். இப்போது அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு ஹிந்தி தெரியாத இடத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லச் சொல்கிறது அரசு.

ஊனமுற்றவர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே அந்த ஊனத்தின் உபாதையிலிருந்து மீண்டு வர முடியும். அட..ஊனம் இருந்தாலுமே…. இப்படியா??? என்று உலகம் மூக்கில் கை வைத்து வியக்கும்படி செய்ய வேண்டும்.

சிறுபிள்ளைக் காலத்தில் என்னை பூனைக் கண்ணா என்று கேலி செய்வர், அதே பெயரிலும் அழைப்பர். ஆரம்பத்தில் கோபம் வந்தது. பின்னர் அவர்கள் சொன்னது உண்மை தானே என்று எடுத்துக் கொள்ள கிண்டலும் கேலியும் குறைந்து விட்டது. இப்போ ஐஸ்வர்யா ராயின் ஐஸ் என்று ஐஸ் வைக்கிறார்கள் எனக்கு முன்பாக. (பின்னாடி பூனைக் கண்ணன் என்றும் பேசி வரக்கூடும்)

உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் என்பது மட்டும் தான் பொதுவான உண்மை. நான் யார் என்பதை அறிந்து விட்டால் யார் தான் நம்மை காயப்படுத்த முடியும்? முதலில் நம்மைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வோம். அது பிறரின் சங்கடமான வார்த்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றும்.

எதையாவது எழுதி அப்படியே இடையிலே கம்பராமாயணம் கொன்டு வருவது என்பதும் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாற்றுத் திறனாளியாக சீதையை சொல்லும் இடமும் வருது. சீதையா?? எப்படி? எப்படி? என்கிறீர்களா? சூர்ப்பநகை மூக்கு இல்லாமல் இருக்கும் போது, நானும் சீதையும் மாற்றுத் திறனாளிகள் தானே என்கிறார். நீங்க கேட்ட மாதிரி, ராமனும் எப்படி? எப்படி? என்கிறார். ஆமா… சீதைக்குத்தான் இடையே இல்லையே…

இடை பற்றி இன்னொரு இடமும் வருது. அசோக வனத்தில் சீதை வாடி வதங்கிப் போனாராம். எப்படி? எப்படி? இப்படி நீங்க கேக்கனும். கல்லுக்கு நடுவிலே ஒரு சொட்டு தண்ணியும் கெடைக்காமெ, வளரும் நல்ல மருந்துச் செடி மாதிரி வாடி இருந்தாராம். முன்னர் இடை மட்டும் தான் மெலிந்திருந்தது. இப்போது இடை போல் எல்லாம் இளைத்து துரும்பானாராம். எங்கே இருந்தார்? பெருத்த இடை வைத்திருக்கும் அரக்கியர் நடுவில் இருந்தாராம். கம்பர் பார்வை எங்கே போகுது பாருங்க…

வன் மருங்குல் வாள் அரக்கர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்க எழுந்த என்று ஓர் துளி வரக் காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்.

அது சரி உங்க பார்வை எங்கே போகுது??

திரையிசையில் இலக்கியம் (??)


சின்னக் குழந்தைகள் முன்பு, புத்தகத்தை மூடி வைத்து, சட்டென்று ஒரு பக்கத்தை திறந்து படம் இருக்கா? இல்லையா? என்று கேப்போம்.. அந்தக் காலத்தில். அந்த ரேஞ்ச்சில் ஒரு நாள் திரைப்பாடல்களில் இலக்கியத் தரம் இருக்கா இல்லையா என்று விவாதம் வந்தது. அன்றைய விவாதம் செமெ களை கட்டியது என்பதை சொல்லாமல் விட முடியாது. வீட்டுக்கு லேட்டாப் போயி வீட்டுக்காரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை மட்டும் நான் சொல்லவெ மாட்டேன்.

நம்மாளுகளுக்கு ஃபாரின் சரக்குன்னா ஒரே கிக்கு தான். அது பட்டை யாய் இருந்தாலும் சரி.. பாட்டாவே இருந்தாலும் சரி. யோகம் தியானம் என்பது கூட இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போய் வந்து ஆங்கிலத்தில் சொல்லிக் குடுத்தா தான் மண்டையிலெ ஏறுதே… என்ன செய்ய??

