தங்கத் தாமரை மகளே…


நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே வரும் பொருட்களை ஒரு பட்டியல் போட்டால் அதில் தங்கம் நிச்சயமாக இருக்கும். “முழம் ஏற.. ஜான் சறுக்க..” என்கிற மாதிரி அப்பப்பொ இறங்கு முகமும் காட்டி விளையாடும். ஆனா இந்த சொக்கத் தங்கம் நம் மக்களிடையே இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாராலும் எதிர் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு எங்கும் எதிலும் தங்கம் பொன் இப்படி இருக்கிறது.

தங்கப்பதக்கத்தின் மேலே… ஒரு முத்துப் பதித்தது போலே.. இப்படி ஒரு கற்பனை ஓடுது ஒரு கவிஞருக்கு… ஒலிம்பிக்கிலெ தங்கம் கிடைக்கலையே என்று நொந்து கிடக்கும் போது அந்த பதக்கத்தின் மேல் ஒரு முத்தும் பதித்த மாதிரி ஒரு காதலி.. ஆஹா..இது போதாது?? எனக்கு ஒரு ஐடியா தோன்றது. இந்த மானாட மயிலாட மாதிரி எல்லா சேனல்லெயும் ஆட்டம் என்கிற பெயரில் செமெ ஜிம்னாஸ்டிக் வித்தைகள் செய்யிறாங்க.. பேசாமெ அவங்க எல்லாரையும் நல்லா டிரைன் பன்னி, தங்கம் வாங்க டிரை செய்யலாமே..( ஒரு தங்கம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு??)

என் எஸ் கிருஷ்ணன் & மதுரம் நடித்து பாடிய ஒரு சூப்பர் ஹிட் பழைய காமெடி பாடல் இருக்கு. நல்ல தம்பி தான் படத்தோட பேரு என்று நினைக்கிறேன். தங்கமே என்று அழைத்து.. வாரி அணைக்க பாடுவார். நாயகி தன்னை பாடுவதாய் நினைத்து கோபிக்க… அட… ஒன்னெ இல்லைம்மா… கொஞ்சம் கொஞ்ச்சமா காசு சேத்து செம்பு, பித்தளை, வரை வந்தாச்சி… தங்கம் தான்…என்று இழுப்பார்.. அன்று தொடங்கிய இழுப்பு இன்று வரை தொடர்கிறது.

பெரிய திரையில் இந்த தங்கம் வைத்து படத்தின் பெயரும் பாட்டும் அந்தக் காலம் முதலே பிரபல்யம் ஆக ஆரம்பித்து விட்டது. தங்கத் தோணியிலே தவழத்துடிக்கும் காதலன், தங்கத்தில் முகம் எடுத்து காதலியின் பிரதியை விதம் விதமாய் மாற்றத்துடிக்கும் காதலன், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை இருக்குமா என்று கேட்கும் ஜோடி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தங்கமலை ரகசியம், தங்கப் பதக்கம், எங்கள் தங்க ராஜா, எங்கள் தங்கம், தங்கச் சுரங்கம், பொன்னூஞ்சல் இப்படி பல ஹிட் தந்த தங்கப் படங்கள்.

கவிஞர்களுக்கும் என்னவோ பொன் பெண் இரண்டையும் இணைத்துப் பாடுவதில் ஓர் அலாதி இன்பம் தான். பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..என்று வரும் பாட்டு சாகாவரம் பெற்ற பாடல். இதேபோல் பொன்நகை புன்னகை என்பதையௌம் அவர்கள் விட்டு வைத்த்தில்லை. பொன்னகை அணிந்த மாளிகைகள்… புன்னகை மறந்த மண்குடிசை..பட்டம் போல் அவர் பளபளப்பார்.. நூல் போலே இவர் இளைத்திருப்பார் என்று ஏற்றத்தாழ்வுகள் பற்றி வந்த அழகான சோகமான பாடல் அது.

