சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

மைனஸ் X ப்ளஸ் = ப்ளஸ்


மணியடிச்சாச் சோறு அது மாமனாரு வீடு என்பார்கள். அப்படீன்னா.. அந்தக் காலத்து கடிகாரங்களில் அரை மணிக்கு ஒரு தரம் மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும். அப்போ மாமனார் வீட்டுக்குப் போன மாப்பிள்ளைக்கு, அரை மணிக்கு ஒரு தரம் ஏதாவது திங்கத் தீனி வரும் என்று அர்த்தமா? ஒரு வேளை மணியடிச்சாச் சோறு அது மாமியாரு வீடா இருக்குமோ!! அங்கே வேணும்னா மணி அடிச்சா சோறு தருகிறார்களோ என்னவோ. அந்தமானில் கைதிகளை ஏற்றி வந்த கப்பலில் இதே வழக்கம் இருந்திருக்குமோ.? இன்றும் கூட பயணிகள் கப்பலில் மணி அடித்துச் சோறு போடும் வழக்கம் மாறாது இருக்கிறது. மற்ற பயணிகள் கப்பலில் எப்படி என்பதை வேறு யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாய் இருக்கும்.

என்னோட மாமனார் வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் சொல்றேனே.. அந்தமானை இன்னும் பலர் வெளிநாடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். (ஒரு வேளை எனக்கும் இதே தப்பான அபிப்பிராயத்தில் தான் பொண்ணு குடுத்திருப்பாரோ?). அந்தமானை பல நேரங்களில் இந்திய வரைபடத்தில் காட்டாதது ஒரு காரணமாய் இருக்கலாம். (ஆமா டீவி அளவுக்கு இந்தியா மேப்பைச் சுறுக்கினாலே, அதில் அந்தமான் மங்கலாத் தெரியும். அதில் டீவி விளம்பரத்துக்கு இடம் விட்டு காட்டும், இந்தியா மேப்பில் அந்தமான் கானாமலே போயிடும்). பாஸ்போர்ட் வாங்கிட்டுதான் அந்தமான் வரணுமா? ரூபா அங்கே செல்லுபடியாகுமா? அங்கும் இங்கும் எவ்வளவு டயம் வித்தியாசம்? என்று பாமரத்தனமாய் கேள்விகள் கேட்கும் எத்தனையோ விவரமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேவா இருக்க முடியும்? அவனவன் எடுக்கிற முடிவு, நமக்கு சாதகமா இருக்கு என்று விட வேண்டியது தான்.

அந்தமானில் அதிகாலை காலை 4.30 க்கே நல்லா விடிய ஆரம்பித்து விடும். அதே மாதிரி மாலை 4.35 வாக்கில் இருட்டத் தொடங்கிவிடும். இங்கே தொழிலளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வருவர். (டியூசன் கலாச்சாரம் 4.30க்கே ஆரம்பித்து விட்டது) இந்த மாதிரியான நேரங்களில் சாப்பிட்டு தூங்கிப் பழகிய (25 வருடங்களுக்கும் மேலாய்) எனக்கு மாமனார் வீட்டுக்கு போனால் சிரமம் தான். காலை 5 மணிக்கே நான் மட்டும் முழித்து.. திரு திரு முழித்துக் கொண்டு கிடப்பேன். இரவு 10.30 க்கு படுக்க தலையணை தேடுவேன். எல்லா சீரியலும் முடிந்தால் தான் சமயல் அது தமிழக கலாச்சாரம். பத்தாக் குறைக்கு, மதுரையில் தண்ணீ வருவது நள்ளிரவு 12 மணிக்கு. மணியடிச்சா சோறு எனக்கு சரிப்படலை.

வடிவேல் ஒரு படத்தில் மணியடிப்பவராக வருவார். இந்திக் காரர்களிடம் ஏதோ எக்கு தப்பாகச் சொல்ல அந்த ”பெல்பாய்”, என இருந்தவர் உடனே “Bad Boy” ஆக பெயர் பெறுவார். அந்த மாதிரி Bell Boy பற்றிய ஒரு கதை அனேகமா எல்லாரும் கேட்டிருப்பீங்க. அதாங்க், படிக்கலைன்னு அவரை சர்ச் விட்டு விரட்டப் போக, அவர் சூப்பரா, சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சி கோடீஸ்வரன் ஆயிட்டார். படிக்காமெயே இப்பிடி ஆயிட்டீகளே, நீங்க மட்டும் படிச்சிருந்தா?…. அவர் சொன்ன பதில் “நான் பெல்பாயா இருந்திருப்பேன்.

