ஒரு பெண்ணின் மனசெத் தொட்டு…


அந்தமானில் ஒரு காலத்தில் நான்கைந்து சினிமா தியேட்டர்கள் இருந்தன. காலப்போக்கில் திருட்டு விசீடிக்களும், நூற்றுக்கனக்கான சேனல்களும் வீட்டிற்கே வந்துவிட, எல்லா தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் தசாவதாரம், விஸ்வரூபம் மாதிரியான படங்களை தியேட்டர் எஃபெக்ட்களுடன் பார்க்க வேண்டிய சூழல் வந்துவிட, தற்போது ஒரு சினி காம்ப்ளெக்ஸ் வந்துள்ளது. டிக்கெட் 160 ரூபாய் என்பதை அதிகம் என்கிறார்கள் இத்தீவு மக்கள். பெங்களூர் மால்களின் டிக்கெட்டை விட குறைவு என்றால் யாராவது கேக்கிறாகளா? (ஆமா… மந்திரிமாலில் எவ்வளவு டிக்கெட்? என்று கேட்றாதீங்க… நம்ம பெங்களூர் தோஸ்த் கிரியோட காசில் படம் பாத்ததை எதுக்கு வெளியிலெ சொல்ல??)

சரி நாமளும் புது தியேட்டரை ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் குடும்பத்தோடு. 2 ஸ்டேட் ஹிந்தி படத்துக்கு. சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிக்குப் பிறகு அதே போன்ற “தமிழ்” கதாநாயகி கதைகளில் வந்துள்ள மற்றொரு படம். ஆனால் ஹாஸ்டலில் ஹீரோயினும் ஹீரோவும் ஒன்றாய் படுத்து உருள்வதும் நிரோத் வரைக்கும் காண்பிக்கும் போது குடும்பத்தோடு பாக்க நெளிய வைக்கிறது. வீட்டிலாவது ரிமோட்டை தேடலாம். பாக்யராஜ் மாதிரி காசு போட்டு தேட வைக்கவா முடியும்?

சின்னத்திரையில் படம் பார்க்கும் போது வேறுபல சிக்கல்களும் வரும். சமீபத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கவிதை பாடியதாகச் செய்திகள் சொன்னது. கூட இருந்த வீட்டுக்காரி, ”நீங்களும் தான் கவிதை எழுதுவீங்களே…எங்கே இத்தனை வருஷத்திலே, எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கீங்களா?” இப்பெல்லாம் கவிதை வடிவத்தில் கூட வில்லங்கம் வருவதை யாரால் தடுக்க முடியும். நீயே ஒரு கவிதை… உனக்கெதற்கு கவிதை? – இப்படி நாசூக்காய் முடித்தேன்.. அப்படியே மதுரையில் பள்ளிக்கூட அசிரியையாய் இருந்தவர் அந்தமானுக்கு வாழ்க்கைப்பட்ட கதையையும் பாக்கலாமே.. அது ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கப் போய் கல்யாணத்தில் முடிந்த கதை.

எனக்கு கல்யாணம், என்ற பேச்சை எடுத்தவுடனேயே, நான் என் பெற்றோறிடம் வைத்த முதல் வேண்டுகோள், அந்தமான் தீவுக்கு ஏத்த பொண்ணா பாருங்க என்பதைத்தான். அதற்காய் அவர்களை முதலில் அந்தமான் வரவழைத்தேன். மூன்று நாள் (மூன்றே நாள் தான்) பெரிய கப்பலிலும், மூன்று நாள் (மறுமடியும் மூனு நாளா….) சிறிய கப்பலிலும் பிரயாணித்து கமோர்ட்டா தீவை அடைந்தோம். ஓரிரண்டு கிலோமீட்டர்கள் மட்டுமே ரோடு உள்ள அழகான ஆதிவாசிகள் வசிக்கும் தீவு. (அம்பு ஈட்டி எல்லாம் இல்லாமல் அன்போடு பழகும் நிகோபாரி இன மக்கள்) இந்த ஊருக்கு வாழத் தகுந்த மாதிரியான ஆளைப் புடிங்க என்றேன்.

கையோடு ஒரு போட்டோவைக் கையில் கொண்டு வந்திருந்தார்கள். சமயம் பாத்து என்னிடம் காட்டினார்கள். பார்த்தவுடன் சொல்லிவிட்டேன், ”இவ, இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா” என்று வடிவேலுவிடம் சொல்வது போல். அந்தப் போட்டோவில் இருந்த பெண் ரொம்ப ஹைஃபை… (வை ஃபை எல்லாம் இல்லாத காலக் கதைங்க இது). அதெல்லாம் எப்படி தெரியும் என்று கேக்கறேளா? நாம சைட் அடிச்ச பொண்ணுங்களைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?

