தாலியை விட்டு…


thaali

அந்தமான் என்றவுடன் எல்லாருக்கும் ஒரு காலத்தில் ஜெயில் தான் ஞாபகம் வந்திட்டு இருந்திச்சு. ஆனா சமீக காலமா சுனாமி தான் ஞாபகத்துக்கு வருதாம். அந்தா இந்தான்னு அதான் 11 வருஷமும் ஆச்சி. ஆனால் புதுசா யாரும் வந்தா தவறாம கேக்கும் கேள்வி, “ ஆமா, சுனாமி சமயத்திலெ எங்கே இருந்தீங்க?” என்னமோ நமக்கும் ஏதோ காலா காலமா சுனாமியோட பழக்கம் இருக்கிற மாதிரி கேக்கிறாகளே, “நல்லா கேக்கிறாங்கப்பா கொஸ்டினு” என்று பதில் சொல்ல ஆரம்பிப்பேன். ஆனால் நடு ரோட்டில் படுத்ததை இன்னும் மறக்க முடியாது தான். வீடு ஆடிகிட்டே இருந்தா எங்கே சாமி படுக்க? அதான் இப்படி.

அந்தமானில் சுனாமியின் கோரத் தாண்டவம் அதிகம் இருந்தாலும், சமயம் சார்ந்த கோவில் மசூதி தேவலயம் இவை எல்லாம் அதிகம் சேதமடையாமல் தப்பித்துள்ளன். கோவில் அப்படியே இருக்க பக்கத்தில் இருந்த அரசு விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாமல் போன கதை எல்லாம் உண்டு. ஒரு சமயம் ஒரு கிருத்துவ தேவாலய திறப்பு விழாவில் பேசவும் கையில் மைக் வந்தது. (அப்பப்பொ இந்த மாதிரி கையில் மைக் வருவது தவிர்க்க இயலாத ஒன்று தான்). அப்போது ஒரு அரசுக் கட்டிடம் ஆரம்பித்து முடியாமல் இருந்தது. அதன் பின்னர் ஆரம்பித்த அந்த தேவலயம் திறப்பு விழா வரை வந்துவிட்டது. நான் பேசும் போது, அரசு வெறும் கோட் (CPWD Code) வைத்து வேலை செய்யும். ஆனால் நீங்கள் காட் (God) வைத்து கட்டியுள்ளீர்கள் என்றேன். இது அங்கு நன்கு எடுபட்டது.

cn temple

ஒரு வேளை கோவில் போன்றவை சுனாமியிடமிருந்து தப்பித்தமைக்கு நல்ல கட்டுமானமும் கடவுளின் அருளும் காரணமா? யோசித்தேன். சென்னை ஐ ஐ டி யிலிருந்து ஒரு பேராசிரியர் ஒரு சம்பவத்தினை சொன்னார். அதஒ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பெரிய அரசுக் கட்டிடம் கட்ட தயாராய் இருந்தது. கம்பிகள் எல்லாம் கட்டி ரெடி. சரி பாக்க வந்தார் ஜுனியர் எஞ்ஜினியர். எல்லாம் நல்லா தான் இருக்கு. ஊரிலிருந்து கம்பி எல்லாம் அந்தமான் வர்ரதுக்குள் தேஞ்சி போயிடுதே. அதனாலெ ஒவ்வொரு கம்பி எக்ஸ்ட்ரா போடுங்க என்றாராம். அப்படியே ஆனது. அடுத்து அசிஸ்டெட் எஞ்ஜினியர் வந்தார். எல்லாம் சை… இங்கே கிரானைட் அளவில் தரமான கல்லு கெடைக்காது. வேணும்னா ஒரு கம்பி கூட போடுங்களேன்.

images rod

அடுத்து எக்ஜிகூடிவ் எஞ்ஜினியர் முறை வந்தது. அவரும் மணலைக் காரணம் காட்டி ஒரு கம்பி கூடுதலாய்ச் சேர்த்தாராம். பின்னர் டெபுடி சீஃப் எஞ்ஜினியர் வருவதாய் தகவல் வந்ததாம். கட்டிடம் கட்டும் வேலையில் இருந்த சூபர்வைசர், தன்னோட சைக்கிளை வேகமாய் போய் மறைத்தாராம். டெபுடி சீஃப் வர்ரதுக்கும் சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கைவசம் ஒரு கம்பியும் இல்லை. ஒரு வேளை சைக்கிளைப் பாத்தா அந்த போக் கம்பி எல்லாம் புடிங்கி போடுங்க என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இப்படி சொல்லி முடித்தார் பேராசிரியர்.

