இடையோ இல்லை, இருந்தாலும்…


சமீப காலமாய் வரும் பஞ்ச் டயலாக்குகள் திகைக்க வைக்கின்றன. “நான் இப்பொ கெளம்பிட்டா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” இது சமீபத்திய டயலாக். நானும், என் பேச்சை கேட்கும் நானும் வேறு வேறா?? அய்யா சாமி கொழம்புதே.. இதுக்கு பேசாமெ அத்வைதம் துவைதம் இப்படி ஏதாவது படிச்சி போற நேரத்திலெ புண்ணியமாவது தேடிக்கலாமெ!!!

இப்படித்தான் ஒரு படத்தில் செந்தில் உதைபடும் காட்சி வரும். அதான் எல்லா படதிலும் வந்ததே… அது என்ன புதுசா? என்று கேட்க வேண்டாம். ராமராஜனுடன் காரைத் தள்ளும் ஒரு கலக்கல் காமெடி. “அதெ என்னைப் பாத்து ஏன்டா கேட்டெ?” என்று திரும்பத் திரும்ப உதைக்கும் சீன் அது.

கேட்ட விஷயத்தை, விட தன்னிடம் கேட்டது தான் வீரியம் அதிகம் என்பது தான் நான் இப்பொ கையில் எடுத்திருக்கும் சங்கதி… அதில் நாம் காண வேண்டிய நீதியும் இருக்கு.

கோபம் வந்துட்டா நான், நானாகவே இருக்க மாட்டேன் என்பார்கள் சிலர். அது எப்படி ஒரு ஆள் என்பது என்ன… ஒன்பது ஆட்கள் குடி இருக்கும் வீடா என்ன?? நேரத்துக்கு நேரம், மாறி மாறி எடுத்து விட. மனம் போல் மாங்கல்யம் என்பர். அது போல் குணம் போல் மனிதன். எல்லாராலும் கோபமாய் கத்திவிட முடியாது. அதுபோல் அத்தனை பேராலும் சாந்தமாயும் பேசிவிட முடியாது.

பெண்கள் வேலை செய்யும் இடங்கள்ல சிக்கல்கள் அதிகம். ஆண் ஊழியரை திட்டுவது போல் அவர்களை திட்டிவிட முடியாது. (ஆமா அவர்கள் வீடுகளில் திட்டு தருபவர்களாய் அல்லவா இருப்பர்!!) ஒரு கட்டை குரல் உயர்த்தி சொன்னால் போதும், அணை உடைந்து வருவது போல் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து வரும். எப்போதும் எப்படித்தான் அப்படி தயாராய் கண்ணில் ஸ்டாக் வைத்திருப்பார்களோ!!! அந்த பெண் தேவதைகளுக்குத் தான் வெளிச்சம்.

சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். என்ன? என்று விசாரித்ததில் ஒரு நபர் அவரை ஊனமுற்றவர் என்று சொல்லி விட்டாராம். நான் கேட்டேன், நீங்கள் ஊனமுற்றவர் தானே? ஆம் என்று பதில் வந்தது. உண்மையை ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இல்லை என்னை கேவலப் படுத்துவதற்குத் தான் அந்த வார்த்தையை பயன் படுத்தினார்.

சரி அது நியாயமான வாதம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் பேசுகிறார். வருத்தப்பட்டால் வந்தவர் ஜெயித்த மாதிரி. நாம் சகஜமாய் அதனை எடுத்துக் கொண்டால் நாம் ஜெயிக்கலாம் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

சில மாநிலங்களில் ஊன்முற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று தான் அழைக்க வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளதாம். இதே போல் ஹிந்தி தெரியாத ஆட்களை அஹிந்திபா4ஷி என்று சொல்லி வந்தனர். இப்போது அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு ஹிந்தி தெரியாத இடத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லச் சொல்கிறது அரசு.

ஊனமுற்றவர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே அந்த ஊனத்தின் உபாதையிலிருந்து மீண்டு வர முடியும். அட..ஊனம் இருந்தாலுமே…. இப்படியா??? என்று உலகம் மூக்கில் கை வைத்து வியக்கும்படி செய்ய வேண்டும்.

