கம்பன் பார்வையில் வெற்றிலை


பொதுவாவே ஆஃபீசில் ஏதாவது கடிதம் எழுதிட்டு வரச்சொல்லும் போது, அதில் திருத்தங்கள் செய்வதை பெரும்பாலும் பணியாளர்கள் விரும்புவதில்லை. அடிக்கடி மாத்தி மாத்தி திருத்தம் செய்யும் மேலதிகாரிகளை பணியாளர்கள் வெறுக்கவே செய்வார்கள். இவ்வளவு தெரிஞ்ச பெரிய மனுஷன் அந்தக் கடிதாசியையும் அவரே (அந்த நாயே என்பதை சபை நாகரீகம் கருதி எழுதலை) எழுதி இருக்க வேண்டியதுதானே? சாதாரண கடிதமே அப்படின்னா, கட்டிடம் கட்டுபவர் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு கட்டிடத்தை கட்டுபவரிடம், ஏதாவது குறை இருக்கிறது என்று சொல்லி,  அதனை இடித்து விட்டு மாற்றிக் கட்டுங்கள் என்றால் போதும். அவருக்கு வருகின்ற கோபத்திற்கு அளவே இருக்காது. கட்டும்போதே, பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே! (வெளக்கெண்ணெய் – இதுவும் சபை நாகரீக ஏற்பாடு தான்).  அப்பவே திருத்தி இருப்போமே! என்று கோபம் வெடிக்கும். அப்படியே அவர் கட்டியதை இடித்தாலும், அவர் இடிக்கும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! இடது கையிலும், இடது காலிலும் உதைப்பார்.. இடிக்கச் சொன்னவரையே தன் காலில் உதைப்பது போல். அப்படி இல்லாமல், ஒரு வெத்திலை மிகப்பெரிய கட்டுமானம் செய்ய உதவி இருக்கு என்பது ஆச்சரியமா இருக்கில்லே!

தமிழ் திரையுலகில் அகன்ற திரையில் முதன் முதலாக ஒரு படம் வந்தது, ராஜராஜ சோழன். அதில் கதாநாயகன் ராஜராஜ சோழனை அறிமுகம் செய்து வைக்கும் இடமே மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒரு சிற்பி செதுக்கி கொண்டிருப்பார். அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பையன் வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சென்றுவிட, அவ்வழியாக வந்த ராஜராஜசோழப் பேரரசர், அந்த சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பார். சிற்பி துப்பியதையும் செம்பில் எடுத்துக் கொண்டிருப்பார். தனக்காய் வெற்றிலை மடித்துத் தந்தும், எச்சிலும் ஏந்திய ஓர் அரசனுக்கு நல்ல கட்டுமானம் தராமலா போயுடுவார்கள்? அதன் நிரூபனம் தான் தஞ்சை பெரிய கோவில்.இப்படித்தான் வெங்கனூர் என்ற ஓர் ஊர்ல, தியாகராஜர் ரெட்டியார் என்பவர் ஒரு கோயில்ல கட்டுவதற்கு உதவிகள் செஞ்சிட்டு இருந்தாராம். ரொம்ப பிரமாதமா, கோயில் சிறப்பாவே எல்லாம் செஞ்சிட்டு இருந்தாங்களாம். அவரும் ஒரு தடவை இந்த மாதிரி (சினிமாஸ்கோப் படம் எல்லாம் பார்க்காமல்), ஒரு சிற்பிக்குத் (தெரியாமலேயே) வெற்றிலை மடித்துக் கொடுத்தாராம். அத அப்புறமா தெரிஞ்சிட்டு அந்த சிற்பி, அதுவரைக்கும் பிரமாதமாக கட்டியிருந்த அந்த கோயில் எல்லாம் பிரிச்சிட்டு, இன்னும் பிரமாதமாக் கட்டினாராம் அந்த சிற்பியின் தலைவன். வெற்றிலை மடித்து கொடுத்த ஆளுக்கு, இந்த மாதிரியான சாதா கோவில் சிற்பம் எல்லாம் சரி வராது. இன்னும் சிறப்பாக ஸ்பெஷல் சிற்பம், சிறப்பா செஞ்சி கொடுத்தாங்களாம்.

உடனே ஆதாரம் கேப்பீங்களே! என் சரித்திரம் என்று உ வே சாமிநாதையர் தன்னுடைய சுயசரிதையை எழுதி இருக்கிறார். (அந்த தமிழ்த் தாத்தாவே தான்) அதில் தான் இந்த வெற்றி(லை)க்கதையெச் சொல்லி இருக்கார். உடனே ஓடிப்போய் என் சரித்திரம் படிக்கத் தேட்றீகளா? ஹலோ ஹலோ… அவ்வளவு சீக்கிரம் எல்லாம் படிச்சிட இயலாது. 960 பக்கம் இருக்குதுங்கோ!  ஆனா படிக்க ஆரம்பிச்சுட்டீங்க…. ஏதோ துப்பறியும் நாவல் மாதிரி அம்புட்டு விறுவிறுப்பா போயிட்டே இருக்கும்! உங்கள கூட்டிக்கொண்டு போய் 1870 களில் உக்கார வச்சிடும். அப்போ எப்படியெல்லாம் சிரமப்பட்டுத் தமிழ் கற்று, தமிழ் வளர்த்திருக்கிறார்கள்? என்பது ரொம்ப நல்லாவே தெரியவரும்! இப்ப எவ்வளவு வசதிகள்? கம்ப்யூட்டர் என்ன? இன்டர்நெட் என்ன? சொல்லச் சொல்ல டைப் அடிக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்ன? இவ்வளவு வச்சுக்கிட்டு நாம் என்ன செய்கிறோம் என்று கேள்வி கண்டிப்பாக மனசுல உதிக்கும், உவேசாவின் சுயசரிதம் படித்தால்.

அது சரி… அம்புட்டு வேலை செய்ய வைத்த அந்த வெத்தலை, அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? இந்த வெத்திலை பலான வேலைகளுக்கும், கரு உருவாகமல் இருக்கவும் பயன் படுமாம்.  வெத்தலை பாக்கு சுண்ணாம்பு இந்த மூணு செமெ காம்பினேஷன் தான். காலை உணவுக்குப் பின், பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு மிக குறைவாகவும் வச்சிக்கணுமாம். அப்பத்தான் பித்தம் ஏறாது என்பர்; மலச்சிக்கலும் வராதாம். மதியம், சுண்ணாம்பு அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வாயு கட்டுப்படும்; ஜீரண சக்தி அதிகரிக்கும். இரவு, வெற்றிலை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கபம் தங்காது; சளி வெளியேறி விடும். இப்படி மூன்று வேளையும் மெல்லுவதால், வெற்றிலையில் உள்ள மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, ‘கால்சியம், இரும்பு சத்து’ போன்றவை இயல்பாக உடலுக்குக் கிடைக்குமாம். ஆனா நாமதான் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காமெ ஒரே மாதிரி பீடாவை போட்டு சாப்பிட்டு இருக்கோம்? (வீட்டுத் தோட்ட்த்திலும் கூட வெற்றிலைக் கொடி இருக்குதுங்கோ…!)

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் கம்பர் ஏதாவது வெற்றிலை பத்தி எங்காவது சொல்லியிருக்கிறாராண்ணு பாக்கலைன்னா அது தெய்வ குத்தம் ஆயிடும்லெ! இணையத்தில் தேடிப் போனா, எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒரே இடத்தில் போய் நிக்குது. சீதை அசோகவனத்தில் இருக்கிறப்போ, ராமரைத் தேடி யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பது ராமனால் முடியாதே! இப்படிக் கவலைப்பட்டாகளாம் சீதையம்மா. அதை ஒட்டிய பாடலில் அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;அப்படிப் போகுது கம்பனின் வரிகள். அதில் மெல் அடகு என்பதை வெற்றிலை என்று சிலரும், கீரை எனப் பலரும் பொருள் சொல்கின்றனர்.