அபிராமி அந்தாதி மாதிரி பல அந்தாதி பாட்டுகள் இங்கே எப்பொ இருந்தோ பிரபலம். ஆனா ஹிந்தியிலிருந்து வந்த அந்தாக்சிரியைத் தான் நம் மக்கள் கொண்டாடி குதூகலிப்பர். சினிமாப்பாட்டில் கூட அந்தாதி பாட்டு இருப்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். இதோ சில சாம்பிள்கள்:

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

பாட்டுப் பாடி மரத்தை சுத்தும் அந்தக் காலத்து சினிமாவும் சரி, முனுக்கென்று கண் சிமிட்டும் நேரத்தில் கனவு வந்து ஆஸ்திரேலியாவோ அல்லது தாய்லாந்து கடற்கரைக்கோ தயாரிப்பாளர் செல்வில் போய்வரும் இந்தக் காலச் சினிமாவிலும் சரி.. பாடல் என்பது முழுக்க நடைமுறையில் இல்லாத ஒன்று.

தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாட்டால் வளர்ந்த சமூகம் என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப் படுத்தினால் தான் உண்டு. என்ன செய்ய நம்ம மறதி அப்படி. இப்பொவும் ஏதோ சடங்காய்த் தானெ, சடங்கு நேரத்தில் கூட பாட்டு சத்தம் கேக்குது. போகிற போக்கில் நீராடும் கடலொடுத்த பாட்டுக்கெ ரிஹெர்ஷல் தேவைப்படும் போல் இருக்கிறது.

ஆக.. சினிமா என்பதே கற்பனை என்றால், அதில் வரும் பாடல் கற்பனையோ கற்பனை. அதில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தலைப்பாக்கட்டு அல்லது மதுரை முனியாண்டி விலாசில் போய் தயிர் சாதம் தேடுவது மாதிரி தான் இதுவும்.

ஆனால் என்றோ எப்போதோ கேட்ட பாடல்கள் இன்னும் இனிமையாக காதுகளில் ஒலிக்கும் போது அவை அமரத்துவம் பெற்ற லிஸ்டில் அடைத்திடலாம். அதாவது கிட்டத்தட்ட இலக்கியத்தரம் என்று. ஆமா இலக்கியத்துக்கு என்ன தரம் என்று கேக்கிறீங்களா?? (பாமரனுக்கு புரியக்கூடாது. நீண்ட ஆயுசு. எப்பவும் இனிக்கனும் – அது தான் இலக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாருக்கும் ஈசியா புரிஞ்ச்சிட்டா அப்புறம் கோனார் நோட்ஸுக்கு ஏது வேலை?).

நம்ம கம்பர் பத்தி கொஞ்ச நாளா யோசிக்கிறதாலெ, சினிமாப் பாட்டுக்கும் கம்பருக்கும் இருக்கும் தொடர்பையும் லைட்டா டச் செய்து பாத்தேன்.

கற்பாம் மாணமாம், கண்ணகியாம் சீதையாம் என்று TMS கணீர் குரலில் பாடுகிறார். கம்பனைக் கூப்பிடுங்கள் கவிதை எழுதுவார் என்கிறார். இன்னொரு கருப்பு வெள்ளை படம் கம்பன் ஏமாந்தான் என்று பாடுகிறது. (பெண்கள் மலர் போல் இல்லை என்கிறார் அவர்)

அன்றைய இலக்கியம் படித்த உயர்தர மக்களுக்காய். (ஒரு வேளை அந்த இலக்கியத்தமிழ் அன்று எல்லாருக்குமே புரிந்திருக்குமோ? பெண்புலவர்கள் கூட இருந்திருக்காங்களே!! குடும்பத்தோடு இலக்கியம் பேசி மகிழ்ந்திருக்கலாம்).

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அங்கு
மலைத்தேன் என நான் மலைத்தேன்.

இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வந்தது இன்றும் இனிக்கிறது. எல்லார்க்கும் புரியுதே.. அப்பொ அங்கங்கே இலக்கியம் இருக்கத்தானே செய்யுது.

கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் கம்பரின் எண்ணங்களை நவீன சினிமா பாடல்களில் (தெரிந்தோ தெரியாமலோ) புகுத்திய செய்திகள் அங்காங்கே கிடைக்கிறது.