அந்த பெல்பாய் வேலையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது ஒரு மைனஸ். வியாபாரத்தில் ஈடுபடுதல் ஒரு ப்ளஸ். இப்போது பழைய நிலமையை விட முன்னேறி இருப்பது ப்ளஸ். [ஆகக்கூடி, மைனஸ் ப்ளஸ் ப்ளஸ் = ப்ளஸ் என்று தானே ஆகிறது என்று கணக்குப் புலிகள் சண்டைக்கு வர வேண்டாம்.]

இந்த டிசம்பர் வந்து விட்டாலே அந்த சுனாமி வந்து சென்ற அந்தக் கருப்பு ஞாயிறு ஞாபகம் வந்து விடும். 2004 டிசம்பரில் வானம் பார்த்து நடுத்தெருவில் படுத்தது இன்னும் நினைவில் இருக்கு. உயிர் பொருள் இழப்புகள் அத்தனையும் அந்தச் சுனாமி தந்து விட்டுச் சென்றது. இப்போது அனைவருக்கும் வீடு என்ற அளவில் அரசின் சலுகையினை அந்தத் துயரில் கலக்கம் அடைந்தோர்க்கு கிடைத்துள்ளது. இருக்க இடமின்றி இருந்த, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இப்போது வீடு சொந்தமாய் விட்டது. இங்கும் அதே கணக்குப் பார்முலா தான். [ Minus X Plus = Plus].

ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வீழ்வது தவறே இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. அந்த துயரிலிருது வெளியே வர நாம் எடுக்கும் முயற்ச்சிகள் .. அதுவும் பாசிட்டிவான முயற்சிகள், நம்மை நிச்சயம் மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் என்பது தான் இங்கே சொல்ல வரும் சேதி. தவறி விழுந்து நடை பயிலாத குழந்தை உண்டா என்ன? ஆனால் நம்மில் பலர் ஏதாவது சோதனை வந்தால் உயிரே போன மாதிரி ஆகின்றனரே! சமீபத்தில் காதல் தோல்வியில் இருவரும் தற்கொலச் செய்தி வந்தது. இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமே அந்த காதல் கத்தரிக்காய் திருமணம் தானா?? (நான் காதலுக்கு எதிரி இல்லை. காதல் தற்கொலையால், காதலை கொலை செய்பவர்களுக்கு எதிரி).

இந்த மேட்டரை இந்த வெத்து வேட்டே இப்படி நீட்டி முழக்கி எழுதினா, கம்பர் அதனை கம்பராமாயணத்தில் டச் செஞ்சிருக்க மாட்டாரா என்ன?? இருக்கே… அனுமன் இலங்கையில் முதல் சுற்றில் துவம்சம் செய்து திரும்பிய நேரம். பார்க்கிறார் இராவணன். (நம்ம சுனாமி துவம்சம் செய்ததை சரி செய்ய TRP – Tsunami Rehabilitation Programe ஆரம்பித்த மாதிரி இராவணன் ARP – Anuman Rehabilitation Programe ஆரம்பித்திருப்பாரோ). தெய்வத் தச்சன் மயனோட மேற்பார்வையில், பிரம்மனே களத்தில் இறங்கி, இராவணன் சொன்ன படி, சொன்ன Target Date ல் செய்து முடித்தாராம். எல்லா வேலையும் முடிச்சிட்டு, இலங்கேஸ்வரன் அப்படியே அன்னாந்து பாத்தார். அந்த வானலோகத்தில் இருக்கும் அமராவதியை விட இலங்காபுரி சூப்பரா இருக்காம். கடைசியா ஒரு பன்ச் டயலாக் வேற… அட.. ஏற்கனவே இருந்த இலங்கையை விடவும் நல்லா இருக்கே!!!!. இப்பொ நீங்களே சொல்லுங்க… Minus X Plus =????

பொன்னினும் மணியுனும் அமைந்த பொற்புடைநன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்முன்னையின் அழகு உடைத்து என்று மெய் கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.

மிஸ்டர் கம்பர் அவர்களே, அந்த மயன் அவர்களோட மெயில் ஐடி எப்படியாவது வாங்கிக் கொடுங்க.. இன்னும் சில TRP வேலைகள் அந்தமானில் முடிக்கனும்.

கூட்டத்தோடு கோயிந்தா..