சிறுபிள்ளைக் காலத்தில் என்னை பூனைக் கண்ணா என்று கேலி செய்வர், அதே பெயரிலும் அழைப்பர். ஆரம்பத்தில் கோபம் வந்தது. பின்னர் அவர்கள் சொன்னது உண்மை தானே என்று எடுத்துக் கொள்ள கிண்டலும் கேலியும் குறைந்து விட்டது. இப்போ ஐஸ்வர்யா ராயின் ஐஸ் என்று ஐஸ் வைக்கிறார்கள் எனக்கு முன்பாக. (பின்னாடி பூனைக் கண்ணன் என்றும் பேசி வரக்கூடும்)

உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் என்பது மட்டும் தான் பொதுவான உண்மை. நான் யார் என்பதை அறிந்து விட்டால் யார் தான் நம்மை காயப்படுத்த முடியும்? முதலில் நம்மைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வோம். அது பிறரின் சங்கடமான வார்த்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றும்.

எதையாவது எழுதி அப்படியே இடையிலே கம்பராமாயணம் கொன்டு வருவது என்பதும் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாற்றுத் திறனாளியாக சீதையை சொல்லும் இடமும் வருது. சீதையா?? எப்படி? எப்படி? என்கிறீர்களா? சூர்ப்பநகை மூக்கு இல்லாமல் இருக்கும் போது, நானும் சீதையும் மாற்றுத் திறனாளிகள் தானே என்கிறார். நீங்க கேட்ட மாதிரி, ராமனும் எப்படி? எப்படி? என்கிறார். ஆமா… சீதைக்குத்தான் இடையே இல்லையே…

இடை பற்றி இன்னொரு இடமும் வருது. அசோக வனத்தில் சீதை வாடி வதங்கிப் போனாராம். எப்படி? எப்படி? இப்படி நீங்க கேக்கனும். கல்லுக்கு நடுவிலே ஒரு சொட்டு தண்ணியும் கெடைக்காமெ, வளரும் நல்ல மருந்துச் செடி மாதிரி வாடி இருந்தாராம். முன்னர் இடை மட்டும் தான் மெலிந்திருந்தது. இப்போது இடை போல் எல்லாம் இளைத்து துரும்பானாராம். எங்கே இருந்தார்? பெருத்த இடை வைத்திருக்கும் அரக்கியர் நடுவில் இருந்தாராம். கம்பர் பார்வை எங்கே போகுது பாருங்க…

வன் மருங்குல் வாள் அரக்கர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்க எழுந்த என்று ஓர் துளி வரக் காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்.

அது சரி உங்க பார்வை எங்கே போகுது??

எங்கே போறீங்க..???


ஏதாவது முக்கியமான வேலையா நீங்க வீட்டைவிட்டு கெளம்பும் போது இப்படி யாராவது உங்களை “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு வம்பு செய்தால்… உங்களுக்கு
ஏகமாய் கோபம் வந்திருக்கும்.

நீங்கள் தீவிர பெரியார் பக்தராக இருந்தால் உங்களுக்கு
ஒன்றும் பிரச்சினை இல்லை தான்.

சரி இந்த சகுனம் பாக்குறது சரிதானா?? இதில் என்ன சங்கதி இருக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். [எதுக்குன்னு கேக்கிறீகளா?? சும்மா உங்களுக்கு ஒரு posting
எழுதத்தான்].

முதலில் இப்படி “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு சங்கடம்
செய்பவர்கள் யார்? என்று அலசலாம்.

1. உங்கள் வீட்டில் இருப்பவர்கள்;
2. பக்கத்து வீடு எதிர் வீடு இப்படி எங்காவது இருப்பவர்கள்; 3. திடீரென்று வரும் உங்கள் விசுவாசிகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னன்னா, இவர்கள் மூவருமே உங்கள் நல்லதுக்கு பாடுபடுபவர்கள். உங்கள் நல
விரும்பிகள். ஒரு போதும் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத
ஒருவரோ அல்லது உங்கள் எதிரியோ உங்களை வழிமறிச்சி எங்கே போறீங்கன்னு உங்கள் உயிரை
கண்டிப்பா எடுக்க மாட்டாக..