அடுத்து இன்னொரு இடம் பரவலாக சொல்லப்படுது. சீதையம்மா விரக்தியில் இருந்த நேரத்தில், அனுமன் வந்து நல்ல செய்தி சொன்னார். அதனால் மகிழ்ந்த சீதை, அவரைப் பாராட்டும் விதமாக தலையில் வெற்றிலை வச்சு ஆசிர்வாதம் செஞ்சதா பல இணையதளங்கள் சொல்லுது. கம்பர் சொன்னதா வேறு சொல்லுது. ஆனா கம்பருடைய பாடல்களை தேடித் தேடி பார்த்தா அந்த மாதிரி தெரிஞ்ச மாதிரி இல்லை. வால்மீகி ராமாயணத்தை அப்படியே மேலோட்டமா (எதையுமே ஒழுங்காத்தான் படிப்பதில்லையே!) படிச்சு பார்த்தா அதுலயும் ஒன்னும் கிடைச்ச மாதிரி தெரியல.

அப்ப எங்கேதான் கம்பர் வெற்றிலையெக் கொண்டு போய் வச்சாரு? கம்பருக்கும் வெற்றிக்குமாவது தொடர்பு இருக்கா இல்லையா? கண்டிப்பா இருக்கு. கம்பருக்கும் சோழ மன்னருக்குமிடையே  ஒரு சின்ன கருத்து மோதல். கம்பர் கோவிச்சிட்டு சேர நாட்டுக்குப் போய்விடுகிறார். ஆறு ஏழு ரீலுக்குப் அப்புறம், சோழ மன்னன், கம்பரை அழைக்கிறார். கம்பரை ஒரு பல்லக்கில் வைத்து சோழ நாட்டு எல்லைக்கு கம்பருடன் சேரனும் ஒரு அடைப்பக்காரன் (வெற்றிலை வைத்திருக்கும் பெட்டியினை வைத்திருப்பவன்) ரூபத்தில் செல்கிறான். அடைப்பக்காரன் தந்த வெற்றிலையை வாயில் போடாது தனது விரல்களுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறார் கம்பர். சோழன், இது என்ன சமாச்சாரம்? எனக் கேட்க, அடைப்பக்காரராக வந்தது சேர மன்னன் என்பதால் தான். அந்த வெற்றிலையை வாயில் போட்டிருந்தால் அரச பதவிக்கு அது அவமானம் என கம்பர் கூறுகிறார்.
 

கம்பர் வாழ்க்கையில் இப்படி ஒரு சூப்பர் சீன் நடந்திருப்பதை ராமாயணத்தில் தராமலா  இருப்பார்? கம்பர் தன்னுடைய வெற்றிலை புராணத்தை ராவணனுடைய அறிமுகத்தில் காட்டுகிறார். ஊர்வசி இருக்காகளே ஊர்வசி, அவங்க உடைவாளை எடுத்து வராங்களாம். ராவணனுக்கு பின்னாடி மேனகை வெற்றிலையெக் பக்கத்திலிருந்து கொடுத்திட்டே வாராங்களாம்…வெற்றிலை வந்து விட்டதால் கதையெ நிப்பாட்டிட்டு பாட்டு பார்ப்போம்.

உருப்பசிஉடைவாள் எடுத்தனள் தொடர, மேனகைவெள்ளடை உதவ,
செருப்பினைத்தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர்குழாம் புடை சுற்ற,
கருப்புரச்சாந்தும், கலவையும், மலரும், கலந்துஉமி்ழ் பரிமளகந்தம்,
மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக் கைவாய் மூக்கிடை மடுப்ப;
(
சுந்தர காண்டம் 407)

ஊர்வசியானவள் உடைவாளை எடுத்துக் கொண்டு பின்னே வரவும்,
மேனகையானவள்  பக்கத்திலிருந்து வெற்றிலையை  வழங்கவும், திலோத்தமையானவள் செருப்பைச் சுமந்தபடி போகவும்,  மற்ற  தேவ மகளிரின் கூட்டம் பக்கங்களில் சூழ்ந்து வரவும், அவன் மேனியைச் சார்ந்த கர்ப்பூரம் கலந்த சந்தனம் குங்குமம் முதலியவற்றின் சாந்தும் பலவகைப்  பூக்களும் ஒன்று சேர்ந்து  வெளிப்படுத்தும் நறுமணமானது, மலைகளை ஒத்த  திக்கு யானைகளின் புள்ளிகளைப் பெற்ற துதிக்கையிலே உள்ள மூக்கில் கலக்கவும், (இராவணன் வந்தான்).

இன்னொரு பக்கம் போனா கொங்கு மங்கல வாழ்த்து கம்பர் தான் எழுதியது எனச் சொல்கிறார்கள். 1913 ல் வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கு. இந்தக் கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்திலும் பல இடங்களில் வெற்றிலை சொல்லப்படுது. மங்கலம் நிறைந்த வெற்றிலைக்கும் நம்முடைய கட்டுமானத்துக்கும், கம்பனுக்கும் தொடர்பு ஏதோ ஒரு வகையில் (பல வகைகளில்)  இருக்கத்தான் செய்யுது. மீண்டும் வேறு ஒரு கோணத்தில் கம்பனைப் பார்ப்போம்

நாக்கு மூக்கா.. நாக்கு மூக்கா


இந்த கொலெவெறி பாட்டு வரும் வரைக்கும் இந்த நாக்கு மூக்கா தான் தமிழர்களின் நாவில் வலம் வந்த மந்திர வார்த்தைகளாய் இருந்தன.

என்ன இது? எப்புடி எல்லாம் பாட்டு எழுதுறாய்ங்க என்று திட்டிக் கொண்டும் கூட அந்தப் பாட்டைக் கேட்டனர். “அப்புடிப் போடு போடு” பாட்டுக்கு அடுத்த படியாய், அதிகமாய் தமிழ் அல்லாத சேனல்களில் வந்த பாடல் இந்த “நாக்கு மூக்கு” தான். (கொலெ வெறி எல்லா ரெக்கார்டையும் முறியடித்து விட்டது என்பது சமீபத்திய கதை)

ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. இந்த நாக்குக்கும் மூக்குக்கும் என்ன சம்பந்தம்??

அடக்க வேண்டிய உன்னதமான விஷயங்களில் நாக்கு தான் முக்கியம் என்று அய்யன் வள்ளுவர் சொன்னது யாருக்கும் ஞாபகம் இல்லெ. ஆனா இந்த மேட்டரை விவேக் சொன்னதும் நிறைய மண்டை உள் வாங்கிக் கொண்டது (என் மண்டையும் இதில் அடக்கம்)

நாவை ஒழுங்கு மரியாதையா வச்சிருந்தா மூக்கும் நல்ல படியா இருக்கும் என்கிறார்களோ??

எங்க விஷயத்திலெ அனாவசியமா மூக்கை நுழைக்காதே என்கிறார்களே… பாவம்.. மூக்கு என்ன பாவம் செய்தது? அனாவசியமா திட்டு வாங்குதே..

கமல் படங்களை கவனித்துப் பார்த்து வந்தால் ஓர் உண்மை புலப்படும். சண்டைக் காட்சிகள் அல்லது கதவில் முட்டிக் கொள்வதும், பிறர் தள்ளி விடுவதும் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் மூக்கில் அடி வங்கும் காட்சியும், மூக்கில் ரத்தம் வரும் காட்சியும் இடம் பெறும்.. ஏன் இப்படி??

