என்ன சுகம்? ம் ம் ம் என்ன சுகம்?


நினைத்தாலே இனிக்கும் என்பார்கள். சமீபகாலமாய் முகநூல்களில் வெளிவரும் போட்டோவைப் பாத்தாலே வாயில் ஊறும். மீன் பொறியல், இறால் வறுவல் என்று படமாய்ப் போட்டு தாளிப்பது ஒரு பக்கம். சிரிக்கும் சிங்காரியான தமண்ணா (இன்னுமா தமண்ணா என்று கேக்காதீங்க) படங்கள் மறுபக்கம். இப்பத்தான் புரியுது, நீங்க ஏன் அடிக்கடி Facebook பக்கம் போறீங்க? என்று மனைவியிடமிருந்து இடி எல்லாப் பக்கமும். இது நினைத்தாலெ சிரிப்பாத்தான் இருக்கும். (ஆமா கடுப்பா இருக்கு என்கிறதை தைரியமா எழுதவா முடியும்?)

சுகமான சுவையான சேதிகளை ஜாலியா எடுத்துக்கும் மக்கள் சோகத்தில் அப்படியே துவண்டு போவது தான் உறுத்தல் தரும் விஷயம். சோகத்தை தோல்வியை எப்படி எதிர் கொள்வது? இது ஒண்ணும் பெரிய்ய கம்பசூத்திரம் இல்லை. (கம்பர் சூத்திரம் எப்படியும் கடைசியில் வரத்தானே போகுது?).

தோல்விக்கு நம்மை தய்யார் நிலைக்கு வைத்திருப்பது முதல் படி. இது தன்னம்பிக்கைக்கு எதிரானது இல்லையா என்று சுய முன்னேற்ற நூல்கள் படித்தவர்கள் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம். 10 பேருக்கான வேலைக்கான தேர்வு நடக்கிறது. 2500 பேர் மோதுகிறார்கள். அதில் பத்து பேர் தான் வெற்றி பெற இயலும். மீதம் 2490 பேர் தோல்வி என்று முடங்கி விட முடியுமா என்ன? அந்த 10 பேரில் ஒருவராய் வர முடியுமா? என்று பாக்கனும். இல்லையா.. அடுத்த வாய்ப்பு தேடிப் போகணும். புலம்பாமல்.

கிடைக்காத வாய்ப்புக்கு புலம்புவதை விட கிடைத்த வாய்ப்பை செமைய்யா பயன்படுத்திக்க வேன்டும். உங்களுக்கு ஒரு கணேசன் கதை சொல்லவா?

சத்ரபதி சிவாஜி நாடகத்திற்கு அதற்கு முன்னர் வரை நடித்து வந்த நடிகர் (எம் ஜி ஆர் என்று படித்த நினைவு) அன்று தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாமல் போக, அரை மணி நேரம் வசனம் பார்க்க கிடைத்தது இன்னொரு நடிகருக்கு. மதிய உணவினை தியாகம் செய்து நடித்தே காண்பித்ததால் அவருக்கு உடனே நடிக்கவே வாய்ப்பு தந்தார்கள். அன்று தான் அந்த கணேசன் சிவாஜி கணேசனாக பிறவி எடுத்த தினம். இப்பொல்லாம் நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் என்று பாராட்டும் அந்த சிவாஜி கணேசன் கதை மூலமாக, நாம் வாய்ப்பை பயன்படுத்தல் எப்படி? என்ற .செய்தி கற்க வேண்டும்.

என் அலுவலக நண்பர் ராம்கி ஒரு தேவியின் கதை சொன்னார். சித்தியின் கொடுமை காரணமாய் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு அறையில் பூட்டப்பட்டாளாம் அந்த தேவி. தேவிக்கு கதவு தான் பூட்டப்பட்டது. அறிவின் கதவு அப்போது தான் திறந்தது. விளையாட நண்பர்கள் யாரும் இல்லாததால் நம்பர்களுடன் விளையாடி மேதையானராம் அந்த தேவி. சகுந்தலா தேவி தான் அந்த தண்டனையைக் கூட வாய்ப்பை பயன்படுத்திய கணித மேதை.

