[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]
சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.
பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).
இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)
இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)
சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.
அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே
‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?
சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…
குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…
கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25
கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”
”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”
இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.
இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)
வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.
படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…
ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?
மீண்டும் வருவேன்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)