தங்கள் குடும்பத்தையே வேண்டாம் என்று வெறுத்து (நொந்து நூலாகிப் போய்) வீட்டை விட்டு வெளியேறிய சித்தர்களுக்கு இரும்பை தங்கம் ஆகும் வித்தை தெரிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. பிறக்கும் போதே எல்லாரும் குவா குவா என்று தான் அழுதிருப்போம். ஒரு குழந்தை மட்டும் சிவா சிவா என்று அழுதபடியே பிறந்ததாம். அந்தக் குழந்தைக்கு சிவ வாக்கியர் என்றே பெயர் வைத்தனர். அவர் ஒரு முறை காட்டில் ஒரு மூங்கிலை வெட்ட… அப்படியே தங்கம் வந்து விழுந்ததாம்.. (கோலார் தங்க வயலுக்கு பக்கத்தில் அந்தக் காடு இருந்திருக்குமோ).. அந்த சித்தரோ, ஐய்யோ..எமன்..எமன் என்று ஓடி வந்துட்டாராம்.. (அது நான்கு பேரின் உயிர் வாங்கியது தனிக்கதை)

திருமதி சிவவாக்கியரிடம் கொங்கணச் சித்தர் என்பவர் வந்தாராம்..(சிவ வாக்கியாரின் குருவே, உனக்கு இல்லற ஆசை இருக்கு… கல்யாணம் செய்திட்டு அப்புறம் துறவறம் வரலாம் போ..என்று விரட்டியது இன்னோர் கிளைக்கதை) வெறும் மணலை அள்ளிக் கொடுத்து சாப்பாடு தயார் செய் என்றாராம். அவரும் மணலை அரிசி களைவது போல் செய்து உலையில் வைக்க சாதம் வந்ததாம். அரண்டு போன அந்த சித்தரும் ரெண்ட் இரும்பு துண்டை எடுத்து தங்கம் ஆக்கித் தந்தாராம். அதையும் நம்ம சிவ் வாக்கியார் தூக்கி கெணத்தில் தூக்கி எறிஞ்சாராம்.. எப்படி கீது??

ஆக இரும்பை தங்கமாக்கும் வித்தை நம்ம சித்தர்களுக்கு தெரிஞ்சிருக்கு என்பது அரசல் புரசலா தெரியுது.. அது உண்மையா?? ஏதாவது ஒரு Resource Person ஐப் பிடித்து கேட்டா என்ன?? எனக்கு ரொம்ப பரிச்சயமான ஒரே ஒரு அளு… அதுவும் கூப்பிடு தொலைவில் இருக்கிறவர் திருவாளர் கம்பர் தான். அவரைக் கேட்டேன்.. அவர் ஒரு பாட்டை refer செய்தார். பாப்பைய்யா ரேஞ்ஜிலெ இல்லாட்டியும் சுமாரா புரிஞ்சதை உங்களுக்கு சொல்றேனே…

மின்னலடிகும் சூப்பர் வெண்மை என்பார்களே..அதுபோல உடலின் நிறம் உடையவர் சீதை. ஏ கிளாஸ் ஜெயிலில் இருப்பதால் நகைகள் அணிய அனுமதி இருக்கிறது (இருக்கும் இடமோ அசோகவனம்). இராமன் மோதிரம் கைக்கு வந்ததுமே சீதையின் உடல் பொன்னிறம் ஆயிடுத்தாம். கம்பருக்கு ஆச்சர்யம் ஒரு வேளை அந்த உடம்மபையும் தங்கமாக்கும் Chemicals ஏதும் செய்து அனுப்பி இருப்பாரோ ராமன்?? ஆச்சரியம் கம்பருக்கு மட்டும் இல்லை. நமக்கும் தான்.

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறமே மெய்யே
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிக்கொல்லோ

தங்கம் இப்பொ விக்கிற வெலையிலெ இப்படி ஏதாவது குறுக்கு வழியில் தங்கம் செய்தால் தான் உண்டு.. என்ன சொல்றீங்க நீங்க??

குன்றும் குமரனும்


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருபான் என்பார்கள். (அது சும்மா ஒரு எதுகை மோனைக்காய் சொல்லியிருக்கலாம்). ஆனால் உண்மை என்ன வென்றால் குன்று குமரன் எல்லாத்தையும் தாண்டி தமிழன் வாழும் பகுதிகள் எல்லாத்திலும் ஏதோ ஒரு பெயரில் குமரன் ஆலயம் கண்டிப்பாக இருக்கும். தமிழனை ஒன்று சேர்த்ததில் இந்த முருகனுக்கு பெரும் பங்கு இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது. தமிழகம் தாண்டி வேறு மாநிலங்களிலும், வேறு நாடுகள்லும் கூட முருகன் ஆட்சி நடப்பதை காணமுடியும்.