இந்த நாடு உருப்படவே படாது. ஒருத்தனும் யோக்கியன் கிடையாது… நாடு எங்கே போகுதுன்னே தெரியலை. ஏன் இவங்க இப்படி இருக்காங்களோ?? இப்படி புலம்பும் பலரை பல இடங்களில், பல நேரங்களில் பாத்திருப்பீங்க. ஆனா அப்படி புலம்புபவர்கள் ஆக்கபூர்வமா ஏதாவது செஞ்சிருக்காங்களா?? இது மட்டும் பதில் தெரியாத கேள்வி.

அப்படி கூட்டத்தில் கூப்பாடு போடுபவர்களை ஏதாவது கருத்து சொல்லும் கூட்டங்களுக்கு அழைத்தால் வரமாட்டார்கள். நமக்கேன் ஊர் பொல்லாப்பு என்று சொல்லி விலகிவிடுவர். ஆனா சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்வது மட்டும் தமது பிறப்புரிமை என்று முழங்கிடுவர்.

சிலர் எந்த கூட்டத்திற்கு வந்தாலும் கேள்வி மழை கேட்டு துளைத்து விடுவார்கள். அவர்களை Mobile Question Paper என்று சூப்பரா பேர் குடுக்கலாம். கேள்வி தான் பிரதானம். என்ன பதில் வருது என்பதைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலையே கிடையாது. அவங்களுக்கு வேண்டியதெல்லாம், நாலு பேரு, அடெ.. எந்த சப்ஜெக்ட்லெயும் கேள்வி கேக்கிறாரே என்று சொல்லிடனும். எல்லா பக்கமும் மூளையை வளர்த்துள்ளார் என்று காது குளிர கேட்டால் தான் அங்கே தூக்கமே வரும்.

நான் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில், இந்த மதிரி ஆட்களை மறக்காமல் கண்டிப்பாய் அழைத்து விடுவேன். கேள்வி கேக்காட்டியும் கூட, கூட டீ பிரேக்கிலாவது அந்த ஸ்பீக்கரை ஒரு பிடி பிடித்து விடுவர். நாம வேறு ஏதாவது போன் பேச கலண்டுக்கலாம்.

சாய்ந்தால் சாய்ற பக்கம் சாயும் செம்மெறி ஆட்டுக் கூட்டம் என்பார்கள் நம் மக்கள் கூட்டத்தை சில மக்கள். நான் தனியாக இல்லை. பாதுகாப்பாய் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வது நிறைவான ஒரு சந்தோஷம். லாபமோ நஷ்டமோ, நமக்கு தனியா வராது. பத்து பேத்துக்கு பொதுவா எதுவோ, அது தான் நமக்கு என்பது ஒரு நிம்மதியான வாழ்க்கை.

தேசீயத் தலைவர்களை நம்ம ஊர் ஜாதி சங்கங்கள் Daily Sheet காலண்டரில் போடுவது என்பது தொல்காப்பியர் சொல்ல மறந்த தமிழ் இலக்கண விதி. சன் டீவியின் இந்த நாள் இனிய நாளிலும் சுகிசிவம் ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார் இதை.

மொபைல் போன் பிரபலமாகாத நாள் ஒன்றினல், சென்னையில் ஒரு STD booth ல் போன் செய்ய நுழைந்த போது அப்படிப்பட்ட ஒரு தலைவரின் போட்டோ போட்ட அந்த காலண்டரை பாத்தேன். நான் கேட்டேன், அப்பொ நாங்க வீட்டிலெ இந்த தலைவர் போட்டோவை மாட்ட முடியாத படி செஞ்சிட்டீங்களே என்றேன். அவரிடம் பதில் ஏதும் இல்லை. இவர்கள் அந்த தலைவர்களுக்கு மரியாதை தரலாம். ஒட்டு மொத்த தமிழக மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அந்த சாதிக்கு மட்டும் என்று வைப்பது நல்லதாப் படலை.

இப்போது அதையே சுகிசிவம் சொன்னதும் மனசுக்கு நிம்மதியாச்சி.. அட இப்படித்தான் பலரும் நினைக்கிறாய்ங்க. அல்லது அப்படி நினைக்கும் கூட்டத்தில் நானும் இருக்கேன் என்பதில் எனக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு தான்.

