ஓவர் பில்டப்பும் அடக்கி வாசித்தலும்.


இப்பொல்லாம் சென்னை மாதிரியான ஊர்களில் டவுன் பஸ்களில் கூட வெளி மாநிலத்து ஆசாமிகளின் பயணம் தெரிகிறது. அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு வசதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை காட்டுகிறது (மின் வெட்டையும் மீறி…). ஆனால் எப்போதும் பல மாநிலத்தவர்களோடு கலந்து வாழும் வாழ்க்கை அந்தமான் வாழ்க்கை.

மாடிக் குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பீகார் மாநிலத்தவர் (அவர் பையன் என் கூட சேந்து தமிழ் பேச கத்துகிட்டு வர்ரான்). கீழ் தளத்தில் உ.பி & ஆந்திர மாநிலத்தவர். அதனாலெ தான் அந்தமானை மினி இந்தியா என்கிறோம்.

சினிமாவிலும் இந்த டாபிக் வச்சி சூப்பரான ஒரு படம் வந்தது பாரத விலாஸ் என்று. சிவாஜி நடிப்பில் வழக்கம் போல முத்திரை பதித்த படம் அது. அதில் அவர் தன் மனசாட்சியுடன் பேசுவது போல் TMS குரலில் பாட்டு வரும். சக்கை போடு போடு ராஜா…உன் காட்டுலெ மழை பெய்யுது.

அதில் நடுவே ஒரு வசனம் வரும். “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்”. என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒரிஜினல் தான் எப்போதும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லும் தத்துவம் தான் அது.
பில்டப் செய்வது என்று ஆரம்பித்து தமிழ் சினிமாக்களில் தேடினால், ஏகமாய் காமெடிகள் சிக்கும். கல்யாணப் பரிசு தங்கவேலுவின் எழுத்தளர் பைரவன் பில்டப், நாகேஷின் ஓஹோ புரடெக்சன் என்று ஆரம்பித்து சமீபத்திய விவேக் & வடிவேல் வரை தொடரும். (நடுவே ரஜனி & விஜய் கூட அந்த லிஸ்டில் வருவார்கள்… ஹீரோக்கள் என்பதால் அவர்களை ஓரமாய் வைத்து தொடர்வோம்)

துபாய் ரோட்டை பத்தி வடிவேல் சொல்லும்…. சாரி… பில்டப் தரும் காட்சி எப்பொ பாத்தாலும் சிரிப்பாவே இருக்கும். “சோத்தை அள்ளி வச்சி ரசத்தை ஊத்தி கொளைச்சி அடிக்கலாம்டா” என்று சொல்லுவது தான் பீக். நடுவே துபாயில் திருநீறு வைச்சி என்றும் பிட்டு போடுவது நல்ல கலக்கல் தான்.

“கெணத்தைக் கானோம்” என்று அலறி அடித்தபடி வடிவேல் வரும் இன்னொரு காமெடி இருக்கு. சிவில் இஞ்சினியர்களை வைத்து இப்படி ஒரு காமெடி அடிக்கடி பேசப்படுகிறது. (விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்ட அத்துனை சிவில் பொறியாளர்களும் மன்னிக்கவும்.)

காசு ஆசை பிடித்த ஒரு சிவில் இஞ்சினியர் ஒரு கிணறை தோண்டாமல், தோண்டியது போல் ரெக்கார்ட் பில்டப் செய்து காசு பாத்து கிளம்பிட்டாராம். அதுக்கு பின்னால் வந்தவருக்கும் அது தெரிந்து விட்டது. அவர் என்ன சளைத்தவரா என்ன?? அவர் இருந்த 5 வருஷமும் பராமரிப்பு செஞ்ச மாதிரி கணக்கு காட்டி காசு சாப்பிட்டாராம். பின்னர் 5 வருடம் நல்ல மனுஷன் வந்து ஏதும் செய்யாமல் போய் விட்டார்.

