ஓய்வு பெறும் நாள்..


விவேக் நடித்த படத்தில் ஒரு காமெடி வரும். பெரிய மாலையுடன் பெரியவர் இருப்பார். அம்மாவிடம், ”என்னம்மா அப்பா போயிட்டாரா?” என்று மப்பில் கேட்பார். ”இல்லெடா… அப்பா ரிட்டையர் ஆயிட்டார்” என்பதாய் பதில் கிடைக்கும். ”அப்பாடா இனிமேலாவது ஒரு இளைஞனுக்கு வேலை கிடைக்கும்” என்று தொடர்ந்து, ”இனிமெ வேலைக்கே போக வேண்டியதில்லை. அப்பொ எதுக்கு கடிகாரம்?” என்று அதையும் பிடிங்கிக் கொள்வது தான் அந்தக் காமெடியின் ஹைலைட்.

இன்றைய காலகட்டத்தில் ஒருவன் ஒரே கம்பெனியில் ஐந்து வருஷத்துக்கு மேல் இருந்தால் அவன் அப்டேட் ஆகாதவன் என்ற கெட்ட பெயர் தான் கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் வரும். யார் அடிக்கடி கம்பெனி மாற்றுகிறார்களோ, அவர்கள் தான் இன்றைய சூழலில் கொடிகட்டிப் பறக்கும் சூரப் புலிகள்.

ஆனால் அரசுத் துறைகளில் அப்படி இல்லை. 30 வருடத்துக்கும் மேலாய் மாங்கு மாங்கு என்று (உண்மையிலேயே அதன் அரத்தம் தான் என்ன?) உழைத்து ஓய்வு பெறும் ஆட்களும் உண்டு. கடைசி நாளன்று ஒரு சின்ன விழா எடுப்பர். விடைபெற்றுச் செல்லும் நாளன்று அவரை நல்லவர் வல்லவர் என்று புகழ்வது ஒரு சபை நாகரீகம். ஓய்வு பெறும் நபர் எப்போது ஒழிவார் என்று காத்திருக்கும் ஆசாமிகளும் இருக்கத்தான் செய்வார்கள். எல்லாம் கலந்த கலவை தானே மக்கள் என்பது.

சமீபத்தில் அப்பேற்பட்ட விழாவில் நானும் இருந்தேன். ஒருவரை பேச அழைத்தனர். மேடையும் மைக்கும் கிடைச்சாலும் கிடெச்சது என்று இந்திய கலாச்சாரம் தொடங்கி வின் வெளி ஆய்வு வரை சென்று நன்றாக எல்லாரும் உழைக்க வேண்டும் என்பதாய் முடித்தார். எனக்கோ சின்ன கலக்கம் ஏதாவது தப்பான மீட்டிங் வந்து விட்டோமா என்று. அடுத்து ஒருவர் வந்தார். ஏதோ பட்டிமன்றம் போசும் போது முதலில் பேசியவரை வெட்டியோ ஒட்டியோ பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராய் இருப்பவர் போல் அவரும் பேசிவிட்டுச் சென்றார். விடை பெற்றுச் செல்ல இருப்பவர் பேந்தப் பேந்த முழித்த்து தான் வேதனையாய் இருந்தது பாக்க.

இப்படிப்பட்ட கூட்ட்த்தில் நச்சுன்னு ரெண்டு வார்த்தை, விடை பெறும் நபர் பத்தி சின்னதா ஒரு குட்டிக் கதையோடு சொல்வதால் என் பேச்சு எடுபட்டு விடுகிறது. (எப்படியெல்லாம் நம்மளை நல்ல பேரு எடுக்க வைக்க எத்தனை பேரு பாடு பட்றாய்ங்க??)

ஒருவேளை பிடிக்காத நபராய் இருப்பாரோ அந்த விடை பெறும் நபர். என்னதான் மோசமான ஆளாய் இருந்தாலும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்திருக்காது வாழ்க்கையில். (தமிழகத்து ஆளும் கட்சி எதிர் கட்சி மாதிரி இருப்பார்களோ..??)