”நாமளும் தான் அந்த பேராசிரியர் ரேஞ்சுக்கு சொல்லுமோலெ….” கம்பர் குரல் ஒலித்தது. நானும் தொடர்ந்தேன். “உலகப் பேராசிரியர்கள் ஒருவருக்கும் நீங்க கொறெஞ்சவர் இல்லெ… சங்கதியெ, ஒரு கோடா சொல்லுங்க..நானு ரோடே போட்டுடறேன்”

கம்பர் பதில், “சிவில் எஞ்ஜினியருக்கு கோடும் ரோடும் நல்லாவே போடத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். அனுமனை கட்டிப் போட்டாங்களே, அங்கே போய்த் தேடு… தேடியது கிடைக்கும்.” இப்படியாய் வந்தது.

இலங்கைக்கு ஓடிப்போய் பாத்தா…அடெ…சூப்பர் சமாச்சாரம் இருக்குதே.. வாங்க எல்லோருமா சேந்து ஒட்டுக்கா எட்டிப் பாப்போம்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்டபடி கட்டிப்பிடிடா என்று பாடாமல் அனுமனை கயிற்றால் கண்டப்டி கண்ணில் கண்ட கயிறு எல்லாம் வச்சிக் கட்டினாகளாம். அப்படி கட்டி முடிச்சி திரும்ப ஒரு எட்டு எட்டிப்பாத்தா இலங்கையில் ஊஞ்சலோட கயிறெல்லாம் காணவில்லையாம். தேரேட கயிறுகளும் காயப். குதிரை யானை இதெல்லாம் கட்ட கய்று மிஸ்ஸிங். அதான் அங்கே அனுமனை கட்ட எடுத்துட்டு போயிட்டாகளே.. அப்புறம் கண்ணுலெ கண்ட எல்லா கயித்தெயுமே எடுத்துக் கட்டப் போயிட்டாகளாம்…

சைக்கிள் கேப்லெ, நம்ம சைக்கிளை மறைச்ச மாதிரி இலங்கை மகளிர் எல்லாம் ஓடி ஒளிஞ்சாகளாம். தாலிக் கயிறைக் கையில் மறைச்சிட்டு. அதனாலெ அந்த தாலிக்கயிறு மட்டும் மிஞ்சி நின்னதாம்.

கயிறு கட்டாமெ மனசிலெ நிக்கும் அந்தப் பாட்டும் பாக்கலாமா?

மண்ணில்கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரியஏனையரை இகலின் பறித்த–  தமக்கு இயைந்த
பெண்ணிற்குஇசையும் மங்கலத்தில் பிணித்த கயிறேஇடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்;  தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக்
கொண்டு வந்த பாசங்களும்;  வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்;  எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் (ஆக);  தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த;  திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக்கட்டியி்ருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

”தாலியை வித்து….” என்று சொல்வதெத்தான் இது வரை கேட்டிருப்பீங்க. ”தாலியெ விட்டு….” கம்பன் சொல்லும் கதெ எப்படி கீது?

சின்ன வீடா வரட்டுமா?


chinna veedaa

ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்பது இப்போதெல்லாம் ரொம்பவும் சகஜமாகி விட்டது. மதம் விட்டு, ஜாதி தாண்டி, வெளிநாடு வாழ்பவரிடம் உள்ளம் பறொகொடுத்து.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இந்த “ஓடிப் போய்” என்பது மட்டும் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் அவர்கள் “ஓடித்தான்” செல்கிறார்களா? யோசித்தால் சிரிப்பு தான் வரும். ”ஓடல்” என்பது இங்கே, வேகமான, ரகசியமான நடவடிக்கை அல்லது யாருக்கு தெரியனுமோ அவர்களுக்கு மட்டும் தெரியாமல் நடக்கும் சேதி. யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் செய்தி, பலருக்கும் தெரிந்திருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாது.

“கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா;
ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” என்று பாட ஆரம்பிக்கும் பாடல் செம ஹிட்டு. எல்லா பட்டி தொட்டிகளிலும் (ஆமா அப்படிப்பட்ட தொட்டி எங்கே தான் இருக்கு?) பட்டிமன்றங்களிலும் அந்தப் பாடல் அடி வாங்கினாலும் கூட, மக்கள் மனதில் அந்த இசை நன்கு பதிந்து விட்டது. தமிழ் இலக்கியங்களிலும் இப்படிப் பட்ட திருமண முறை இருந்தது என்று சொல்லப் போய், இந்தப் பாட்டுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்து விட்டது.

அவனவன் ஒரு கல்யாணம் செஞ்சிக்கிறியா? என்று கேட்டாலே, ஐயோ கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தக் காலத்திலும் கூட அரசு உத்தியோகத்தில் சேரும் போது ஒரு மனைவி தான் இருப்பதாய் உத்திரவாதம் தர வேண்டும் என்பது விதி. (திருமணம் ஆகாதவற்க்கு இந்தச் சட்டம் செல்லாது.. என்பதை சொல்லவும் வேண்டுமோ??) ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் அரசு ரொம்பவும் கவனமாய் இருக்கு.. (ஆமா குடுக்கிற சம்பளம் ஒரு பொண்டாட்டி வச்சி வாழவே பத்தாது. இதிலெ சின்ன வீடு வேறெயா? என்ற கவலையும் அரசுக்கு இருக்குமோ?)

இஸ்லாமியர்களுக்கு ஜாலிதான். தலாக் என்று மூன்று முறை சொல்லிவிட்டால் செமெ ஜாலி என்று யாரவது நினைத்தால், அது தான் இல்லை. அது கணவன்மார்களுக்குத் தரப்பட்ட சுதந்திரம் என்பதாய் இல்லை. பெண்களுக்குத் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பு என்பது சமீபத்தில் தெரிய வந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு பிரச்சினை வந்தது. மூன்றாம் முறையாய் சொல்லும் அந்த வார்த்தையினைப் பிரயோகம் செய்யும் போது, காதால் கேட்ட இருவர் சாட்சியாக வேண்டுமாம். அப்படி சாட்சியாய் சொன்னவரை விசாரித்த போது அப்படி கேட்கவில்லை என்று சொல்ல, தலாக் தலாக் ஆகிப் போனது என்பது தனிக் கதை.

முன்பெல்லாம் கல்யாணம் ஆனவர்கள்; கல்யாணம் ஆகாதவர்கள் இப்படி இரண்டு பிரிவுகள் தான் இருந்தன. பின்னர் ஒரு பிரிவும் சேர்ந்து கொண்ட்து. அதாவது சேர்ந்தே இருப்பர் கல்யாணமா?? மூச்… பேச்சே கிடையாது. இப்பொ சமீபகாலமா மீடியாக்களில் கலக்கும் சமீபத்திய ப்து வரவு. கல்யாணம் ஆகி இருக்கும். ஆனால் சேர்ந்து வாழாமல் இருப்பர்… ம்… அப்பா… இப்பொவே கண்ணெக் கட்டுதே…!!!

