குடிச்சிப் பழகனும்….


kadi 1

பரவலாக எல்லா தொலைக்காட்சிகளும் நேரலை என்று சொல்லி ஏதாவது ஒரு நிகழ்சியை விடாமல் ஒளிபரப்பு செய்து வருகின்றன. அது மோடிஜீ அவர்கள் துடைப்பம் தூக்கும் போதும் சரி அல்லது ஆழ்துளை கிணற்றில் ஆட்கள் அல்லது எப்போதாவது குழந்தை தவறி விழும் போதும் சரி… இந்த சேனல்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வேர்க்குமோ தெரியாது. நல்ல செய்தி மக்களுக்குத் தர வேண்டும் என்கின்ற கவனம் இருக்கோ இல்லையோ, பரபரப்பான செய்திகளுக்கு மக்கள் ஏங்குவதை சேனல்கள் நன்கு பௌஅன்படுத்திக் கொள்கின்றன போல் படுகின்றது.

kadi 2

நகைச்சுவை மட்டுமே தரும் சில சேனல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கு மட்டும் பரபரப்பான சூடான செய்திகள் கிடைப்பது போல் ஏதும் கிடைப்பதில்லை. எனவே காமெடியை எத்தனை வகையாகப் பிரிக்க முடியுமோ அதை பிரபஞ்சம் பிச்சி எறியிம் அளவுக்கு மேஞ்சி விடுகிறார்கள். சும்மா நடிங்க பாஸ், ரகளெ மச்சி ரகளை, டாடி எனக்கு ஒரு டவுட்டு, ஜோக்கடி, சிரிப்பே மருந்து இப்படி பலரகங்களில் மக்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றன. கடி ஜோக், பிளேடு என்று ஒரு புது வகையினையும் பிரித்து வைத்துள்ளனர்.

கடி ஜோக் என்பது என்னவோ 1980களில் உருவான வார்த்தைப் பிரயோகம் என்று கொண்டாலும் கூட, அது ஒரு வகையான ஹைகூ கவிதை வடிவத்தில் உள்ள ஜோக் தான். உலகமே அல்லது படிக்கும் அல்லது கேட்கும் ஒருவர் ஏதோ ஒரு பதிலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதுக்கு முற்றிலும் மாறாக நச்சுன்னு ஒரு பதில் வருவது தான் ஹைகூவின் வழக்கம்.

உதாரணமாக…

கொல…. (அட..இது தலைப்புங்க…..)

என்னைக் கொல்பவருக்கு
தூக்குத் தண்டனை எனில்
நாட்டில் ஆளே இருக்காது
– தமிழ்.

இந்த வகை ஹைகூவினை படித்து முடித்தாவுடன் மனசை ஏதோ செய்யும். அட…ஆமா… நமக்கும் தூக்குத் தண்டனை தானே என்று நினைப்பு வரும். (எனக்கு என்று சொல்லிவிடலாம். எதுக்கு உங்களையும் வம்பாலெ இழுத்து விடனும்?). இதேவகையான கேள்விகளுக்கு மனசு நோகும் அளவுக்கு பதில் கொடுத்தா…அது கடி ஜோக் ஆகிவிடும். பஸ்ஸை பின்னால் தள்ளினால் என்ன ஆகும்? பின் வளெஞ்சு போகும். (ஒதெக்க வராதீங்க சும்மா ஒரு அரதப் பழய்ய சமாச்சாரம் சாம்பிளுக்கு சொன்னதுங்க)

nsk

என் எஸ் கிருஷ்ணன் – மதுரம் கூட்டணி ஒரு காலத்தில் தூள் கிளப்பிய அணி. குடியை விட்டொழிக்க அவர்களின் மேடை நாடகம் ஒன்று திரைப்படத்தில் வரும். கிளைமாக்ஸில் எல்லாரும் இனிமே குடிச்சிப் பழகனும் என்று பாடுவார். அரண்டு போன மதுரம், என்ன்ங்க இப்படி சொல்றீங்க? என்று கேட்பார்… பதிலுக்கு என் எஸ் கிருஷ்ணன் பாட்டாய் பாடுவார்:

குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்
படிச்சிப் படிச்சி சொல்லுவாங்க
பாழும் கள்ளை நீக்கி பாலைக்
குடிச்சிப் பழகனும்…குடிச்சிப் பழகனும்

இதுவும் ஒரு ஹைதர் காலத்து ஹைகு என்று வைத்துக் கொள்ளலாமா?