ஒரு வேலைக்கான Recruitment Process நடந்து கொண்டிருந்தது. ஒருவர் வந்தார். தன் மகனோட அப்ளிகேஷன் என்ன ஆச்சி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தெரிந்தது அவர் முகத்தில். கணிணியை தட்டி கேட்டதில் ஒரு சான்றிதழ் தராததால் நிராகரிக்கப்பட்டதாய் சொல்லியது. சோகமாய் மாறியது அவரின் முகம். அடுத்து உடனே வந்த கேள்வி,… “இப்படி எத்தை பேர் Reject ஆயிருக்காங்க?”. மீண்டும் கணிணி இதற்கும் பதில் சொல்லியது 1832 பேர்களை என்று. ஓஹோ… கிட்டத்தட்ட ரெண்டாயிரத்திலெ ஒண்ணுதானே.. பரவாயில்லை.. சோகத்தின் முகம் இப்பொ நிம்மதியாய்ப் போனது.

சமீபத்தில் ஒரு SMS வந்தது. அமெரிக்காவில் கரண்ட் போனால் உடனே Call Center க்கு போன் செய்வார்களாம். ஜப்பானில், ஃபியூஸ் போயிருக்கா? என்று பாப்பாங்களாம். இந்தியாவில் மட்டும் பக்கத்து வீட்டிலெயும் கரண்ட் போயிடுச்சா? என்று பாப்பாங்களாம். இது எப்படி இருக்கு? எப்படியும் கூட்டத்தோட கோவிந்தா போடும் முயற்சி தானே??

ஆனா அந்தமானில் மட்டும் கரெண்ட் கட் ஆனால், ஓடிப்போய் அன்றைய நியூஸ் பேப்பரைத்தான் தேடுவோம். ஏன்னா.. எங்கே, எப்போ கரண்ட் இருக்காது என்ற நிலவரம் பேப்பரில் போட்டிருப்பாங்க… நல்ல விஷயம் தானே.. மொபைல் சார்ஜ் செய்யும் வேலை, வாஷிங்க் மிஷின் வேலை எல்லாம் நேரத்தோட பிளான் செய்துக்கலாம்லெ…

ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்பொ சில வீடுகளில் அக்கா அண்ணன் தம்பி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. முன்பெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால் தாத்தா பாட்டி என்றெல்லாம் அறிமுகம் செய்தது போய், இப்பொ வீட்டிற்கு வந்தவரிடம் புதுசா வாங்க்கின மொபைல் ஃபோன் தான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

நிகோபார் தீவுகளில் இதுவரை கூட்டுக் குடும்பமாய் இருந்து வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு சொத்துக்களுக்கும் காம்பவுன்ட் சுவர்கள் எல்லாமும் கூட இல்லாமல் தான் இருந்தனர். படித்து நாகரீகம் ஆனவர்கள் எல்லாம் இப்போது அவரவர் வீடுகளில் காம்பவுண்ட் சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்.. என்னத்தெச் சொல்ல??

கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள், பெரும்பாலும் பின்பற்றி நடப்பவர்கள். சாதாரணமா சிகரெட் குடிக்கும் ஆட்கள். அதையே தூக்கிப் போட்டு ஸ்டைலா புடிச்சா என் வழி தனி வழி என்று தலைமைக்கே போயிடலாம். அதாவது எதிர் நீச்சல் போடுபவர்களிடம் தான் தலைமைக் குணம் இருக்கும். Leadership Quality என்று அதைத்தான் சொல்கிறோம்.

சுனாமியால் அந்தமான் பாதிப்பு அடைந்த பின்னரும், நான் இங்கே இருப்பதை பாத்து, ஏன் ஏதாவது வேலை மாத்திகிட்டு பரமக்குடி பக்கம் வரலாமில்லெ?என்று கேட்டார்கள். நானும் யோசித்தேன். ஏன் எனக்கு அந்த ரோசனை வரலை? சுனாமி பாதிப்பு எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஏன்னா?? அது எனக்கு மட்டுமா வந்தது? தீவை உலுக்கிய பூகம்பம் வந்த போது, வீடுகளுக்கு போகப் பயந்து ஒட்டு மொத்தமா எல்லாருமே ரோட்டில் தான் படுத்தோம். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் விபத்து தனி நபர்களை பாதிக்கும். ஊரையே கலக்கும் பேரிடர் ஒன்னும் செய்யாது என்பது அப்போது லேசா தெரிந்தது. ஆனா இந்த பேரிடர் மேலாண்மை (Disaster Management) மேட்டர் நம்ம கண்ணுக்கு இப்பத்தான் தெரிஞ்ச்சாலும் கம்பருக்கு இதைப் பத்தி முன்பே ஐடியா இருந்திருக்கு. என்ன… சாட்சி வேணுமா?? வாங்க மீண்டும் இலங்கை பக்கம் போலாம்.

