புகை நமக்குப் பகையா???


 [முன் குறிப்பு: நான் இன்னமும் புகை பிடிக்கும் கெட்ட பழக்கத்தை ஆரம்பிக்க வில்லை]

புகை பகையா??

இதென்ன கேள்வி? எந்தப் படம் பாத்தாலும், இந்த அறிவுரை தான், நடு நடுவுலே வருதே…??

புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு என்று போட்டே விக்கிறாங்க… Cancer Danger Poison என்கின்ற பெயரிலும் புகைகள் செமையாய் விற்பனை ஆகின்றன. நம்ம ஆட்களுக்கு எது வேண்டாம்ணு சொல்றோமோ அதில் தான் ஈர்ப்பு அதிகம் ஆகும் போலத் தெரியுது…. அதை மறைக்கிறார்களோ அதை திருட்டுத் தனமாய் எட்டிப் பார்ப்பதில் அலாதி சுகம் தான். (எந்த விஷயத்தையும் அளவோடு தான் வச்சிக்கனுமாம்… Advice, ஜாலி, குரூப், போஸ்டிங்க், கிண்டல்,காதலி, சில்மிஷங்கள் etc etc..etc)

அதான் நம்ம பியாரிலாலும் அடிக்கடி வந்து ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டுக்கு மேல் போஸ்டிங்க் வேண்டவே வேண்டாம் என்கிறார்.

சொல்ல வந்த ஒரு விஷயத்தெ சொல்லாம ஜவ்வு மாதிரி இழுத்தா… என்ன இது ராமாயணம் மாதிரி இழுக்குறே என்பார்கள்… (அப்போ ராமாயணம் பத்தியே எழுதும் போது இழுவைக்கு குறை இருக்குமா என்ன??)

இழுவை… புகைக்கும் தொடர்பு உள்ளதாம். இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை..இறுதி என்பது சிகரெட் முடியும் வரையா??. உயிர் போகும் வரை – இது தான் அதன் அர்த்தமாய் இருக்கனும்.

ஒரு சட்டைப்பையில் விவேக், சிகரெட் இருப்பதை மோந்து பாத்து… ஐய்யயோ… அந்த சிகரெட்டா… குப்பை லாரி நாத்தம் வருமேடா…. உன் பக்கத்தில் உன் மனைவி எப்படி வருவா?? குழந்தை எப்படி வரும் ? என்பார்.

சிகரெட்டே இப்படி என்றால், இந்த பீடி சுருட்டு ஆகியவைகள் இன்னும் மோசம்.

2000 வாக்கில் லண்டன் BBC தமிழோசையில் டாக்டர் கலாம் அவர்களிடம், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது. லஞ்சம் என்பது காட்டாற்று வெள்ளம். அதை மேலேயே தடுத்து அணைகட்ட வேண்டும். கீழே தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

எனக்கு ஒரு விஷயம் புரியலை.. இந்த புகையை தடை செய்து விட்டால்… என்ன குடியா முழுகி விடும்??

சர்க்காருக்கு வருவாய் இழப்பு…

அப்போ இதே விட வருமானம் வரும் பல….ன தொழிலை அரசே ஏற்று நடத்தலாமா??? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு.

வினோபாஜீயிடம் சிலர் கேட்டார்களாம், நமது விவசாயிகளும் பணத்துக்குகாகத் தானே உழைக்கிறார்கள்?.. வினோபாவின் பதில் இதோ: பணம் மட்டும் தான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்கள் நெல் கோதுமைக்குப் பதிலாக கஞ்சா தான் பயிர் செய்திருப்பார்கள். அப்படி இல்லையே..

அப்போ Tamil Nadu Agricutural Unversity மாதிரி Tamil Nadu கஞ்சா Unversity தொடங்கி, அதில் நம்ம கஞ்சா கருப்பை விசி ஆக்கியிரலாமா என்ன??

பாக்கப் போனா, புகையினால் அரசுக்கு வரும் வருமானத்தை விட புகை சார்ந்து வரும் நோய்களுக்கு அரசு அதிகம் செலவு செய்கிறது என்பது தான் உண்மை…

இந்த புகை பத்தி சொன்னா நம்ம பகை ஆயிடுவோம்… அவங்க பாட்டுக்கு புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆத்தட்டும்…நம்ம பாட்டுக்கு இதிலே ஏதும் புதுக் கவிதை இருக்குதான்னு தேடலாம். 

இருவிரல்

நடுவில்

திடீரெனத்

தோன்றும்

ஆறாம் விரல்.

சூப்பரா இருக்கில்லே.. ஆனா கூடவே பிறந்த விரல் சுடாது. இந்த ஆறாம் விரல் அல்ப நேரத்துக்கு அப்புறம் சுடும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?? கம்பர் ஒரு புகை ஆதரவாளர்… ஒரு புகை இல்லை… நாலு புகைக்கு ஆதரவு தருகிறார்… ஒரு புகையே இவ்வளவு குமட்டும் போது நாலு புகை.. தாங்குமடா பூமி..?? 

நீங்க நினைக்கும் புகை வேறு… கம்பர் நேசிக்கும் புகை வேறு… அறம் பொருள் இன்பம் வீடு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு புகை விரும்பியாம்..

ஒண்ணும் புரியலையே..!!!

வாங்க அப்படியே அயோத்திக்கு ஓப்பன் ஜீப்புலே போவோம்.. அப்பத்தான் எல்லா புகை பத்தியும் உணரலாம்.

 அயோத்தி ஒரே புகை மண்டலமா இருந்ததாம்.

அன்னதானம் செய்யும் பொருட்டு சமையல் செய்து..செய்து..செய்து..அதன் புகை (அறப்புகை)

கரும்பு ஆலையில் இருந்து வரும் வாசம் மிகுந்த  புகை (Admissible pollutant as per the Pollution Control norms) .. இது பொருள் சார்ந்த புகை.

பெண்கள் கூந்தலுக்கு இடும் அகிலின் புகை (சகிலா என்று மாத்தி யோசிக்காதீங்க)..இது இன்பத்தின் புகை

வேள்வியால் உண்டாகும் புகை.. இது தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வீடு சேர உதவும் புகை.

 இப்படி அந்த அயோத்தியே எப்போதும் புகை மண்டலமா இருந்ததாம்..

 அகில் இடும் புகை அட்டில் இடும் புகை

நகில் இன் ஆலை நறும் புகை நான் மறை

புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்

முகிலின் விம்மி முயங்கின எங்கணும்.

 இப்போ சொல்லுங்க. இந்த புகை.. பகையா??

இதில் வரும் அறம் பொருள் இன்பம் வீடு மேட்டர் மட்டும் சுகி சிவம் பேச்சிலிருந்து ஒட்டு கேட்டு சுட்டது.

இழுக்க இழுக்க இன்பம் (கம்ப)ராமாயணம் இறுதிப் பாடல் வரை… இது எனக்கு… உங்களுக்கு எப்படி இருக்கு???