உலகமே கால் பந்தாட்டம் பத்திப் பேசிட்டும், டீவியில் பாத்திட்டும் இருக்கிறச்செ.. நாம மட்டும் சும்மா காலாட்டிட்டுக் கெடந்தா நல்லாவா இருக்கும்? இதை எழுதுவதற்கு முன், மழைக்குக் கூட நான் இந்த ஃபுட்பால் விளையாடும் கிரவுண்டுக்குள் ஒதுங்கியதில்லை என்பதை சொல்லி விட்டே தொடர்கின்றேன்.. (அது சரி… மழை பேஞ்சா கிரவுண்ட்லெ எப்படி ஒதுங்க முடியும்? என்ற உங்க அறிவுபூர்வ கேள்வியை நான் பாராட்டுகிறேன்). அப்பொ எப்படி அதைப்பத்தி எழுத முடியும்னு கேக்கிறீங்களா? காதல் கவிதை எழுதுறவங்க எல்லாம் காதலித்தவர்களா என்ன? (ஆனா…. காதலித்தவர்கள் அனைவரும் கவிதை எழுதியிருப்பார்கள் என்பதை ஓரளவுக்கு நம்பலாம்). அப்பொ நானு…. ஹி..ஹி…
சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்திருந்தனர். வந்தவங்க ஏதாவது வில்லங்கத்தை வீட்டில் கிளப்பி விட்டுச் செல்வது தான், நம்ம ஆட்களோட தேசியக் குணம் ஆச்சே..!! அன்றும் அப்படித்தான் ஆச்சி. சும்மா தேமேன்னு கேம் ஆடிட்டு இருந்த என் பையனெப் புடிச்சி, படிச்சி என்ன ஆகப் போறதா உத்தேசம்? என்று கேட்டனர். மறக்காமல் என்னைப் பாத்து, உங்க நிறைவேறத ஆசை எல்லாம், உங்க பையன் மேல் திணிக்காதீர்கள் என்று அட்வைஸ் வேறு. என்னோட நிறைவேறத ஆசையெல்லாம், வெளியில் சொல்லுகின்ற மாதிரியாவா இருக்கு..? ஐயோ..ஐயோ…
யாரும் (இந்த யாரும் என்பதில் நானும் அடக்கம்) எதிர்பாக்காத மாதிரி பையன், சூப்பரா ஒரு பதில் சொன்னான். ஃபுட்பால் டீமுக்கு மேனேஜராகப் போகனும் என்று. அன்று வரை அவன் ஒரு நாளும் ஃபுட்பால் ஆடியே நான் பார்த்ததில்லை. எனக்கு மட்டும் தான் இப்படி என்றில்லை. சீட்டுக்கட்டை நானும் ஒரு முறை லாவகமாய் கலக்கி, பிரிச்சிப் போடும் போது, என அப்பாவும் இப்படித்தான் திகைத்துப் போனார். சமீபத்தில் அந்தமான் வந்த வழக்கறிஞர் ஜெயராஜனின் குடும்பத்திலும் இப்படித்தான் நிகழ்ந்தது. வீட்டிற்கு வந்த ஆரவக் கோளாறில் ஆங்கிலப் பாடல் ஒன்றை சுதி சுத்தமா பாட (நானும் அன்று தான் அந்த ஆங்கிலப் பாடலை முதன் முதலாய்க் கேட்டேன்) ஆரம்பித்தனர். தன் பிள்ளைகள் இவ்வளவு நன்றாய், அதுவும் ஆங்கிலப் பாடல் பாடுவார்கள் என்பதே அந்த வக்கீலுக்கும் அன்று தான் தெரியும் என்பதே அன்றைய ஹைலைட். [நீதி: உங்கள் பிள்ளைகளின் கூடுதல் திறமை பற்றி தெரிந்து கொள்ள ஆவலா? உடனே அந்தமானுக்கு வரவும். கூடவே எனது வீட்டிற்க்கும் தவறாது ஒரு விசிட் அடிக்கவும்]
மறுபடியும் கால் பந்து பக்கம் கால் வைப்போம். இந்த உலக கால் பந்து போட்டி ஆரம்பிச்சதிலிருந்து நம்ம முக்கால் வாசி தூக்கம் தொலெஞ்சி போச்சி… (வயசான காலத்திலெ கலைஞர் கூட பார்ப்பதாய் தகவல் தெரிய, நம்ம தூக்கத்துக்கும் வந்தது வெட்டு..) நாமளும் யூத்துன்னு சொல்லிக்க என்னென்ன தியாகம்ல்லாம் செய்ய வேண்டியிருக்கு? ஆரம்ப கால மேட்ச்களை பார்க்காமல் விட்டேன். ஆபீசில், தெருவில் அதைப் பற்றியே கேட்டுத் தொலைக்க…(அது ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்டு உயிரெ வாங்குகிறார்கள்?), நான் ஃபுட்பால் பாக்கிறதில்லை என்று உண்மை விளம்பியாய் சொல்லி வைத்தால், ஏதோ வித்தியாசமான ஜந்துவைப் பாக்கிற மாதிரி பாக்க ஆரம்பித்தனர். இதுக்கு பேசாமெ மேட்ச் பாத்தே தொலைக்கலாம் என்று பாக்க ஆரம்பித்துவிட்டேன்.