அரசுத் துறைகளில் இரண்டு விதமான ஆட்கள் இருப்பார்கள். வேலையினைச் சரியாய் செய்பவர்கள். அதே வேலையினைத் தப்பாய் செய்பவர்கள் இப்படி இரண்டு குரூப். சரிய்யாச் செய்யிரேன் பேர்வழின்னு ரூல்ஸ் தெரியாமெ, அல்லது தப்பு தப்பா ரூல்ஸ் பேசி, தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும், மெதாவிகள் இருப்பார்கள். அதே போல், தப்பான காரியத்தை தப்பே தெரியாதமாதிரி செய்யும் எம காதகர்களும் இருப்பார்கள். தப்பெத் தப்பா செய்யாட்டி, தப்பு தப்பே இல்லெ என்பது எழுதப்படாத விதி. அரசு ஊழியர்கள் பலரின் சின்ன வீட்டு சமாசாரங்கள் இந்த தப்பை, சரியாக செய்யும் லாஜிக்கை நம்பித்தான் ஓடுது.

தில்லியில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. கேஸ் ஸ்டடி என்று சொல்லி ஒரு வில்லங்கத்தை அரங்கேற்றி உங்களின் கருத்து என்ன? என்று அலசுவது தான் பயிற்சியின் அன்றைய வகுப்பின் நோக்கம். ஓர் அரசு ஊழியரை ஒரு தண்ணியில்லாக் காட்டு ஏரியாவில் போஸ்டிங் போட்டாகளாம். கண்ணு கலங்கிப் போனாராம். (நம்ம ராம்நாட் ஆட்களுக்கு எங்கெ போனாலும் சொர்க்கம் தான்.) கதறியபடி போனவருக்கு ஒரு இளம்பெண் ஆதரவாய் பேச, மனைவி என்று சொல்லிக் கொள்ளாமல் மனைவிக்கான எல்லாம் பெற்றாராம். தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதையும் சொல்லி விட்டாராம். (என்ன ஒரு நாணயத்தனம்… வில்லத்தனத்திலும் கூட??) போஸ்டிங் டென்யூர் முடிந்து இதோ வந்திடுவேன் என்று கம்பி நீட்டி விட்டாராம்…

போன மச்சான் திரும்பலையே என்று அவர்கள் ஊர் பாஷையில் புலம்பிக் கொண்டிருந்த அந்த அபலைக்கு ஆதரவு தர கூகுலாண்டவரை உதவிக்கு தேடினாராம் ஓர் இளைஞன். அரசுத்துறையின் தலைமை அதிகாரியின் முகவரி கிடைத்ததாம்.. காதலை உருக்கி எல்லாம் எழுதாமெ, ”ஐயா, இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லுங்க” என்று கெஞ்சி (கவனிக்க கொஞ்சம் கூட கொஞ்சாமல்), கடைசியில் மனைவி (தாலி கட்டாத என்று எழுதாத) என்று முடித்திருந்தாராம். இந்தச் சூழலில் என்ன செய்வது என்பது தான் பயிற்சி வகுப்பின் கேள்வி.

இரண்டாம் கல்யாணம் என்று தெரிந்த காரணத்தால், உடனே அவர் மீது துறை சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாய் அனைவரும் சொல்லி முடித்தனர். என் வாதம் சற்று வித்தியாசமாய் வைத்தேன். (நமக்கு மட்டும் ஏன் இப்படி ரோசனெ போவுது?). வந்த கடிதம் ஒரு வேண்டுதல். எந்த விதமான புகாரும் அதில் இருப்பதாய் எனக்குப் படவில்லை.. (ஐயா..நான் சின்ன வீட்டுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று மட்டும் தப்பா நெனைச்சிடாதீங்க ப்ளீஸ்). நடவடிக்கை என்று வந்தால், அது பெரிய வீட்டிற்கும், சின்ன வீட்டிற்கும் சிரமமாய் முடியும். ஆக ஒரு நடவடிக்கை, யாருக்குமே பயனில்லாத போது அது தேவையா? என்று கேள்வியினை வைத்தேன். அந்தமான் சொல், தில்லியின் அரியனை அம்பலத்தில் ஏறவில்லை..