இன்றைய இளைய தலைமுறை…. “பிகர் சூப்பரா இருக்கு” என்று ஜொள்ளுவிடும். ஆனா அதே பிகரை, வீட்டுலெ போய் பாத்து பெருசுகள் “மூக்கும் முழியுமா லட்சனமா இருக்கா..” என்பார்கள். அங்கும் அந்த மூக்கே மூலதனம்.

மூக்குகள் பலரகம்.. பல விதம். நாசர் மூக்கு அதில் தனி ரகம். நாக்கு மேலே பல்லுப் போட்டு எப்படி பேசப்போச்சி என்று மூக்குக்கு மேல் கோபமாப் பேசுவார்கள்.. அப்பொ இந்த மூக்கு என்ன கோபமூர்த்தியின் வாகனமா என்ன??

பரமக்குடியில் ஒரு காலத்தில் முத்தாளம்மன் கோவில் திருவிழா காலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரப் பலகை வைத்து இருப்பார்கள். கரகரப்பான குரலில் “TAS ரத்தினம் பட்டனம் பொடி” விளம்பரம் தான் அது.

மூக்குப் பொடி விளம்பரம் அது. அதைப் பாத்து அந்தக் பள்ளிக் காலத்தில் திருக்குறள் சொல்வார்கள்.. இன்னும் மன்சிலெ நிக்குது.

பொடிபோட்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
சளிபிடித்துச் சாவாரே சாவர்.

இந்தப் பொடிப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது (இது மாதிரி ஒரு நாள் குடிப் பழக்கமும் போயிடுமா??) அந்தமானுக்கு தாயகத்திலிருந்து பொடி போடும் பழக்கம் உடையவர் வந்து சேர்ந்தார்.. அப்போது தேடிய போது தான் ஒரே ஒரு கடையில் பொடி கிடைக்கும் அரிய தகவல் கிடைத்தது. (மனுஷன் என்ன என்னவெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க வேண்டி இருக்கு??)

“எனக்கு மூக்கில் வேர்க்கிறது? என்ன செய்யலாம்” என்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது கல்கண்டு தமிழ்வாணனுக்கு கேள்வி கேட்டு எழுதினேன்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??

கழுகுக்கு மூக்கிலெ வேர்க்கிற மாதிரி என்பார்கள். நிங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம்.. அந்த வேலைக்கு போகலை என்றாலும் அவர்களுக்கு … (வேண்டாமே… ஏற்கனவே கபில்சிபில் கோபமா இருக்கார்….)

“எட்டுக்கல்லு பேஸிரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு” என்று ஒரு பழைய ஹிட் பாடலில் வரும். ஏற்கனவே எடுப்பான மூக்கு அந்த நாயகிக்கு… இன்னும் எடுப்பாக்க போடும் திட்டம் அந்தப் பாட்டில் வரும்.

படத்தில் மட்டுமல்ல… எடுப்பாய் எங்கும் இருப்பது இந்த மூக்கு தான். மூக்கறுபட்ட சேதிகள் ஆயிரம் தான் இருந்தாலும் எல்லார் மனதிலும் உடனே வருவது சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட விஷயம் தான்.

எப்படியோ சூர்ப்பனகை வரைக்கும் வந்தாச்சி.. லேசா.. ஒரு எட்டு கம்பராமாயணம் பாத்துட்டும் போயிடலாமே..!! ஆனா.. நாம போற நேரத்துக்கு சூர்பனகை மூக்கு மேலே கையை வைக்க முடியாது.. அப்போ யாரோட மூக்கு பத்தி ??? வாங்க இன்னும் உள்ளே போவோம்..

அது அசோகவனம். கண்டேன் சீதையை என்றும் கண்டு கொண்டேன்…  கண்டு கொண்டேன் என்றும் அனுமன் இருந்த நேரம். ஆனால் சீதையிடம், தான் ராமனின் தூதன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

ராமன் படம் வரைந்து பாகங்களை குறி ரேஞ்சில் ராமனைப் பற்றி அக்கு வேறாய் ஆணி வேராயும் அலசும் இடம்.. அண்ணன் அனுமன் அவர்கள், ராமனின் மூக்கு மேட்டர் பத்தி சொன்ன விஷயத்தை மட்டும் சின்னதா ஒரு ஜூம் போட்டு படிக்கலாமே..

கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டிருப்பீங்க… ஆனா கொழுந்து ஒளி பாத்திருக்கீங்களா?? பிரகாசமாவும் இருக்கனும்… ஆனா சுட்டுவிடக் கூடாது.. அப்பொ, அது தான் ஒளிக் கொழுந்து. எங்கிருந்து வருதாம்?? இந்திர நீலக் கல்லில் இருந்து. (இது say X ) மரகதமணியிலிருந்து வரும் ஒளியின் ஒட்டு மொத்தம் (இது say Y).

இந்த X & Y ரெண்டும், என்னை ராமர் மூக்கு மாதிரி இருக்கு என்று சொல்லப்படாதான்னு கெஞ்சுதாம்.. அது மாதிரியா இருக்கு மூக்கு??

இன்னும் யோசிக்கிறார் அனுமன்.. சுந்தரி என்பவள் அழகி. இந்திர லோகத்து சுந்தரியோ அழகோ அழகு. கோபம் சாதாரணமானது. இந்திர கோபம் எப்படி இருக்கும்?? அந்தமாதிரி இருக்கிற பூச்சியைப் புடிக்கிற பச்சோந்தி மாதிரி இருக்குன்னு சொல்லாமா ராமர் மூக்கை??

பச்சோந்தி கலர் மாறும்.. ஐயா மூக்கு அப்படி இல்லையே… அப்பா… முடியலை என்று சொல்ல முடியாமலேயே முடிக்கிறார். அப்படி உவமையே சொல்ல முடியாத மூக்காம் அந்த மூக்கு.

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்
விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஒதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு
ஆமோ

ஆமா… மூக்கு மேலெ விரல் வைக்கிற மாதிரி உங்க லைப்லெயும் ஏதும் நடந்திருக்கா??

வயிற்றுப் பார்வை


ரொம்பவும் நெருங்கிய நட்பு வட்டாரம் வீட்டில் வந்தாலோ அல்லது தெருவில் சந்தித்தாலோ..வாங்க அப்படியே இட்லி கிட்லி சாப்பிட்டே பேசுவோம்..என்று அழைப்போம்..

ஆமா..இந்த இட்லி ஓகே…அந்த கிட்லி என்றால் எனன்?? (மதுரெ இட்லிக்குத்தானேடா பேமஸு…கிட்லிக்குமா..? என்று வடிவேலு ஸ்டைலில் புலம்பலாம் போல இருக்கா??)

உபசரிப்புகள் பலவிதம்… காப்பி சாப்பிடலாமா?? என்னத்துக்கு வீட்டிலேயே சாப்பிட்டு வந்திருப்பீங்களே.. என்று கேட்பது கல்யாணப் பரிசு தங்கவேலு ரகம்.

காப்பித் தண்ணி சாப்பிடலாமா என்ற கேள்வியும் சில இடங்களில் வரும். காபி தண்ணியாத்தான் இருக்கும் என்பதின் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ரகம் அது.

ஒரு வேலையா ஒருத்தரைப் பாக்க அந்தமான் அரசு அலுவலகம் போனேன். டீ சாப்பிடலாமா என்று கேட்பதற்குள் இன்னொரு வேண்டாத விருந்தாளி உள்ளே வந்தார். (நீ உள்ளே போனா விருந்தாளி..அடுத்தவன் உள்ளே வந்தா, வேண்டாத விருந்தளியா??…ம்…மௌனம் சம்மதம் தானே). சக ஊழியரை அழைத்து, சாப் லோகோங்கோ.. ஜரா சாய் பிலானா என்றார்…

பேச்சு தொடர்ந்தது.. ஆனால் சாயா வந்த பாடில்லை.. வெறுத்துப் போன அந்த வேண்டாத விருந்தாளி எழுந்தார்..அந்த அதிகாரியோ… இந்த ஊழியர் அப்படித்தான்… பத்து பேருக்கு ஒரே ஆள் தான்..அதனால் உங்களுக்கு டீ தர முடியவில்லை என்பதை வழிந்தார்.