கடலுக்குக் கூட ஈரமில்லையோ? – என்று நவீன கவிஞர்கள் யோசித்து எழுதியது. ஆனால் கம்பரின் கற்பனையோ “மேகத்திற்கே வேர்க்கிறதே” என்று ஆச்சரியப்பட வைக்கிறது. [கார்க்கருள் தடங் கடல்களும் மழைமுகிழ் காணும் வேர்க்க – பார்த்ததுமே மேகமும் கடலும் வேத்து விறுவிறுத்துப் போச்சாம். இது கம்பன் ஸ்டைலில் சொன்னது].

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை.
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை.

இது இன்றைய கவிஞர் காதலன் காதலி பேசுவதாய்… இல்லை இல்லை பாடுவதாய் அமைத்தது. “துயில் இலை ஆதலின் கனவு தோன்றல” – திரிசடை சீதையிடம் சொன்ன ஒரிஜினல் அக்மார்க் சங்கதி.

இந்த நிலவை எதுக்கெல்லாம் தான் கம்பேர் செய்வாங்களொ?? நகம் பாத்தா நிலவு மாதிரி என்னெக்காவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கா?? ஆனா கம்பர் அப்படிப் பாத்திருக்கார். “சிறியவும் பெரியவும் ஆகித் திங்களோ” என்று அச்சரியப்பட்டு அங்கலாய்க்கிறார். ராமரின் நகங்கள் இப்படி இருந்தன என்று சீதையிடம் சொல்கிறார் அனுமன். ஏற்கனவே நொந்து பொயிருக்காக… அந்த நேரத்தில் இப்படி ஒரு பில்டப்பு..??? ஆனா இப்பொதைய சினிமாப் பாடல் வரிகளில் இருப்பது “இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்”. என்ன சுட்ட சரக்கு மாதிரி தெரியுதா?? கம்பர் என்ன காப்பி ரைட்டா வச்சிருந்தார்??

“பார்வையாலெ நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு” என்று ஒரு ஃப்ளோவிலெ இப்போதைய பாடலாசிரியர் எழுதி இருக்கலாம். ஆனா கம்பருக்கு மட்டும் அப்படி ஃப்ளோ வந்திருக்காதா என்ன? “பார்க்கப்பட்டனர் சிலர்” என்று பார்வையாலே பலர் செத்த கதை சொல்கிறார் கம்பர்.

இப்படியாக திரைப்பாடல்கள் அங்காங்கே இலக்கியம், அதுவும் கம்பரிடம் சுட்ட இலக்கிய சங்கதிகள் இருக்கு என்று நிறைவு செய்கிறேன்.

மீண்டும் வருவேன்.

கம்பன் பார்வையில் நிர்வாகவியல்


கவிச்சக்கரவர்த்தி:

கணியமும், அதில் தமிழும் இருக்கும் நவீன வசதிகள் கொண்ட இக்காலத்தில் கூட இரண்டு பக்கங்கள் தமிழில் எழுதுவது என்பது மிகவும் சிரம்மான ஒன்றாக தமிழர்கள் கருதி வருகிரார்கள். ஆனால் பத்தாயிரம் பாடல்களுக்கும் மேலாய் ஏடும் எழுத்தாணியும் மட்டுமே கொண்டு எழுதிய அக்காலத்து புலவர்களை நாம் அப்படியே ஒதுக்கி வைத்து விட முடியாது. இக்காலத்தில் திருத்தம் செய்வது எவ்வளவு எளிதோ, அக்காலத்தில் அவை அவ்வளவு கடிது. அச்சூழலில் கவி பாடியவரில் ஒருவர் தான் கவிச் சக்கரவர்த்தி என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் கம்பர். கம்பரின் கைவன்னத்தில் அமைந்த கம்பராமாயணம் பற்றி அனைவரும் அறிவர். கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த நூல், காப்பியம் என்ற உண்மைகளையும் மீறி இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் இருப்பதை அலகிறது இக்கட்டுரை.

தர்க்கம்

தர்க்கம் என்பது ஒருகாலத்தில் ஒரு சாத்திரமாய் அறியப்பட்டு வந்தது. அதனை ஆங்கிலத்தில் Logical thinking என்று மொழி பெயர்ப்பர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே வரும் மோதல்கள், மேலதிகாரிக்கும் உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே வரும் சிக்கலகள், இவைகளுக்கான ஆதாரமம், அந்தப் பிரச்சினையினை தர்க்க ரீதியாக ஆராயாமல் அடம் பிடிக்கும் காரணம் தான். இதைத் தான் நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பல வழிகளில் சொல்கின்றனர்.

ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமான சாட்சிகளாக இன்றளவும் கருதப் படுகின்றன. இவ்வளவு பெரிய சங்கதியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை கம்பன் காட்டும் நிர்வாக இயலுக்கு ஒரு சான்றாகும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லையாம். அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படிப் போகிறது கம்பனின் பாடல்.ங்கள்

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.

Goal Setting

நிர்வாகவியல் படிப்புகளில் எங்கு சுற்றினாலும் கடைசியில் சில பல M என்ற ஆங்கில எழுத்தில் துவங்க்கும் வார்த்தையில் வந்துவிடுவர். Money, Man, Material, Machinery இப்படியாக… பல. அதையும் தாண்டி இலக்கை எட்டுவது எப்படி என்று பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் எவ்வாறு சொல்லி இருகிறார் என்பதையும் பார்க்கலாம். அவர் ஒரு செய்லினை எந்த மாதிரி செய்தல் தகும் என்பதை கூறுகிறார்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். Objective of the Job.
2. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ அதனைப் அவரிடம் தேர்வு செய்து தருதல் Assighn the Job.
3. வேலைக்குத் தேவையான அனைத்தையும் தருதல் Give him the required resources.
4. இலக்கினை எட்ட நாள் குறித்தல் Fix the Target.
5. செயலின் விளைவுகளைப் பெறுதல் Feed Back.
6. குறித்த நேரத்தில் வேலை நடக்கிறதா என்பதை கன்காணித்தல் வேண்டும் Review the Task.

இதை எல்லாம் கம்பர் தனது ராமாயணத்தில் கையாண்டு இருக்கிறார். இடம் பொருள் ஆகியவற்றுடன் சற்று நோக்கினால்,நிர்வாக குரு என்று கம்பனை நீங்களே இனி அழைப்பீர்கள்.

1. வேலையில் தெளிவு : சீதையினை தென் திசை சென்று தேட வேண்டும்.
2. Team Leader: அனுமனை அதற்கு தேர்வு செய்தல்.
3. Resource: இரண்டு வெள்ளம்(மில்லியன் அல்லது பில்லியன் என்று என் ஊகம்) வானரப் படை தருதல்.
4. கெடு: முப்பது நாள் தான். (அட..இதைத்தான் இன்றும் தகவல் பெறும் உரிமை சட்டத்திலும் தகவல் தர நாள் கெடுவாய் வைத்துள்ளாட்களே?)
5. தகவல் அவ்வப்போது பெற வேண்டும்.
6. ஒரு மாசம் முடிந்து மறுபடியும் சந்திப்பதாய் முடிகிறது.

இது சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.

இதுக்கு முன்னாடியும் இப்படி

அரசு மற்றும் தனியார் நிர்வாக அலுவலகங்களில் ஏது பிரச்சினை எழும் போது, “இப்படி ஏற்கனவே செய்திருக்கிறார்களா??” என்று கேட்டு முடிவு எடுப்பார்கள். இதற்கு விதி விலக்க்காய் தனித்துவம் வாய்ந்த முடிவுகள் எடுப்பவர்களும் உண்டு. அது ஒரு சிலரால் தான் முடியும். திரு டி என் சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாய் நின்று ஒளிர்ந்தது இந்த ரகம் தான்.

இராமயண காதையில் கம்பருக்கும் இப்படி ஒரு சிக்கல் வருகிறது. அரக்கியாகவே இருப்பினும் ஒரு பெண்ணைக் கொல்ல்லாமா? என்ற குழப்பம் கதாநாயகன் இராமனுக்கே வருகிறது. கூட இருக்கும் ஆலோசகர் விசுவாமித்திர முனிவர் சொல்கிறார்,” இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கிறது”. இப்படி முன்பே நடந்ததாக முனிவர் கொடுக்கும் இரண்டு முன் உதாரணங்கள்: கியாதி & முகதி என்ற இரண்டு பெண் அரக்கிகளை திருமாலும் இந்திரனுமே இதுக்கு முன்னர் அழித்துள்ளனர் என்பது தான். (கம்பராமாயணம் : பாடல் 381 & 382)

ஈகோவை உதறுங்கள்:

அரசு வேலைகளிலும் தாமதம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி இருக்கிரது. அதற்கான காரணம் பற்றி சற்றே யோசித்தால், “யார் பெரியவர்? யார் யாரைப் பார்க்க வரவேண்டும் போன்றவைகளால் கூட தாமதங்கள் ஆகும். இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள். இவற்றிலிருந்து விடுபட கம்பர் ஒரு நல்ல தீர்வு சொல்கிறார். ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேண்டுமா அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடியுங்கள். அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீர்கள். சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே செல்லுங்கள்…வேகமாகச் செல்லுங்கள். விமானதிலும் கூட செல்லலாம். எப்படி போனாலும் தனியாகவே செல்லுங்கள். காரோட்டியைக் கூட தவிர்க்கவும். இது தான் கம்பர் தரும் நிர்வாக ரகசியங்கள்.