அடுத்து ஏன் இந்த கேள்வி வருது?? சில காரணங்கள்; அதையும் தான் பட்டியல் போடலாமே…

1.      நீங்க ஏதோ ரகசியமான வேலை செய்யப் போறீங்க.. (அது சின்ன வீடு சம்பந்தமாகவும் இருக்கலாம்.. அலலது ஐ ஏ எஸ் பரீட்சை எழுதுவதாகவும் இருக்கலாம்.)

2.    நீங்க போகப் போற இடம் செய்யப் போற வேலை பத்தி கேக்கிறவங்களுக்கு தெரியல்லை.

3.     உங்கள் அவசரம்… பரபரப்பு… டிப்டாப் டிரஸ் சொல்லுது ஏதோ எங்கோ போகப்போறீங்கன்னு..

ஆக மொத்தத்தில் உங்கள் நல விரும்பிகளுக்குக் கூட
தெரியாமல் நீங்கள் ஏதோ செய்ய நினைக்க அந்த குட்டு “எங்கே போறீங்க?” என்ற கேள்விக்கு கோபம் தான் பதிலாய் வெடிக்கிறது.

என் முடிவு : நம் முன்னோர்கள் எதையும் எல்லாரிடமும் கலந்து பேசி செய்வதை வலியிறுத்தத்தான் இந்த
சாத்திரம் வந்திருக்கும் என்பது.

நீதி:
1.எதையும் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கலந்து பேசி
செய்ங்க.
2.அப்படி முடியாட்டி இனிமேல் யாராவது “எங்கே போறீங்க?”ன்னு கேட்டா… போற காரியம் விளங்கின
மாதிரி தான்னு கோபப் படாதீங்க…

அதுசரி… ஹலோ…இப்போ எங்கே போறீங்க???

தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ள வா!!!


நான்கு குடித்தனங்கள் சேர்ந்த வீட்டில் தான் என்னோட சின்ன வயது ஆரம்பித்தது. பெரிசுகள் எல்லாம் கதர் கட்டும் காங்கிரசுக்கு ஆதரவாய் இருக்கு இளசுகள் எல்லாம் சிவாஜி ரசிகர்கள் ஆக்கப் பட்டோம். (திராவிட கட்சி ஆதரவாளர்களின் பசங்க எல்லாம் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆனார்கள்)

இந்த சூழ்லில் வளர்ந்த நான், உலகமே பாத்து வியந்த உலகம் சுற்றும் வாலிபனைக் கூட பாக்க முடியாம போச்சி. சிறந்த நடிகர் விருது எம் ஜி ஆருக்கு வந்த போது கூட… அட… போங்கப்பா… பாபு படத்தில் சிவாஜிக்கு ஈடு வருமா என்று பேச வைத்தது விடலைப் பருவம்.

கல்லூரியில் காலடி வைத்த பிறகு தான் எம் ஜி ஆர் என்ற சக்தி பற்றிய தெளிவு பிறந்தது. அதை செய்தவர் கல்லூரி தோழர் பழனிச்சாமி. (அவரை நாம் எல்லோரும் எம் ஜி ஆர் பழனிச்சாமி என்று தான் அழைப்போம்). அவர் பிறந்த ஊர் விருது நகருக்கு அருகே உள்ள விளாம்பட்டி. எம் ஜி ஆர் உடல் நலம் இல்லாத போது அந்த ஊர்க்காரர் ஒருவர் தன்னோட கையை வெட்டி ஆண்டவனுக்கு காணிக்கை செய்தாராம். (சிவனுக்கு கண்கொடுத்த பரம்பரையாக இருக்குமோ??)

எம் ஜி ஆர் மேல் ஈடுபாடு வந்ததோ இல்லையோ, அருமையான பாடல்கள் மீது காதல் பிறந்தது. குமரிக்கோட்டத்தில் எங்கே அவள்; நான் ஏன் பிறந்தேனில் நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்; இப்படித் தொடரும் லிஸ்டில் வரும் இன்னொரு பாடல் தான் “தொடுக் கொள்ளவா??..” மட்டுக்கார வேலன் என்று நினைக்கிறேன். TMS சொல்லும் பாவனையுடன் இன்றும் இனிக்கும் பாடல் அது. தொட்டுக் கொள்ளவா?? என்று இந்த பாவத்துடன் கேட்டால் யாருக்குமே மறுக்கும் தைரியம் வராது.