சம்புமாலி என்ற தளபதி இறந்த சேதியை இராவணனுக்கு சொல்லணும். கம்பர் சொல்லும் விதத்தில் தான் அந்த பேரிடர் மேலாண்மை தெரியும். அந்த சேதி சொல்ல தேவர்கள் தான் முதலில் ஓடி வந்தார்கள். (பால்கனியில் இருந்து படம் பாத்த VIP க்கள் அவர்கள் தானே??).
ஓடி வந்தவர்கள் சொல்ல முடியாமல் (மனதிற்குள் சிரித்தாலும்) மன்னருக்குப் பயந்து விக்கி விக்கி அழுதமாதிரி ஆக்ட் கொடுத்தாகளாம். ராஜாவுக்கு இது தெரியாதா என்ன!! சிரிச்சிட்டே என்ன சேதி என்றாராம்.

ஒரு கொரங்கு செஞ்ச சேட்டையில் சண்டைக்குப் போன நம்மாளுங்க கூட்டத்தொடு கோயிந்தாயிட்டாய்ங்க… அதுலெ நம்ம சம்புமாலியும் ஒருத்தர். எப்படி சேதி சொல்லும் ரகசியம்??

புக்கார் அமரர் பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பார் ஆற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான்ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார்.

அது சரி.. நீங்க எப்படி தனி ரகமா?? அல்லது அங்கேயும் கூட்டத்தோடு கோயிந்தாவா??
நீங்களும் தனியா என்னோட ப்ளாக் படிக்கிறதா நெனைச்சிராதீங்க… 2550க்கு மேல் பார்வையாளர்களில் நீங்களும் ஒருவர்.

எங்கேயும் எப்போதும் – பாக்யராஜ் ஸ்டைல்


அந்தாக்ஷ்ரி விளையாடுவோமா? என்றால் கும்பலாய் கூடும் இடங்களில் அந்த இடமே களை கட்டும். அந்தமான்  மாதிரி பல மொழிகள் பேசும் ஆட்கள் இருக்கும் இடங்களில் எல்லா மொழிப் பாடல்களும் பாடலாம்..அதிலும் kaa Gha எல்லாவற்றிற்கும் க வில் ஆரம்பிக்கும் தமிழ் பாடல் பாட சிறப்பு அனுமதி கிடைக்கும்.

இது அந்தாதி என்பதின் நாகரீக வடிவம் தான். அபிராமி அந்தாதி கேள்விப் பட்டிருப்பீர்களே… பாட்டு முடியும் வார்த்தையில் அடுத்த பாடல் ஆரம்பிக்க வேண்டும். அது தான் நியதி.

சினிமா பாட்டில் அந்தாதி இருக்கா?? ஏன் இல்லை… மூன்று முடிச்சு படத்தில் ஆடி வெள்ளி தேடி உன்னை என்ற பாட்டு அந்த அந்தாதி வகை தான். இப்பொ இன்னொரு தடவை உற்றுக் கேளுங்கள் அதன் சுவை இன்னும் கூடும். பிரபலமான பாடல்களின் வரிகளை படங்களுக்கு பெயராக வைப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்.

லெட்சுமிக் கல்யாணம் படத்தில் செம ஹிட்டான பாட்டு, ராமன் எத்தனை ராமனடி… ராமன் எத்தனை ராமனடி படம் வந்தது. அதில் அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு…ஹிட்டாச்சி. அதே பெயரில் படமும் வந்தது. அதில் தேன் சிந்துதே வானம் பாட்டு இன்றும் உருக்கும்.. அதே பெயரில் படம் வந்தது… உன்னிடம் மயங்குகிறேன் என்று ஒரு பாட்டு.. அந்தப் பெயரில் படம் கண்டிப்பா வந்திருக்கலாம்…

ஆனா சுடச் சுட அப்பொவே ஹிட் பாட்டை வச்சி தான் புது படம் வரும். எப்பொவொ வந்த எங்கேயும் எப்போது சங்கீதம் சந்தோஷம் பாட்டை வச்சி இப்பொ ஒரு படம் வந்திருக்கே..அது கொஞ்சம் யோசிக்க வைக்குது.

பரமக்குடி வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து Facebook ல் ஒரு குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். (கமல்ஹாசனையும் சேருங்கப்பா அந்த குருப்பில்).. தீபவளிக்கு எந்தெந்த தியேட்டரில் என்னென்ன படம் (வாழ்க்கைக்கு தேவையான ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி…!!!) என்ற என் கேள்விக்கு ரவி தியேட்டரில் எங்கேயும் எப்போதும் ரிலீஸ் என்ற பதில் வந்தது.