மறுபடியும் ஊழியரை அழைத்தார்..நல்லா செமையா திட்டப் போகிறார் என்று தான் நினைத்தேன்.. ரொம்ப கூலா…சாப்கோ சாய் பிலானா என்றார். இரண்டே நிமிடத்தின் திடம் மணம் எல்லாம் சேந்து (ஜோதிகா இல்லாமல்) வந்தது.

என்ன நடக்குது இங்கே?? யோசித்த போது தான் “ஜரா” என்ற ஹிந்தி வார்த்தைக்கு பின்னால் இப்படி ஒரு போட்டுக் கொடுக்கும் குணம் இருப்பது தெரிந்தது.

தரகர்கள் சொல்லும் பொதுவான வார்த்தைகள் – கை நிறைய சம்பளம். பொண்ணு ரதி மாதிரி இருப்பா…என்பார்கள். (இந்தப் இழவுப் பொய்யைத்தான் எல்லார்ட்டேயும் சொல்றேமே – என்று விவேக் தரகராக ஒரு படத்தில் அப்ரூவர் ஆகி இருப்பார்).

ரதி மாதிரி என்று சொன்னாலே, ரதி தான் உள்ளதில் அழகு..இந்தொ பொண்ணு அது மாதிரி இப்படித்தானே அர்த்தம். கொரங்கு மூஞ்சி என்றால் அப்பொ என்ன அர்த்தம்?? குரங்கே பெட்டர் என்று அர்த்தம்.

இப்பொ அப்படியே கம்ப ராமாயணத்துகு வருவோம். நம்மாளுக ஹீரோயின் வயிற்றைக் காட்டாமெ… தொப்புளை ஃபோகஸ் செய்து அதில், பம்பரம் உட்டாங்க.. ஆம்லெட் போட்டாங்க… அத்தோட உட்டாங்க… அதில் ரசனை போய் விரசம் மிஞ்ச்சினது.

நம்ம கம்பர் தான் ரசிப்பதில் ஆஸ்கார் தரம். அவர் ஒரு ஹீரோயினோட வயிறு பத்தி எழுதனும். ஆலம இலை, சித்திரப் பலகை, வெள்ளித்தட்டு, கண்ணாடி இதுமாதிரி இருக்கும் என்று சொல்ல வந்தவர் அப்புறம் அந்த லாஜிக் யோசிச்சி….. No…No…. இவை எல்லாம் ஹீரோயின் வயிறு மாதிரி இருக்கு என்று சொல்லலாம் என்று சீதையின் வயிறை வர்ணிக்கிறார் கம்பர்.

ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண்பலகை நொய்ய
பால் நிறத் தட்டம்  வட்டக் கண்ணாடி பலவும் இன்ன
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை என்னும்.

இனி ஆல் இலை, கண்ணாடி பாத்தா உங்ககுக்கு என்ன ஞாபகம் வரணும்???

அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..


அந்தக் காலத்திலெ, நாங்கள்ல்லாம்..என்றும், அப்பொ எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்றும் கேட்கும் பெருசுகளை ரொம்பவவே பாத்திருப்பீங்க.

எனகக்கும் 50 வயது நெருங்குவதால் அந்தக் கூட்டணியில் நானும் சேந்திட்டேன். நானும் என் பங்குக்கு ஆரம்பித்தேன்….

அந்தக் காலத்து ஹோலி மாதிரி இலலையே!!

அந்தமானில் 20 வருடங்களுக்கு முன்பு வரை ஹோலி அன்று வீட்டை விட்டு வெளியில் வநதால் முகத்தில் கலரின் சுவடு தெரியாமல்   வீடுதிரும்ப முடியது.  இன்றோ வெள்ளையயும் சுளையுமா சட்டை போட்டடும் ஹோலி அனறு திரிய முடிகிறது.

முன்பெல்லாம் வீட்டிற்கு கும்பல் கும்பலல்களாக வந்து கலர் அடித்து விட்டுப் போவார்கள். இப்போதோ கீழ் போர்சன் ஆள் கூட வரவில்லை.

விசாரித்த போது தான் தெரிந்தது காலம் மாறிய போது யார் யார் வீட்டிற்கு போவது என்ற குழப்பம் காரணமாய் இருப்பது தெரிந்தது. (ஆமா.. நீ ஏன் ஒரு ரவுண்ட் போகலைங்க்கிற கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை)

அரசு வேலைகளிலும் யார் பெரியவர்? யார் யரைப் பாக்க வரனும் இதில் கூட தாமதங்கள் ஆகும்.

இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள்.

எல்லத்துக்கும் ஒரு நல்ல தீர்வு சொல்லட்டுமா??

ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேணுமா?

அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடிங்க.. அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீங்க.

சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே போங்க..

வேகமா போங்க… விமானதிலும் போலாம்..

எப்படி போனாலும் தனியா போங்க… Self Driving தான் போகனும்.

இது தான் tips…

அது சரி… நீங்க எம்பி எம்பி   MBA  நேத்து பாஸ் பன்னிட்டு இன்னெக்கி சொன்னா நாங்க கேட்டுக்கனுமா?? (சந்தடி சாக்கிலெ நானு MBA பாஸ் பன்ன மேடடர் சொல்லலிட்டேன் பாத்தீகளா??)

சரி.. நான் சொன்னா கேக்காடதீங்க!! கம்பன் சொன்னா கேப்பீங்களா???

இப்ப வாரன்…

இராவணன் சீதையை கவர வேண்டும். இதுதான் பிரச்சினை. எக்ஸ்பெர்ட் மாரீசன்.

இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்..  என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டா, நேரில் போகணும். 

நாமும் இந்த மாதிரி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துக்களாமே!!  (அதுக்காக அடுத்தவன் பொண்டாட்டியை தூக்க ஐடியா கேக்காதீங்க….) கருத்து மட்டும் எடுத்துகுங்க.

பாட்டு பாருங்க:

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.

மீண்டும் இன்னொரு கோணத்தில் கம்பரை மீண்டு(ம்) பாப்போம்.

எப்படி இருந்த நான்…


நொந்து நூலானவர்கள் பொதுவாக எல்லாருக்கும் புரியும் படி சொல்லும் ஒரு டயலாக் “எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன்” என்பது தான். அதனை எய்ட்ஸ் விளம்பரத்திற்கென விவேக்கை வைத்து ஒரு படத்தில் செய்ய வைக்க, அது ஓஹோன்னு ஹிட் ஆகிவிட்டது…

மக்கள் மனதில் எய்ட்ஸ் ஞாபகம் இருக்கோ இல்லையோ, அந்த விவேக் டயலாக் இப்பவும் மக்கள் மத்தியில் பளிச் தான்…

ஆமா.. நீங்க ரியல் லைஃபில் இப்படி டயலாக் அடிக்கும் ஆசாமியை பாத்ததுண்டா??

என்னெயெக் கேக்கிறீங்களா??…

அதுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் போகனும். ஓகேவா??

கொஞ்ச நாள் முன்னாடி என் மொபைலில் இருக்கிற எல்லா போட்டோவையும் சகட்டு மேனிக்கு என் பையன் பாத்துகிட்டே இருந்தான்.