ஆனால் நம்ம மரபு, எதிரியாய் இருந்தாலே கூட அவரும் ஏதாவது நல்லது செய்தால் அதனை பாராட்ட வேண்டும் என்று தானே சொல்லிக் கொடுத்திருக்கிறது. வக்கிரமான சின்னத்திரை சீரியல்கள், பழிக்குப் பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று தொடர்ந்து வரும் படங்களையும் பாத்ததால் அந்த நல்ல பண்பை எல்லாம் மறந்து விட்டோமோ?? யோசிக்க வைக்கிறது.. நீங்களும் யோசிங்க…

மத்திய அரசின் ஓய்வு பெறும் தற்போதைய வயதான 60 ஐ மேலும் நீட்டித்து 62 வரை ஆக்க இருப்பதாய் தகவல்கள் வெளிவர, எல்லாருமே ஆளுக்காளுகள் தனக்கு என்ன சாதகம்? பாதகம்? என்பதை அலச ஆரம்பித்து விட்டனர். சிவனே என்று இருந்த என்னையும் சிலர் வம்புக்கு இழுத்தனர். ஒரு ஊழியரின் பிறந்த நாள் மட்டும் தெரிந்தால் அவரின் ரிட்டையர்மெண்ட் தினத்தை தெரிந்து கொள்வது எப்படி? என்று கிளறினார்கள். (நாம தான் எக்செலில் போட்டுக் காட்டி விடுவோம் என்று ஒரு நம்பிக்கை). கேட்டவரும் எக்செலில் போட்டுத்தான் பாத்திருக்கார். இந்த லீப் வருடம் சிக்கல் தரவே நேரெ என்னிடம் வந்துட்டார்.

லாஜிக்கலா யோசித்து சில ஸ்டெப் போட வேண்டும். ஒருவரின் பிறந்த நாள் 12-11-1962 என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 60 வயது எப்போது ஆகும் என்று முதலில் பாக்க வேண்டும். 11-11-2022 ல் 60 வயது ஆகும். அப்புறம் அது எந்த மாதம் என்று பார்க்க வேண்டும். அதன் கடைசி நாள் தான் அவரின் ரிட்டையர்மெண்ட் ஆகும் தினம். அதாவது நவம்பர் 30, 2022 தான் அவர் ஓய்வு பெறும் நாள். இன்னொரு சிக்கல் உள்ளது. மாதத்தின் முதல் நாள் பிறந்த துரதிருஷ்டசாலிகளுக்கு அந்த மாசத்துக்கு முன்னாடி உள்ள மாதத்தின் கடைசி நாளில் ஓய்வு பெறுவார். உதாரணமாக 1-11-1962 ல் ஒருவர் பிறந்திருந்தால், அவர் 31-10-2022 லேயே வீட்டுக்கு போயிடனும்.

இதெல்லாம் யோசிச்சி அதை அப்படியே எக்செலில் திணிச்சா.. நமக்கு விடை கிடைக்காமலா போகுது?? அது சரி..எப்படி போட்றது? இவ்வளவு வம்பு அளக்கிற நானு, அதையும் சொல்லாமலா போகிறேன்..!!!
கீழே இருக்கும் படி சில தகவல்கள் பதியுங்கள் அந்தந்த செல்களில்:
A1 – Date of Birth
B1 – Date of Retirement
A2 ல் ஒர் ஊழியரின் பிறந்த தேதியினை இடுங்கள். B2 ல் ஈயடிச்சான் காப்பி மாதிரி கீழே உள்ள பார்முலாவை அடிங்க.
=IF(DAY(A2)1,EOMONTH(A2+21915,0),EOMONTH(A2+21915,-1))

A2 ல் நீங்கள் எண்ட்ரி செயத பிறந்த நாளுக்கேற்ப B2 ல் ரிட்டையர்மெண்ட் நாள் வந்திருக்கும். ஏதாவது நம்பர் வந்து கடுப்பேத்தினா, கவலையே படாதீங்க. அதை Date formate க்கு மாத்திட்டா போதும் (சும்மா ஒரு ரைட் கிளிக் செய்ங்க பிரதர்). எப்புடி இந்த ஜாலம் நடக்குதுங்கிறதும் சொல்லிட்டா, நீங்க மத்த வேலைகளுக்கும் யூஸ் செய்யலாமே???

