வந்தாரய்யா ஜுனியர் வந்தாரய்யா


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும். இதெல்லாம் வாரிசுகளுக்காய் வரிஞ்சு கட்டிச் சொல்லும் வாக்கியங்கள். இது முற்றிலும் உண்மை தானா? காந்திஜியோடொ பிதாஜீ, விவேகானந்தரோட டாடி, சுஜாதவோடொ தோப்பனார் எல்லாம் யார் என்று கேட்டால் பலருக்கு அவர்களின் பெயர் கூட தெரியாது. இதே மாதிரி பல பிரபலங்களின் வாரிசுகளின் பெயர்களும் தெரியாமலேயே போனதும் உண்டு. இன்னொரு பக்கம் தகப்பனை மிஞ்சி மேயும் வாரிசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரையுலகில் வாரிசுகள் வந்து கொண்டிருக்கிறார்கள். பலர் கலக்கிக் கொண்டிருக்க, மண்ணைக் கவ்விய மைந்தர்களும் உண்டு தான். அரசியலில் வாரிசுகளுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பெரிய்ய நிர்வாகத்திறமை, கடின உழைப்பு என்று சப்பை கட்டு கட்டினாலும், உன்னிப்பா கவனிச்சா ஒரு பொறி தட்டும். ஒரு பிரபலத்தின் வாரிசு, சிறு வயதில் ஏதாவது ஒளறும். அந்த வார்த்தைக் கோர்வைகளைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் அந்த வட்ட மாவட்ட சுற்றுகள். அந்த வாரிசு, பாம்பாக இருந்தாலும் அது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு. அதனால் நிர்வாகம் மிக எளிதாக ஏதுவாகி விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுது??

திருவாசகம் பற்றிச் சொல்லும் போது சுகி சிவம் அவர்களிடமிருந்து ஒரு சுட்ட பழம், பறித்து உங்களுக்குப் பரிமாறலாம் என்று இருக்கேன். அந்தக் காலத்தில் ராசாவோட மகன் மக்கா இருந்தாலும் ராசா ஆய்டுவான். ஆனா மந்தரி மகன் மந்திரி ஆகிவிட முடியாது.. புத்திசாலியா இருந்தா தான் மந்திரி ஆக்குவாங்க (அந்தக் காலத்தில்). மந்திரி மகன், புத்திசாலியா இருந்தாத் தான் மந்திரி ஆக முடியும். அப்படி ஒரு மந்திரி தான் வாதவூரான்.. பிற்காலத்தில் மணிவாசகர் ஆனவர்.

வாரிசு வேண்டும் என்றும், அதுவும் அந்த வாரிசு நல்லபடியா பிறக்க வேண்டும் என்றும் பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள். அதனை நிறைவேற்றி வைக்கவும் சில பல Gynacologist கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பிறக்கும் கொழந்தைக்கும் சாமி பெயரும் வைப்பார்கள். நானும் அப்படி வேண்டுதல் வைத்தேன். எங்கள் சார்பில் கர்ப்ப ரக்சாம்பிகையிடம் இமெயில் அனுப்பப் பட்டது. மாமியார் சார்பில் சப்தகன்னி அம்மனுக்கு கூரியரும் தரப்பட்டது. குழந்தை வரம் கிடைத்தது. அப்புறம் ரெண்டு சாமிக்கும் கோபம் வராத மாதிரி, பொண்ணுக்கு சப்தரக்சிகா என்று பெயர் வச்சி, ரெண்டு சாமியையும் கூல் செஞ்சிட்டோம்.
அபிமன்யூ மாதிரி வயித்தில் இருக்கும் போதெ கத்துக் கொண்டு, அதி புத்திசாலிக் குழந்தை பிறக்கவும் இந்த பரமக்குடிக்காரர்கள் முயற்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெற்றது வெற்றியா என்று சகல கலா வல்லவர்தான் சொல்ல வேண்டும். ஆனா பழுத்த ஆன்மீகக் குடும்பத்தில் நிகழ்ந்த வேண்டுதல் ஏன் இப்படி ஒரு நாத்திகனை உருவாக்கித் தந்தது? இதற்க்கு அந்தக் கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மஹாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை நீதிமன்றத்துக்குப் போனாராம். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம் (நீதிபதி உட்பட). அந்த அளவு மரியாதையின் உச்சத்தில் இருந்தவர் அவர். பின்னர் ஒருகட்டத்தில் ஒரு குற்றவாளி அதே நீதிமன்றத்தில் வந்தார். அவரின் பெயர் கேட்டபின்னர், அப்பா பெயர் கேட்டனர். அவர் சொன்ன பதில், தேசத்தின் தந்தை பெயர். ஆடிப் போய் விட்டனர் அனைவரும். (அப்புறம் மன்னித்து விட்டது தனிக்கதை). தேசப்பிதாவிடம் இதைப்பற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் தெரியுமா நண்பர்களே.. “அந்தப் பையன் பிறக்கும் சூழலில் நானும் அப்படித்தான் இருந்தேன்”. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தேசப்பிதாவால் மட்டுமே தர முடியும்.

