அவனா நீ???


இன்றைய படங்களையும் காமெடி காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புரியும். அவைகள் ஒரு வகையில் நம் சமூகத்தோடு ஒன்றாகக் கலந்து போய் உள்ளன என்பதும் தான், நான் சொல்ல வந்த சேதி. சில வார்த்தைகள் திரைப்படங்களில் “சினிமாவில் பயன்பாட்டிற்கு முன்” மற்றும் “சினிமாவில் பயன்பாட்டிற்கு பின்” என்று சொல்லும் அளவுக்கு மாறியே போய் விட்டன. வருங்கால வரலாறு இதனை கிமு கிபி என்று அழைப்பது போல், சிமு சிபி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இப்பெல்லாம் “அவனா நீ?” என்று யாரையும் சாதாரணமாய் கேட்டுவிட முடியாது. கேட்டால் அதனால் உண்டாகும் பாதகங்களுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டி வரும். அடுத்தவர் மனம் கோணாது நடப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு பிறப்பிலேயே வரும். சிலருக்கு என்பது வயது தாண்டினாலும் வராது. கோவை பக்கம் சூப்பரான ஒரு வட்டார வழக்கு இருக்கு. சுட்டுப் போட்டாலும் வராது என்பார்கள். ஏன் தான் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு இன்னும் சுட்டுப் போட்டாலும் புரியலை.

சமீபத்தில் அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஒரு சின்ன உல்லாச விருந்துக்கு ஏற்பாடு ஆனது.. (உல்லாசம் என்றவுடன்.. உங்கள் கற்பனை சிறகுகள் எல்லாம் பறக்க விட வேண்டாம்.. ஏதோ வீட்டுல உக்காந்து சாப்பிடறதுக்குப் பதிலா, ஹோட்டலில் போய் நின்னுட்டு சாப்பிட்டு வர வேணும் அம்புட்டு தான். பில்லுக்கும் பல்லிளிக்கும் நபருக்கும், வாசற்கதவு திறந்து சலாம் வைப்பவருக்கும் பணம் தரவேணும் என்பது எழுதப்படாத விதி).
சில ஜாலியான குடும்ப விளையாட்டுகள் வைத்தோம். பேப்பர் கப் என்று கிடைக்கும் 25 கப்களை ஒன்றாக அடுக்கி, அதனை வலது & இடது என்று கை மாற்றி மேலிருந்து எடுத்து கீழாய் அடுக்க வேணும். கணவன் மனைவி ஜோடிகளுக்கு இடையே போட்டி நடந்தது. போட்டி போட்டு நடந்த போட்டியின் முத்தாய்ப்பாய், அன்று ஓய்வு பெறும் அதிகாரியை அழைத்தோம். பொறுமையாய் தன் மனைவியை சற்றும் விட்டுத் தராமல் மனைவிக்கு சமமாய் கப்களை நகர்த்தி ஒரு நிமிடத்தில் விளையாட்டை முடித்தார். இறுதியில் சிறந்த ஜோடிக்கான சிறப்பு பரிசை தந்தோம் என்பது கொசுறுத் தகவல்.
மனைவியின் மனம் வருந்தி விடக் கூடாதே என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முகம் தெரியா விருந்தினர்களையும் உபசரிக்க திண்ணை வைத்து வீடு கட்டியது அந்தக் காலம். உழைப்பாளிகளின் சுமைகளை இறக்கி வைக்க, சுமை தாங்கி எல்லாம் இருந்தது. குடிக்க தண்ணி கேட்டால் செம்பு நிறைய கிடைத்தது ஒரு காலம். இப்பொ பாக்கெட் தண்ணி வாங்கி குடிக்கும் காலம். அடுத்தவர் பற்றி நமக்கு அக்கறை குறைக்கும் வித்தை மிக அக்கரையோடு கற்பிக்கப் படுகிறதோ!!!

