தலைவாரி பூச்சூட்டி உன்னை….


இந்த விசுவல் மீடியா வந்தலும் வந்தது, எல்லாத்தையுமே நேரில் பாக்கிற மாதிரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த மீடியா மூலம் சில சிக்கலான நேரங்களையும் கவனிக்கவும் முடிகிறது. இந்தியப் பெண் உலக அழகி ஆகும் தருவாயிலும் சரி… ஒலிப்பிக்கில் மெடல் வாங்கும் நேரம் வந்தாலும் சரி.. ஆனந்தத்தில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிகிறது.. (நீங்களும் பாத்திருப்பீங்க தானே??).. ஆனால் இந்த 6 வது Indian Idol ஜெயித்த விபுல் ஆகட்டும், சுட்டும், குத்தியும் மெடல் வாங்கிய ஆண்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் அழுததாய்த் தெரியவில்லை. (கபில்தேவ் விக்கி விக்கி ஒருமுறை மீடியா முன்பு அழுதது ஒரு தனிக்கதை)

நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வரவழைக்கும் வித்தையினை இந்தப் பெண்கள் எங்கிருந்து தான் கற்றிருப்பார்களோ..?? (இப்படியே போனால், கிளிசரீன் கம்பெனிகள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்). என் கீழ் பணியாற்றும் மகளிரை அழைத்து, கேட்ட லீவு இல்லை என்றாலோ, அல்லது ஏன் இப்படி செய்தீர்கள்? என்று (மெதுவாய்க்) கேட்டாலே போதும் கண்ணில் இருந்து கொட கொட என்று கொட்ட ஆரம்பித்துவிடும். இதை இன்னொரு மகளிர் அணியிடம் கேட்ட போது தான், அதை அவர்கள் தண்ணீர் டேங்க் என்று பெயர் வைத்திருப்பது தெரிந்தது. எப்பொ வேண்டுமானாலும் வெடிக்க தயாராய் வைத்திருக்கும் டேங்க். (மனைவியின் கண்ணீர் எப்போது வரும் என்று அறிந்தவனுக்கு நோபல் பரிசே தரலாம்..)

முழு நீள நகைசுவைப் படம் என்று ஒருகாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி போடாமலும் கூட படம் முழுக்க சிரிப்பே என்று இருக்கும் படங்களும் இருந்தன. அனுபவி ராஜா அனுபவி என்று ஒரு செமெ படம். (முத்துக் குளிக்க வாரியாளா…பாட்டு அதில தான் வரும்) நாகேஷ் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய படம். அந்தப் படம் மட்டும் பாத்துட்டு நீங்க சிர்க்கலை என்றால்… கோவிச்சிக்க வேண்டாம். உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கு என்று அர்த்தம்.

சோகப் படங்கள் என்று சொல்லாமலேயே வந்த பல படங்கள் பாப்புலர் ஆகியும் உள்ளன. (ஒரு வேளை அட நம்ம வீட்டிலெ நடக்கிற சங்கதி என்று எல்லாருமே அனுபவிச்சி, அழுது பாத்திருப்பாங்களோ..?) திக்கற்ற பார்வதி, துலாபாரம் போன்ற படங்கள் சொல்லலாம். நான் அம்மாவின் முந்தானையை பிடித்து படம் பார்த்த அந்தக் காலம்.. (இப்பொ முந்தானை மட்டும் மாறலை.. ஆனா ஆள் மாறியாச்சி..அட..இன்னும் ஒடைச்சி சொல்லனுமா என்ன??) குலமா குணமா என்று சிவாஜி நடித்த படம். சோகத்தைப் பிழிந்து கண்ணீரில் சிவாஜி முகம் காட்டுவதை குளோசப்பில் காட்டும் போது இடைவேளை வரும். பரமக்குடி தியேட்டரில் முறுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வந்த அனைவருமே கண்களை துடைத்துக் கொண்டு வந்தது சிவாஜியின் வெற்றியின் ரகசியம்.

சட்டியிலெ இருக்கிறது தானே அகப்பையிலெ வரும்?? கண்ணீரே வாழ்க்கையா இருப்போர்க்கு தாலாட்டும் கண்ணீரை வைத்தே வரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்தப் பாட்டு?? தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் பாட்டு அது… ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து, தொட்டில் நனையும் வரை… உன் தூக்கம் கலையும் வரை கண்ணான பூமகனே… கண்ணுறங்கு சூரியனே.. (சுட்டெரிக்கும் சூரியனை ஞாபகம் வைத்து மகனை சூரியன் என்பதும் அழகு தான்.)