தமிழக எழுத்தாளர்களில் சுஜாதாவை விட்டு விட்டு பட்டியல் போட முடியுமா என்ன? அவரது வாரிசுகள் யாராவது அப்படி எழுதுகிறார்களா? தெரியலையே?? தமிழ்வாணன் வாரிசுகளில் லேனா தமிழ்வாணன் மட்டும் அப்படியே அதே பாணியில். அது சரி.. அவரின் வாரிசு..? எழுதுவதாய் தெரியவில்லை.. ஆமா இப்பத்தான் ஐடி வந்தாச்சே..எதுக்கு மத்த வேலைகள் எல்லாம்? காமெடி நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர். பழைய நடிகர் ஜெய்சங்கரின் வாரிசு கண் டாக்டர். ஆனா கண்டக்டரா இருந்து நடிக்க வந்து ஹா..ஹா.. கலக்கிட்டிருக்கார் வாரிசுகளோட..

தலைமுறை இடைவெளி என்ற வார்த்தை யார் தான் கண்டுபிடிச்சாங்க என்றே தெரியவில்லை. நம்ம வாரிசுகளை நம்மாள ஒழுங்கா திட்டக் கூட முடியலை. நாங்கல்லாம் அந்தக் காலத்திலெ, காலுக்கு செருப்பில்லாமெ, நடந்தே போயி…. இப்படி நாம படிச்ச விவரத்தெ முழுசா கேக்கவும் தயாரா இல்லை இப்பொ பசங்க. உடனே எதிர்க் கேள்வி வரும்… அப்பா உங்கப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.. உங்களுக்கு செருப்பு வாங்கித் தரலை.. ஆனா எங்கப்பா ஒரு இஞ்ஜினியருப்பா… செருப்பு ஷு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கித் தரணும்ப்பா… என்ன பதில் சொல்ல??

ராமாயணத்தில் இப்படி ஒரு சூழல் வருகிறது. (அங்கே சுத்தி இங்கே சுத்தி வந்தாரய்யா ராமாயணத்துக்கு என்று பாடுவது கேக்குது). இலங்கையில் அனுமர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சண்டையின் முன்னோட்டம். எதிரில் இந்திரசித்தன். இ சி அம்பு எய்கிறான் அனுமன் மீது. அடச்சீ என்று கோபம் வருது நம்ம வானர தூதனுக்கு. இந்திர சித்தனை தேரோடு தூக்கி வானத்திலெ வீரமா வேகமா எறிஞ்சி வீரப்பா சிரிப்பு சிரித்தாராம்.

இது வரை எல்லாம் ஓகே தான். கம்பர் ஒரு இடைச் செருகல் வைக்கிறார். கோபம் & தேரைத் தூக்கி எறிதல்.. இந்த ரெண்டுக்கும் நடுவுலெ சின்ன கேப். அதில் அனுமன் வேகமாமாமாமாப் போனாராம். வேகம் என்றால் வேகம், அது எப்பேற்பட்ட வேகம் தெரியுமா? ராமனின் அம்பு தான் வேகமானது. இதை அனுமனிடம் கேட்டா என்ன சொல்வார்?? ஆமா… ஆமா… Boss is always correct. ராம் தான் அனுமனின் Boss. கம்பர் சொல்லி இருக்கலாம் ராமன் அம்பு மாதிரி வெரெஸ்ஸாப் போனார் என்று.. சொல்லலையே

கம்பர் கலையே ஓவர் பில்டப்தானே… ராமன் அம்பைவிட அதி வேகமாக விரைந்து போனாராம். கொஞ்ச Gap ல என்ன வெளையாட்டு காட்டுகிறார் பாத்தீகளா??