(என்ன…பளாக் எழுதுறான்?? ஒரு மெஸேஜ் ஏதாவது இருக்கா அதுலெ? என்று கேட்கும் பொறுப்பான பார்ட்டிகளுக்கு, இதோ ஒரு மெஸேஜ்:

 உங்க மொபைல்லே வில்லங்கமான போட்டோக்கள் இருந்தால், உடனே அதை அழித்து விடவும். இந்த காலத்து பசங்களுக்கு அடுத்தவர் போன் நோண்டுவது தான் வேளை.. ஹி..ஹி..நானும் சான்ஸ் கெடைக்கும் போது அந்த நல்ல காரியம் பன்னியிருக்கேன்.)

 என் பையன் கண்ணுக்கு சிக்கிய போட்டோ ஒண்ணு… வேகமாக வரும் ஆட்டோ. ஆட்டோ டிரைவர் உள்பட யாருமே அந்த போட்டோவிலெ காணாம்.

இதெ ஏம்ப்பா எடுத்து வச்சிருக்கே? ன்னு கேட்டான். பரமக்குடியில் நம்ம வீட்டு பக்கத்து தெருமுனையில் ஒரு அம்மா பணியாரம் (ரம்பா விரும்பிச் சாப்பிடுவாங்களே..அது தான்) சுட்டு விக்கிறாங்க..

அவங்களுக்கு ஒரு காலத்தில் 23க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாம். (20 கோடி இருக்கும் இன்றைய மதிப்பு) ஆனா இன்னெக்கி இப்படி ஆய்ட்டாங்க…

சரி அவங்களை ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கலாம்னு எடுத்தேன். அதுக்குள்ளார நடுவில ஒரு ஆட்டோ வந்திடுச்சி..அதான் அந்த ஆட்டோ போட்டோ.. அவங்க துரதிர்ஷ்டம் போட்டோ கூட எடுக்க முடியலை. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு அவங்க புலம்பலாம்.

என் பையன் கேட்டான்… சரி..அந்த ஆட்டோ போன பின்னாடி இன்னொரு கிளிக் பன்னியிருக்க வேண்டியது தானே??

(நல்ல கேள்வி.. எப்படி சமாளிச்சேன் தெரியுமா?)

போட்டோ மட்டும் இருந்தா வெறும் தகவல். (RAW Data)..  ஆள் இல்லாமெ வெறும் ஆட்டோ படம் இருந்தா சுவாரஸ்யமான விஷயம். (எனக்கு ஓகே..உங்களுக்கு எப்படி இருக்கு??)..இப்படி சொல்லி சமாளிச்சேன்.

பொதுவாக விதி என்பது, ரொம்ப நல்லா இருந்து நொடிஞ்சு போனா சொல்லும் வாக்கியம் “எ இ நா இ ஆ” என்பது. சில சமயங்களில் அப்படி ஒண்ணுமே இருக்காது.. ஆனா நெனைச்சே அப்படி பீஃல் பன்னிட்டு இருப்பாங்க..

உதாரணமா.. ஒரு ஆளுக்கு ஆபீசில் ஒரு மெமொ கெடைக்கட்டும் அல்லது தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகட்டும்.. பொலம்பல் ஆரம்பம் ஆயிடும். மொதலாளி திட்டினாலும் அந்த சீன் ஸ்டார்ட் ஆகும். பரீட்சையில் பெயில் ஆகும் பார்ட்டிகள், எதிர்பாத்த மார்க் கெடைக்காத போது…இப்படி ஏதும் விதி விலக்கு இல்லெ.

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கம்பனை இழுக்காட்டி ..நல்லாவா இருக்கு? எப்பொவுவே கம்பர் டிராக்கே தனி தான்.

எல்லாரும் நல்லா இருந்து கெட்டுப் போன போது தானே புலம்புறாங்க..?? ஆனா கம்பன் வார்த்தையில் “எப்படி இருந்த ஆளு” என்பதிலும் கூடுதல் ஆகுதாம்…அப்புறம் நொந்தும் போகிறாராம். சிச்சுவேஷன் சொன்னா இன்னும் புரியும்.

ராவணன் சீதையை ஜொள்ளு விட்டு பாக்கும் காட்சி.. (நம்ம ஆட்கள் தமண்ணாவை ஜொள்ளுவிட்டு பாக்கிற மாதிரி). அந்த அழகில் மயங்கி ஒடம்பு கொஞ்சம் ஊதுதாம்.. அப்புறம் கிடைப்பாளா மாட்டாளா என்ற சந்தேகத்தில் ஒடம்பு இளைச்சிட்டானாம்..

வீங்கின மெலிந்தன வீரத் தோள்களே.. இது கம்பர் வாக்கியம்.

ஒரு காலத்தில் பத்து தலை இருக்கிற ஆசாமி இருப்பானா? ன்னு கிண்டல் அடிச்ச நானு, இப்பொ ராமாயணத்தெ விழுந்து விழுந்து படிக்கிறேன்.. ம்… எப்படி இருந்த ஆளு… இப்படி ஆயிட்டேன்..

Multiple Mail ID’s


கடவுளை நம்பாத ஒருசிலர். சில கடவுள்களை வணங்குவர் சிலர். பல கடவுள்களை வணங்குபவர் பலர்.

இதில் ஒருசிலர், சிலர், பலர் என்பதை அங்கங்கே மாத்திப் போட்டு Permutation & Combination செய்தும்
பாக்கலாம்.

பையனுக்கு ஒடம்பு சரியில்லை. சரி ஆனா, திருப்பதிக்கு போய் மொட்டை போட்றேன்னு வேண்டிட்டார் அப்பா. அடுத்த நாள் யாரோ சொல்ல, மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கவும் வேண்டிக் கொண்டார்.

அப்பொ திருப்பதி மேல் நம்பிக்கை இல்லை என்று எடுத்துக்க முடியுமா? அதான் கிடையாது. திருமலைப் பெருமாள் டாக்டரா வந்தா, நம்ம மாரியாத்தா நர்ஸா, கூட வரட்டுமே என்ற நம்பிக்கை தான் காரணம் (சுகி சிவத்திடம் சுட்டது).

சுனாமியின் போது எல்லாரும் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்க.. ஒரு தீவிர பக்தர்.. சாமி என்னெயெ காப்பாத்தும் என்ற நம்பிக்கையோடு, ஒரு மரத்தின் மேல் இருந்தாராம். வழியில் வந்த Rescue Boat “வாப்பா இதிலெ ஏறு கொஞ்சம் பாதுகாப்பான பகுதிக்கு போயிடலாம்”- னு மக்கள் சொன்னாங்க..

நம்மாளு கேக்கலை.. “என்னைக் கடவுள் காப்பாத்துவாறு.. நீங்க போங்க”- என்றார்.

அடுத்து ஒருவர் பெரிய கட்டையில் மிதந்து வந்தார்..அட வாப்பா.. நாம் ரெண்டு பேரும் இந்த கட்டையில் ஏறி உயிர் தப்பலாம் என்றார். நம்ம, கட்டையில போறவன் கேக்கலை.

அடுத்து ஒரு Air Force Helicopter வந்து அழைப்பு தந்தது.. கேப்பாரா நம்மாளு.. கேக்கலையே… கொஞ்ச நேரத்தில் அந்த மரம் சாய்ந்து அவரும் பரமபதம் போய்விட்டார்.

அங்கே நேரா கடவுள் கிட்டெ போய்… “என்னா கடவுளே.. உன்னையெ
நானு எம்புட்டு நம்புனேன்.. இப்படி கவுத்திட்டியே!!..” மல்லுக்கு நின்றார்.

