நெஞ்சைக் கிழிக்கும் சோக கீதங்களில் இந்த “நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்துவிடும்” பாடலும் ஒன்று. ’நிலையற்ற தன்மைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லும் பாடல் அது. ’நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒத்திப் போடும் ஒவ்வொரு நேரமும், நாம் கவனமாக அந்த நிச்சயமற்ற தன்மையினை மறக்கிறோம், என்பது மட்டும் சர்வ நிச்சயம். ’இன்னெக்கி செத்தா நாளைக்குப் பால்’ என்று சொல்லும் போதும் கூட அந்த “நாளை” இருப்போம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகின்றது.
பரமக்குடியின் மயாணத்தில் ஒரு அருமையான போர்ட் வைத்திருக்கிறார்கள். ”இன்று நான்; நாளை நீ” என்று. ’வாழ்க்கை இவ்வளவு தான்’ என்பதை சட்டுன்னு புரியும்படி எழுதி வைத்திருக்கும் ’வைரம் வத்தல் வடாம் கடை’க்கு நன்றி சொல்ல வேண்டும். (இதிலும் கூட விளம்பரமா? என்ற சந்தேகம் வேண்டாம். நமக்கு சரக்கு தான் முக்கியம்)
சமீபத்தில் ஒரு பள்ளியில் நடக்கும் பரீட்சைக்கு அதிரடி அதிகாரியாய் போய் நின்றேன். அவ்வப்போது சந்தடிசாக்கில் அங்கு வகுப்பில் நடப்பவைகளையும் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தேன். (அங்கு இருப்பவர்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுபவன் என்பது தெரியாது). ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவனை, ஆசிரியர் செமெயாக அடிக்கிறார். அவனது கையில்,அவரது கையால் ஒரு அந்நியனான என் எதிரில். என்ன பாவம் செய்தான் அந்தப் பையன்? லேசாக விசாரித்தேன். ஐ லவ் யூ என்று ஒரு பெண்ணின் பெயரை கையில் எழுதி இருப்பதாய் தகவல் வந்தது. அதுவும் பாடம் நடக்கும் வகுப்பில் நடந்ததாம்.
அடிப்பது என்பது என் மனதிற்கு ஒவ்வாத செயல். அடித்து என்ன சாதிக்க நினைக்கிறார் அந்த ஆசிரியர்? கேட்டேன். “அவனுக்கு அவமானம் வர வேண்டும். அதன் மூலம் திருந்த வேண்டும்” பதில் வந்த்து. நல்ல நோக்கம் தான். ஆனால் என்ன நடக்கிறது? அந்த மாணவன் அதே ஆசிரியரை எதிரியாய் பார்க்கிறான். பழிதீர்க்க நினைக்கிறான். ஆசிரியரின் கார் கண்ணாடி அடிக்கடி உடைகிறது. இருசக்கர வாகனத்தின் சீட் கவர்கள் அடிக்கடி கிழிகின்றன. ஆசிரியர் முழிக்கிறார். மாணவன் மனதிற்குள் சிரித்து மகிழ்கிறான். ஆசிரியர் எது நடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அதுவா நடக்கிறது?
”தகவல் பெறும் உரிமை (ஆர் டி ஐ) சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வருவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” இது தான் சமீப காலமாய் அதிகமாய் என்னிடம் கேட்கப்படும் கேள்வி. அந்தமானில் இச்சட்டம் பற்றிய பயிலரங்கங்கள் பல தீவுகளில் நடத்திய காரணத்தால் இந்த கேள்வி தவிர்க்க இயலாது போகின்றது. அரசு ஊழியரின் கருத்தாக இல்லாமல், எனது மனதிற்குப் படும் சொந்தக் கருத்தினை உங்களுக்கும் சொல்கிறேன்.
அதற்குமுன் சின்ன குட்டிக் கதை.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் குழந்தையினை அழைத்து வந்தார். “சுவாமிஜீ.. இந்தக் குழந்தை அடிக்கடி வெல்லம் சாப்பிடுகிறாள். அதை நிறுத்த நீங்கதான், ஏதாவது வழி சொல்ல வேண்டும்”. சுவாமிஜீ சிரித்தபடி, ஒரு பத்துநாள் கழித்து வரும்படி கூறினார். தாயாரும் ஏதோ தாயத்து மாதிரி கிடைக்கவிருக்கும் சந்தோஷத்தில் நகர்ந்தார். பத்து நாள் பறந்தோடியது. மறுபடியும் தாயும் மகளும் ஆஜர். சுவாமிஜீ குழந்தையை அன்போடு அழைத்து, “இனி மேல் அடிக்கடி வெல்லம் சாப்பிடாதே” என்று கூறினார். அவ்வளவு தான். தாயார் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பதோ வேறு. “என்ன சாமி… தாயத்து கீயத்து அல்லது மந்திரம் ஏதும் இல்லையா?”, ஆதங்கத்துடன் அந்தத் தாய். சுவாமிஜீ, ”இல்லை” என்று தலையசைக்க, அப்பொ இதெச் சொல்லவா பத்து நாளு என்று அந்த அம்மணி நினைப்பதை சுவாமிஜீ உணர்ந்தார். “தாயே…எனக்கும் அடிக்கடி வெல்லம் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த பத்து நாளில் நான் அதனை மாற்றிக் கொண்டு, குழந்தைக்கு அறிவுரை சொன்னேன். அவ்வளவு தான்” பெரியவரின் அருள் வாக்கு இது. எவ்வளவு உயரத்தில் இருக்கும் மகான்கள் அவர்கள்!!