பச்சிளங் குழந்தைகள் கண்ணீர் சிந்தும் இன்னொரு நேரங்கள், பள்ளிக்கூடம் போகும் தறுவாய் தான். என்னோட ரெண்டாம் வகுப்பு டீச்சரை இப்பொ நெனைச்சாலும் பயம் வரும். கறுப்பா பயங்கரமாயும், பயங்கர கறுப்பாவும் வாட்ட சாட்டமா கையில் பிரம்போடு தான் காட்சி அளிப்பார். பனைமரம் பற்றி விரிவாய் சிலாகித்து பாடம் நடத்தப் போய், பனைமரம் டீச்சர் என்று நான் வைத்த பெயர் ரொம்ப காலம் தொடர்ந்து வந்தது. பாரதி தாசனின் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் என்ற கேள்விக்கு பனைமரம் டீச்சர் என்று நான் பதில் சொல்லி இருப்பேன்.

இந்த கண்ணீர் பத்திய சமீபத்திய பாடல் வரிகள் நல்ல ஹிட். கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒடும் நண்பன் போதும்டா.. இது லேட்டஸ்ட் தத்துவம். சமீபத்திய படங்களில் சோகம் இல்லாவிட்டாலும் நெகிழ்வான படக்காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். திரி இடியட் படம் எத்தனை முறை பார்த்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் கண் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை. (அது சரி… அதை தமிழில் எடுத்தார்களே… அதிலும் அந்த் effect இருந்ததா? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்!!!)

கண்ணீர் அஞ்சலி சில சம்யங்களில் மனசை என்னவோ செய்யும். கண்ணதாசனுக்காய் வாலி பாடிய அஞ்சலியில் சில வரிகள் இதோ:

உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

மனதைப் பிசையும் வரிகள் இவை… உங்களுக்கு எப்படி இருக்கு??

வாலி கண்ணதாசன் பாரதி தாசன் வரை கண்ணீர் பத்தி சொல்லிட்டு அப்படியே போனா, நம்ம கம்பர் கோவிச்சிக்க மாட்டாரா?? (இப்படி சுத்தி வளைக்கிறதே கம்பனை வம்புக்கு இழுக்கத்தானே..!! அட அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???)

சீதையிடம் அனுமன் ராமன் சோகத்தில் கண்ணீர் விட்டதை அசோக வனத்தில் சொல்லும் காட்சி. ராமர் எப்படி இருந்தாராம்? தூக்கம் இல்லாமல் கண் செவந்து போய், அறிவே கலங்கி நெருப்பில் இட்ட மெழுகு போல் மெலிந்தே போனாராம். அப்புறம் இந்த கண்ணீர்… இருக்கே அது அவர் போகும் வழி எல்லாம் சேறாக்கியதாம்.. (கல்லும் முள்ளுமாய் இருக்கும் காடே சேறு ஆனதாம் கண்ணீரால் – இது தான் கம்பரின் ஓவர் பில்டப் .. சாரி..சாரி.. கற்பனைத் திறம்)

அவ்வழி நின்னைக் காணாது அயருவான் அரிதின்தேறி
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து அரங்கலுற்றான்.

ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??

என்ன சுகம்? ம் ம் ம் என்ன சுகம்?


நினைத்தாலே இனிக்கும் என்பார்கள். சமீபகாலமாய் முகநூல்களில் வெளிவரும் போட்டோவைப் பாத்தாலே வாயில் ஊறும். மீன் பொறியல், இறால் வறுவல் என்று படமாய்ப் போட்டு தாளிப்பது ஒரு பக்கம். சிரிக்கும் சிங்காரியான தமண்ணா (இன்னுமா தமண்ணா என்று கேக்காதீங்க) படங்கள் மறுபக்கம். இப்பத்தான் புரியுது, நீங்க ஏன் அடிக்கடி Facebook பக்கம் போறீங்க? என்று மனைவியிடமிருந்து இடி எல்லாப் பக்கமும். இது நினைத்தாலெ சிரிப்பாத்தான் இருக்கும். (ஆமா கடுப்பா இருக்கு என்கிறதை தைரியமா எழுதவா முடியும்?)