அடுத்த முறை வந்தவர் பாத்தார். அட 5 வருஷமா பராமரிப்பே இல்லாமல் இருக்கே. அப்பொ சிறப்பு மராமத்து வேலை செய்ய ஆரம்பித்து ஸ்வாகா செய்து விட்டு அவரின் tenure முடித்தார். சமீபத்திய போஸ்டிங்கில் வந்தவர் காலத்தில் தான் அந்த வடிவேலுவின் காமெடி வந்த காலம். அவர் யோசித்தார். அட… நம்ம ஏரியாவிலெ இப்படி ஏதும் கம்ப்ளெய்ண்ட் வந்தால்???? என்ன செய்வது யோசித்தார். கிணறு தோண்டி பல வருடங்கள் ஆயிடுச்சி.. இனி மராமத்து செய்ய முடியாது. இதெ மூட்றது பெட்டர் என்று மூடும் செலவை அவர் பாக்கெட்டில் போட்டுகிட்டாராம்.

இது கொஞ்சம் ஓவராவே பில்டப் செய்த சேதி மாதிரி தானே தெரியுது??

என் பையன் கிட்டெ கேட்டேன், “உங்க வாத்தியார் யார் பேராவது ரொம்ப உனக்கு பிடிச்சிருக்கா??”

“தெரியும். அம்பேத்கார் பத்தி தானே சொல்ல வர்ரீங்க. அம்பேத்கார் என்பது பீமின் டீச்சர் பெயர் தானே?” இப்படி பதில் வந்தது முந்திரிக் கொட்டை போல் (இந்தக் காலத்து பசங்க கிட்டெ வாயே திறக்க முடியறதில்லை. அப்பொ பொன்டாட்டி கிட்டெ??..ம்…மூச்…)

அம்பேத்கார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். கீழ் சாதி என்று ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட மறுக்கப்பட்ட காலம் அது. அவரும் அவரது ஆதரவாளர்களும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து வந்தனர். அதை அறிந்து ஜாதி வெறியர்கள் மாட்டு சாணம், மாட்டின் சிறுநீர் (கோமியம் – உபயம் பாக்யராஜ்) ஆகியவை ஊற்றி பூஜை செய்து, மூன்று நாள் பயன் படுத்தாமல் இருந்தார்களாம். [ஆர். முத்துகுமார் எழுதிய அம்பேத்கார் புத்தகத்தில் இன்னும் பல சேதிகள் படிக்க முடிந்தது]

இது கொஞ்சம் ஓவரா இல்லெ?? இது என் பையன் கேட்ட கேள்வி. அவனால் நம்பவே முடியவில்லை இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பது.

ஓவரா பில்டப் தருவதின் எதிர்ப்பதம் அடக்கி வச்சித்தல். ஒன்னுமே தெரியாமெ இருக்கிறவன் தேமேன்னு இருக்கிறது இந்த லிஸ்டில் வராது. நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கேன்.

அப்புறம்… “இப்படித்தான் ராமாயணத்தில்…” என்று அடிக்கடி எழுதி வரும் நான் ராமாயணம் முழுசாக்கூட படிக்காமெ, ஆரம்ப பாடத்தில் இருக்கும் கத்துகுட்டி.

அதுக்கு நேர் ஆப்போசிட்டா, எல்லாம் தெரிஞ்ச்சி வச்சிருப்பாக… ஆனா சொல்றதுக்கு முன்னாடி, “ உங்களை விட எனக்கு ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் என் சிற்றறிவுக்கு…” இப்படி சொல்வது தான் அடக்கி வாசித்தல்.

இப்படித்தான் ராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது.