கதையினை விட்டு இப்பொ நடக்கும் சூழலுக்கு வருவோம்.
வெளிப்படையான நிர்வாகம் அமைந்திட நினைத்து தான் இந்த ஆர்டிஐ சட்டம் 2005 ல் கொண்டு வந்தனர். அரசு எந்த அளவிற்கு வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அதே அளவு அரசினையே அமைக்கும் அரசியல் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறு இருப்பதாய் தெரியவில்லை. (அரசியல் கட்சிகள், கதையில் வந்த சுவாமிஜீ போல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ரொம்பத்தான் ஓவரோ). இன்னொரு பக்கமாயும் யோசிக்கலாம். அரசியல் கட்சிகளை இதில் இழுக்கும் தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் 50 க்கும் மேலான பக்கங்களைப் புரட்டினால் அதில் முக்கியமாய், ’கனிசமான அரசின் உதவி பெறும்’ காரணம் தான் தெரிகிறது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ’தங்களுக்கு அரசின் உதவி தேவையில்லை’ என்று தாராளமனதோடு விட்டுக் கொடுத்தால், தானாகவே ஆர்டிஐ பிடியிலிருந்து விலகிவிடலாம். இது இந்தப் பாமரனின் சொந்தக் கருத்து தான். எது நடக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அது சரி… நடக்கும் என்பார் நடக்காது என்பது நிலையாமை பற்றியது. அது என்ன நடக்காதென்றால் நடக்காது. இது அவரவர்களின் மனதின் உண்மை நிலை. அப்படியே லேசா பர்வால் இராமாயணம் பக்கம் போகலாம். (அதென்னெ புது பர்வால் இராமாயணம் என்று கேட்கிறீர்களா? ’கம்பர்’ சொல்லின் கடைசி இரண்டு எழுத்தும், வால்மீகியின் முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தது தான் பர்வால் என்கிறேன் நான்). ஆதி ராமாயணமான வால்மீகி ராமகாதையினை விட கம்பர் சிறப்பாய் சொல்லி இருப்பதாய் பலர் எழுதி உள்ளனர். சொல்வேந்தர் சுகிசிவம்தான், அதன் காரணத்தைச் சொல்கிறார். கம்பர் ராமகாதையினை கையில் எடுத்த்து வால்மீகியின் பல ஆண்டுகளுக்குப் பிறகு. காலம் காலமாய் விமர்சனம் செய்யும் இடங்களை மாற்றும் வாய்ப்பு கம்பருக்கு வாய்த்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்கிறார். கம்பரின் ஏடு என் கையில் வரவே எத்தனை நூற்றாண்டு தேவைப்படுது? ஒரே பிரச்சினையை கம்பரும் வாலிமீகியும் எவ்வாறு அலசினர் என்பதை நாமும் கொஞ்சம் அலசுவோம்.
கோபக்காரமுனி விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார். வால்மீகி பார்வையில் முனியை, தசரதர் சகட்டுமேனிக்கு புகழ்கிறார். முனியை சந்தோஷப்படுத்தினார் வார்த்தையில். (ஒரு வேளை எழுதியதே ஒரு முனி என்ற காரணமாய் இருக்குமோ?). கம்பரில் அது அப்படியே உல்டா. முனி தசரதரை ஐஸ் வைக்கிறார். அரசனிடமே சரணடைந்ததாய் சொல்கிறார்.
இராமனை தன் யாகம் காக்கக் கேட்கிறார் விமு முனி. பாலகனை அனுப்புவதற்குப் பதிலாக, தானே வருவதாய் தசரதன் சொல்கிறார். இதிலும் வால்மீகி, கம்பரின் அப்ரோச் வித்தியாசமாய் தெரிகிறது. இதைக் கேட்டதும் தசரதன் துடித்த துடிப்பை கம்பர் சொல்கிறார்… பிறவிக் குருடன் ஒருவன் விழியில் ஒளி பெற்று மீண்டும் இழந்தவன் போல் துடித்தானாம். [கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்] ராமனுக்குப் பதிலா நானே வருகிறேன். வாங்க கிளம்பலாம் என்கிறார் அந்த அதிரடி அப்பா.
வால்மீகி காதையில் தசரதன் சொல்வதே வேறு… நீங்க சொல்லும் அரக்கர்களிடம் சண்டை போட்டு என்னாலேயே ஜெயிக்க முடியாது. மாரீசன் மாதிரி ஆட்களை யாராலும் ஜெயிக்க முடியாது…. என் மகனால் என்ன செய்ய முடியும்?… எமனை வேண்டுமென்றாலும் வெல்ல முடியும். அந்த அரக்கர்களை வெல்ல முடியாது… இப்படி நடக்காதென்று செல்லிக்கொண்டே இருந்தால், ஏதாவது நடக்குமா? அப்பொ… கடுப்பாக மாட்டாரா விசுவமித்திரர்? போங்கப்பா நீங்களும் உங்க பேச்சும் என்று வெளிநடப்பு செய்ய எத்தனிக்க… அப்புறம் தான் இராமலட்சுமணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
கம்பன் கதைப்படி இராமன், பெருமாளின் அவதாரம் என்பது தசரதனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் ‘இலக்குமியின் கணவனான இராமனை இங்கு அழைத்து வாருங்கள்’ என்று தசரதன் ஆணையிடுகிறார். இராமனை மட்டும் அழைக்க, உடன்பிறப்பு சேர்ந்தே வருவது இக்காலத்திய இலவச இணைப்பு மாதிரிதான்.
பர்வால் பார்வைகள் தொடரும்.