அமுதைப் பொழியும் நிலவே…


“இரவின் மடியில்” போன்று பல்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். மெகா டீவி தான் இந்த பழைய பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து முதலிடம் தந்தது என நினைக்கிறேன். பின்னர் இதர சேனல்களும் அதனை வேறு வேறு விதமான பெயர்களைச் சூட்டி மரியாதை செய்யத் தொடங்கினர். எப்படி இருப்பினும் எந்தச் சேனலிலும் இந்த “அமுதைப் பொழியும் நிலவே” பாடல் இல்லாமல் இருக்காது.

சமீபத்தில் புது தில்லி சென்ற போது ஹிந்திப் பழைய பாடல்கள் மட்டும் ஒளிபரப்பி ஒரு சேனல் கலக்கி வந்தது பார்க்க முடிந்தது. ஜல்வா என்று அந்த சேனலுக்கு பெயர். எப்பொ வேண்டுமானாலும் பாக்கலாம்.. சாரி.. கேக்கலாம். தமிழிலும் இப்படி ஒரு சேனல் இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்ற ஏக்கம் வரத்தான் செய்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம அந்த அமுதைப் பொழியும் நிலவைப் பிடித்து சற்றே வம்புக்கு இழுப்போம். (ஆமா.. நமக்கு வேற என்ன வேலை இருக்கு அதைத் தவிர!!!). அமுதம் என்பதே மரணத்தை மறக்கடிக்கும் மந்திர மருந்து. அது தூரமாய் இருந்தால் என்ன? அருகில் இருந்தால் தான் என்ன? ஏன் இந்த விபரீத வேண்டுதல்? இப்படியே யோசிக்க வைத்தது. (எதுக்கு இப்படி யோசிக்கனும்? சும்மா உங்களுக்காய் எழுதுறதுக்குத்தான் சார்..)

பொழிகிறது என்பதை பெரும்பாலும் மழைக்குத்தான் சொல்வார்கள்… அல்லது மழை போல் இருப்பதையும். அந்தி மழை பொழிகிறது… என்ன இன்னெக்கி ஒரே பாச மழை பொழியுது? அன்பு மழையில் நனைந்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அமுதை மழை போல் பொழிகிறது. இந்தப் பாடலில் பொழிவது யார்? தன் காதலி. காதலியின் பார்வை மழை மாதிரி எல்லார் மேலும் பட்டால் நல்லாவா இருக்கும்?? எனக்கு.. எனக்குத்தான் என்று தானே எல்லா காதலனும் நினைப்பார்கள்? இதற்கு ஏற்ற மாதிரி வந்த பாடல் தான் இது என்று நினைக்கிறேன்.

Possessiveness என்று சொல்கிறார்களே.. அது காதலுக்கும் சரி.. கடவுள் பக்திக்கும் சரி எல்லாமே பொருந்தும் என்று நினைக்கிறேன். அன்பின் உச்சம், பக்தியின் உச்சம் இப்படி இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்களும் இப்படி அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்காத குறையாக இருப்பவர்கள் தான்.

இதற்கு மறுபக்கமும் ஒன்று இருக்கிறது. உலகத்து பிரச்சினைகளை சந்திக்க பயந்து, தவறான முடிவுக்கு வருவது. அதுவும் அவசர முடிவை எடுக்கும் உச்சம். பெரும்பாலும் தற்கொலைகள் என்பது ஒரு emotional quick decision என்பார்கள். சமீபத்திய அந்தமான் தீவில் நிகழ்ந்த நிகழ்வு அதனையே கேள்விக்குறி ஆக்குகிறது. ஒருவன் தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தொங்கிய பரிதாபம். அந்தக் காலத்து நல்லதங்காளை நினைவிற்கு கொண்டு வருகிறது. உலகத்தில் நாய் நரி எறும்பு எல்லாம் வாழும் போது நம்மால் மட்டும் வாழ முடியாது என்று எப்படி முடிவு எடுக்க முடிகிறது.
இந்த மாதிரி நடக்காமெ இருக்க அமுதை பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தான் தோன்றுகிறது. சும்மா இப்படி ஏதாவது யோசிக்கிறது தான் தெரிஞ்ச விவரமாப் போச்சே என்று முனகுவது எனக்கும் கேக்கத்தான் செய்யுது.