காக்கை வடை திருட்டும் கதை, நரி காக்கையை ஏமாற்றும் கதை இவை எல்லாம் நமக்கு கிடைத்த பால பாடங்கள். ஏமாற்றுவது என்பது ஒரு தவறு இல்லை என்று அந்த பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விட்டது. நடுவில் சினிமா படங்களும் சில தத்துவங்களை மனதில் பதிக்கின்றன. நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை – போன்றவை சாம்பிள் சினிமா தத்துவங்கள். நேர்மை நியாயம் எல்லாம் அந்தக்காலத்து நாடகம் & சினிமாக்களில் மட்டுமே பாக்க முடிகிறது.

இப்பேற்பட்ட சூழலில் நம்மை யாராவது மனசு நோகடிக்கும்படி செய்தால் அல்லது பேசினால் கஷ்டமாத்தான் இருக்கு. அதை எப்படி சமாளிப்பது என்பது அவரவர் சாமர்த்தியம். ஆனா இதே சங்கடத்தை அடுத்தவர்க்கு நாம் தராமல் இருக்கலாமே?? மாமியார் மருமகள் கொடுமை, ராகிங்க் போன்றவை ஒழிய இந்த மனோபாவ மாற்றம் தேவை. ஒரு புரமோஷன் கொடுக்க உயர் அதிகாரிக்கு வலிக்கிறது. ஏன் என்று கேட்டா, அவருக்கு இப்படி லேசா கெடைக்கலியாம்??? கோர்ட்டுக்கு எல்லாம் போய் தான் கெடேச்சதாம்.. அதனாலெ.. அடுத்தவங்களுக்கும் லேசிலெ தரமாட்டாராம்..
நான் செருப்பு கூட இல்லாமல் ஸ்கூலுக்கு போனேன். நடந்து தான் போனேன். நானும் இப்பொ என் பையனையும் “செருப்பில்லாமெ போ” என்று சொல்லவில்லையே… நல்லதா ஷு வாங்கி தரலையா?? காரில் போக வசதி செய்து தரலையா?? இதே மாதிரியான எண்ணங்கள் வேலை செய்யும் இடத்திலும் இருக்கலாமே என்பது என் கருத்து..
நல்லா இரு… என்று சொல்வதும், நல்லா வருவே என்று சொல்வதும் கூட சினிமாவில் வேறு பொருள்.. சரி.. நாம கம்பர் இந்த மாதிரி சமாசாரம் ஏதாவது சொல்லி இருக்காரா என்று தேட ஆரம்பிக்கலாமா என்று தேடினேன். தேடினால் கிடைக்காமல் போகாது என்பது சரி தான் கிடைத்தது.
ஹனுமன் நெற்றியில் ஒரு Spy Camera வச்சிட்டேன். அவரு என்ன பேசுகிறார் யோசிக்கிறார் (??) பார்க்கிறார் வரைக்கும் நீங்களும் பார்க்கலாம். ஆனா சிந்தனையின் Copy Right மட்டும் கம்பருக்கு. இலங்கையின் ஏரியல் வியூ தெரிகிறதா உங்களுக்கும்?? பிரம்மாண்டமான அரண்மனை… சுகமான நித்திரையில் ஒருவன். ஹனுமன் பார்க்கிறார். “அவனா நீ?” (இராவணனா நீ என்று தான் பொருள்??) அப்படியே இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தானே ஆயுள்.. அது வரை.. நல்லா இரு என்று ஆசி செய்து நகர்கிறார். செவிக்கு தேனாய் இனிக்கும் இராமனின் புகழினை திருத்தமாய் சொல்கின்ற வானரத் தலைவன் வாயால் வாழ்த்தினால் பலிக்காமலா போகும்!!
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கைகவித்து நீங்கிடச் சில பகல்என்பது கருதாசெவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்கவிக்கு நாயகம் அனையவன் உறையுளைக் கடந்தான்.
இனி மேல் வாழ்க வளமுடன் என்றாவது சொல்லிப் பாருங்கள்.. அவங்களோடு நீங்களும் நல்லா இருப்பீங்க..