மொதல்லெ தேதி 1 இல்லாத பட்சத்திலெ எப்படி செய்யனும் முதல் தேதி என்றால் என்ன செய்யனும் என்பதாய் ஒரு IF போட்டு துவங்கியாகி விட்டது. பிறந்த நாளில் தேதியினை மட்டும் சுட்டு தனியே எடுக்க DAY(A2) என்பது பயன்படும். Not Equal to என்பதைத் தான் என்று போட்டுள்ளேன்.
EOMONTH என்றால் End of Month சம்பளப் பணம் எல்லாம் தீந்து போய், சிக்கனமாய் இருக்கும் அல்லது கடன் வாங்கும் மாசக் கடைசி தினம். அது என்ன சம்பந்தமில்லாமல் 21915 வந்திருக்கு என்று கணக்குப் புலிகள் யோசிக்கீகளா?? விளக்கம் சொல்றேன் கேளுங்க. நாலு வருஷத்துக்கு ஒரு தடவை பிப்ரவரி மாசத்துக்கு 29 நாள் வந்து உயிரை எடுக்கும். அப்பொ மட்டும் 366 நாட்கள் வருடத்துக்கு. மத்த மூனு வருஷமும் 365 நாள் தான் வரும். ஆக நாளு வருஷம் கையிலெ எடுத்தா அதில் 365+365+365+366 = 1461. அப்பொ ஆவரேஜா ஒரு வருஷத்துக்கு 1461/4 =365.25. அப்பொ 60 வருஷத்துக்கு ?? 60 X 365.25 = 21915. (தலை சுத்துதா கொஞ்சமா?) அந்த தலை சுத்தலோடவே… கூட வாங்க.

ஒரு கமா போட்டு 0 ஒரு பக்கமும், ஒரு கமா போட்டு -1ம் இருக்குமே! ஒரு மாசத்து கடைசிக்கு போகத்தான் அந்த ஏற்பாடு. ஒரு மாசம் முன்னாடி போக அடுத்த ஏற்பாடு.. அப்பாடா ஒரு வழியா பாடம் முடிந்தது…

கம்பர் உதயமாகிறார். குவைத் எல்லாம் போய் என்னை வம்ம்புக்கு இழுத்துட்டு இந்த போஸ்டிங்கில் கலட்டி உட்டியே கடன்காரா!!! (அந்த கடன் காரன் சாட்தாத் நான் தான்…) எக்செலெப் பத்தி சொல்ற நேரத்திலெயும் கம்பர் வரனும்னு வம்பு செஞ்சா எப்படி?? ஆமா எதிரியை புகழ்வது பத்தி பாதியிலெ வுட்டோமே???… இப்பொ தொடர்வோம்… கம்பனையும் கூட்டிக் கொண்டு…

ஒரு சண்டைக் காட்சி, ரொம்பவுமே பரபரப்பா போயிட்டே இருக்கு. ஆளும் கட்சி எதிர்கட்சி என்று ரெண்டு பேரும் தங்கள் திறமைகள் காட்டி சண்டை போட்டபடி இருக்கிறார்கள். ஒருவர் அப்படி தன் திறமையினைக் காட்ட, சபாஷ் என்று சத்தம் வருது. எங்கேயிருந்து என்று ஓடிப் போய் பாத்தா… அது எதிர் அணியிலிருந்து தான். வருவது கம்பராமாயணத்தில். திறமையினைக் காட்டியது அனுமன். சபாஷ் போட்ட பெரிய்ய மனுசன் கும்பகர்ணன்.

சூலத்தையே ஒடிச்ச அனுமனது ஆற்றல் பாத்து, கும்பகர்ணன் “உன்னோட கைத்திறன் சொல்லவோ, நெனைச்சிப் பாக்கவும் மேலானதா இருக்கு.. மெகா ஈவென்ட் எல்லாம் செய்றதுக்கு உலகத்திலெ உன்னெ விட்டா ஆளு லேது. கம்பேர் செஞ்சி சொல்ல முடியாத அளவுக்கு சூப்பரா கீரேப்பா” என்கிறார். கெட்டவனா இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான்..

பாட்டும் பாக்கலாமா??

நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான்.

மீண்டும் நல்லவர்களை தேடுவோம்…