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவக்க னன்றான்
வித்தகன் சிலை விடு கணைவிசையினும் கடுகி
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்.

மீண்டும் ஒரு கம்பர் கலாட்டாவோடு சந்திப்போம்…..

கனவுகள் இல்லை…


கனவுகள் என்பது நமக்கு இயற்கை தந்திருக்கும் Free Channel திரைப்படம். அதில் எப்பேற்பட்ட படம் போடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத புதிர். சில சமயம் ஆன்மீகம், சில நேரங்களில் அந்தரங்கம், இன்னும் சில நாட்களில் அசிங்கங்கள். காமெடிகளும் திகில்களும் கூட பல நேரங்களில் கலக்கும். 

கனவு – ஏன்? எதற்கு? எப்படி? என்று சுஜாதா எழுதவில்லையே தவிர…அதன் ஆய்வுகள் இன்னும் நடந்தமேனியாய்த்தான் இருக்கின்றன.

 எந்த நேரத்தில் கனவு வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில், எப்பொ கனவு வந்தா, என்ன நடக்கும் என்று சாத்திரம் கணித்து வைத்துள்ளதாம்.. பின்னெ இருக்காதா… வெறும் ஏடும் எழுத்தாணி மட்டும் வச்சிகிட்டு என்ன நேரத்தில் சந்திர சூரிய கிரகணம் வரும் என்று சொன்ன ஆட்கள் அல்லவா???

 ராத்திரி ஒரு மணிக்கு மேலே கனவு வருதா, அது பலிக்க நீங்கள் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

 வேறு நல்ல சொப்பனம் என்ன என்ன என்ற கேள்விக்கு பல்லி விழும் பலன் மாதிரி காலண்டர் பின்னாடி இருந்தா நல்லா இருக்குமே… இப்படித்தான் பல்லி தலையில் விழுந்தால் மரணம் என்று போட்டிருந்தார்கள்.. உண்மை தான் என் தலையில் விழுந்து தரையில் விழுந்த அந்த பல்லி பரிதாபமாய் செத்துப் போனது..

 பெரும்பாலும் கனவுகளுக்கு நல்ல நம்பிக்கையூட்டும் பலன் தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அதன் தொகுப்பு பார்க்கணுமா.. இதை கிளிக் செய்யுங்கள் : http://ularuvaayan.blogspot.com/2009/08/blog-post_8674.html

பொல்லாத சொப்பனங்கள் எவை எவை என்று கட்டபொம்மன் படத்தில் ஜக்கம்மா பாடும் பாட்டு வச்சி தெரிஞ்சிக்கலாம்.

 பலான கனவுகள் விடாம வருதா?? பக்கத்து வீட்டில் அழகான பொண்ணு இருக்கனும்..அதன் மேல் உங்களுக்கு ஒரு கண்ணும் இருக்கணும்.. நேரில் நீங்க கம்முன்னு இருக்க, உங்க நிறைவேறாத ஆசை கனவில்..ரைட்டா?? ஹலோ..போங்க… கல்யாணம் வேணும்னு கேளுங்க.

 ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா???…ஆன்மீகம் பக்கம் திரும்புங்க…

 கனவுக் காட்சிகளில் சினிமாப் பாடல்கள் பிரபலம். பொன்மகள் வந்தாள் என்ற பழைய பாடல் பத்து பைசாவை வைத்து பணம் காய்க்கும் மரம் வைத்தே காணும் கனவு…. கிராமத்து நாயகி ஸ்விட்சர்லாந்து போகணுமா..எடு ஒரு கனவு சீன்..இது தான் இன்றைய டெக்னிக்.

 வைரமுத்துவின் வைர வரிகள்:

காதலன்: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை….
காதலி: நான் தூங்கவில்லை..கனவுகள் இல்லை..

 வாவ்..என்ன ஒரு கற்பனை..தூங்காமல் எப்படி இருக்க முடியும்?? இடிக்கிறதே… ஆமா…இதே டயலாக் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே??

 அப்படியே தூங்கிப்போனேன்.. கனவில் கம்பர் வந்தார்… (கனவில் கம்பர் வந்தால், விரைவில் ஒரு போஸ்டிங் போடுவார் என்று இருக்குமோ..) வைரமுத்து என் ராமாயணத்தில் சுட்ட சேதி தான் அது என்றார்.. விடியற்காலை கனவு.. கண்டிப்பா உண்மை இருக்குமோ… இருந்தது.