அந்தமானிலும் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் முருகன் கோவில்கள் இருக்கின்றன. முதன் முதலாய் எப்படி அந்தமானில் முருகன் கோவில் வந்தது என்ற கேள்வி எழுந்த போது பல சுவையான தகவல்கள் சிக்கின.

கைதிகளுக்காய் குடியேற்றம் செய்யப்பட்ட இடம் தான் இந்த அழகிய அந்தமான். அப்போதைய தலைமைச் செயலகம் இயங்கிய ரோஸ் தீவில் ஆங்கிலேயர்கள் வழிபட தேவாலயம் இருந்தது. அப்போது எழுத்தர் பணியில் இருந்த சில தமிழர்கள் தேவாலத்தில் அருகிலேயே பிள்ளையார் கோவில் ஒன்றையும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது தான் நம்ம ஆளுங்க மனசிலெ பதிந்த சேதியாச்சே.. (சமீப காலமாய் இந்த ரோஸ் தீவு பல படங்களில் டூயட் காட்சிகளுக்கு படமாக்க பயன்பட்டு வருகிறது.

ஜோதிகாவையும் ரோஸ் தீவின் பின்புலத்தில் பாத்திருக்கலாம்)
1926 ம் ஆண்டு பிள்ளையார் கோவில் பக்தி சூழலில் முனியசாமி என்ற தொழிலாளிக்கு மருள் ஏற்பட்டு அங்கே முருகன் கோவில் அமைத்திட தெய்வ கட்டளை பிறந்ததாம்.( விவேக் காமெடியில் வரும், எடத்தை வளைச்சிப் போடு… நடுவாலெ பள்ளிக்கூடம் வந்தா இடிச்சுத் தள்ளு என்பதெய்ல்லாம் சத்தியமா இல்லீங்கொ).

அப்புறம் எப்படியோ மக்கள் ஒண்ணு சேர்ந்து 1933ல் முதல் முருகன் ஆலயத்தினை அந்தமானின் ரோஸ் தீவில் கட்டி முடித்து வழிபட ஆரம்பித்தனர். J W Smith என்ற கிருத்துவ மதத்தவர் அந்த முருகன் கோவில் கட்ட செமெய்யா உதவி செஞ்சாரு என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
1945களுக்குப் பின்னர் தலைமைச் செயலகம், இப்போதைய அந்தமான் தலைநகராம் போர்ட்பிளேயருக்கு மாற்றப்பட்டது. (தலைலைமைச் செயலகம் மாத்துறது எல்லாம் பழைய சங்கதிகள் தான் போலிருக்கு). ஆனால் குமரனின் தலைமைச் செயலகம் மட்டும் ரோஸ் தீவில் தான் 1966 வரை இருந்திருக்கிறது. பின்னர் அவரும் போர்ட்பிளேயருக்கு மாற்றல் செய்யப்பட்டார். சாதாரன மலையாய் இருந்த இடம் இப்போது வெற்றிமலை என்று பெயர் பெற்று அருள் பாலித்து வருகிறது.

அந்தக் காலம் தொடங்கி இன்று வரை பங்குனி உத்திரத் திருவிழா செமெ பாப்புலர் திருவிழா. போர்ட்பிளேயர் மட்டுமின்றி தமிழர் வாழும் அனைத்து தீவுகளில் அந்த விழா கொடியேற்றம், காப்பு கட்டுதல் என்று களைகட்டும். கிளைமாக்ஸ் தினத்தன்று பல்வேறு காவடிகள் (பறவைக் காவடி உட்பட) தொடங்கி தீமிதியில் முடியும். தீமிதியின் போது வேல் வேல் என்று சொல்லியபடி இறங்குவதால் வேல் வேல் ப3டா3தி3ன் (Badadin – திருவிழா) என்று தீவுவாழ் இதர மக்களால் அழைக்கப் படுகிறது.