எங்கள் கோவை பொறியியல் கல்லூரியில் இரண்டு தனசேகரன்கள் இருந்தனர். (தனசேகரன்களை தன்ஸ் என்றே அழைப்போம்; குட்டையன் – குல்ஸ்; குனசேகரன் – குன்ஸ்; ஞானசேகரன் – ஞான்ஸ் இப்படி மாறி கிருஷ்ணமூர்த்தியும் கிட்ஸ் ஆகிவிட்டது என்பதெல்லாம் தனிக் கதை) இரு தன்ஸ்களை வேறுபடுத்திக் காட்ட படிப்பாளியான நபரை புரபெஸர் தன்ஸ் என்றும் மற்றவரை கடி தன்ஸ் என்றும் அழைத்தனர். (கடியன் என்று பெயர் வாங்கியதன் காரணமாய் இருக்கலாம்).

காலங்கள் கடந்தன. புரபெஸர் தன்ஸ் என்று சொல்லப்பட்டவர் ராக்கெட் ஏவும் வேலையில் இருக்கிறார். கடி தன்ஸ் ஆதரவற்றோருடன் எப்படி தீபாவளி கொண்டாடிவது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். (இந்த கிட்ஸ் எல்லாத்தையும் எழுதி பதிவு செய்து கொண்டிருக்கிறேன்).

தீபாவளி என்றதும் பிரச்சினை வருது. அந்தமானில் 22ம் தேதி தமிழகத்து மக்கள் தீபாவளி கொண்டாட, 23ம் தேதியன்று வட இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர். நாம் நரகாசுரன் பீமன் கதை சொன்னால், அதெல்லாம் இல்லை, இராமன் இராவணனை வென்ற வெற்றித் திருவிழா என்கிறார்கள். ஆதாரம் கேட்டால், தமிழகம் முதலில் வந்ததால் 22ம் தேதி உங்களுக்கு தீபாவளி என்கின்றனர்… வடக்கு நோக்கிப் போக ஒரு நாளாவது ஆனதால் 23ம் தேதி அங்கு தீபாவளியாம். இது எப்படி?

என்ன பெரிய்ய பிளேடு போட்ற மாதிரி தெரியுதா? இப்படித்தான் என் பையன் பரீட்சை எழுதிட்டு வந்தபோது, ரொம்ப சீரியஸா மொகத்தெ வச்சிட்டு, எப்புட்றா எழுதினேன்னு கேட்டா, சீரயஸா பதில் வரும்… கையாலெ தான்… என்று…
இந்த கடி கடிக்கிறது ஏன் தெளிவா நடக்குது?

”எல்லாம் ஜீன் பிராப்ளம் தான்…” இப்படி ஓர் அசரீரி ஒலித்த்து.
யார் என்று பார்த்தால்… கம்பன்.

“என்ன கம்பரே ஜீன் பிராப்ளமா…? வெளங்கலியே….”

“கிட்ஸ்…. நம்ம காலத்திலேயே அப்படி இருந்திருக்கே…!!!” – இது கம்பர்.

“…. என்னது கம்பரே கடி ஜோக் சொல்லி இருக்காரா….? என்ன ஐயனே…கதை உட்றீங்க…செத்த வெளக்கமா சொல்லப்படாதா?”