கம்பர் கையில் எடுத்த பிரச்சினை, இராவணன் சீதையை கவர வேண்டும். சரியான ஆலோசகர் மாரீசன். இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்.. என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டால், ஈகோவை உதறிவிட்டு நேரில் போகவேண்டும் என்பதாய் கம்பர் சொல்கிறார். (கம்பன் கதாநாயகன் பக்கம் தான் இருக்க வேணும் என்ற கட்டாயம் இல்லையே? வில்லனுக்கும் உதவுகிறார்)

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.

வரமா சாபமா??

உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாகச் சிரியுங்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனா வள்ளுவர் கூட இதையே இடுக்கண் வருங்கால் சிரி என்றிருக்கிறார்.

நடப்பதெல்லாம் எல்லாம் நன்மைக்கே என்று இருப்பது நல்லது. எது நடந்தாலும் சரி… எதுவுவே நடக்கவே இல்லையென்றாலும் சரி, எல்லாம் நல்லதுக்குத்தான் என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது.

வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். “நீயும்இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று. இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி… “எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது” என்று. சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் நிர்வாகக் கலையினை கம்பர் தருகிறார்.

ஹிந்தியில் பான்ச் பான்ச்

பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி தெரியாமல் தான் வருவர். பின்னர் அதே ஹிந்தியில் கவிபுனையும் திறமையும் பெற்ற தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழர்களுக்கு ஹிந்தியில் எண்கள் சொல்வது என்பது சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை மனப்பாடம் செய்தாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர். அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்.

15 க்கு பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்.
47 க்கு சைந்தாலீஸ் சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்..  இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது போல் தான் படுகின்றது. அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போய் விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர கம்பன் பாடல் உதவுகிறது. நிர்வாக சிக்கலைனை எதிகொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளவும் பழக வேண்டும் என்பதை கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும்.

அதுவா? இதுவா?? எதை செய்ய ???

இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும். சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். இரண்டில் ஒண்றை த்ற்வு செய்தாக வேண்டிய நிலை அமையும் அல்லது அத்றகு இது பரவாயில்லை மாதிரியும் சூழ்ல்கள் வந்து சேரும்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும். சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஒரு நிறுவனம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது. காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமை தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம்.

இராமயணத்திலும் ஒரு சூழல் வருகின்றது. ராமனும் சுக்ரீவனும் இருவருமே மனைவியைப் பிரிந்தவர்கள். அனுமன் மெதுவாக ஆரம்பிக்கிறார். (சுக்ரீவனைப் பார்த்து ) “அரசனே, இவர்களைப் பார்த்தால் உங்கள் மனைவியைத் தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரிகிறார்கள்”.

சுக்ரீவனோ… இந்த இராமனே, மனைவியை பறி கொடுத்து நிற்கிறார். இவரால் எப்படி முடியம்? சந்தேகம்.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது. ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு .. வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது.

அடுத்த கேள்வி.. “யாருடைய மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது?” நாம் பரீட்சையில் பதில் எழுதும் போது என்ன செய்வோம்? நல்லா பதில் தெரிந்த கேள்விக்கு முதலில் பதில் எழுதுவோம். அதே அந்த இரண்டில் ஒன்றினை தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.

ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம். சீதை இருக்கும் இடம் எங்கே? என்பதே யாருக்கும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிந்த இடத்துக்கு உடன் போகலாம் . இப்படித்தான் முடிவானது அந்த வாலியின் முடிவின் ஆரம்பம். நிரவாக காரியங்களில் முடிவு எடுப்பது எப்படி என்று கம்பன் கற்றுத் தரும் பாடம் இது.

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில் பய்ற்சி அளித்து வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக கட்டுரையின் நோக்கம். இன்னும் கலகலப்பாய் கம்பராமாயணம் படித்து மகிழ http://www.andamantamilnenjan.wordpress.com வலைப் பூவிற்கு வருக வருகவென அழைக்கின்றேன்.