பிரச்சினைகளுக்கு பயந்து இப்படி ஓட நினைப்பவர்களைப் பார்க்கும் போது, அப்படிப்பட்ட அமுதைப் பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இப்படி எல்லாம் இருக்கும் சாத்தியம் இருக்குமா?? கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தத்தில் பதில் கிடைத்தது.

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அனுமன் முதல் இன்னிங்க்ஸில் விளாசு விளாசு என்று வெளுத்துக் கட்டும் நேரம். வாலில் சூடு வைக்க, அது அரக்கர்கள் மீது பட்டு துவம்சம் செய்கின்றன. அந்தச் சூடு சந்திரன் வரைக்கும் தொட்டதாம். (சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்று பாட்டுப் பாடி கேக்க முடியாது) சந்திரனும் கொஞ்சம் உருகி அமுதை அப்படியே பொழிந்ததாம். அது இறக்கும் தருவாயில் இருக்கும் அரக்கர் மேல் விழுந்ததாம். அரக்கர்கள் உயிர் பெற்று வந்தார்களாம்.

நெருக்கி மீ மிசை ஓங்க்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்றுஉற
அரக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.

இனிமேல் இந்த அமுதைப் பொழியும் நிலவே பாடல் கேட்கும் போது இன்னும் இனிமையாய் இருக்கும் உங்களுக்கு. என்ன சரி தானே??

நடந்தது என்ன??


இசை ஒன்று மட்டும் தான் எல்லா தேசத்திற்கும் பொதுவான மொழி. என்ன… நம்ப கஷ்டமா இருக்கா??

ஹவா..ஹவா…முஜ்கோ பதாதே.. என்ற பாப் பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இந்தப் பாடல் பிறந்த இடம் பாகிஸ்தான். ஆனால் இந்தியா அதனை ஆதரித்தது. இதே போல் தேரே அங்குனே மே பாடலுக்கு ஆடிய அமிதாப்புக்கு தங்க முள் கிரீடம் வைத்து அழகு பார்த்து மகிழ்ந்தது அதே பாகிஸ்தான்.

ஆனால் அந்த ஹவா ஹவா பாடலை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை கவுண்டமனி செந்தில் ஜோடிக்குத்தான் சேரும்.

ஒரு படத்தில் அந்த பாடலை பாடிக்கிட்டே செந்தில் தூக்கில் தொங்குவது போல் ஒரு சீன்… அதை பாத்து நம்ம கவுண்டமனி வாத்தியார் போல கதவெல்லாம் ஒடெச்சிட்டு உள்ளே போனா… ஜாலியா நம்மாளு ஹவா ஹவான்னு பாடிட்டு இருப்பாரு.

சமீபத்திய சன் டிவி நிகழ்சியில் சுகி சிவம் அவர்கள், குடிப்பவர்களை தற்காலிக தற்கொலை செய்து கொள்வவர்கள் என்றார்.

சாதாரண விஷயமான வீட்டில் திட்டுதல், சந்தேகப் படுதல், என்னைப் பத்தி மத்தவங்க என்ன நெனைப்பாங்க? எனற நினைப்புகள் தான் இந்த தற்கொலை எண்ணங்களுக்கு காரணம் என்கின்றனர் உள்வியல் வல்லுநர்கள்.
பரமக்குடி பள்ளியில் என் குரு மணி சார் அவர்கள் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளக்கிச் சொன்னார்.

ரகம் 1: ஒரு வாத்தியார் கிளாசில் கேக்கிறார். இன்னெக்கி என்ன பாடம் நடத்தனும். நானு முந்திரிக் கொட்டை மாதிரி…. சார் 34 ம் பக்கம் சார் என்கிறேன். வாத்தியாருக்கு அதெக் கேட்டவுடன் செமெ கடுப்பு. நான் வாத்தியா நீ வாத்தியா?? கிளாசிக்கு வர்ர மனுஷனுக்கு எந்த பக்கம் பாடம் எடுக்கனும்னு கூடவா தெரியாமெ இருக்கும்?? என்ன நெனெச்சி கிட்டு இருக்கீங்க???