கடவுள் படத்தில் சிரிக்கிற மாதிரியே சிரித்து, “அப்பனே அந்த Rescue Boat, மரக்கட்டை, ஹெலிகாப்டர் இதை எல்லாம் நான் தான் அனுப்பினேன்.. நீ தான்
மறுத்துவிட்டாய். அப்பனே.. நீங்க மட்டும் information age க்கு போய்
விடுவீங்க.. கடவுள் மட்டும் துண்டு போட்டு சங்கு சக்கரம் பாம்பு புலி சகிதம் வரணும்னா ..இன்னா வெளாட்டா” – சொல்லி மறைந்தார்.

இதே மாதிரி ஒரு சாமியார் சிஷ்யன் கிட்டெ.. எல்லாரும் கடவுள் தான்.. எனவே எல்லாரையும் வணங்கனும் என்றாராம். பொறுப்பாய் சரி என்றான் சிஷ்யன்.

அடுத்த நாளே வந்தது சோதனை. ஒரு மதம் பிடித்த யானை ஓடி வந்து கொண்டிருந்தது. எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தனர். நம்மாளு அட…
கடவுள் வருது.. என்று கும்பிட்டாராம். கூட இருக்கிற மக்கள் அப்பனே..ஓடு..ஓடு ஆபத்து என்றனர்.

இப்பவும் நம்மாளு கேக்கலை. கொஞ்ச நேரத்தில் யானை லாரன்ஸை தூக்கி எறிஞ்ச மாதிரி தூக்கி எறிந்து விட்டது.

நலம் விசாரிக்க வந்தார் குரு. “என்ன சாமி இப்படி மாட்டி விட்டீகளே..? நீங்க தானே சொன்னீங்க.. எல்லாரும் கடவுள்-ன்னு”

குரு இங்கேயும் சிரிச்சிட்டே சொன்னார். “சிஷ்யா.. யானை ஒரு கடவுள். ஆனா உன் பக்கத்திலே எத்தனை கடவுள்கள் (மக்கள்) ஓடு….ஓடு சொன்னாங்களே.. நீ
கேக்கலையே… கடவுள் பேச்சு கேக்காத காரணம் இந்த தண்டனை”

கடவுளை விடுவோம் அது ரொம்ப துரம்… பக்கத்திலெ இருக்கிற
காதலிக்கு சேதி சொல்லவே எத்தனை பேரைப் புடிக்கிறாங்க..

கடலில் மீன் பிடிக்கச் சென்ற காதலன். காதலி “பாட்டுக்கு பாட்டெடுத்து…” என்று அலையெத் தூது விட்றா. அதுக்கு வாத்தியாரு, பூங்காற்றை பதிலா தூது விட்ரார்.. (கூரியர் செலவு ஒரு மண்ணும் கிடையாது).

மேகத்தையும், நிலாவையும் கூட பயன் படுத்தியிருக்காங்க.. எந்தப் பதிலும் வராது என்று தெரிந்தே அனுப்புவது. நம்ம குரூப்ல கூட அப்படித்தானே
அனுப்புறோம்.. ஏதோ ஒண்ணு ரெண்டு பதில் வரும்.

தூதாக வந்த புறாவை சாப்பிட்டு “ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போறா?” என்று புலம்பும் புலிகேசி வடிவேலையும் பாத்திருப்பீங்க..

ஒரு கடவுள்… ஒரு தூது… எல்லாம் மாறி எல்லாரும் இப்பொ, “உங்க இ
மெயில் ஐடி என்ன?” -ன்னு கேட்டா, நாகைந்து அள்ளிக் கொடுக்கிறாங்க.
போதாக்குறைக்கு வில்லங்கமான வேலைகளுக்கு தனி மெயில் வேற
இருக்கு என்பார்கள்..

அப்படியே கொஞ்சம் கம்பர் காலத்துக்கு போனா.. இதே மாதிரி ஒரு சீன் வருது. இராவணன் சீதையை கடத்திட்டு போகும் சமயம்.

யாராவது ராமன் இருக்கிற எடத்தை சொல்ல மாட்டாங்களான்னு கதறனும் சீதை.

சீதை ஹீரோயின் இல்லையா.. இப்படி பொட்டையா கதற முடியுமா என்ன?

அப்புடி இருந்தாலும் கம்பர் உட்ருவாரா அதுக்கு!! மேகம், சோலை, தேவதைகள் மூனு பேரைக் கூப்பிட்டு..ராமன் இருக்கிற எடம் உங்களுக்குத்தான் தெரியுமே.. கொஞ்சம் சொல்லப்படாதா… சொன்னா கொறைஞ்சா போயிடுவீங்க..
கம்பனின் வித்தியாசமான தூதுப் பாடல் இது.

செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வன தேவதைகாள்
அஞ்சேல் என நலகுதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர்

[மேகங்களே! சோலைகளே! காட்டில் வாழும் தேவதைகளே! சிறந்த வீரம்
உள்ளவரான என் கணவன் இருக்கும் இடத்தை நீங்கள் அறிவீர்கள். “நீ பயப்படாதே! உன் நிலையை உன் கணவரிடம் சொல்கிறோம்!” என்று
ஆறுதல் கூறினீர்கள் என்றால், நான் உயிர் பிழைப்பேன். அவ்வாறு நான் பிழைப்பதால் உங்களுக்கு நஷ்டம் உண்டாகுமா? உண்டாகாது]

ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு இமெயில் ஐடி மட்டும் வைத்திருப்பவர்கள் இனி மூணு வச்சிக்கிட்டு சுத்தலாம் (Applicable only for mails).

யாராவது கேட்டா.. கம்பரே சொல்லிட்டாருன்னு சொல்லுங்க.. எந்த கொம்பன் கேப்பான் அப்புறம்.

மீண்டும் அலசுவோம்.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


 ரெண்டு பழைய ஹிட் பாட்டுகள்.

 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…(நான் பழைய ராஜா பத்திய பாட்டு தான் சொல்றேன்)
பறவைகள் .. பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

 இதில் பார்வைகள் பலவிதம் என்பதும் வரும். அது என்ன?? பார்வைகள் பல விதம்.

ஆனா இன்னும் ஒருவரோ… பார்வை ஒன்றே போதுமே…பல்லாயிரம் சொல் வேணுமா?? என்றும் கேட்கிறார்.

ஆமாமா…ஒரே நபர் (பெண்ணாக இருந்தால்) சிறுமி, மாணவி, இளைஞி, வாலிபி, பிகர், செமகட்டை, மால், சகோதரி, மனைவி, ஆண்டி இப்படி எத்தனை விதமா பாக்குறொம்.. அப்போ பார்வை மட்டும் ஒன்னா எப்படி இருக்கும்???

பாசத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? –  இந்த மாதிரி வில்லங்க்கமான கேள்வியை ஒரு வாத்தியார் கேட்டார் பசங்க கிட்டே.. (கேட்டிருக்கக் கூடாது தான்)

பையன் சூப்பரா பதில் சொன்னான்.

சார்… நீங்க உங்க பொண்ணு மேலே வைக்கிறது பாசம். அதே நாங்க வச்சா … அதன் பேர் காதல்…

என்ன ஒரு வித்தியாசமான பார்வை பாத்தீங்களா??

அதே மாதிரி.. ரெண்டு பேர் பொண்ணு பாத்துட்டு வந்திட்டு பாடும் பாட்டு இருக்கே…

நான் பாத்த பெண்ணை நீ பார்க்கவில்லை… நீ பாத்த பெண்ணை நான் பார்க்கவில்லை…

இதுவும் ஒரு மாதிரியான கண் பார்வை தான்…

அப்படியே கொஞ்சம் காவிய காலத்துக்கு கொஞ்சம் பயணிக்கலாமே … (No air fare…all trips are free..free..free)

இலங்கைக்கு விசிட் வந்துட்டோம்… அப்படியே பேசிட்டே… அங்கே ரெண்டு பார்வைப் போர் நடக்குது.. (இலங்கைன்னா போர் தானா??)