அங்கே இங்கே ஏன் போகணும். என் கதையும் எடுத்து உட்றேனே.. 1987 களில் மாற்றல் ஆன போது உக்கார இடம் இல்லாமல் போய் கம்ப்யூட்டர் ரூமில் நுழைந்தேன். அங்குள்ளோர் பிள்ளையார் படம் போட்டு விளையாடிக் கொண்டிருக்க, நான் ஒரு துறைமுகப்படத்தின் படம் போட பிள்ளையார் சுழி போட்டேன். பாத்த அதிகாரி என்னை மூணு நாள் கணிணி பயிற்சிக்கு சென்னை அனுப்பி வைத்தார். சிமெண்ட், கல்லு, கம்பிகளோடு மட்டும் நின்றிருக்க வேண்டிய என்னை இன்று வலைப்பூ வரை வலம் வர வைத்தது, அந்த உக்கார இடம் இல்லா பிரச்சினை தான்…

தோல்வியால் துவண்டு கிடப்பவர்க்கு இரு கோடுகள் தத்துவம் தான் லாயக்கு. அதாவது நம்முடைய தோல்விகள் சின்னதாக வேண்டுமா? நம்மை பெரிதாக ஆக்கிக்கொள்ள வேன்டியது தான். பிரச்சினை சின்னது ஆகிவிடும். பிரச்சினைக்கான ஆதி காரணம் என்ன என்று பாத்தா.. பயம். ஏன் பயம்? அது பற்றிய அறிவு… தெளிவு இல்லாதது. ஆக அறிவை வளர்த்துக் கொண்டுவிட்டால் பயம் ஏது? பிரச்சினை ஏது?

உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்கிறது பழைய பாடல். காலில் செருப்பு இல்லையா? காலே இல்லாதவனைப் பார் என்கிறது தத்துவம். இன்னும் தெம்பு வர “ஒவ்வொரு பூக்களிலும்..” பாட்டு கேளுங்களேன். கொஞ்ச நேரம் பதுங்கிட்டு மறுபடியும் பாயத் தயாராயிடுங்க.

அந்தமானில் முன்பெல்லாம் தமிழர்களை அய்யாலோக் (ayyalog) என்பர் மிக ஏளனமாக. காலம் உருண்டது. தமிழர்களில் இப்போது தலைவர்கள் உருவானார்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் இப்படி உருவாக உருவாக, மரியாதை தானே வருகிறது தமிழர்களுக்கு. தரம் உயர, நம் தரம் உயர வேண்டும் என்பது மட்டும் நிரந்தரம்.

நம்மை நாம் விஸ்வரூபம் எடுத்து வைத்துக் கொண்டால் நம்மை நோக்கி வரும் துன்பங்களைக்கூட ஜாலியா எடுத்துக்கலாம். என்ன சுகம்..ம்..ம்.. என்றும் பாடலாம். அப்பாடா எப்படியோ தலைப்பைக் கொண்டு வந்தாச்சி.. இனி கம்பரையும் கொண்டு வரனுமே..!! இழுத்திட்டாப் போச்சி…

ஒரு மனிஷன் ஒடம்புலெ சாதாரண காயம் பட்டாலே அலறி அடித்து ஆர்ப்பாட்டம் செய்றோம். அம்பு பாஞ்சா எப்படி வெலெலெத்துப் போவோம்? ஓர் ஒடம்புலெ அம்பு படுது. அந்த அம்பு எப்பேற்பட்டது தெரியுமா? அனல் பறக்கும் அம்பாம் அது. அது ஒடம்புலெ படுது. பட்ட ஆளுக்கு வடிவேல் தூங்குற மாதிரி ஆனந்தமா இருக்காம். அப்படியே யாராவது வந்து சொறிந்து விட்டா எப்படி இருக்கும்? – னு ஏங்கும் போது, அம்பு வந்து தைத்ததே, சொறிஞ்ச மாதிரி சுகமா இருக்காம். யாருக்கு? விஸ்வரூபம் எடுத்து படுத்திருக்கும் அனுமனுக்கு. (உங்களை உயர்த்திக் கொண்டால் துயரம் ஏதும் இல்லை இது அனுமன் சொல்லாத கீதை… சாரி ஹீதை)

எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன
பொறிந்த எழு படைக்கலம் அரக்கர் போக்கினார்
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுறச்
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான்

கம்பன் சொன்னா அந்த ஆளு என்ன பெரிய்ய கொம்பனான்னு கேப்பீங்க. ஆனா ஷேக்ஸ்பியர் சொன்னா கேப்பீங்க தானே.. இதோ அவர் சொல்லும் வாழ்வில் வெற்றிபெற மூன்று வழிகள்:

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
பிறரைக்காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

வாழ்த்துக்களுடன்… மறுபடியும் சந்திப்போம்.