வயிற்றுப் பார்வை


ரொம்பவும் நெருங்கிய நட்பு வட்டாரம் வீட்டில் வந்தாலோ அல்லது தெருவில் சந்தித்தாலோ..வாங்க அப்படியே இட்லி கிட்லி சாப்பிட்டே பேசுவோம்..என்று அழைப்போம்..

ஆமா..இந்த இட்லி ஓகே…அந்த கிட்லி என்றால் எனன்?? (மதுரெ இட்லிக்குத்தானேடா பேமஸு…கிட்லிக்குமா..? என்று வடிவேலு ஸ்டைலில் புலம்பலாம் போல இருக்கா??)

உபசரிப்புகள் பலவிதம்… காப்பி சாப்பிடலாமா?? என்னத்துக்கு வீட்டிலேயே சாப்பிட்டு வந்திருப்பீங்களே.. என்று கேட்பது கல்யாணப் பரிசு தங்கவேலு ரகம்.

காப்பித் தண்ணி சாப்பிடலாமா என்ற கேள்வியும் சில இடங்களில் வரும். காபி தண்ணியாத்தான் இருக்கும் என்பதின் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ரகம் அது.

ஒரு வேலையா ஒருத்தரைப் பாக்க அந்தமான் அரசு அலுவலகம் போனேன். டீ சாப்பிடலாமா என்று கேட்பதற்குள் இன்னொரு வேண்டாத விருந்தாளி உள்ளே வந்தார். (நீ உள்ளே போனா விருந்தாளி..அடுத்தவன் உள்ளே வந்தா, வேண்டாத விருந்தளியா??…ம்…மௌனம் சம்மதம் தானே). சக ஊழியரை அழைத்து, சாப் லோகோங்கோ.. ஜரா சாய் பிலானா என்றார்…

பேச்சு தொடர்ந்தது.. ஆனால் சாயா வந்த பாடில்லை.. வெறுத்துப் போன அந்த வேண்டாத விருந்தாளி எழுந்தார்..அந்த அதிகாரியோ… இந்த ஊழியர் அப்படித்தான்… பத்து பேருக்கு ஒரே ஆள் தான்..அதனால் உங்களுக்கு டீ தர முடியவில்லை என்பதை வழிந்தார்.

மறுபடியும் ஊழியரை அழைத்தார்..நல்லா செமையா திட்டப் போகிறார் என்று தான் நினைத்தேன்.. ரொம்ப கூலா…சாப்கோ சாய் பிலானா என்றார். இரண்டே நிமிடத்தின் திடம் மணம் எல்லாம் சேந்து (ஜோதிகா இல்லாமல்) வந்தது.

என்ன நடக்குது இங்கே?? யோசித்த போது தான் “ஜரா” என்ற ஹிந்தி வார்த்தைக்கு பின்னால் இப்படி ஒரு போட்டுக் கொடுக்கும் குணம் இருப்பது தெரிந்தது.

தரகர்கள் சொல்லும் பொதுவான வார்த்தைகள் – கை நிறைய சம்பளம். பொண்ணு ரதி மாதிரி இருப்பா…என்பார்கள். (இந்தப் இழவுப் பொய்யைத்தான் எல்லார்ட்டேயும் சொல்றேமே – என்று விவேக் தரகராக ஒரு படத்தில் அப்ரூவர் ஆகி இருப்பார்).

ரதி மாதிரி என்று சொன்னாலே, ரதி தான் உள்ளதில் அழகு..இந்தொ பொண்ணு அது மாதிரி இப்படித்தானே அர்த்தம். கொரங்கு மூஞ்சி என்றால் அப்பொ என்ன அர்த்தம்?? குரங்கே பெட்டர் என்று அர்த்தம்.

இப்பொ அப்படியே கம்ப ராமாயணத்துகு வருவோம். நம்மாளுக ஹீரோயின் வயிற்றைக் காட்டாமெ… தொப்புளை ஃபோகஸ் செய்து அதில், பம்பரம் உட்டாங்க.. ஆம்லெட் போட்டாங்க… அத்தோட உட்டாங்க… அதில் ரசனை போய் விரசம் மிஞ்ச்சினது.