தலைபோடு தலையினை கோபத்தோடு முட்டி, போட்டி போட்டு ஆடிய சங்கதியினைக் கூட அழகாய் அமுல், தன் விளம்பரத்தில் பயன் படுத்திக் கொண்டிருந்தது பாக்க ரசிக்கும்படியும் இருந்தது. கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலபார் பகுதிகளில் கோலகலத் திருவிழா போல் நடக்குமாம்.. அந்த கால்பந்து மழையின் சாரலால் கொச்சியின் நகரங்களிலும் லேசாய் நனைய முடிந்தது. சின்னஞ்சிறு தீவுகளான இலட்சத்தீவுகளில் கூட ஜெர்மனிக்கும், அர்ஜெண்டைனாவிற்கும், பிரேஜில் அணிகளுக்கும் மிகப் பெரிய அளவிலான ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்து தங்கள் அபிமானத்தைக் காட்டி இருப்பதைப் பார்க்க முடிந்தது. [ஆனா, நம்ம பாலாபிஷேகம் நடத்தும் மதுரெ ஸ்டைல் யாராலும் மிஞ்ச முடியாது தான்].
வழக்கம் போல் ஆஜ்தக் ஹிந்தி சேனலும் தன் கேலியும் கிண்டலும் கலந்த கார்ட்டூன் படத்தை ”ஸோ சாரீரீரீ….” என்று சொல்லி கால் பந்தாட்டத்தையும் அரசியலையும் கலந்து நையாண்டி செய்துள்ளது. பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் ரெண்டு பக்கமாய் உண்டு இல்லை என்று கலாய்க்கிறது அந்தக் கலாட்டா. அதில் ஹைலைட் சமாச்சாரம், திக்விஜய் சிங்கை கோல்கீப்பராய் காட்டி, ஒட்டு மொத்த ஆட்டத்தையும் மோடி ஒருவரே ஆடுவது போலவும் காட்டியது தான். சந்தடி சாக்கில் அத்வானி & மு ம ஜோஷி ஆகியோரை ஓரம் கட்டுவதும் நாசூக்காய் காட்டியது நகைச்சுவையின் உச்சம்.
இந்த மாதிரி உச்சங்களை விட்டுத் தள்ளுங்க. பசங்களை நாம் கேள்வி கேட்டுத் தாளிக்கிறோமா? அதுக்கு பதிலா என்னோட பையனும் ஒரு நாள் அடம் பிடிச்சி என் ஆஃபீஸ் வந்து ஒரு நாள் நோட்டம் விட்டுப் போனான். நாம மட்டும் தான் பாத்ததை எழுதுவோமா என்ன? அவனும் பாத்ததை அப்படியே புட்டுப் புட்டு வைத்தான். [நல்ல வேளை எழுதி மானத்தை வாங்கலை]. இந்தப் பக்கம் டிரேயில் இருக்கும் ஃபைல்களை எடுத்து ஹிந்தியில் கைநாட்டு வைத்து அந்தப் பக்கம் போட்றீங்க.. அப்பப்பொ ஃபோன் கால் அட்டன் செய்றீங்க. மெயில் பாத்து பதில் போட்றீங்க. யாரையாவது கூப்பிட்டு ஏதோ சொல்றீங்க அல்லது கேக்கிறீங்க. ஃபேக்ஸ் வருவதை பாத்து ஏதோ கிறுக்கிறீங்க.. அப்பப்பொ சைட் விசிட்டுன்னு சுத்தக் கிளம்பிற்றீரீங்க. [அப்படிப்பாத்தா…. அடுத்தவன் பார்வையிலெ நாம பாக்கிற வேலை, ஒரு வேளை இவ்வளவு சிம்பிளாவா இருக்கு?]