அனுமன் சீதையை சந்தித்த இடம். தான் ராமனின் தூதன் என்றும், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பின்னர் அடக்கமாய், தேவி வாருங்கள் உங்களை நான் ராமன் வசம் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு மறுமொழி சொல்லும் சீதையோ, தன்னால் அதுக்கு ஓகே சொல்ல முடியாது என்பதற்கு லீகலா காரணங்கள் சொல்கிறார் பல.. இதோ அவற்றில் சில…

1. இலங்கை வரும் போதே பல சிக்கல்களை அனுபவித்த அனுமனுக்கு தன்னை சுமந்து திரும்பும் போது அதே சிக்கல் வந்தால் அனுமனுக்கு அல்லவா சிக்கல் வரும்?
2. ராமரின் வீரத்தை குறைத்த மாதிரி ஆயிடாது??
3. ராவணன் என்னை கொண்டு வந்த மாதிரியே வஞ்சனையா, அனுமன் என்னை கொண்டு போவது.. நல்லாவா இருக்கு?
4. இராவணன் & இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
5. என் கற்பை ராமரிடம் நிரூபிக்க வேண்டாமா?
6. ஆடவரை தீண்டாது இருகும் நான், நீயும் ஆடவன் அல்லவா??
இப்படி நச் நச் என்று போகுது பாயிண்ட்..

ஆனா நான் சொல்ல வந்த சேதி இது இல்லை.

இவ்வளவு லாஜிக்கலா யோசிக்கும் சீதை சொல்லும் முன் அடக்கி வாசித்தது தான் நான் சொல்ல வந்த செய்தி.

சீதை அனுமனிடம் முதலில் சொன்னது இது தான்: நீ சொல்றது ஒனக்கு ஒன்னும் பிரமாதமான வேலையா இருக்காது தான். ரொம்ப ஈஸியாவும் செஞ்சிடுவேதான். நல்லாத் தான் யோசிக்கிறே.. நான் ஒரு பெண். பெரிய(!!!) சிற்றறிவு தான் இருக்கு. எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு படுது. இது என்னோட கருத்து.

இப்படி அடக்கி வாசிச்சிட்டு அப்புறம் தான் அத்தனை லா பாய்ண்டும் வருது சீதையிடமிருந்து.

அறியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.

இதனால் அறியப்படும் நீதி: பில்டப் செய்யலாம். ஆனா ஓவர் பில்டப் கூடவே கூடாது. அடக்கி வாசிக்கலாம். ஆனா தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் சொல்ல வேண்டிய சேதியை சொல்லியே ஆக வேண்டும்.

இது சீதை சொன்ன கீதை.
மீண்டும் சந்திப்போம்.

எங்கேயும் எப்போதும் – பாக்யராஜ் ஸ்டைல்


அந்தாக்ஷ்ரி விளையாடுவோமா? என்றால் கும்பலாய் கூடும் இடங்களில் அந்த இடமே களை கட்டும். அந்தமான்  மாதிரி பல மொழிகள் பேசும் ஆட்கள் இருக்கும் இடங்களில் எல்லா மொழிப் பாடல்களும் பாடலாம்..அதிலும் kaa Gha எல்லாவற்றிற்கும் க வில் ஆரம்பிக்கும் தமிழ் பாடல் பாட சிறப்பு அனுமதி கிடைக்கும்.

இது அந்தாதி என்பதின் நாகரீக வடிவம் தான். அபிராமி அந்தாதி கேள்விப் பட்டிருப்பீர்களே… பாட்டு முடியும் வார்த்தையில் அடுத்த பாடல் ஆரம்பிக்க வேண்டும். அது தான் நியதி.

சினிமா பாட்டில் அந்தாதி இருக்கா?? ஏன் இல்லை… மூன்று முடிச்சு படத்தில் ஆடி வெள்ளி தேடி உன்னை என்ற பாட்டு அந்த அந்தாதி வகை தான். இப்பொ இன்னொரு தடவை உற்றுக் கேளுங்கள் அதன் சுவை இன்னும் கூடும். பிரபலமான பாடல்களின் வரிகளை படங்களுக்கு பெயராக வைப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்.