” கிட்ஸ்…பையா…கேளு… ஹீரோ இராமன், வில்லன் இராவணனை கொன்று விட்டு திரும்பும் போது, தேவர்களும் முனிகளும் பூமழை பொழிகின்றனர். அப்பொ உலகமே பூக் குவியல் ஆகிவிட்டதாம். ஒஹோ…பூலோகம் என்பது இது தானோ….!!! இப்படி போகுது நம்ம பாட்டு…என்ன பாட்டும் சொல்லனுமா?”

வேண்டாம் ஐயனே..நானே கண்டு பிடிச்சிட்டேன்.. யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம் போய் பாத்திட்டேன்.. ஐயனே…இதோ உங்களுக்காய்…

தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவலில் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவலில் மலராய் வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இவ் வுலகிற்குப் பொருந்திற்று அன்றே.

இப்பொ புரியுதா..??? கடி ஜோக்ஸ் எங்கிருந்து ஆரம்பிச்சது என்று…தேடல் தொடரும்.

தெருவெல்லாமே நாடுதான்..


தெருவெல்லாம் நாடு மாதிரி….

இளமையில் கல்.. என்பார்கள்.. எனக்கு என்னமோ இளமையில் பார்த்த சினிமா கல் மாதிரி பதிந்து போயிருக்கு. அப்பொ எல்லாம் வீடுகளில் டிவி இலவசமாய் இல்லாத காலம். இலவசமாய் படம் பார்க்க அப்பப்பொ வாய்ப்பு கிடைக்கும். ரஷ்யாவைப் பற்றி காட்டுவார்கள். கூடவே கறுப்பு வெள்ளை தமிழ் படமும் காட்டுவார்கள். அப்படி பாத்த ஒரு படம் தான் “புன்னகை”. உண்மையோடு போராடும் ஒரு சிவில் இஞ்சினியரின் வாழ்க்கை தான் படக் கரு. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியர் ஆகப் போகிறோம் என்பதாலோ என்னவோ, அந்தப் படம் என்னை அந்த அளவுக்கு கவர்ந்து விட்டது.

நேற்று நண்பர் ஒருவர், வாங்களேன் துப்பாக்கி படம் பாக்கலாம் என்றார். அப்பொத்தான் சன் லைஃப்பில் புன்னகை படம் ஆரம்பித்தது. நான் புன்னகையுடன் வர முடியாது என்று சொல்லி அமர்ந்தேன். பாத்த படம் தான். இருந்தாலும் அசைய விடாமல் இருக்க வைத்த பாலசந்தரின் சாமர்த்தியம். பாடல்களில் கூட ஏதோ தவற விட்டு விடுமோமோ என்ற நினைப்பில் தான் பார்க்க முடிந்தது. ஊழலற்ற வாழ்வு புன்னகை இன்றி முடியும் என்ற தகவலை (மெசேஜை) புன்னகையுடன் தெரு முழுதும் சொன்ன படம் அது.

தெருத்தெருவாய் எங்கே சுத்தினாலும் கடைசியில் (நான் கம்பரிடம் போவது போல்) வீட்டுக்கு வந்து தானே ஆகணும். எட்டாம் வகுப்பில் ஓர் ஆசிரியர் கட்டுரையினை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி ஒரு டிப்ஸ் கொடுத்தார். எந்தத் தலைப்பாக இருந்தலும் தலையெப் பிச்சிக்காமெ ஜாலியா… “நாட்டுக்கு அடிப்படை வீடு. வீடு செழிப்பாய் இருந்தால் தான் நாடு செழிப்பாய் இருக்கும். நாடு வளமோடு இருந்தால் தான் வீடும் வளமாய் இருக்கும்.” இதை பொத்தாம் பொதுவா எழுதிடனும். பொங்கல் தீபாவளி பத்தி கட்டுரை எழுதனுமா? அப்படிப்பட்ட வீடு மகிழ்வோடு இருக்க பண்டிகைகள் வேணும் என்று மொக்கை போட ஆரம்பிச்சிரலாம். காந்தி நேரு பத்தி எழுதனுமா? அத்தகைய வளமான வீட்டில் பிறந்தவர் தான் என்று ஆரம்பிச்சா போச்சி..