இந்த வித்தையினை இவ்வளவு வருஷம் கழித்து ஒரு ஊறுகாய்க்கென பயன்படுத்திக் கொண்ட விளம்பரம் பாத்தேன்.. அசந்து போயிட்டேன். அதில் வரும் வரிகள் தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ளவா??
தொட்டுக்கொள்ளவா?? மட்டும் தான். இறுதியில் ஊறுகாய்… வாய்… தொட்டுக் கொள்ளத்தன் தோணும்.

அதே மாதிரி தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் என்றும் ஒரு தூள் கிளப்பும் விளம்பரம் பாத்திருப்பீங்க… தொடரும் பாரம்பரியம் என்று சொல்ல் இருந்தா மட்டும் போதாதா??? அது எதுக்கு “தொட்டு” என்ற செட்டப்பு?? சாதாரண சந்திப்புக்கும், கைகுலுக்களில் தொடங்கி அதே மாதிரி கை குலுக்கி முடியும் சந்திப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் அது.

இதே மாதிரி தொடர்ந்து வேறு என்ன வெல்லாம் இருக்கு??- இப்படி யோசிக்கலாமே?? ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன ஆகுமோ என்று ஏங்க வைத்த அந்தக் காலத்து சரித்திரத் தொடரின் “தொடரும்” மிகப் பிரபலம். சிறுகதை கூட ஹைக்கூ வடிவில் இருந்தால் தான் படிப்பார்கள் என்ற நிலை இன்று…(ஆமா..எந்த நம்பிக்கையில் நான் நீட்டி முழக்கி எழுதுகிறேன்??).

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் சிந்துபாத் லைலா என்ன ஆனாள் என்பதை அறியத் தூண்டும் கன்னித்தீவு தொடரும்… தொடர்ந்து போவதில் சிக்கலும் உண்டு.. கழுதைக்குப் பின்னாலும் ஆபீசருக்கு முன்னாலும் அதிகம் போகக்கூடாது என்பார்கள்… எப்பொ உதைக்குமோ..?? கடிக்குமோ என்ற கவலை தான் காரணம்..

யாரோ பின்னாடி தொடர்ந்து வர்ரது மாதிரி இருக்கே…!!! திருப்பிப் பாத்தா…அட…நம்ம கம்பர்.. Happy Deepawali Mr Kambar அவர்களே… Thanks & Same to U… ஆமா இன்னெக்கி என்ன டாபிக் அலசல்?? ஒண்ணுமில்லை… ஆபீசர் எப்படி இருக்கனும்கிற டாபிக்… ம்…உங்க காலத்திலெ அதுக்கு அவசியம் இருந்திருக்காது..நீங்க போங்க..

அப்படி சொல்லிட முடியாது கிமூ… நீ எப்படி சுத்தி வளைச்சி என்னோட ரமாயணம் கொன்டு வர்ரயோ..அதே பாணியில் நானும் அதெப் பத்தி எழுதி வச்சிருக்கேன்.. போய் நல்லா தேடிப் பாரு கிடைக்கும்…

தொடர்ந்து தேட …அடெ… கெடெச்சது… ஒரு ராஜா எப்படி இருக்கனும்னு கம்பர் ராமர் வாயிலா சொல்றார். யார் கேக்கிறா?? சுக்ரீவன் தான்.. நாம கேட்டாலும் அது நமக்கு suit ஆகுற மாதிரி இருக்கு.. அப்பொ இன்னும் நல்லா பாக்கலாமா??

அறிவுள்ள அமைச்சனை பக்கத்திலெ வச்சிக்க
ஒழுக்கம் உள்ளவனை படைத் தலைவனா ஆக்கு
குற்றமில்லாத வேலையை மட்டும் செய்யி
தப்பான காரியம் பன்னாதே..
அமைச்சர்களை ரொம்ப தூரமும் வச்சிக்காதெ..ரொம்ப கொஞ்ச்சிக் குலாவவும் வேணாம்.
நீ எல்லார்க்கும் சாமீ மாதிரி இருக்கனும் கன்னு…
என்று செமெ அட்வைஸ் செய்றார்…

இப்பொ இருக்கும் ஆட்சியாளர்க்கும் ஆபீசர்களுக்கும் கூட இந்த அட்வைஸ் பொருந்தும் தானே..???

வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரொடும்
தூய்மை சால்புணர்ச்சி பேணித் துகளறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய நிற்றி.

நீதி: ஃபிரியா கெடைக்கும் எல்லாமே தரம் இல்லாதது என்று விலக்கி விட முடியாது.. இந்த ஃபிரியா கெடைச்ச அட்வைஸ் கொஞ்சம் யோசிச்சி பாருங்க.

தேடல் தொடரும்…

புரியாத மொழிகள்


மொழி தெரியாத ஊரில் போய் மாட்டிக்கொண்டு முழித்த அனுபவம் நிறையப் பேருக்கு இருந்திருக்கும். மொழி தெரிந்தும் முழி பிதுங்கி நின்ற நேரங்கள் நினைவிருக்கிறதா??

கிரிக்கெட் தெரியாத ஒருவர் ஆர்வமாய் ஃபைனல் மேட்ச் பாக்கும் கூட்டத்தில் இருந்தால் எப்படி இருக்கும்??

சீரியல் பத்தி பேசும் கும்பலில் டீவி பாக்காத நபர் மாட்டினால்..அவன் கதி???

ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியத நானு Finance Expert கிட்டெ மாட்டினா.. என்ன ஆகும்??

இதே போல் புதிரா(தா)ய் ஒரு பிரச்சினை வந்தது. வீட்டில் பொறுப்பான தகப்பன் என்று நல்ல பெயர் வாங்கும் நோக்கில் (அது இந்த ஜென்மத்தில் நடக்கப் போவதில்லை… ஆனாலும் முயற்சிகள் தொடரும்..அது தான் வாழ்க்கை) பையனை அழைத்து முடிவெட்டி வரக் கிளம்பினேன்.

நான் பாத்த சலூனில் நடிகர் நடிகை படங்களும் கண்ணாடிகளும் சீப்புகளும் தான் இருக்கும்.

நவீன சலூன்களில் ஏசியும் டிவியும் என்று ஏகமாய் நவீனங்கள். கத்தரிக்கோலும் சீப்பும் தவிர மற்ற ஏகப்பட்ட கருவிகள்… ஆளை பயமுறுத்தும் கிரீம்கள்….

சலூன்காரர் கேட்டார் ஆங்கிலத்தில்…One or 0.5 0r 1.5..???

எனக்கு ஒன்றும் புரியவில்லை… எனக்குத் தெரிந்தது சம்மர் கட்டிங்… மீடியம்..இப்படித்தான்..

இங்கிலீஸ் வேறு பேசிட்டாகளா…Ok.. go for 0.5 என்று சொல்லிவிட்டு பையன் தலையை கொடுத்துவிட்டேன்… அதற்குள் ஒரு போன் வர.. வெளியே வந்து பேசிவிட்டு உள்ளே போனால் பையன் தலை கஜினி படத்தில் வரும் சூர்யா போல் பாதி ஆகிவிட்டது…

வீட்டிற்குப்போனால் வழக்கம் போல் அர்ச்சனை… ஒழுங்கா முடி வெட்டி வர முடியலை… உங்களை நம்பி எப்படி அரசு இயந்திரம் ஓடுதோ???

கிளைமாக்ஸ்:

வெயில் அதிகம் இருக்கும் நேரத்தில் தலைமுடியை இப்படித்தான் வெட்டி வரவேண்டும் என்று ஸ்கூல் மேடம் பிரேயரில் எல்லாருக்கும் முன்னால் என் பையன் தலையைப் பாத்து பாராட்டு கிடைத்திருக்கிறது.

நீதி:

இடை இடையே வரும் தடங்கலுக்கு வருந்தக்கூடாது… இறுதியில் நல்ல முடிவு வரும் வரையில் காத்திருக்க வேண்டும்…புரியாத மொழியால் குழம்பும் சூழல்களில்.