லெட்சுமிக் கல்யாணம் படத்தில் செம ஹிட்டான பாட்டு, ராமன் எத்தனை ராமனடி… ராமன் எத்தனை ராமனடி படம் வந்தது. அதில் அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு…ஹிட்டாச்சி. அதே பெயரில் படமும் வந்தது. அதில் தேன் சிந்துதே வானம் பாட்டு இன்றும் உருக்கும்.. அதே பெயரில் படம் வந்தது… உன்னிடம் மயங்குகிறேன் என்று ஒரு பாட்டு.. அந்தப் பெயரில் படம் கண்டிப்பா வந்திருக்கலாம்…

ஆனா சுடச் சுட அப்பொவே ஹிட் பாட்டை வச்சி தான் புது படம் வரும். எப்பொவொ வந்த எங்கேயும் எப்போது சங்கீதம் சந்தோஷம் பாட்டை வச்சி இப்பொ ஒரு படம் வந்திருக்கே..அது கொஞ்சம் யோசிக்க வைக்குது.

பரமக்குடி வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து Facebook ல் ஒரு குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். (கமல்ஹாசனையும் சேருங்கப்பா அந்த குருப்பில்).. தீபவளிக்கு எந்தெந்த தியேட்டரில் என்னென்ன படம் (வாழ்க்கைக்கு தேவையான ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி…!!!) என்ற என் கேள்விக்கு ரவி தியேட்டரில் எங்கேயும் எப்போதும் ரிலீஸ் என்ற பதில் வந்தது.

ஓர்  ஊர் பெரிய்ய ஊரா சின்ன ஊரா என்ற சர்ச்சை காலேஜ் ஹாஸ்டலில் அடிக்கடி வரும். அப்போது Yard stick புதுப்படம் ரிலீஸ் ஆவது என்பதும் ஒன்று.. பரமக்குடிக்கு அப்பப்பொ அந்தப் பெருமை வரும். ஆனா சொதப்பலான படம் (அவள் அப்படித்தான்) மாதிரி ரிலீஸ் ஆகி பரம்க்குடி & பரமக்குடியான் (கமல்தான்) பெயரையும் கெடுக்கும்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சரி.. சந்தோஷம் எப்படி?? எப்போதும் எப்படி சந்தோஷமாய் இருப்பது??

சின்னத் தீவில் அரசு அதிகாரியாய் இருப்பதால் அப்பப்பொ கூட்டத்தில் பேசும் வாய்ப்பும் கிடைத்து விடும். ஒரு முறை லிட்டில் அந்தமான் தீவு மாணவர்கள் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பரிசு வாங்கி கலக்கிவிட்டனர். (கோ கோ வில் மட்டும் கோட்டை விட்டு விட்டனர்). பள்ளியின் தலைமை ஆசிரியர் செம குஷி ஆகி விட்டார்.

பின்னெ சும்மாவா… சுனாமியில் சுருண்ட அந்த தீவு மீண்டும் மீண்டது என்பதற்கு ஒரு சாட்சி அல்லவா அந்த வெற்றி.. தாரை தம்பட்டைகளுடன் கப்பலடி முதல் பள்ளிவரை உற்சாக வரவேற்பு.. மாணவர்களுக்கு பாராட்டு மழை தரவும் ஏற்பாடு. எனக்கு முன் பேசிய அனைவரும் கோக்கோவில் தோல்வி பற்றி தான் கவலைப்பட்டார்கள். மைக் என் கைக்கு வந்தது. எவ்வளவு வெற்றிகள் பெற்றிருக்கிறோம் அதைப் பாருங்கள்.. கோகோவை விடுங்கள்..பிறரை தள்ளி விட்டு அதுவும் முதுகில் பின்னால் நின்று விளையாடிம் விளையாட்டு..அதில் தோற்றதுக்கு சந்தோஷப்படுங்கள் என்றேன்.. என் பேச்சு அங்கு நன்கு எடுபட்டது.

