கவலை இல்லாத மனிதனை நீங்கள் பாத்திருக்கீங்களா? இந்த கேள்விக்கு உடனடியாக கிடைக்கும் பதில் என்ன தெரியுமா? கருவறையில் இருக்கும் பிறவாத குழந்தைக்கும், கல்லரையில் இருப்பவனுக்கும் தான் கலையே இருக்காது என்பது தான். நீங்கள் கவலையில் இருக்கும் போது என்றைக்காவது “ஏன் இப்படி கவலையோடு இருக்கிறேன்?” என்று யோசித்தது உண்டா? அப்படி யோசிக்கும் அந்தக் கணமே அந்தக் கவலை உங்களை விட்டு ஓட ஆரம்பித்து விடும்.
நம்முடைய கவலைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தால், அது ரொம்பவும் அல்பமான ஒன்றாக இருக்கும். சிலவற்றை பட்டியல் போடலாமே:
1. தாம் நினைக்கும் ஒன்று நடக்காத போது. (நீங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று சட்டமா என்ன? அந்தந்த சூழலுக்கு ஏற்ற நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு நடக்கிறது. நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?)
2. தாம் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது. (இது தான் நடக்க வேண்டும் என்று Project Management ல் போட்டுப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் Project அல்லவே?? நடக்கும் செயல்கள் எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கிறதை விட்டுட்டு கவலைப் படுவானேன்.)
3. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத விஷயத்துக்கு முகம் சோர்ந்து போதல். (அப்பா… சென்னை வெய்யில் மண்டையெப் பொளக்குதே…; சே..என்ன இது கரண்ட் கட்?…; ஊரெல்லாம் ஒரே குப்பை?… காசு இல்லாமெ ஒரு காரியமும் ஆகாதா?.. இதுக்கெல்லாம் நீங்க என்ன செய்ய முடியும்? வசதி இருந்தா AC, Invertor போட்டுக்குங்க.. இல்லையா? செருப்பு கொடை சகிதம் வீட்டை விட்டு கிளம்புங்க… முடிஞ்சா நீங்க உங்க ஏரியாவை சுத்தமா வச்சிக்குங்க… காசு இல்லாமெ நடக்கும் வித்தையை நாலு பேத்துக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க)
4. தான் நினைப்பது மட்டுமே நடக்க நினைத்தல். (முதலாவதுக்கும் இதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம். நீங்கள் பரீட்சையில் முதல் வகுப்பில் பாஸாக நினைப்பது முதல் வகை. அதில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம். யாரிடமாவது உதவிக்கு போகிறீர்கள். இதில் வெற்றி பெறும் சாத்தியம் ??? சொல்ல முடியாது. வரும்… ஆனா வராது மாதிரி தான். இன்னொரு பக்கமும் இருக்கு என்பதை யோசித்தாலே போதும். கவலையின் ரேகையை கலட்டி விடலாம்.)
ஒட்டு மொத்தமாய் கவலை இல்லாமல் இருக்க நல்ல வழி… எந்த செயலையும் மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. போனா மயிறு என்ற கொள்கையில் செய்வது தான் சரி என்று படுகிறது.
கவலை இல்லாத மனிதன் என்று ஒரு படம் வந்தது. கண்ணதாசன் சொந்தத் தயாரிப்பு அது. அந்தக் காலத்திலேயே ஐந்தாறு லகரங்களுக்கு அவரை கடனாளி ஆக்கிய படம் அது. அந்தப் படமே, என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்து விட்டது என்று அவரே பின்னர் புலம்பி இருக்கிறார். அதுக்கு மேலும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை அந்த கவியரசருக்கு விட்ட பாடில்லை. தவறு செய்து விட்டு, அதைத் தவறு என்று தெரிஞ்சும் மீண்டும் அதே தவறைச் செய்தேன் என்று பின்னர் அவரே வாக்குமூலம் தந்தார்.
அந்தமானில் தமிழ் புத்தகம் எழுதுவது என்பது, நஷ்டம் வரும் என்று தெரிந்தே செய்யும் வியாபாரம் என்பது என் கவலையான ஒரு கருத்து. இதனை சில தமிழகத்து தமிழ் அறிஞர்கள் அந்தமானில் வந்த போது தெரிவித்தேன். அந்தமானில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் அதே நிலைமை தான் என்று அவர்களின் கவலையையும் பதிவு செய்தனர். [ ஒரு வேளை ஆறுதல் சொல்வதற்காய் இப்படிச் சொல்லி இருப்பாரோ??.. சரி உடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை…?]
மனிதன் ஒருபக்கமும் கவலை ஒரு பக்கமும் நின்று கடைந்து அதற்கான காரண அமிர்தம் கண்டு எடுத்தால்… நம் கையில் கிடைப்பது “தோல்வி” தான். தோல்விகள் தான் கவலைகளின் ஒட்டு மொத்த காரணம். என்னவோ, தோல்விகள் தான் வெற்றியின் முதல்படி அப்படி இப்படின்னு எப்படி எப்படியோ சொல்லிப் பாத்த போதும், பலரால் இந்த தோல்விகளை தாங்க முடிவதில்லை. தோல்வியினை மேனேஜ் செய்வது எப்படி என்பதினை வீட்டிலும் சொல்லித் தருவதில்லை. School களில் இதெல்லாம் out of syllabus.
வாழ்க்கை என்பது Chess விளையாட்டு மாதிரி. ஒருபக்கம் நீங்கள். மறுபக்கம் இயற்கை, கடவுள், விதி, காலம் இப்படி ஏதோ ஒன்று உக்காந்து ஆடும். நாமெல்லாம் புதுசா யாருக்காவது Chess விளையாட்டு சொல்லித்தரும் போது வேணும்னே நம்ம தோப்போம். புதுசா கத்துக்கிறவா நன்னா கத்துக்கட்டும் என்ற கரிசனத்தில். இப்படித்தான் உங்களின் ஆரம்ப வெற்றிகள்.. அப்புறம் சில சமயம் டிரா.. அல்லது தோல்வி.. அப்படியே ஆட்டம் தொடரும். எல்லாம் விளையாட்டா எடுத்து ஜாலியா போக வேண்டியது தான்.
இப்பொ என்னோட கவலை எல்லாம், கம்பரை இங்கே எப்படி இழுக்கிறது என்பது தான்… யோசிச்சா.. சிக்காமலா போகும்… சிக்கிடுச்சே…
இலங்கையில் அனுமன் ஏரியல் வியூ பார்க்கும் நேரம்.. பளிங்கினால் ஒரு மாளிகை அல்ல.. பல மாளிகைகள்.. எங்கு பாத்தாலும் சோலை.. அதில் கற்பக மரங்கள்.. அதில் தேன் சொரியும். அது தவிர்த்த இடங்களில் என்றுமே Week End கொண்டாட்டம் மாதிரி குடித்து செமையா பார்ட்டியில் மகிழும் அரக்கர்கள். ஹைலைட் சமாச்சாரம் ஒன்று. கவலையான ஒரு ஆளையும் காணோம்.
பளிங்கு மாளிகை தலந்தொறும் இடம் தொறும் பகந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள் தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடிநர் பாடிநர் ஆகி
சளிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்.
கவலையில்லா உலகம் படைக்க ஆசையா? மொதெல்லெ நீங்க கவலைப் பட்றதை விடுங்க.. என்ன சந்தோஷமா??