நம்ம கம்பர் தான் ரசிப்பதில் ஆஸ்கார் தரம். அவர் ஒரு ஹீரோயினோட வயிறு பத்தி எழுதனும். ஆலம இலை, சித்திரப் பலகை, வெள்ளித்தட்டு, கண்ணாடி இதுமாதிரி இருக்கும் என்று சொல்ல வந்தவர் அப்புறம் அந்த லாஜிக் யோசிச்சி….. No…No…. இவை எல்லாம் ஹீரோயின் வயிறு மாதிரி இருக்கு என்று சொல்லலாம் என்று சீதையின் வயிறை வர்ணிக்கிறார் கம்பர்.

ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண்பலகை நொய்ய
பால் நிறத் தட்டம்  வட்டக் கண்ணாடி பலவும் இன்ன
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை என்னும்.

இனி ஆல் இலை, கண்ணாடி பாத்தா உங்ககுக்கு என்ன ஞாபகம் வரணும்???

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


 ரெண்டு பழைய ஹிட் பாட்டுகள்.

 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…(நான் பழைய ராஜா பத்திய பாட்டு தான் சொல்றேன்)
பறவைகள் .. பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

 இதில் பார்வைகள் பலவிதம் என்பதும் வரும். அது என்ன?? பார்வைகள் பல விதம்.

ஆனா இன்னும் ஒருவரோ… பார்வை ஒன்றே போதுமே…பல்லாயிரம் சொல் வேணுமா?? என்றும் கேட்கிறார்.

ஆமாமா…ஒரே நபர் (பெண்ணாக இருந்தால்) சிறுமி, மாணவி, இளைஞி, வாலிபி, பிகர், செமகட்டை, மால், சகோதரி, மனைவி, ஆண்டி இப்படி எத்தனை விதமா பாக்குறொம்.. அப்போ பார்வை மட்டும் ஒன்னா எப்படி இருக்கும்???

பாசத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? –  இந்த மாதிரி வில்லங்க்கமான கேள்வியை ஒரு வாத்தியார் கேட்டார் பசங்க கிட்டே.. (கேட்டிருக்கக் கூடாது தான்)

பையன் சூப்பரா பதில் சொன்னான்.

சார்… நீங்க உங்க பொண்ணு மேலே வைக்கிறது பாசம். அதே நாங்க வச்சா … அதன் பேர் காதல்…

என்ன ஒரு வித்தியாசமான பார்வை பாத்தீங்களா??

அதே மாதிரி.. ரெண்டு பேர் பொண்ணு பாத்துட்டு வந்திட்டு பாடும் பாட்டு இருக்கே…

நான் பாத்த பெண்ணை நீ பார்க்கவில்லை… நீ பாத்த பெண்ணை நான் பார்க்கவில்லை…

இதுவும் ஒரு மாதிரியான கண் பார்வை தான்…

அப்படியே கொஞ்சம் காவிய காலத்துக்கு கொஞ்சம் பயணிக்கலாமே … (No air fare…all trips are free..free..free)

இலங்கைக்கு விசிட் வந்துட்டோம்… அப்படியே பேசிட்டே… அங்கே ரெண்டு பார்வைப் போர் நடக்குது.. (இலங்கைன்னா போர் தானா??)

ஒரு ராஜா சொல்றார்: வாவ்.. வாள் மாதிரி கூர்மையா இருக்கு… ஆனாலும் மை போட்டதாலே கூலா இருக்கே…இது யாரு??

ராஜாவோட தங்கை: எனக்கு என்னமோ கண்ணு தாமரை மாதிரி இருக்கு… வாய் பழம் மாதிரி இருக்கு. அப்புறம் கம்பீரமா இருக்கிற அந்த ஆளைப் பாத்த ஆண் மாதிரி தெரியுதே…

என்ன ஆச்சரியம்…!!! ரெண்டு பேரும் பாத்தது ஒரு நபர்… ஆனால் ஒருத்தருக்கு பெண்ணா தெரியுது. இன்னொருவருக்கு ஆண் போல் தெரியுது…

நாமளும் பாக்கலாமே.. அது யாருன்னு??

அந்த ராஜா: இராவணன்

தங்கை: சூர்ப்பநகை

ராஜாவின் பார்வை சீதை பக்கம்

தங்கையின் பார்வையோ ராமனின் பக்கம்… மேலும் படிக்க நீங்க போங்க கம்பராமாயணத்தில் சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம் பக்கம்..

அது சரி… உங்க பார்வை இப்போ யார் பக்கம்?? எந்தப் பக்கம்???