சரி நாமளும் கொஞ்சம் தெருவை விட்டு வீட்டுக்கு வருவோம். வெறும் செங்கல் கட்டிடம் வீடு என்ற பெயர் பெறுவதற்கு அங்கு உயிரும் அதில் சில அன்பும் கலந்து இருக்க வேண்டும். கோவை சிஐடி கல்லூரி விடுதியை முதன் முதலில் பார்த்த போது பிடிக்கவே இல்லை. ஆனா உள்ளே குடியேறிய பிறகு… அதை விட்டிப் பிரிய மனசே வரலை. ஐந்து வருஷ பிஇ யை, ஏன் தான் இப்படி நான்கு வருடம் ஆக்கினார்களோ என்ற கவலையும் தான் கடைசியில் மிஞ்சியது.

வீடுகளின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். தின்னைகள் வைத்து கட்டிய வீடுகள் ஒரு காலம். இப்பொ பார்க்கிங்க் இருக்கா என்று தான் பாக்க வேண்டும். வீடு கட்டும் ஆட்களிடம் மட்டும் போய் ஆலோசனை சொல்லிவிட முடியாது.. அவரவர்களுக்கு ஆயிரம் தேவைகள். (சிவில் இஞ்சினியர்கள் தான் பாவம் முழி பிதுங்கி இருப்பர்). இப்படித்தான் அந்தமானில் மீட்டர் வட்டி எல்லாம் விட்டு சூப்பரா ஒரு வீடு கட்டினார் ஒருத்தர். கட்டின இடம் மேலூர் பக்கத்துலெ கிராமம். மாமியோட முகம் தெரியும் என்ற அளவுக்கு டைல்ஸ் போட்டு கட்டினார். ஒரு வருஷம் கழிச்சி வந்து பாத்து நொந்தே போனார். கிராமத்து மக்கள் அந்த வீட்டில் வைக்கோலும் எருவும் தான் அடுக்கி வைத்திருந்தனர். அவர்களின் தேவை அது தானே..

கும்பகோணத்தில் பட்டு நெசவுக்காரர்களின் வீடு நீள நீளமாய் இருக்குமாம். ஐந்து சேலை நெய்யத் தேவையான பாவுகளை வீட்டில் நீட்ட வசதியாய் நீளமாய் வீடுகள் இருக்கும். ஆனா இப்பொ போகிற போக்கைப் பாத்தால் எவ்வளவு அகலம் ரோடு போட்டாலும் பத்தாமல் போகுதே… ஆனா டோல் வாங்கிக்கிற இடம் மட்டும் இம்புட்டு அகலமா எப்படி எடம் கேட்டு வாங்குவாங்களோ!!!

அப்படி தெருத் தெருவா அழைஞ்சி அப்படியே…இலங்கைக்கு போலாமே… அங்கே தெரு எப்படி இருந்ததாம்? ஒரு தெரு தாண்டி அடுத்த தெரு போவதுக்குள்ளாற தாவு தீந்து போயிடுமாம்… அது எப்படி இருக்காம்??? ஒரு நாடு விட்டு நாடு போற மாதிரி இருக்காம்.. எல்லார் கிட்டேயும் நல்ல பேர் வாங்கும் ஒரே டைரக்டர் நம்ம கம்பர் தான். யாரையும் குறைவா சொல்லி வைக்கவில்லை…

காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றாமாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று  ஓர்  தேயத்தார்தேயம் சேறல் தெருவிலோர் தெருவில் சேறல்.

கம்பர் எப்பவும் ஓவர் பில்டப் செய்பவர் தானே… கவிஞர்களுக்கு அதுக்கு அனுமதி இருக்கு. அந்தக்காலத்தில் நாடெல்லாம் சின்னதா இருந்திருக்கும்னு நெனைச்சிக்கலாமே…