அப்பொ… இப்பொ கம்ப ராமாயணம் பக்கம் போகலாமா… அன்றும் ராமன் சந்தோஷமா காட்டுக்கு போனதை அங்கும் சொன்னேன். எங்கேயும் எப்போதும் கம்ப சங்கீதத்தை இசைப்பது எனக்கு சந்தோஷம்.. உங்களுக்கு எப்படியோ..??

கம்பர் கொஞ்சம் ஜனரஞ்சகமான ஆளு தான். அப்பப்பொ பாலசந்தர் வியாட்நாம் வீடு சுந்தரம் மாதிரி சீரியஸான மெட்டர் எழுதினாலும் அப்பொப்பொ பாக்யராஜ் பாணியிலு எழுதுவார்..

எங்கேயும் எப்போதும் கனிந்தே இருக்கும் இனிக்கும் பழம் பத்தி கம்பர் எழுதி இருக்கார். முண்டகத்துறை என்ற ஒரு சோலை..எப்படி இருக்கும் தெரியுமா?? நல்லவர்கிட்டெ இருக்கும் செல்வம் மாதிரி.. எங்கேயும் உலகத்தார் அதை அனுபவிக்கலாம். எப்போதும் நிலைத்தும் நிற்குமாம். இது பாலசந்தர் ஸ்டைல்.

பாக்யராஜ் ஸ்டைலிலும் கலக்குறார் நம்ம கம்பர்… நல்ல ஒழுக்கத்தோட இருக்கும் பிகர்களின் (அதுவும் எளசான) உதடுகள் மாதிரி அங்கே உள்ள கனிகள் எங்கேயும் எப்போதும் கனிந்தெ இருக்குமாம்..

ஞாலம் நுங்குறு நல்லறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம் பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீங் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.

நீதி: எங்கேயும் எப்போதும் சந்தோஷமா இருங்க.. கூடவே இனி எங்கேயும் எப்போதும் உங்களுக்கு கம்பரே சந்தோஷமா ஞாபகம் வரட்டும்.

நாளை நமதே


அன்பு நெஞ்சங்களே…

இன்றைய தினம் ஏதோ சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு, தெம்பு தரும் அருமையான வாசகம் இந்த “நாளை நமதே”.

இந்த “நாளை நமதே” என்று தொடங்கும் எம் ஜி ஆர் படப் பாடல் மிகப் பிரபலம். அதில் வரும் “எந்த நாளும் நமதே” என்பது இன்னும் அளிக்கும் ஓர் உற்சாக டானிக்.

கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்டால் ‘நாளை தருகிறேன்” என்பார்கள்.   அந்த “நாளை” என்பது என்றுமே வராது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இன்று போய் நாளை வா- ன்னு ஒரு ஜாலியான பாக்யராஜ் படம். நாளைய எதிர்காலம் ஹிந்தி படிச்சாத்தான் உண்டு என்று சொன்ன படம்.

( அடப்பாவி டி என் கே…. ஒரு பொண்ணை கவுக்கிரதுக்கு நாலு பேரு சேந்து போட்ற ஒரு ஐடியா தான் அந்த ஹிந்தி கத்துகிற சமாச்சாரமும்… இதிலெ கருத்து கண்ணாயிரம் மாதிரி கருத்து வேறெ இருக்கா???)

எப்படியாவது தில்லைக்குப் போகனும்னு ஓர் அடியார்க்கு பயங்கரமான ஆசை. ஆனால் அவ்வளவு வசதி இல்லை அவருக்கு. எப்பப்பா தில்லைக்கு போகப்போறே-ன்னு
யாராவது கேட்டா…அரியர்ஸ் வாங்கின நம்மாளுங்க அடுத்த செமஸ்டர் என்று சொல்வது போல்… நாளைக்குப் போகப் போறேன்- என்பாராம்.. கடைசியில் அவரது பேரே நாளைப் போவார் என்று ஆகி பிற்காலத்தில் திருநாளைப்போவார் என்றும் ஆகி விட்டது. (அவர் தில்லைக்குப்  போனாரா… தெரியவில்லை.. ஆனால் கைலாசம் கண்டிப்பா போயிருப்பார்)