ஒரு ராஜா சொல்றார்: வாவ்.. வாள் மாதிரி கூர்மையா இருக்கு… ஆனாலும் மை போட்டதாலே கூலா இருக்கே…இது யாரு??

ராஜாவோட தங்கை: எனக்கு என்னமோ கண்ணு தாமரை மாதிரி இருக்கு… வாய் பழம் மாதிரி இருக்கு. அப்புறம் கம்பீரமா இருக்கிற அந்த ஆளைப் பாத்த ஆண் மாதிரி தெரியுதே…

என்ன ஆச்சரியம்…!!! ரெண்டு பேரும் பாத்தது ஒரு நபர்… ஆனால் ஒருத்தருக்கு பெண்ணா தெரியுது. இன்னொருவருக்கு ஆண் போல் தெரியுது…

நாமளும் பாக்கலாமே.. அது யாருன்னு??

அந்த ராஜா: இராவணன்

தங்கை: சூர்ப்பநகை

ராஜாவின் பார்வை சீதை பக்கம்

தங்கையின் பார்வையோ ராமனின் பக்கம்… மேலும் படிக்க நீங்க போங்க கம்பராமாயணத்தில் சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம் பக்கம்..

அது சரி… உங்க பார்வை இப்போ யார் பக்கம்?? எந்தப் பக்கம்???

கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு


 கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு என்று ஒரு பாட்டு பாடி அனுராதாஸ்ரீராம் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆயிட்டாங்க… [ஆனா அவங்க கலர் ஒன்னும் கருப்பு கிடையாது… நல்ல கலர் தான்].  ஆனா அந்தப் பாட்டில் கருப்பா இருக்கும் எல்லாத்தையும் புடிச்சி ஒரு பெரிய்ய்ய்ய லிஸ்டே போட்டிருப்பாங்க…

எல்லாத்தையும் தூக்கிக் சாப்பிடும் ஒரு டயலாக் வடிவேல் காமெடியில் வரும் அவன் பயங்கர கருப்பா இருப்பான் ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்கே…

எது எப்படியோ கருப்புக்கு நம்மாளுங்க இவ்வளவு வக்காலத்து வாங்கினாலும் மார்க்கெட்டில் அதன் வேல்யூ கம்மி தான். அது கல்யாணமாய் இருந்தாலும் சரி வேறு எதுவாய் இருந்தாலும் சரி..

சுனாமி வந்த ஞாயிறை கருப்பு ஞாயிறு என்று தான் சொல்கிறார்கள்… சுனாமியை நேரில் பாத்த நமக்கு அப்படி ஒன்றும் அது அவ்வளவு கருப்பானதாய் தெரியலை…

இங்கே ஒரு கருப்பு பத்திய கம்பேரிஷன் வருது.. கொஞ்சம் பாக்கலாமே…

  1. அது தொட்டு உணரக் கூடியதாய் இருந்தது
  2.  ஒரு விம் பார் போட்டு கழுவினா… பாத்திரமே விம் பார் மாதிரி ஆயிடுமாம்.. (அடே.. இதுவும் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் மாதிரி இருக்கே… )
  3. பல கருப்புத் தூண்கள் மாதிரி
  4.  ஒரு மரத்தை வெட்டுவது மாதிரி (தேவைப்பட்டால்) வெட்டக் கூடியதாய் இருந்திச்சாம்…
  5.  இத்தனைக்கும் பின்னாடி… பாக்குறதுக்கு சூப்பரா …இனியதாய் இருந்திச்சாம்…

இது எப்படி இருக்கு???

சிதையைப் பத்தி கேட்ட மாத்திரத்தில் ராவணன் வீட்டில் வந்த இருள் இப்படி இருந்ததாம்…

ஒரு சின்ன திருத்தம்… வந்த இருள் அல்ல… வரவழைக்கப் பட்ட இருள்…..

ஆமா… நான் ஆணையிட்டால் அந்த பிறை மறைந்து விட்டால் … ரேஞ்ச்சில் இராவணன் பாடாமல் ஆணை இட, பிறை அப்படியே மரை கலண்டு போய் ஓட…இருள் வந்ததாம்… இது கம்பனின் கற்பனை…

 இதெல்லாம் எங்கே கம்பன் சொன்னான் ??? சும்மா சரடுன்னு .. யாராவது கேக்கிறீங்களா…??

அப்போ பாட்டும் போட்டுடறேன்… அரத்தம் புரிஞ்ச்சா படிங்க…இல்லாட்டி… அடுத்த போஸஸ்டிங்க் படிங்க…

ஆண்டு அப்பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்
தீண்டதற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டின் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி

கதை கந்தல் ஆன மாதிரி ஏதோ கம்பர் சொல்ற மாதிரி இருக்கு இல்லே…???

 மீண்டும் சந்திப்போம்

கிண்டல்கள்….கவிதைகள்..கள்…கள்…கள்….


கவிஞர் வாலிக்கு வயது ஆனாலும் அவரது வார்த்தைகள் என்றும் இளமையா இருக்கும்… அவரோட பழைய கவிதை. காதலி எழுதிய கடிதம் படித்து காதலன் எழுதுவது….இதோ (பொய்க்கால் குதிரைகள் தொகுப்பில் வந்தது. அக்னி சாட்சி படத்திலும் வந்த ஒன்று அது)

படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர அரங்கம் முழுதும் –
உந்தன்
பேனா முனையின் நடனம்.

சாதாரணமா துளி தேன்..அவ்வளவு சுவை..படி நிறைய தேன் எப்படி இருக்கும்??

அதே போல் கள் & அமுதம் இரண்டும் சேர்ந்து கொடுக்கிறார்கள்..
கள் அதிகம் குடிக்கலாம்… அதிக நாள் உயிர் வாழ முடியாது..
அமுதம் கொஞ்சமா குடிச்சாலே அதிக நாள் உயிர் வாழலாம்..

கள் அமுதம் என்றால்…போதையும் இருக்கும்..அதிக நாள் இருக்கலாம்…மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் எல்லாம் இங்கே கிடையாது… என்ன மாதிரியான கிண்டல் பாத்தீங்களா??

சரி அது அப்படியே கிடக்கட்டும். சமீபத்தில் முகநூல் ஒன்றில் படித்தது:

உன் முகம் profile photo போல்
இருக்கும் என்று நினைத்தேன்
ஆனால்..அது
வாக்காளர் அட்டையில்
உள்ள படம் போல் இருக்கே…???

இது கிண்டல் தானே???

ஒரு நண்பர் கேட்டார்… நீங்க இருப்பது லிட்டில் அந்தமான்…அதாவது சின்ன அந்தமான். அந்தமானில் உள்ளவர்கள் சின்ன வீடு வேண்டுமென்றால் அந்த சின்ன அந்தமானுக்கு வருவாங்களா?? என்றார்.
இடைவெளியே விடாமல்..அப்போ சின்ன அந்தமானில் இருப்பவங்க எங்கே போவாங்க?? என்றும் கேட்டார்…

கிண்டல் என்பது அவருக்கு கைவந்த… இல்லை.. இல்லை… வாய் வந்த கலை.

டிங்க்டிங்க்டிங்க்……

என்ன இது ஃபோன்…??

ஒரு நிமிஷம்.. நம்பர் இல்லாத கால்….

வணக்கம்…கிருஷ்ணமூர்த்தி..
வணக்கம்.. நீங்க???