 மீண்டும் அதே அசோகவனம்.. அதே அழகான சீதையும் அழகான ராட்ஷசி திரிசடையும்.

திரிசடை சொல்கிறாள் சீதையிடம்… எனக்கு வந்த கனவு பத்தி சொல்கிறேன் கேள்…ம்… நீ தான் தூங்குறதே இல்லெ…உனக்கு எப்படி கனவு வரும்??

 ஏன் தூங்கலை என்று யோசித்தால்…அது வேல் போன்ற விழியாம்…என் விழியும் என் வாளும் சந்தித்தால் என்ற கற்பனையும் காப்பி தானா?? அப்பொ வேலும் வேலும் சண்டை போட்டு மேலும் விபரீதம் வரக்கூடாது என்பதற்காய் சீதை தூங்கலியாம்…யப்பா…கம்பரே…சும்மா..கலக்கிறீங்க தலைவரே..

 துயில்இலை ஆதலின் கனவு தோன்றல
அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யான விளம்பக் கேட்டியால்.

 திரிசடை சொல்லும் கூடுதல் சேதிகள்: குற்றமுள்ள நாடு இது.. ஆனா கனவு குற்றம் இல்லாதது. சூரியன் எப்படி பளிச்சுன்னு இருக்குமோ.. அப்படி கனவு பலிக்கும்.

 அதுசரி சமீபத்தில் உங்களுக்கு வந்தது நல்ல கனவா?? பொல்லாத சொப்பனமா??

திருவாசக போஸ்ட்


நச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லும் யாருக்குமே, “ஒரு வாசகம்னாலும் திருவாசகம்” என்ற வாழத்து கிடைக்கும்.

எனக்கு பிடித்த (அல்லது தெரிந்த) திருவாசகப் பாடலினை சொல்லி திருவாசக போஸ்ட்டை நிறுத்தலாம்னு நினைக்கிறேன்..(சிலர் அப்பாடான்னு பெரு மூச்சு விடலாம்)

ராஜேஸ்குமார் மற்றும் சுஜாதா கதைகளில் “சிக்கென்று” தெரிந்த கதாநாயகிகள் பற்றி படித்திருப்பீர்கள்.

அந்த “சிக்கென” என்ற தொடர் திருவாசகதிலிருந்து சுட்டது தான்.

மாணிக்க வாசகர் இறைவனிடம் எப்படி அருள் வேண்டுகிறார் தெரியுமா??

கடவுள் எப்படியாம்???

தாய் தரும் பணிவு… அதுவும் தாய்ப்பால் ஊட்டும் போது குழந்தையிடம் காட்டும் பரிவு. அழுகினற குழந்தைக்குத்தான் பால் என்று இருக்கும் நவீன தாய் மாதிரி இல்லாமல், பசிக்குமே என்று நினைத்து குழந்தை மேல் காட்டுமே, அந்தப் பரிவை விட கொஞ்சம் (இல்லை..இல்லை..அதிகம்) அதிகமாய் பரிவு காட்டும் இறைவன்.

பாவியான தன்னுடைய உடலை உருகச் செய்து, உள்ளத்தில் ஒளியை பெருக்கி தேனைத்தருவாய்.

தேனுக்கு இரண்டு குணம் உண்டு. விருந்தும் உண்டு. மருந்தும் உண்டு.

சுடுநீரில் சாப்பிட்டால் உடல் குறையும் (உடல் குண்டானவர்கள் .. கவனிக்கவும்)
குளிர்ந்த நீரில் சாப்பிட்டால் உடல் பருமனாகலாம்.

கெடுதல் செய்யாத இன்பத்தைத் தரும் தேனாய் இருக்கிறானாம் இறைவன்..

அவன் (இறைவன்) தன்னைப் பற்றிக் கொண்டு திரிகிறானாம்… இதுஎப்படி சாத்தியம்???

அப்படியே தீபாவளி கூட்டத்தில் ரங்கநாதன் தெருவுக்குப் போங்க… உங்க குட்டிப் பையனோட…

“டேய்… கூட்டத்திலெ தொலைஞ்சி போயிடுவே…நல்லா புடிச்சிக்க”- ன்னு நீங்க பையன் கிட்ட சொல்றீங்க.

பையன் சொல்றான்…”லூசாப்பா நீ?? ஒன் கை ஒலைக்கை மாதிரி இருக்கு.. வேணும்னா..என் கையை நீ பிடிச்சிக்கப்பா…”

இப்பொ நீங்க இறைவன், பையன் மணிவாசகன்..