ஓர்  ஊர் பெரிய்ய ஊரா சின்ன ஊரா என்ற சர்ச்சை காலேஜ் ஹாஸ்டலில் அடிக்கடி வரும். அப்போது Yard stick புதுப்படம் ரிலீஸ் ஆவது என்பதும் ஒன்று.. பரமக்குடிக்கு அப்பப்பொ அந்தப் பெருமை வரும். ஆனா சொதப்பலான படம் (அவள் அப்படித்தான்) மாதிரி ரிலீஸ் ஆகி பரம்க்குடி & பரமக்குடியான் (கமல்தான்) பெயரையும் கெடுக்கும்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சரி.. சந்தோஷம் எப்படி?? எப்போதும் எப்படி சந்தோஷமாய் இருப்பது??

சின்னத் தீவில் அரசு அதிகாரியாய் இருப்பதால் அப்பப்பொ கூட்டத்தில் பேசும் வாய்ப்பும் கிடைத்து விடும். ஒரு முறை லிட்டில் அந்தமான் தீவு மாணவர்கள் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பரிசு வாங்கி கலக்கிவிட்டனர். (கோ கோ வில் மட்டும் கோட்டை விட்டு விட்டனர்). பள்ளியின் தலைமை ஆசிரியர் செம குஷி ஆகி விட்டார்.

பின்னெ சும்மாவா… சுனாமியில் சுருண்ட அந்த தீவு மீண்டும் மீண்டது என்பதற்கு ஒரு சாட்சி அல்லவா அந்த வெற்றி.. தாரை தம்பட்டைகளுடன் கப்பலடி முதல் பள்ளிவரை உற்சாக வரவேற்பு.. மாணவர்களுக்கு பாராட்டு மழை தரவும் ஏற்பாடு. எனக்கு முன் பேசிய அனைவரும் கோக்கோவில் தோல்வி பற்றி தான் கவலைப்பட்டார்கள். மைக் என் கைக்கு வந்தது. எவ்வளவு வெற்றிகள் பெற்றிருக்கிறோம் அதைப் பாருங்கள்.. கோகோவை விடுங்கள்..பிறரை தள்ளி விட்டு அதுவும் முதுகில் பின்னால் நின்று விளையாடிம் விளையாட்டு..அதில் தோற்றதுக்கு சந்தோஷப்படுங்கள் என்றேன்.. என் பேச்சு அங்கு நன்கு எடுபட்டது.

அப்பொ… இப்பொ கம்ப ராமாயணம் பக்கம் போகலாமா… அன்றும் ராமன் சந்தோஷமா காட்டுக்கு போனதை அங்கும் சொன்னேன். எங்கேயும் எப்போதும் கம்ப சங்கீதத்தை இசைப்பது எனக்கு சந்தோஷம்.. உங்களுக்கு எப்படியோ..??

கம்பர் கொஞ்சம் ஜனரஞ்சகமான ஆளு தான். அப்பப்பொ பாலசந்தர் வியாட்நாம் வீடு சுந்தரம் மாதிரி சீரியஸான மெட்டர் எழுதினாலும் அப்பொப்பொ பாக்யராஜ் பாணியிலு எழுதுவார்..

எங்கேயும் எப்போதும் கனிந்தே இருக்கும் இனிக்கும் பழம் பத்தி கம்பர் எழுதி இருக்கார். முண்டகத்துறை என்ற ஒரு சோலை..எப்படி இருக்கும் தெரியுமா?? நல்லவர்கிட்டெ இருக்கும் செல்வம் மாதிரி.. எங்கேயும் உலகத்தார் அதை அனுபவிக்கலாம். எப்போதும் நிலைத்தும் நிற்குமாம். இது பாலசந்தர் ஸ்டைல்.

பாக்யராஜ் ஸ்டைலிலும் கலக்குறார் நம்ம கம்பர்… நல்ல ஒழுக்கத்தோட இருக்கும் பிகர்களின் (அதுவும் எளசான) உதடுகள் மாதிரி அங்கே உள்ள கனிகள் எங்கேயும் எப்போதும் கனிந்தெ இருக்குமாம்..

ஞாலம் நுங்குறு நல்லறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம் பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீங் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.

நீதி: எங்கேயும் எப்போதும் சந்தோஷமா இருங்க.. கூடவே இனி எங்கேயும் எப்போதும் உங்களுக்கு கம்பரே சந்தோஷமா ஞாபகம் வரட்டும்.