நான் பதில் சொன்னேன். ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாய் இருப்பது என்பது, கால் பந்தாட்டத்தில் கோல்கீப்பராய் இருப்பது மாதிரி. இரண்டும் ஒரே மாதிரியான பொறுப்புகள் உள்ள பதவி. பத்து பேரின் ஒட்டு மொத்த தாக்குதல் எப்படி கோலியின் மீதே இருக்கோ, அப்படித்தான் மேலதிகாரியின் பணியும். எல்லா பந்தையும் எதிர் கொள்ள வேண்டும். எங்காவது கொஞ்சம் அசந்தால் எதிர் அணிக்கு சாதகமாய் அமைந்து விடும். பல பார்வையாளர்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும். பையன் தொடர்ந்தான். எதுக்கும் எதுக்கும் டாடி கம்பேர் செய்றீங்க? இனி அடுத்து கம்பராமாயணம் தானா? நான் உங்க ஆட்டத்துக்கு வரலை. ஃபுட்பால் ஹைலைட்ஸ் பாக்க கிளம்பிவிட்டான்.
இதே மாதிரி ஒரு சின்ன கம்பேரிஷன் கம்பராமாயணத்திலெ…. இல்லெ.. இல்லெ.. பெரிய புராணத்திலெ வருது. என் எஸ் கிருஷ்ணன் காமெடியில் கலக்கிய கிந்தன் சரித்திரம் பாத்திருப்பீங்க. அதன் ஒரிஜினல் தான் அந்த நந்தனார் கதை. அதில் வரும் ஒரு சின்ன சங்கதி. நந்தன் வசிக்கும் குக்கிராமத்தில் குடிசைகள். குடிசைக்குப் பக்கத்தில் நாய்கள் இல்லாமலா இருக்கும்? ஆனா நாய்கள் இருந்தாலும், சத்தமில்லாமெ இருக்காம். எப்புடி?
சேக்கிழார் பெருமான் சொல்கீறார்… (கீரன் சொன்னதுங்க இது..) அங்கு வாழும் மக்கள் கையில் இரும்புக் காப்பு அணிந்து இருந்தனராம். அந்தக் காப்பு நாயின் கழுத்தை அழுத்தும் போது கூட சத்தமே இல்லையாம். ஏனென்றால், அங்கு தெருவில் விளையாடும் (அந்தக் காலங்க… அது) குழந்தைகள் அரைஞானில் கட்டியுள்ள மணிகள் ஓசை எழுப்ப, அந்த நாய் கத்தல் கேக்காமெப் போச்சாம். எப்புடி????? பெரிய்ய புராணத்திலெ இப்புடி. பெரிய்ய காப்பியமான நம்ம கம்பராமாயணத்திலெ கம்பர் எப்படி கம்பேர் செஞ்சிருக்கார்ன்னு பாக்கலாமா?
அநுமன் இலங்கை கோட்டை வாயிலைப் பார்க்கிறான். அதன் ஒளியையும் பார்க்கிறான் அப்படியே ஆகாயத்தில் ”நின்னு” ஒளிவிடும் சூரியனையும் பார்க்கிறான். ஞாபகம் வருது கம்பனுக்கும் (அநுமனுக்கும்), மின்மினிப்பூச்சியின் வெளிச்சம். பகல்லெ தான் காணாமெப் போயிடுமே, அந்த மாதிரி காணாமப் போயிட்டியே என்று சூரிய்னைப் பாத்து நெனெச்சாகலாம் கம்பரும் அநுமனும். இது எப்படி இருக்கு? சூரியன் உதித்து மறையும் என்று நம்பிய காலத்தில் “ஒரே இடத்தில் நிற்பதாய்” கம்பர் கூறுவதை உற்று நோக்கிக் கவனிக்க அந்தப் பாட்டையும் பாருங்க…
அண்ட முற்றவும் வீங்கிரு கைற்றுநின் றலரி
கண்ட வாற்றினிக் கடிநகர் நெடுமனைக் கதிர்கள்
உண்ட வாற்ரினொன் றிரைப்பரி தொப்பிடிற் றன்முன்
விண்ட வாய்ச்சிறு மின்மினி யென்னவும் விளங்கா
உலகமே உலகக் கால்பந்தை நினைக்கையில், கம்பன் காட்டிய உலக முழுப்பந்தான சூரியனை, அதுவும் நின்று ஒளி தரும் எனச் சொன்ன அறிவியல் அறிஞர் கம்பனையும் சற்றே நினைவு கூர்வோம்.