பரமக்குடியில் எவ்வளவு தான் படித்த நல்ல பொண்ணுங்க இருந்தாலும், மதுரைக்குப் போய் பொண்ணு எடுப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். அப்படியே மதுரையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெயில். வேகாத வெயிலில் கீழவாசல் சந்திப்பில் கரும்பு ஜூஸ் குடிக்க ஆசை வந்தது. அருகிலேயே உறவினர் வீடும் இருப்பதால், அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, கரும்பு ஜூஸும் குடித்து பெண்வேட்டை தொடர முடிவானது. உறவினர் வீட்டில், யாரும் இல்லை. அவர்களின் கணக்குப்பிள்ளை இருந்தார். இப்போதைய சீரியலில் வரும் அப்பா வேடத்துக்குக் கச்சிதமாய் பொருந்தும் முகம். பொறுப்பாய் அவர் தான், வந்த வேலை பற்றி விசாரித்து அனைவருக்கும் கரும்பு ஜூஸ் பரிமாறினார்.
கையில் உள்ள ஜாதகம் எல்லாம் சேராமல் போன சோகக்கதையை அவரிடமும் விவரித்தோம். ”என்கிட்டெ ஒரு ஜாதகம் இருக்கு. அதை வெண்டுமானாலும் சேருதான்னு பாருங்களேன்…” என்றார் பவ்யமாய். கன கச்சிதமாய் பொருந்தியது. அவர், தன் மகளின் ஜாதகம் தான் கொடுத்திருந்தார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. (இது தான் சந்திலெ சிந்து பாடுவது என்று சொல்வதோ).. ஏதொ ஒரு கரும்பு ஜூஸில் ஜாதகப் பொருத்தம் ஆகிவிட்டது. முழுப்பொருத்தம் நன்னாரி சர்பத்தில் நடந்தது.

சம்பிரதாயமாய் பெண்பார்க்கும் படலம் முடிந்த அடுத்த நாள், பெண்ணை அவர் வேலை பார்க்கும் பள்ளியில் போய் சந்தித்து, விலாவாரியாய் கமோர்ட்டா தீவு பற்றி தெரிவித்தேன். அந்த உண்மை பிடித்திருந்தது போல் தெரிந்தது. நன்றாக யோசித்து முடிவு சொல்லவும் அவகாசம் கொடுத்தேன். ஏதாவது குடிக்கலாமே… நன்னாரி சர்பத் நம்மை இன்னும் புரிய வைத்தது. சர்பத் தீரும் வரை பேச நேரம் கிடைத்தது. (சர்பத் காசு அந்த ஆசிரியை தான் தந்தார் என்பது ஆச்சரியமான செய்தி) தண்ணியில்லாக் காடு என்பதை சற்றெ மாற்றி தண்ணியுள்ள காட்டிற்கு வர சம்மதம் சொன்னது இதமாய் இருந்தது மனதிற்க்கு..

என்னுடைய திருமண நாள் பற்றி ஃபேஸ்புக்கில் போட்ட போது புதுதில்லி வாழ் சேகர் அவர்கள், கம்பர் திருமண நாள் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்று கேட்டார். காட்டுவாசம் என்பதை அறிந்தும் கல்யாணத்திற்கு முன்பே என்னுடன் வர் சம்மதம் சொன்னவர் என் இனிய பாதி. அவரைப்பற்றி சொல்ல ஒரு சந்தர்ப்பமாய் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இப்படி காட்டுவாழ்க்கைக்கு தயாரான என் துணைவியாரை நினைக்கும் அதே நேரத்தில், அப்படியே கம்ப காவியத்திலும் ஒரு காட்டுப் பயணம் எப்படி முடிவாகின்றது என்று பார்க்கலாம். கைகேயி வரத்தில் இராமன் தான் காட்டிற்குச் செல்ல வேண்டும். மனதிற்குள், இலக்குவன் போனாலும் சரி என்று நினைத்து ரெண்டு ஜோடி டிரஸ் கொடுத்து அனுப்புகிறாள் கைகேயி. அப்போதும் கூட சீதையினை காட்டுக்கு அனுப்பும் யோசனையே இல்லை. இராமனும் தனியே போகலாம், சீதையால் இந்த காட்டுவாசம் தாங்க இயலாது என்பதாய் பதில்சொல்ல…அப்படி யோசிக்கும் போதே, சட்டுன்னு உள் சென்றாள் சீதை.. மரவுரியை அணிந்தாள் (எதுக்காவது பேன்ஸி டிரஸ் போட்டிக்கு உதவும் என்று அதையும் சீதை வாங்கி வச்சிருகுமோ?). திரும்பி வந்தாள்.. தொடர்ந்தாள்… கம்பர் வரிகள் தொடர்கிறது.

அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினைவின் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்

வேறு ஏதாவது கேள்விகள் யாராவது கேட்டால், அதன் பதிலையும் கம்பனிடம் கேப்போம்.

கையில்லா ரவிக்கை ரவிக்


சுஜாதா அவர்களின் எழுத்துகளை கவனமாய் படித்தவர்களுக்கு (சும்மா ஜாலியாப் படிதவர்களுக்கும் தான்) அவர் செய்த எழுத்துச் சித்து விளையாட்டுகள் இன்னும் நினைவில் இருக்கும். அவள் ரவிக் அணிந்திருந்தால் என்று சொல்லும் போது கை இல்லாத ரவிக்கை என்பது நம் மனதில் ஓடும். ஆனால் இப்போது ரவிக்கையே இல்லாத ரவிக்கை அணிகிறார்களே இதுவும் ஆச்சரியம் தான். அதை எப்படி அணிந்து வருகிறார்கள் என்பதும் ஆச்சரியரியம் தான்.

சுஜாதாவின் கலைந்திருந்தாள் என்பதும், படிகளில் ஏறினான், இறங்கினான் என்பதையும் எழுதிய விதம் இன்னமும் வாசகர்கள் மனதில் இருக்கும் என்று நம்புகிறேன். எனது போஸ்டிங்க் படித்து சுஜாதா மாதிரி என்றார்கள் சிலர். (இதைவிட் கேவலமாய் யாரும் சுஜாதாவை திட்டிவிட முடியாது. அவர்களின் நோக்கமே ஒரு வேளை சுஜாதாவை மட்டப் படுத்த இருக்கலாம்). தமிழில் எழுதும் ஒவ்வொருவருக்கும் அந்த சுஜாதானுபவம் இல்லாமல் எழுத முடியாது என்பது என் அபிப்பிராயபிராயம். ( அப்படி ஒருவருக்கு இல்லையா.. அவரின் வயது 40க்கு கீழே என்று தெரிந்து கொள்க)

இதை எழுதும் அதிகாலை 6.30 க்கே அருகில் உள்ள பள்ளி குழந்தைகளின் அணிவகுப்பு வந்தது. மௌலானா ஆஜாதின் பிறந்த தினமாம் இன்று (நவம்பர் 11). ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா தேசிய கல்வி தினம் கொண்டாட வர வேன்டுமா என்ற வருத்தம் அனைத்து ஆசிரியைகள் மனதிலும் தெரிந்தது. அதை மறைக்கவோ என்னவோ பளிச்சென்று லிப்ஸ்டிக்கர் (லிப்ஸ்டிக் + ஸ்டிக்கர்) பொட்டும் பளீர் என்றது. புடவை கட்டிய அனைவரும் ஒரு கையால் அதை தூக்கி நடப்பது ஒரு ஸ்டைல் மாதிரி ஆனதும் சொல்லாமல் தெரிந்தது.

மன்னார் & கம்பெனி என்றவுடன் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அந்த டணால் தங்கவேலுவின் காமெடி தான். கல்யாணப் பரிசு தான் படம். படம் என்னவோ சோகம் கலந்த படம் தான். ஆனா இந்த காமெடி தான் அதை தூக்கி நிறுத்தி இன்று வரை பேச (எழுதவும்) வைக்கிறது. நீங்க எந்த மன்னார் & கம்பெனியை சொல்றீங்க? என்று கடைசியில் ஒரு சிக்கல் வரும் போது, அதுவா.. அது ராஜமன்னார் சார் என்று முடியும். வார்த்தை ஜாலங்களில் அதனையும் அடக்கலாம்.