யானை வரும் பின்னே


நண்பர்களே…

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இது பழமொழி.

சுனாமி வரும் பின்னே பூகம்பம் வரும்முன்னே. இது புது மொழி.

பொங்கலுக்கு முன்பே வரும் போகியை வைத்து விவேக் ஒரு படத்தில் கலக்கு கலக்கென்று கலக்கி இருப்பார். நல்ல சேதி சொன்ன காமெடி அது.

அரசு ஊழியர்களுக்கு போகி எப்பொ தெரியுமா?? ஏதாவது என்கொயரி ஆரம்பிக்கும் போது. அல்லது டிரன்ஸ்பர் ஆர்டர் வருவதாய் தகவல் வரும் போது. எல்லாம் கொளுத்தி துடைத்து விடுவார்கள்.. (ஒவ்வொரு வருஷமும் கிளீன் செய்யும் ஆட்களை பாத்திருக்கேன்- டிரன்ஸ்பர் தான் வந்த பாடில்லை)

அந்தமானில் 2004ல் சுனாமி வந்தது. அது இங்கிருந்து 1200 கிமீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து சென்னை சேர்ந்த்து. தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு ஒரு நபர்  இங்கே வந்து கட்டி ஏறினார் எல்லாரையும். பொறுப்பில்லாத ஆட்கள்… நீங்கள் ஒரு ஆள் கூட சென்னைக்கு தகவல் தரலையேன்னு.. அந்தமான் & சென்னை சுனாமி நேர வித்தியாசம் 20 நிமிஷம் இருந்திருக்கேன்னு…

2004 ல் வந்திருப்பது சுனாமி என்று நமக்கு தெரியவே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. (கமல் ரசிகர்கள் – அன்பே சிவம் படம் பாத்தவர்களுக்கு சுனாமி தெரிந்திருந்தது)

இப்பொ சுனமி வரும் முன்பே தமிழகத்தை காக்க ஏற்பாடுகள் ஆகி விட்டது. அந்தமானில் கடல் மட்டம் எதிர்பாராத வகையில் உயர்ந்தால் சென்னைக்கு தானாக
தகவல் தந்து விடும்.

அது சரி… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை வரும். அந்தமானுக்கு யார் தகவல் தருவார்?? என்று அப்பாவியா கேட்டேன். பதில் இல்லை..

சரி… நமக்கெதுக்கு வம்பு?? நம்ம பாட்டுக்கு கம்பரை பிடிச்சி கலாச்சிக்கிட்டு இருக்கலாம் சுனாமி வரும் வரை.

சுனாமி வந்தால் தானே ஆபத்து.. அது வரும் முன்னேயே அப்படி ஆபத்து ஏதும் வருமா??

டிஎன்கே : சுனாமி விடுங்க. ஒரு சேதி …அது காதில் விழுமுன் வருத்தம் தருமா?

கம்பர்: தந்ததே.

டிஎன்கே: வேறெ என்ன செய்தது?

கம்பர்: வருத்தம் தந்தது; வாட வைத்தது; திகைக்க வைத்தது; மன துயரம் பெருக வைத்தது; அழ வைத்தது; நிலத்தில் விழ வைத்தது.

டி என்கே: அது எப்படிப்பட்ட சேதி?

கம்பர்: அது சொல் இல்லை… சுடுநெருப்பு.

ராமன் காட்டுக்கு போவனும்கிற சேதியான் நெருப்பு கோசலையின் காதுக்கு சேறும் முன்பே இப்படி எல்லாம் செய்ததாம்..

ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல்குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ.

கம்பனோடு உரையாடல் மீண்டும் வரும்…

இது உங்களுக்கே ஓவரா இல்லை…


வீட்டு உபயோகப் பொருட்களில் (Consumer durable items) வீட்டிற்கு மிகவும் உபயோகமான ஒரு ஐட்டம் இருக்குன்னா… அது எனக்கு என்னமோ வாஷின் மிஷின் தான் சொல்ல்லாம்னு தோணும். இருந்தாலும் எந்த வாஷிங் மிஷினும் அவ்வளவு திருப்தியா தொவைக்க மாட்டேங்குதே???. இது என் கவலை.

என் துணவியார் கேட்டார்… உங்களுக்கு எந்த மாதிரியான வாஷிங் மிஷின் வேணும்?

நான் என் கனவு வாஷிங் மிஷின் பத்திச் சொன்னேன்.