இப்படி எரிந்து விழுபவர் முதல் ரகம்.

ரகம் 2: சார்… உங்களை நேத்து பெரிய கடை பஜார்லெ பாத்தேன் சார். உங்க ரெண்டு பொண்ணுங்களும் சூப்பரா இருந்தாங்க சார்…
வாத்தியார்: அப்படியா?? ரொம்ப சந்தோஷம்… ஹி..ஹி..ஹி…
எல்லாம் சரி தான்… ஆனா எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தான். நேத்து என் கூட வந்தது என் மனைவியும் பொண்ணும்..

புத்தகத்தோட பக்கம் சொன்ன பையன் மேல் பாயும் வாத்தியார் ஒரு ரகம். பொண்ணையும் பொண்டாட்டியையும் பாத்து ஜொள்ளு விட்டதை கண்டுக்காத வாத்தியார் ஒரு ரகம்.

இதில் முதல் ரகம் தான் தற்கொலைக்குத் தயாராய் இருக்கும் ரகம். எது எப்பொ எப்படி நடந்தாலும் ஒரே டென்ஷனாய் இருப்பவர்கள்… பிரச்சினைகளைப் பாத்து ஓடுபவர்கள்…

அந்தமான் தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்று புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு வேளை தங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள நல்ல உள்ளம் கிடைக்காதது தான் அதற்கான காரணமாய் இருக்குமோ?? (ஒரு வேளை Face Book வந்த பிறகு அது குறைய வாய்ப்பு உள்ளதோ??)

இதை எழுதி வரும் இதே நாளில் முதல் பருவத்தேர்வில் குறைவான மார்க் வாங்கிய காரணம் காட்டி ஒரு மாணவன் உயிர் விட்டிருக்கிறான். என்னவொ பிரம்மன் அந்த தேர்வில் வெற்றியடையத்தான் இவனை அவதாரம் எடுக்க வைத்திருப்பதாக நினைப்பு..

பிரம்மன் ஏமாந்தான் என்று பாடலாம் போல் இருக்கு.

கம்பர் உடன் ஆஜர் ஆகிறார் சம்மன் இல்லாமல் (எங்கிட்டெ வர ஏதும் அவருக்கு தேவை இல்லை)
கம்பன் ஏமாந்தான் தானே பாட்டு…இது என்ன மாத்தி பிரம்மன் போட்டு பாடறே??

ஒண்ணும் இல்லை தலைவரே… தற்கொலை பத்தி ஒரு சின்ன அலசல்.. உங்க கிட்டெ ஏதாவது சரக்கு இருந்தா தரலாமே???

கம்பர் ஆரம்பித்தார்: நானு நேரடியா சொல்லலை… உனக்கு தோதா.. ஒரு பாட்டு இருக்கு பிடி… (குடுத்து மறைந்து போனார்)

தற்கொலையில் ஒரு வித்தியாசமான் வித்தையை கம்பர் காட்டுவதை மட்டும் சொல்லாம விட்டா.. அவரே நம்மை ஒதைக்க வருவாரு…

இடம் வாலி ரெண்டாம் தடவையாக போருக்குப் போகும் இடம். தாரை வழி மறிக்கிறாள். ஹீரோ ராமன் கூட் இருந்து கொல்ல வந்திருப்பதை மோப்பம் பிடித்து சொல்கிறாள் (பின்னெ ஏன் நம்ம மேல் நாட்டவர் கூட Why women can’t read maps என்று சொல்கிறார்கள்??)

வாலிக்கு செமெ கோபம். ரொம்ப தப்பு. அப்படி செய்றதினாலெ ராமனுக்கு என்ன லாபம்?? அப்படி செய்தா தர்மம் தற்கொலை செஞ்சிகிறதுக்குச் சமம் என்கிறான் (எப்படியோ நமக்கு தற்கொலை டாபிக் முடிக்க பாட்டு கெடைச்சாச்சி)

இருமையும் நோக்குறும் இயல்பினார்க்கு இது
பெருமையோ இங்கு இதில் பெறுவது எங்கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறுடைத்
தர்மமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ

மீண்டும் சந்திக்கலாம்.