(உதாரண உதவி : சுகி சிவம்)

சரி தொடர்வோம்… எப்படித்தான் நீ புடிச்சாலும் உன் காலை நானும் விடாது சிக்கென்று பிடித்திருப்பேன்… எனக்கு அருள் தராமே, நீ எங்கே போயிடுவே ..ராசா..என் செல்வமே… சிவ பெருமானே….-ன்னு உருகும் பாடல் பிடித்த பத்தில் ஒன்று.

நோக்கியா போனில் இந்த வாஞ்சையுடன் பிடிக்கும் கரம் வரும்..இனி அந்த லோகோவை பார்த்தால் திருவாசகம் ஞாபகம் வரட்டும்.

விளக்கம் சொன்னது போதும், பாட்டை பாக்கலாமா..

பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

வேறு ஒரு நல்ல சிந்தனையுடன் மீண்டும் சந்திப்போம்.

சுகமான சுமைகள்…


இந்த கல்யாணம் இருக்கே… ஆகலைன்னாலும் கவலை.. ஆனாலும் கவலை.. அந்த இரண்டாம் ரகம் சுகமான சுமை.. ஆனா  தலைமுடி எப்படி?? அதுவும் சுமை தான்.

மயிர் நீக்கின் உயிர் நீக்கும் கவரிமான் என்பார்கள். அது என்ன? மயிர் என்றால் அவ்வளவு உயிரா அதுக்கு??

இந்த முடி என்பது ஆண்பால் என்றே நினைக்கிறேன். பெண்களுக்கு கூந்தல் என்று இலக்கிய சொல் இருப்பது மாதிரி ஆண்களுக்கு ஏதாவது நல்ல சொல் இருக்கான்னு தேடித்தான் பாக்கனும்.

 என்னதான் ஆணுக்கு நிகர் பெண் என்று சொன்னாலும் கூட சில விஷயங்களை பெண்கள் செய்வது கொஞ்சம் சிரமம் தான். நான் சுஜாதா சொன்ன மேட்டருக்கு வரலை. இது முடியும் முடி சார்ந்த விஷயமும் தான். தனியாக ஒரு பெண், தனது பையனை அல்லது தம்பியை (why not a boy friend??) கூட்டிப் போய் முடி வெட்டி வருவது என்பது நெருடலான விஷயம் தான். இதை ஒரு படத்தில் (ரிதம் என்று நினைக்கிறேன்) ஹீரோயின் (மீனாவா??) அப்படியே தத்ரூபமாய் நடித்துக் காட்டி இருப்பார்.

 ஒரு காரியத்தை செய்யலாமா கூடாதா என்ற குழப்பம் இருக்கும் போது அதிகம் பேர் சொல்லும் வாக்கியம் இதுவாய்த்தான் இருக்கும். மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. இல்லாட்டி மயிரே போச்சின்னு போயிரலாம். ஆஹா… மயிர் வைச்சி என்ன ஒரு சூப்பர் மேனேஜ்மெண்ட் டெக்னிக்..!!!

 எப்படியாவது MA முடித்தாக வேண்டும் என்பவர்களின் அட்சய பாத்திரம் தான் தொலைதூரக் கல்வி. அதிலும் பல ஆசிரியர்களின் தெரிவு  MA தமிழ் தான். இப்படி கணக்கு வாத்தியாராய் இருந்து தமிழ் எடுக்க வந்து சேர்ந்தார் நான் படிக்கும் பிளஸ் ஒன் வகுப்புக்கு. ஒரு சமணத்துறவி கூந்தல் தரையில் விழ வருவதாய் பாட்டு. விளக்குகிறார் அவர்.

நான் பக்கத்து மாணவனிடம் கிசுகிசுத்தேன்… அதெப்படி கடைசி பெஞ்சில் மட்டும் எல்லா வாத்தியார்களுக்கும் கண்ணு இருக்குமோ??

 எந்திரி.. என்ன?? என்றார்.

நான் கேட்டேன். சமணத்துறவிகள் மொட்டை அடித்திருப்பர். இது பாட்டு தப்பா இருக்கே?? எப்படி சாத்தியம்??

அப்பொத்தான் MA தமிழ் முடித்தவர் முழித்தார்… அடுத்த நாள் புலவர்களிடம் கேட்டு சொதப்பலாய் பதில் வந்தது. ஆனா அன்று முதல் நான் வகுப்பில் ஹீரோ என்ற “முடி”வானது.