“இன்று போய் நாளை வா” என்றதும் ராவணனுக்கு ராமன் அளித்த ஒரு சான்ஸ் தான் ஞாபகம் வரும். (இது எல்லாருக்கும் தெரிந்தது என்பதால் அதை விட்டு விடுகிறேன்)

நான் என் பங்குக்கு ஒரு வைரமுத்துவின் புதுக்கவிதை சொல்றேனே..

நாளை சொல்லலாம்..நாளை சொல்லலாம்… என்று தவற விட்ட காதலை…பழைய காதலியை பாக்கச் செல்லும் நாயகன் கதை அது..இலையில் தங்கிய துளிகள் – இது தலைப்பு. இனி வைரமுத்துவின் வார்த்தைகளில் பாக்கலமே…

காலப்பெருவிளியில் சில
பத்தாண்டுகள் கடந்து,
மீண்டும்
கண்டு செல்ல வருகிறேன் உன்
காதல் திருமுகம்.

ஒட்டு மொத்த நாணத்தை
ஒன்று திரட்டி
என் மேல் வீசியடித்த
கடந்த காலம்
மனசெல்லாம் மார்கழி தான்
தெருவெல்லாம் கார்த்திகை தான்.

ஏழோ எட்டோ இருக்குமாம்
பழகிவந்த ஆண்டுகளும்
பேசிய வார்த்தைகளும்
இன்றேனும் பேசு பெண்ணே…

வாங்க…

ஆண்டுகள் தோன்றிய அதே குரல்
ஆனால்… நீ மட்டும் நீயில்லை

வீதியெல்லாம்
விசிறியடிக்கின்ற அவள் எங்கே.??
மழை ஊறிய ஓவியமாய்
சாயம் போன நீ எங்கே!!

காலம் தன் சவுக்கை
பூக்கள் மீது
சொடுக்காமல்
இருந்திருக்கலாம்.

….
தேனீர் தந்தாய்

பட்டுவிடக்கூடாதென்ற
உன் அச்சத்திலும்
தொட்டுவிடக்கூடாதென்ற
என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே
தள்ளாடியது.

….
கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது
கார் கதவு சாத்த வந்த
கணவன் சொன்னான்:

“நீங்களே அவளுக்கு
தாலி கட்டி இருக்கலாம்”.

உன்போல் பெண்மக்கள்
ஊர் உலகில் எத்தனையோ..
காதலுற்ற சேதியினை
காதலற்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்!!!
****
என்ன… உடனே ஐ லவ் யூ சொல்ல கிளம்பிட்டீங்களா??
அவங்கவங்க பொண்டாட்டிமார்களிடம் சொல்லிட்டு கெளம்புங்க… வரட்டுமா???

T N Krishnamoorthi

ஹீரோ, ஹீரோ தான்


வில்லன்கள் ஹீரோ ஆகலாம். ஆனா ஹீரோ வில்லன் ஆக முடியாது. அப்படியே ஆனாலும் அது ஆன்டிஹீரோ என்று தான் சொல்ல முடியும்.

ஆனா கமல் மாதிரி சில புண்ணியவான்கள் முயற்சியால்,காமெடி நடிகை, ஹீரோயின் ஆன சந்தர்ப்பங்களும் உண்டு.

வடிவேல் புலிகேசியாய் வலம்வந்தது … ஹீரோவா காமெடியா?? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

இதை அப்படியே விட்டுட்டு ரெண்டு கண்கள் பத்தி கொஞ்சம் பாப்போம். கண்கள் இரண்டும் என்றதுமே.. மனசுக்குள்ளாற ஒரு பழைய பாட்டு கண்டிப்பா ஓடியிருக்கனுமே…?