எல்லாம் விடுங்க…********** இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் குடுங்க… அங்கே திருவாளர் கம்பர் இருப்பார். அவர் நம்ம ராமனுக்கே ரெண்டாம் கல்யாணம் செய்ய ப்ளான் செய்கின்றார்… அடப்பாவிகளா… ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்ல வந்த கம்பரை இப்படியா வம்புக்கு இழுப்பது என்று கேட்பது தெரியுது. சின்ன வீடா வரட்டுமா என்று யாராவது கனவிலெ கேட்டாக்கூட லேது லேது என்று சொல்லுவேன் என்று ராமனே வாக்குக் கொடுத்திருக்கார். அவருக்குப் போய் ரெண்டாம் கல்யாணமா என்று கேட்பது என் காதுக்கும் கேக்குது..

ஆனா யோசிக்கிறது யாருன்னு கேட்டா பேஜாராயிடும்… அட நம்ம தசரதன் அன்னாச்சி… இப்பொ சொல்லுங்க எப்படீன்னு? ஜோரா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. கைப்பிடித்த கணவர்க்கு எப்படி அனுசரனையா இருக்கிறது கற்புன்னு பெண்டிருக்கு சொல்லப்பட்டதோ, அப்படி இந்த நிலகமளை ராமனுக்கு கட்டி குடுத்திடனும் என்று தயரதன் நெனெச்சாராம்… ஐய… அம்புட்டுத்தானா…. நீங்க நானு… அப்புறம் இந்த உலகமே வில்லங்கமா இருக்கலாம்.. அதுக்காக நம்ம கம்பனை அந்த லிஸ்ட்லெ சேக்க முடியுமா என்ன? வாங்க நைஸா அந்த பாட்ட்டையும் பாத்திடலாம்..

கன்னியர் அமைவரும் கற்பின், மா நிலம்
தன்னை இத் தகைதரத் தரும்ம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்

வேறு ஏதாவது வில்லங்கம் மாட்டாமலா போகுது?? யோசிப்போம்..

அங்க(male) வஸ்திரம்


கொஞ்ச காலம் முன்பு வரைக்கும், தாலி செண்டிமெண்ட் படங்கள் சக்கை போடு போட்டன. (இப்பொ எல்லாம் பிரமாண்டமான படங்கள் தான் வெற்றி பெறுகின்றன). ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தாலியின் மகிமை, இப்படி காலாவதி ஆகிவிட்டதைப் பாத்தால் வியப்பாத்தான் இருக்கு. சமீபத்தில் ஒரு ரவுடி பலாத்காரமாய் தாலிகட்ட, அதை தூக்கி எறிய நாயகி வரும் போது, தாலி பற்றிய டயலாக் பீரிடும் படம் பாத்தேன். சிரிப்பாத் தான் இருந்தது. சாதாரன சாம்பு, சோப்புக்கு பயந்து தாலியைக் கலட்டி வைக்கும் இந்தக் காலத்தில்..??? பியூட்டி பார்லரில் தாலியை மாட்டி வைக்க தனி ஏற்பாடே இருப்பதாய் கேள்வி.. எட்டிப் பாக்க ஆசை தான். விட மாட்டேன் என்கிறார்களே!!

ஸ்டேட்டஸ் சிம்மள் பற்றி சூப்பரான ஒரு பதிவை இதயம் பேத்துகிறது ஜவஹர் எழுதி இருந்தார். கார், மொபைல் இதெல்லாம் எப்படி Status Symbol ஆனது என்று அந்தப் பதிவு பேத்துகிறது… சாரி..பேசுகிறது. என்னைக் கேட்டா (யாரு கேக்கிறா?) தாலியையும் இதில் சேத்துக்கலாம். மஞ்சள் கயிறில் ஆரம்பித்த அந்தத் தாலி, இப்பொ மஞ்சள் கலரில் ஜொலிக்கும் தங்கத்துக்கு மாறி விட்டது. அந்தக் காலத்தில் தாலியை அடகு வைப்பது போதாத காலத்தில். ஆனா இப்பொ தாலி செய்யவே எல்லாத்தையும் வைத்தாலும் போதாது போல் இருக்கு. ஜுவல்லரி முதலாளிகள் புத்திசாலிகள். எங்காவது தாலி மாதிரி கொஞ்சம் சேட்டை செய்து வித்தை காட்டி விடுகிறார்கள்.

பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையா என்று யோசிக்கும் போது (உன்னை யாரு இப்படி யோசிக்கச் சொன்னது?) தான் பூணூல் மனசிலெ சிக்கியது. ஆண்களில் சிலருக்கு பூணூல் ஓர் அடையாளமாய் வந்து நிக்குது. 1980 களில் பூணூலைக் கலட்டி எறியும் போது அப்படியே Slow motion ல் அலைகள் ஓய்வது போலக் காட்டிய அ. ஓ இல்லை என்று ஒரு படம் வந்தது. அதே போல் அதுக்கு அப்புறம் பாக்கியராஜ் பூணூல் போடும் போதும் மங்கல இசை முழங்க அதுவும் Slow motion ல் தான் வரும். மாற்றங்கள் மாறுதல்கள் இப்படி மெதுவாத்தான் வரும் என்று நாசூக்காச் சொல்றாகளோ? இருக்கலாம். காலப்போக்கில் இதுவும் காலாவாதியாகி விட்டது.

என்னோட பையன் முன்னாடி எல்லாம், ஆதித்யா சிரிப்பொலி மாதிரி காமெடி சேனல்களை விரும்பிப் பாப்பான். இப்பொ சமீப காலமா முரசு, சன் லைப்ல வர்ர படத்தை அப்பப்பொ விரும்பிப் பாக்குறான். வெவரம் கேட்டா, அப்பா, ”அந்தக் காமெடியை விட இந்தப் பழைய படங்களோட காமெடி சூப்பரா இருக்குப்பா.. இவங்க டிரஸ்ஸு, டான்ஸ், டயலாக், பாட்டு, முக expression, இப்படி எல்லாமே செமெ காமெடியா இருக்குப்பா” என்கிறான். சமீப காலமா காணாமப் போன சங்கதிகள் எல்லாம் படத்திலெ பாத்தாலும் சிரிப்பாத் தான் இருக்கு.

ஒரு சமயம் காஞ்சிபுரம் போயிருந்தேன். சரி வந்தது தான் வந்தாச்சி, அந்த ”தெய்வத்தின் குரல்” எழுதின தெய்வத்தை(??)யும்தான் தரிசித்து வரலாம்னு கிளம்பிட்டேன். உள்ளே போகும் முன், சட்டையைக் கழட்டனும் என்றார்கள். ஏற்கனவே இப்படி கேராளா கோவில் ஒன்றில் கலட்டியதாய் ஞாபகம். சரி.. கழட்டி பாத்தா… நான் ஒத்தெ ஆளு தான், பூணூல் இல்லாமெ நிக்கிறேன். ஒத்தெப் பிராமணன் என்பார்கள். நான் பிராமினாய் ஒத்தையாய் நின்றேன்.

நான் பிராமணனா? என்று கேள்வியினை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தமிழினை என்றும் நெஞ்சோடு வைத்திருக்கும் எனது பூர்வீகம் தேடினால், தற்போதைய குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு போக வேண்டி வரும். வந்தோரை வாழ வைக்கும் தமிழகம், நம்மையும் வாழ வைத்தது… வைக்கிறது.. இனியும் வாழ வைக்கும். மதுரையில் மெய்யாலுமே ”மதுரை”( மதுரையா? சிதம்பரமா என்பதின் மதுரை) ஆண்ட காலம் அது. வந்து பல நூறாண்டுகள் கடந்த போதும், பூணூல் போடலாமா என்ற பிரச்சினை வந்தது. ராணி மங்கம்மாள் முன்னிலையில் மணிக்கணக்காய் வாதிட்டு (இப்பொது பிரச்சினை வந்திருந்தால் வருடக் கணக்கில் ஆயிருக்கும்) பூணூல் போடலாம் என்று ஒரு சாசனம் (தெலுங்கில் எழுதி) கொடுத்து பிரச்சினை முடித்தார்கள்.