மயிர் என்பது. வயசைக் காட்டும் வயதுமானி.

காலன் அனுப்பிய தூதன் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லி இருப்பார்.

ஒரு படத்திலும் கூட விவேக் கண்ணாடியில் முன்னாடி ஒரு நரை வர… ஆஹா இளமையை அனுபவிக்கவில்லையே என்று புலம்ப… அப்புறம்…அது தான் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாச்சே??? சினேகிதர்களே… என் (ரகசிய) சினேகிதர்களே!!!

 நாம ஒருபக்கம் நுகர் பொருள் கலாச்சாரத்தில் விழுந்து புரண்டாலும், விழுந்து கிடந்து கும்பிடுவதில் சரனாகதி தத்துவம் மிளிரும். அதே போல் சரனாகதியின் உச்சம் தன்னை இழத்தல். தன் மயிரை இழத்தல். ஒரு முடி முடிசூடிய மன்னனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் காலத்தில், முடி காணிக்கை இறைவனுக்கு தருவது பெரிய்ய செய்தி..

வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதை மொட்டை அடித்துக் காட்டுவதை விட வேறு எப்படி காட்ட முடியும்??

 சூரத் SVNIT பேராசிரியர் ஒருவரை சமீபத்தில் பாத்தேன்.. நம்ம தேவாரம் மாதிரி முரட்டு மீசை.. பள பள மொட்டை.. என்ன ஒரு காம்பினேஷன். இது மைனஸ் மீசை = அட நம்ம சோ..

 பெங்களூரில் காலங்காத்தாலே மசுரு மசுரு என்று கூவி விற்பதைப் பாத்து அரண்டு போனேன்… பாத்தா தயிரோ மோரோ விற்கிறார்கள்… கொஞ்சம் தள்ளி ஆந்திரா திருப்பதிக்குப் போனா… அங்கே முடி வியாபாரத்தில் கோடி கோடியாய் வருமானம் ஈட்டுகிறார் நம்ம பாலாஜி..

 சமீபத்தில் முகநூலில் தலைவர்களை மயிர் கூச்சரியும் வகையில் கேள்வி கேட்டு முடி வெட்டியதாய் ஜோக்காய்   வந்து கொண்டிருந்தது.

இந்த இடத்தில் கம்பர் ஆஜர் ஆகிறார்…

 நீ ஏம்பா இப்படி தலையைப் பிச்சிகினு கீறே…?? நம்ம பாட்டை எடுத்து உடுப்பா.. அந்தாண்டே…

நெரே பிளைட் பிடிச்சிப் போய்… மேகத்தை கொஞ்சம் வெட்டி எடுத்து வரனுமாம்.. (ஏதோ கட்டி தங்கம் வெட்டி எடுத்துன்னு பாட்ற மாதிரி இல்லே???) கட்டியா இருக்கிற தேன் கொஞ்சமா செண்ட் இத்யாதி வாசனை திரவியங்கள் சேக்கனுமாம்.. அப்புறம் இருள் இருக்கே இருள் அதையும் சேத்து (அட அது தாங்க கருப்பு கலர் டை) நல்ல கொழைச்சி பிழியனுமாம்.. அப்புறம் அதை ஒட்டு மொத்தமா ஒண்ணா சேக்கனுமாம். கூந்தல் குரூப் என்று சொல்லலாமாம். அதை ஒரு தலைமேல் வைக்கனுமாம். அப்படி இருந்த கூந்தல் அந்த தலைக்கே ஒரு சுகமான சுமையாக இருக்குமாம்…

யாரோட கூந்தல் பத்தி கம்பர் இவ்வளவு சொல்லிடப் போறார்??. அட நம்ம ஹீரோயின் சீதையோட கூந்தல் இப்படி இருக்காம். எப்படி இருக்கு??

காரினைக் கழித்துக் கட்டி கள்ளினோடு ஆவி காட்டி

பேர் இருட் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்குகற்றைச்

சோர்குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா

நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்.

கை இல்லா ரவிக்கையை சுஜாதா ரவிக் என்று சொல்லுவார்… அதிகமான சுமையை கம்பர் எப்படி சொல்றார் தெரியுமா???

 சும்மை… சும்மா… சூப்ப்ப்ப்ப்பரில்லே…

நாளை சந்திப்போமா???