விழாவின் ஒரு பகுதியாக சாமி நகர் வலம் வரும். தடபுடலா பட்டாசு எல்லாம் வெடித்து நம்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கலக்குவர். (மோர்ப் பந்தல், ஜாதிவாரி மண்டகப்படி .. இதெல்லாம் இல்லாமலா??) மாசு கட்டுப்பாட்டு துறை இந்த முறை பட்டாசு வெடிக்க அனுமதி தர ஏக கெடுபிடு செய்து, கடைசியில் பிறத்தியார்க்கு தொந்திரவு தராமல் வெடிக்க உத்திரவு கெடைச்சதாம். (அது எப்படி அடுத்தவர்க்கு தொந்திரவு தராமல் வெடி வெடிக்க முடியும்?? (அது அந்த முருகனுக்கே வெளிச்சம்). அதுவும் ஒரு திரில் என்று எடுத்துக்க வேண்டியது தான்.

அந்தமான் வாழ் வட இந்தியர்களின் திருமண நிகழ்வு நல்ல காமெடியாய் இருக்கு. (அவங்களுக்கு நாம செய்யற சேட்டை எல்லாம் கூட காமெடிகளாய்த் தானே இருக்கும். அங்கும் மாப்பிள்ளை பொண்ணை அழைத்து வருகிறார்கள் காரில். அனேகமாய் புது ஏசி வைத்த கார். உடன் சின்னஞ் சிறு வாண்டுகள் பட்டாளம் தினிக்கப்பட்டிருகும்.

வைரமுத்துவின் “ஐந்து அங்குல இடைவெளியில் அமிழ்தம் இருந்தும் பட்டினி கிடந்து பழக” எடுக்கும் கடைசி முயற்சி அது. (கொஞ்ச நாள் கொஞ்சிய பிறகு அளவுக்கு அதிகமாகி அமிழ்தம் நஞ்சாவது தனிக்கதை). கல்யாண உற்சவத்திலும் பட்டாசு உண்டு. அணுமதி என்னமோ, அடுத்வர்களுக்கு தொந்திரவு தரப்படாது என்பதாய். ஆனால் நடு ரோட்டிலும், கையில் பத்த வைத்து தூக்கிப் போடும் எல்லாம் நடக்கும்.

ஜோடிகளை வரவேற்க கோவில் முன்பு ஆர்த்தி எடுப்பதை நேரில் பாத்து அரண்டு போய் விட்டேன். மெழுகில் திரி வைத்து அதனை விளக்கு போல் ஏற்றி திருஷ்டி சுற்றுவது போல் சுற்றி தூக்கிப் போடுகிறார்கள். தீயோ, மெழுகோ நிச்சயம் யார் மேலாவது படும். இப்படி 9 முதல் 12 வரை ஏதோ கணக்கில் நடக்கிறது. அதுவும் செமெ திரில்லிங்க் தான். ஏதோ ஒண்ணெ மேலே தூக்கிப் போட்டு அது கீழே விழுவதை ஜாலியா வேடிக்கை பாக்குறதிலெ அப்படி என்ன தான் சந்தோஷமோ??

அட.. தூரத்திலெ நம்ம அனுமன் இதே சேட்டையை செய்யறாரே.. செத்தெ அதெய்யும் பாத்திட்டு வரலாமே.. வாங்க.

யானையோட கண்ணு சின்னது என்பார்கள். ஆனா அதுலெ நெருப்பு பறக்குதாம் (ஆமா.. அது தானே அந்தக் காலத்து பீரங்கி). அதனாலெ யானையோட கண்ணு சிவப்பா இருந்ததாம். (இந்தக் காலத்தில் கண்ணு சிவந்தா “மப்பா?” என்று மட்டும் தான் கேப்பார்கள்). அந்த மாதிரியான யானைகளை அனுமன் தூக்கி எறிஞ்சாராம். அது அப்படியே நேரெ ஆகாயத்துக்கு போய் ஒரு ஹாய் சொல்லிச்சாம். அப்புறம் கீழே கடலில் விழுந்ததாம். பெரிய கொடியோடு சேர்ந்து விழுந்ததாலே நம்ம கம்பர் பார்வைக்கு ஏதோ பாய்மரக் கப்பல் மூழ்கிற மாதிரி தெரிஞ்சதாம்.

தீ உறு பொறியுடைச் செங்கண் வெங்கைமா
மீ உற தடக்கையால் வீரன் வீசுதோறு
ஆய் பெருங் கொடியன கடலில் ஆழ்வன
பாயுடை நெடுங்கலம் படுவ போன்றவே

நீங்க ஏதாவது இப்படி சேட்டை செஞ்சா அதைப் பத்தி சொல்லுங்களேன்.