அதே டணால் தங்கவேலு இந்த வார்த்தை ஜாலங்களில் வல்லவர். தங்க லட்சுமீமீமீமீ என்று ஒரு படத்தில் அழைக்கும் போதே அதுக்குப் பின்னால் செம காமெடி வரப்போகுது என்று தெரிந்துவிடும். அப்படி வந்த காமெடி தான் அந்த சமையல் குறிப்பு தரும் அந்தக் கால காமெடி. தங்கவேலுவின் அந்தக் கால இன்னும் ஒரு வார்த்தை ஜாலம் தான் Inteligentally. சாதாரண Inteligent ஐ விடவும் ஒரு படி மேலானா வர்க்கம் என்று பொருள் கொள்க.

என்னுடைய அந்தமான் வருகை மத்திய அரசின் ஒரு Apperentice வேலையாகத்தான் அமைந்தது. (அது 1986 களில்… அப்பொ ஆரம்பித்த அந்தமான் மீதான காதல். இன்னும் விட்டபாடில்லை. (காதல் சரி… காதலி… ஐய்யோ..பொன்டாட்டி தூங்கும் நேரத்தில் எழுதிகிட்டிருக்கேன்.. வீட்லெ கொழப்பத்தெ உண்டு பன்னிடுவீங்க போலெ).. சரி இந்த Apprentice என்பது நம் வடிவேலு வாயில் வராமல் அப்ரஸண்டிகள் என்று மாற…. போற போக்கில் அதுவே தமிழாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

சர்தார்களை கிண்டல் செய்வது என்பது உலகம் பூரா நடந்திட்டு தான் இருக்கு. சர்தார்களை நல்ல விதமா காட்டி தமிழ் படம்கூட வந்திருக்கு. ஆனா ரமணா என்ற படத்தில் தமிழர்களை ஒரு சர்தார் Emotional Idiot என்று திட்டுவதாய் வரும். சாய்ந்தால் சாயிர பக்கம் சாயும் செம்மெறி ஆட்டு மந்தைகள் என்று அதனை (சுருக்கமாய் ) மொழி பெயர்க்கலாமா?? இந்த emotional விஷயங்கள் டால்பின் மாதிரியான மீன்களிடமும் உண்டாம். (அதாவது தீவு போல் வாழாமல் கூட்டமாய் வாழும் எல்லாரிடமும் இப்படி emotional feelings இருக்கும் என்பது என் கருத்து. எப்படியோ தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதாவது விளங்கட்டுமே எல்லாருக்கும்.

ஆனால் வேடிக்கை என்ன வென்றால், ஒரு டால்பின் மாட்டிக் கொண்டால் அத்தனை டால்பின்னும் அதன் பின்னாலேயே வந்து தலையை வெட்டிக்கப்பா என்று தந்து விடுமாம். (கலயாணத்து பெண் பர்க்கும் போது இப்படி நடந்தா… செமெ ஜாலியா இருக்கும்லெ??) சமீபத்தில் 35 வகையான திமிங்கிலங்கள் அந்தமானின் வடகோடி தீவான டிக்லிபூர் என்ற தீவில் இறந்து கிடந்தன. (அதென்ன தெற்கு என்னும் போது மட்டும் தென்கோடி, வடக்கை வடகோடி என்று சொல்லக்கூடாதா என்ன??). காரணம் தேடிய ஆய்வு சொல்கிறது இந்த emotional feelings ஆக இருக்கும் என்று.

இதே மாதிரி அந்தக் காலத்திலேயே ஒரு ஐட்டம் நடந்திருக்கு. அனுமன் கடல் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார். அப்போ அந்த உடம்பிலிருந்து வீசிய காற்றால் கடலே கலங்கியதாம். (நம்ம “வடை போச்சே” சிச்சுவேஷனில் வாயுசூடனின் காற்று வீசியே சூடான டீ எல்லாம் பறக்கும் போது, கடல் கலங்காதா என்ன??) அப்படியே மீன்களுடன் திமிங்கிலமும் செத்து மிதந்தனவாம். கூடவே திமிங்கிலகிலங்களும் தானாம். அது என்ன திமிங்கிலகிலங்கள்? திமிங்கிலத்தையே சாப்பிட்டு ஏப்பம் விடும் திமிங்கிலமாம். வீராதிவீரன் சூராதிசூரன் மாதிரி. இது எப்படி இருக்கு?

‘ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய’ என்னத்
தெசமும் நூலும் சொல்லும் திமிங்க்கிலகிலங்களோடும்
ஆசையைஉற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்.

இப்பொ புரியுதா?? நம் பாட்டன் முப்பாட்டன் காலம் முதல் இந்த வார்த்தை ஜாலங்கள் இருக்கத்தான் செய்யுது.