அஞ்சலிக் கவிதை


boat tragedy

[அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்தான நிகழ்வில் தனது பேத்தியை இழந்து தவிக்கும் மூதாட்டியின் சோகம், கவிதை வடிவில் – இறந்து போன இருபத்தி இரண்டு இதயங்களுக்கு என் அஞ்சலிக் கவிதை – இரங்கல் மடல் இதோ]

மான் ஒத்த விழியாலெ
மான் பாக்கப் போனியே – அந்த
மான் பாக்கப் போனியே
மான் பாத்த கண்ணெ
நான் பாக்க முடியலெயெ
மீன் கொத்திப் பொண்ணே
மீன் கொத்தி வந்தியே..

மீன் பிடிக்கும் கைகாரி
வின்மீனுக்குப் போறதுக்கா
அந்தமான் பாக்கப் போனே
மீனோடு விளையாட நீ
மாண்டுதான் போகணுமா நீ?

காத்துவாங்க மேலே வந்த
மினைப்பாத்து நீயும் தான்
கதைகதையாச் சொன்னியே
மூச்சு விடாமெச் சொன்னியே
மூச்சு விட்டு வந்தியே..

பெட்டி மேலே ஏறி நின்னு
சறுக்கிட்டுத்தான் போனீயே
பெட்டிக்குள்ளெ சவமாத்தான்
பெருத்துத்தான் ஏன் வந்தே?

சவ்டாலாப் பேசிப் பேசி
சப்ஜாடாப் பேசுவியே?
சடலமாய் ஆகி வந்து
சலனமில்லாம கெடக்கிறயெ

செல் செல்லா சுத்துப் பாத்து
செல்ஜெயில் பத்திச் சொன்னியே
செல்போனில் தினம் தினம்.
செல் போன் இப்பொ
செல்லாத பொனாச்சே..

உன் நம்பர் நான் போட்டு
உன்னிடம் நான் பேசினப்பொ
நாசமாப்போன ரோமிங்னு
நாசூக்கா வச்சிட்டியே..
நல்ல நம்பர் பேச பாத்து
அனுப்புவேன்னு பாக்கிறச்செ
நம்பர் போட்டு ஒன் உடம்பை
நம்மகிட்டெ அனுப்பிடுச்சே..
நம்பத்தான் முடியலையே..

செத்த நேரம் தூங்கினாலும்
மொபைல் மேலே படுப்பியே
நூறு நம்பரை போடமட்டும்
சட்டுன்னு தான் மறந்தியே

இருந்து சேத்த காசெல்லாம்
இருப்பு வச்சி இருப்பு வச்சி
இறக்கெயில்லாமெப் பறக்க
இம்புட்டு நாளாத் தவிச்சியே
இருபத்தி ஆறுலெ கண்டம்னு
இருந்த எவனும் சொல்லலையே.
எருமை ஏறி வரும் எமன்
படகுலெ தான் வந்ததெத்தான்
பாவி மக பாக்கலையே
யாரும் தான் பாக்கலையே..

பொத்தி வச்ச எம் பொண்ணு
கொள்ளி வைக்கிறப்பொ வேணுமின்னு
கொள்ளெ ஆசையா இருந்தேனே
கொள்ளைலாபம் பாத்த பாவிமகன்
தொல்லெ குடுத்துப் புடிங்கிட்டான்
கொல்லெயிலெ போற மவன்
கல்லடிதான் படப்போறான் எமன்கிட்டெ.

ஏழுலெ சனின்னு
எல்லாரும் தான் சொல்லுவாக
இருபத்தி ஆறுலெ சனின்னு
இனிமேயா சொல்லுவாக
சுனாமி தின்ன மிச்சகடன்
தீர்த்துவைக்க என் பேத்தியா
உனக்கு கெடெச்சா..
கடன்காரக் கடலே
ஈரமில்லாம் கடலே..

ஆறாப்பு படிக்கும் இவ
மாறாப்பும் போடலையே
கடைவீதி போனாலே
கண்டதெல்லாம் கேப்பியே- கண்ணிலெ
கண்டதெல்லாம் கேப்பியே.
காதோரம் கொஞ்சிட்டுப் போனியே
ஆத்தா ஆத்தானு கதறினதை
காத்து கூட சொல்லலையே

மூலைக்கு மூலை போலீசுண்ணு சொன்னியே
தலைக்கவசம் இல்லாட்டி தகராறு என்றாயே
ஒருகவசம் கெடெச்சிருந்தா உன்சுவாசம் இருந்திருக்கும்
உன் சுவாசம் இல்லாமெ என் சுவாசம் எங்கிருக்கும்?

நல்ல தண்ணி குடிக்கத்தான்
தேடித் தேடிப் போவியே
அக்குவா மெரினில் தான்
ஏறித்தான் போனீயே
அக்குவா கார்டாட்டம்
நல்ல தண்ணி தருமுன்னு
தடுமாறி விழுந்திட்டியோ

காஞ்சீவரம் போனாலெ
காலாட்டி பொழைக்கலாம்னு
காலங்காலமா சொல்லுவாய்ங்க…
சீராட்டி வளத்த மவ
காலாட்டிப் போகையிலெ
கடலையும் தான் பாக்கையிலே
படகோட்டி வந்து தான்
கவுத்திட்ட கதையெத்தான்
கத்தின கதறலும் தான் கேக்கலையே
தேரோட்டிக் கண்ணனும் தான்.

இதயம்னு ஒண்ணிருந்தா
அப்படியே கேட்டுக்கிங்க
நான் பட்ட வேதனை தான்
நாய்பட்ட பாடும் தான்
யாருமே தான் படாதிருக்க
பாடம் தான் நடத்திடுங்க
கோரமாய் படகுக்கொலை
கொஞ்சமும் நடக்காமெ
கெஞ்சிக் கேட்டுக்கிறேன்
கொஞ்சம் கேட்டிடுங்க.