அழுக்குத் துணிகளை நாம ஒரு பக்கெட்டில் போட்டுகிட்டே வரனும். குறிப்பிட்ட அளவு துணி அங்கே வந்தவுடன், தானே வாஷின் மிஷின் போய் அந்த அழுக்குத் துணிகளை எடுத்து உள்ளாறெ போட்டுக்கனும்…தானா சோப்பு பவுடர் போட்டுக்கனும்.. ஆட்டோமேட்டிக்கா சத்தமே வராமெ… அழுக்கு இருக்கிற இடமா தேடிப் பிடிச்சி.. நல்லா தொவைச்சி…அப்புறம் சுத்தமா ஈரமில்லாம காயவச்சி… நல்லா சூப்பரா பிரஸ் செய்திட்டு.. நம்ம பீரோவில மடிப்பு களையாம அடுக்கி வைச்சிரனும்..

இப்படி வீட்டிலெ பொண்டாட்டி அல்லது கணவர் செய்ற மாதிரி எல்லாமெ பாத்து பாத்துச் செய்யும் ஒரு ஃபுல் ஆட்டமேட்டிக் வாஷிங்மெஷின் கிடைக்குமா??

என் மனையாள் சொன்னார்..,  ஏங்க… இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை??

சும்மா… இல்லாததை இருக்கிற மாதிரி யோசிக்கிறதே ஒரு சுகம் தானே!! (நீங்க எல்லாருமே என்னேட போஸ்ட்களை ரசிச்சிப் படிக்கிறீங்க – ன்னு நினைக்கிற மாதிரி)

நூறாவது திருட்டு அடிக்கப் போகும் வடிவேலுக்கு அவர்களின் சிஷ்யப் புள்ளைங்க போஸ்டர் ஒட்டி அமர்க்களம் செய்வது – எதில் சேர்த்தி??

அந்தக் கால ஆனந்த விகடனில் வந்த, சாரி..கொஞ்சம் ஓவர் என்பதின் எக்ஸ்டென்சன் தான் இது என்று சேர்த்துக்கலாமா???.

இதையாவது காமெடின்னு ஓத்துக்கலாம். இந்த பஞ்ச் டயலாக் இருக்கே…அது தான் தாங்க முடியலை…

அந்தமானில் சுனாமிங்கிற பேரைக் கேட்டாலே துண்டெக் காணாம் துணியைக் காணாம்னு ஓடுற பார்ட்டிங்க நாமெல்லாம். ஆனா அடிக்கிற டயலாக் எப்படி தெரியுமா??

நாங்க.. சுனாமியிலேயே ஸ்விம்மிங்க் பன்றவங்க…

இன்னும் கொஞ்சம் ஓவரா போச்சின்னா… “இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்பிகிட்டு இருக்குன்னு” – அதுக்கும் ஒரு டயலாக் உட வேண்டியது.

இது நம்ம நாட்டு நடப்பு…

அப்படியே கொஞ்சம் காட்டு நடப்புக்கும் போலாமா??

அங்கே திடீர்னு மாயமான சங்கதி எல்லாம் நடக்குதாம். இதோ அதன் பட்டியல்:

1.வில்லை வச்சிருந்த வேடர்கள் எல்லாம் முனிவர் ஆயிட்டாங்களாம்!
2.முனிவர்ன்னா எப்படி? கோபமே வராத முனியாம்!! (இது தேவைதான்)
3.கெடச்சதயெல்லாம் அடிச்சி சாப்பிட்ட விலங்குகள் பசியே இல்லாமெ திரியுதாம்!!!
4.அப்படியே பாக்கிற சின்ன விலங்குக்கும், சிரிச்சிகிட்டே ஹாய் சொல்லுதாம் friendly யா..!!!!
5.(இது தான் டாப்பு..) புலி கிட்டெ குட்டிகள் பால் குடிக்குதாம்… எந்தக் குட்டி  தெரியுமா? மான் குட்டிகள்..!!!!!

இது எப்படி இருக்கு

ராமன் புகுந்த காடு (சித்திரக்கூடம்) இப்படி ஆச்சின்னு கம்பர் ஓவரா யோசிச்சி சொல்றார்.

கம்பர் ஓவரா யோசிச்சா காவியம் .. நானு ஓவரா யோசிச்சா..ஒரு போஸ்டிங்க் அம்புட்டுதான்.

இந்த மெயில் எழுத கம்பர் எனக்கு உதவிய பாடல் இதோ:

…முழுவில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்ட.

இன்னுமம் வளரும்.