அது காதல் கண் பற்றிய பாடல். 

நான் இப்பொ சொல்ல வரும் கண் கடமைக்கண்.. (காதலோ கடமையோ.. எல்லாம் ஒன்னு தானே..சாரி ரெண்டு கண்ணு தானே?? ).  இதுலெ என்ன பெரிசா வித்தியாசம் வந்திரப் போகுது??)

It varies when you compare with others..

சரி எப்படி கம்பேர் பன்னலாம்.

உங்க மனைவி அல்லது காதலி அல்லது Girl Friend கிட்டே போய் “நீ சிரிச்சா தமன்னா மாதிரி இருக்கே…சிரிக்காட்டியும் கூட ஐஸ்வர்யா மாதிரி தான்” என்று ஐஸ் வைக்கலாம். அதெ விட்டுப்போட்டு எக்கு தப்பா ஒரு வில்லி கூட கம்பேர் பன்னி பேசினா, உங்க கதி அதோ கதி தான்.

அன்னா ஹஜாரே காந்தி மாதிரி உண்ணாவிரதம் இருந்து சாதிச்சார். இப்படிச் சொன்னா ஹஜாரேக்கும் பெருமை. காந்திக்கும் பெருமை.

ராமாயணத்தில் ஒரு சோகமான் இடம்.

இராமன், மனைவி பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலை. ராமனை ஏமாத்தி அப்படி செய்ததால் கூடுதல் கடுப்பு வேறெ. அவங்க அப்பாவோட தோழர் ஜடாயுவின் மரணம். இந்த மூணும் சேந்து ராமனை ராத்திரி முழுக்க தூங்கவே விடலையாம். அந்த கண் எப்படி இருந்ததாம்??

நம்மளை கேட்டா Weekend கொண்டாட்டம் கழிச்சி வந்த மாதிரின்னு தான் சொல்ல முடியும். இல்லையா?? ராத்திரி கண்முழிச்சி மிட்நைட் மசலா பாத்த மாதிரி…(இதை தாண்டி நம்மாள யோசிக்க முடியாது..)

கம்பர் உணர்ச்சி வசப்பட்டு அந்த சோகமான ராமனோட கண், லட்சுமணன் கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாரு..  அப்புறம் அவருக்கு ஞாபகம் வருது..அட்டா… ராமன் ஹீரோவாச்சே… எப்படி லக்குவன் கூட கம்பேர் பன்னிட்டு வம்பிலெ மாட்ட முடியும்??

ஒரு பிட்டு நடுவுலெ சொருகுறார்..

இராமன் ஒரு நாள் முழிச்ச கண்..இலக்குவன் வனவாசம் வந்த நாள் ஆரம்பிச்சி இன்னெக்கி வரைக்கும் தூங்காத கண்ணு.

ரெண்டும் ஒரே மாதிரி இருக்காம்…

சுகமோ, துக்கமோ ஹீரோவுக்கு தனி மரியாதை தான்.

பாக்கியராஜ் ஒரு படத்தின் கிளைமாக்ஸில் சொல்ற மாதிரி… ஹீரோ ஹீரோ தான்..

பாவம் லட்சுமணன் நாள் கணக்கா கண்விழிச்சி, கடைசியில் ஒரு நாளில் ஹீரோ ராமன் பேர் தட்டி விட்டார்..

ம்…ஹீரோ ஹீரோ தான்.

இதோ கம்பரின் வரிகள்:

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் அவர்கள் சிந்தை
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே.

ஆதாரம்: அடப்பாவிகளா… தூங்காமெ கண் விழிச்சி யோசிச்சி எழுதுறேன்..ஏதோ சுட்ட பழம்ன்னு நெனைச்சீங்களே… ராமன் மேலே சத்தியம்.. சொந்தச் சரக்கு தான் (எந்தச் சரக்கு???).

அந்தமான் அதிகாலை 4 மணிக்கு எழுதியது