மநு தர்மம் என்ன தான் சொல்கிறது என்று மேலோட்டமா ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அதில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூணூல் அணியலாம் என்றும் அரசல் புரசலா தெரிஞ்சது. அங்கேயும் ஒரு பஞ்ச் இருக்கு. எல்லாரும் எல்லா பூணூலும் போட்டுவிட முடியாது. பருத்தி, சணல், உல்லன் நூல்கள் வைத்து தனித் தனியே அணிய வேணுமாம். அப்படியே மேஞ்ச போது மாமிசம் சாப்பிட அனுமதியும் இருக்கு என்கின்ற தகவலும் சிக்கியது. அந்தமானில் கடல் உணவு ஜாலி தான்.. எல்லார்க்கும். குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாக்கும் நாம், இந்த மாதிரியான விஷயங்களிலும் ரொம்பவே மாறிட்டோம் என்று மட்டுமே தான் சொல்ல முடியும்.

படத்தில் காட்டப் படும் அளவுக்கு பூணூலின் மகத்துவம் இருக்கோ இல்லையோ, தேவையான நேரங்களில் போட்டுக் கலட்டுவதும் பாக்கத்தான் முடிகிறது. முக்கியமான நல்லது கெட்டதுகளில் கல்யாணம் கருமாதி போன்ற நேரங்களில் பூணூல் முக்கிய அம்சமாய் இருக்கிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார்… உற்சாக பாணம் அருந்தும் சமயங்களில் பூணூலை கழட்டி வைத்து விடுவார். தேவையான நேரங்களில் மட்டும் அணிபவர்களும் உண்டு. அந்தமானின் சிறு சிறு தீவுகளில் பூஜாரிகளின் நிலை இது போல் தான். பூஜை நேரத்தில் மட்டும் பவ்யமாய் பூணூலோடு தரிசனம் தருவர். மத்தது எல்லாம்…எல்லாமே… உண்டு தான்.

இந்த வம்பன் பார்வையில் இன்று மாட்டி வதை படுவது இந்தப் பூணூல். இந்தப் பூணூல், அந்தக் காலத்தில் கம்பரின் பார்வையில் படுது. எப்புடி எழுதுறாரு பாக்கலாமா?
அசோக வனத்தில் இராவணன் வருகிறார் .. பராக்..பராக்..பராக்.. நீலக்கலர்ல ஒரு மலை (பாத்தாலே கிரானைட் குவாரி போட்டு விக்கத் தோணும் அளவுக்கு ரிச் கலர்). அது மேலேயிருந்து ரொம்ப பள்ளத்துக்கு விழுகிற மாதிரி வெள்ளை வெள்ளேர்னு… பூணூலா… அது தான் இல்லை. அப்படி பளீர்னு பட்டு நூல்ல செஞ்ச மாலை மாதிரி இருக்கிற மேலாடை.. ம்.. அப்புறம், கழுத்தில் மாலை. அதில் மணிகள் ஒளி வீசுதாம்.. அது சும்மா சுகமான இள வெய்யில் (ஈவினிங் பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிக்கிற சுகம்) மாதிரி இருக்குமாம். இப்பொத் தான் கிளைமாக்ஸிலெ மிஸ்டர் பூணுல் தெரிகிறார். கருமேகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னலைப் போல. வாவ்… கலக்கிட்டீங்க கம்பரே… இராவணன் அசைந்து வரும் போது அவரோடு சேர்ந்து அந்தப் பூணூலும் அசைஞ்சி வந்ததாம்.

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நித்த வெள் அருவியின் நிமிர்த்தபால் நிறப் பட்டின் மாலை உத்திரியம் பண்பறப் பசும் பொன் ஆரத்தின்மால்நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இளவெயில் பொருவசூல் நிறக் கொண்மூக் கிழிந்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க.

இராவண மகராசா எப்போவும் பூணூல் போடுவாரா? அல்லது சீதை யை பார்க்கும் நல்ல(??) காரியம் செய்யும் போது மட்டும் போட்டாரா என்பதை ஆய்வாளர்கள் கையில் விட்டு, நான் கலண்டுகிறேன்.