போன் குரல்: கம்பர் இப்பக்கம்….ஏதோ கிண்டல் பத்தி கிண்டல் பண்றதா தெரிஞ்சது…

நான்: (மூக்கிலே வேத்திடுச்சா…) நீங்க சீரியஸா..10000 பாட்டு எழுதி இருக்கீங்க… எதுக்கு உங்களை வம்புக்கு இழுக்கனும்னு தான்??

போன் குரல்: இந்த தடவை பாட்டு நம்பர் சொல்றேன்: நீ ஒன்னோட ஸ்டைல்ல எழுது. சூர்ப்பணகைப் படலம் – பாடல் 357…

டொய்ங்க்ங்க்ங்க்

(இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது)

அடடே..அங்கே..செம கிண்டல் ஒண்ணு கீதப்பா… கம்பரா..???  கொக்கா???

சூர்ப்பணகை இலக்குவனோடு சேத்து வைக்க எவ்வளவோ கேக்கிறா… ராமன் கிட்டே…

ராமன் என்ன மாமாவா??? அண்ணன்… அல்லவா?? தப்பான ரூட்…

கடைசியில் சூர்ப்பணகைக்கு ஒரு ஐடியா வருது… நேரே ராமனைப் பாத்து,

ராமனே…எல்லாத்துக்கும் முடியாதுன்னு சொல்லிட்டே…என்னையே ஒரு handicaped quota வில் கன்சிடர் செய்யலாமே – என்கிறாள்..(மூக்கு இல்லாத காரணத்தால்).

ராமனுக்குப் புரியவில்லை… மூக்கை இழந்தவள் மூளையே பிசகி விட்டதா என்று… அரக்கியே இது கோட்டாவே இல்லாத காலம் ஆளை விடு…என்கிறான் ராமன்..

ஏ..ராமா… பொய் சொகிறாய் நீ… நான் என்னவோ..10% தான் ஊனமானவள்…
ஆனால் நீ 100% ஒரு உறுப்பை ஊனமானவளை கூடவே வைத்துள்ளாயே??

ராமனுக்கு புரியவில்லை….

சூர்ப்பணகை தொடர்கிறாள்…”உன் சீதையைப் பார் … இடையே இல்லையே..”

இது எப்படி இருக்கு?? கிண்டலின் உச்சமா இல்லே…

இளையவன் தான் அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும்
உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்க்கு இலாதவளோடும் அன்றோ நீ
நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்.

தேடல் தொடரும்…

வச்சிக்கவா ஒன்னே மட்டும் நெஞ்சுக்குள்ளே…


இந்தப் பேனாவை கொஞ்ச்சம் வச்சிக்கிங்க…இதில் எந்த தப்பும் இல்லை. நான் சிவப்புக் கலரில் ஒரு கார் வச்சிருக்கேன்…இதூம் தப்பே  இல்லை.. நான் ஒரு ஆளை வச்சிருக்கேன்…வேலைக்கு..என்று சொன்னால் கூட… கெட்பவர் ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்!! (நீங்களும் இப்படி சிரிச்சிருப்பீங்களே!!)

இந்த அள்வுக்கு அந்த “வச்சிக்கவா” ரொம்ப பாப்புலர்….

வச்சிக்கா உன்னே மட்டும் நெஞ்ச்சுக்குள்ளே..சத்தியமா நெஞ்சுக்குளே..ஒண்ணும் இல்லே..இது செமெயான ஒரு குத்துப்பாட்டு… எந்த கச்சேரி மேடைகளிலும் களை கட்டும்.

நம்ம கல்லூரி சில்வர் ஜுப்ளியில் கூட இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது ஞாபகம் இருக்கு.

மேடையிலும் கீழும் (தண்ணி போடாமல்) நம்மளும் ஆட..செமஜாலியான சங்கதி தான்…

வச்சிக்கவா பாட்டுக்கு அவ்வளவு மவுசு…இதை மட்டும் மனசுலே வச்சிக்கிங்க…

வாயை வச்சிட்டு சும்மா இருக்கியா? என்பது நான் அடிக்கடி வாங்கிய திட்டு…ஆனா
இதுக்கு ஒரு பழைய கதை ஒன்னு சொல்லட்டுமா?? (வேணாம்னா ஒண்ணும் விடப் போவதில்லை..).

ஒரு காடு…அம்மா மானும் குட்டி மானும் விளையாடி களைத்துப் போய் தாகத்துக்கு தண்ணிக்காய் அழைந்தனராம்.. அப்போ..ஒரு சின்ன குட்டையில் கொஞ்சூண்டு தண்ணி
இருந்ததை பாத்தாகளாம். ரெண்டு பேரும் குடிக்க வாய் வைத்தனர்… 

நேரமாக..நேரமாக…கொஞ்சமும் தண்ணி கொறையவே இல்லையாம்.. அம்மா மான் குடிக்கட்டும் என்று குட்டி மான் நினைக்க…குட்டிமான் குடிச்சிட்டு போவட்டும் என்று அம்மா மான் நினைக்க ..இதை நான் அந்தமானில் இருந்து எழுதாமல் சென்னை வந்து எழுதுறேன்…. ஆனா இதை தலைவனை பிரிந்த காதலி பாத்து ஆகா…என்று நெகிழ்ந்ததாக ஒரு சங்கப் பாடல் போகுது…

இது இப்படி இருக்க..சிலர் வாயை வச்சிட்டு சிரிச்சித் தொலைப்பாய்ங்க…தேவை இல்லாத நேரங்களில்..அது அதை விட வம்பு..

[சின்ன இடை சொருகல்: நீங்க கல கல டைப்பா அல்லது முசுடா?? நீங்களே
தெரிஞ்ச்சிக்கணுமா?? இப்போ கலகலப்பா இருக்கும் நம்ம நண்பர் கூட கொஞ்ச நேரம் பேசுங்க…ஒரு தடவை கூட நீங்க சிரிக்கலையா??? உங்களுக்கு முசுடுண்னு மத்தவங்க பேரு வச்சிருப்பாங்க..]

சிரிக்கக் கூடாத நேரத்தில் பாஞ்சாலி சிரித்ததால் தான் மகாபாரதமே உருவானது… அதே போல் பிள்ளைகள் விளையாடிய விளையாட்டை விளையாட்டா நெனைக்காமல், இது என்ன வெளெயாட்டான்னு சிரிக்காம விட்ட கூனி காரணம் தான் இராமயண கதையின் திருப்பு முனை.

எப்படியோ கஷ்டப்பட்டு ராமாயணம் கொண்டு வந்தாச்சி..அப்படியே..கம்பரைக்
கூப்பிட வேண்டியது தான்..

சிவன் ஒருத்தியை பாதியாவே வச்சிருக்கான்…இன்னொரு கடவுள் நெஞ்ச்சிலே
வச்சிருக்காக… கலைமகளை நாவில் வச்சிருக்கும் கடவுளு கீறாக…சிற்றிடை சீதையை
…ஆமா…அண்ணா.. உனக்குக் கெடைச்சா…எங்கெப்பா வச்சிக்கப் போறே??? இது இராவணனைப் பாத்து சூர்ப்பனகை பாடும் வச்சிக்கவா பாட்டு…

பாட்டும் இதோ:::-

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத தோள் வீர பெற்றால் அங்ஙனம் வைத்து வாழ்தி

நீதி ??? அது இல்லாமலா…:

அவன் சொல்றான்.. இவ சொல்றான்னு யாரையாவது வச்சிக்க கிளம்பிடாதீங்க…(சொல்றது கூடப் பிறந்த தங்கையாவே இருந்தாலும் சரி)…மனசு முழுக்க மனையாளை மட்டுமே வச்சிக்கிங்க…பாக்க நல்லது…பாக்கிறவங்களுக்கும் நல்லது…முக்கியமா பர்ஸுக்கும் நல்லது..

வரட்டுமா….மீண்டும் வருவேன்