சுகமான சுவையான சேதிகளை ஜாலியா எடுத்துக்கும் மக்கள் சோகத்தில் அப்படியே துவண்டு போவது தான் உறுத்தல் தரும் விஷயம். சோகத்தை தோல்வியை எப்படி எதிர் கொள்வது? இது ஒண்ணும் பெரிய்ய கம்பசூத்திரம் இல்லை. (கம்பர் சூத்திரம் எப்படியும் கடைசியில் வரத்தானே போகுது?).

தோல்விக்கு நம்மை தய்யார் நிலைக்கு வைத்திருப்பது முதல் படி. இது தன்னம்பிக்கைக்கு எதிரானது இல்லையா என்று சுய முன்னேற்ற நூல்கள் படித்தவர்கள் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம். 10 பேருக்கான வேலைக்கான தேர்வு நடக்கிறது. 2500 பேர் மோதுகிறார்கள். அதில் பத்து பேர் தான் வெற்றி பெற இயலும். மீதம் 2490 பேர் தோல்வி என்று முடங்கி விட முடியுமா என்ன? அந்த 10 பேரில் ஒருவராய் வர முடியுமா? என்று பாக்கனும். இல்லையா.. அடுத்த வாய்ப்பு தேடிப் போகணும். புலம்பாமல்.

கிடைக்காத வாய்ப்புக்கு புலம்புவதை விட கிடைத்த வாய்ப்பை செமைய்யா பயன்படுத்திக்க வேன்டும். உங்களுக்கு ஒரு கணேசன் கதை சொல்லவா?

சத்ரபதி சிவாஜி நாடகத்திற்கு அதற்கு முன்னர் வரை நடித்து வந்த நடிகர் (எம் ஜி ஆர் என்று படித்த நினைவு) அன்று தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாமல் போக, அரை மணி நேரம் வசனம் பார்க்க கிடைத்தது இன்னொரு நடிகருக்கு. மதிய உணவினை தியாகம் செய்து நடித்தே காண்பித்ததால் அவருக்கு உடனே நடிக்கவே வாய்ப்பு தந்தார்கள். அன்று தான் அந்த கணேசன் சிவாஜி கணேசனாக பிறவி எடுத்த தினம். இப்பொல்லாம் நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் என்று பாராட்டும் அந்த சிவாஜி கணேசன் கதை மூலமாக, நாம் வாய்ப்பை பயன்படுத்தல் எப்படி? என்ற .செய்தி கற்க வேண்டும்.

என் அலுவலக நண்பர் ராம்கி ஒரு தேவியின் கதை சொன்னார். சித்தியின் கொடுமை காரணமாய் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு அறையில் பூட்டப்பட்டாளாம் அந்த தேவி. தேவிக்கு கதவு தான் பூட்டப்பட்டது. அறிவின் கதவு அப்போது தான் திறந்தது. விளையாட நண்பர்கள் யாரும் இல்லாததால் நம்பர்களுடன் விளையாடி மேதையானராம் அந்த தேவி. சகுந்தலா தேவி தான் அந்த தண்டனையைக் கூட வாய்ப்பை பயன்படுத்திய கணித மேதை.

அங்கே இங்கே ஏன் போகணும். என் கதையும் எடுத்து உட்றேனே.. 1987 களில் மாற்றல் ஆன போது உக்கார இடம் இல்லாமல் போய் கம்ப்யூட்டர் ரூமில் நுழைந்தேன். அங்குள்ளோர் பிள்ளையார் படம் போட்டு விளையாடிக் கொண்டிருக்க, நான் ஒரு துறைமுகப்படத்தின் படம் போட பிள்ளையார் சுழி போட்டேன். பாத்த அதிகாரி என்னை மூணு நாள் கணிணி பயிற்சிக்கு சென்னை அனுப்பி வைத்தார். சிமெண்ட், கல்லு, கம்பிகளோடு மட்டும் நின்றிருக்க வேண்டிய என்னை இன்று வலைப்பூ வரை வலம் வர வைத்தது, அந்த உக்கார இடம் இல்லா பிரச்சினை தான்…

தோல்வியால் துவண்டு கிடப்பவர்க்கு இரு கோடுகள் தத்துவம் தான் லாயக்கு. அதாவது நம்முடைய தோல்விகள் சின்னதாக வேண்டுமா? நம்மை பெரிதாக ஆக்கிக்கொள்ள வேன்டியது தான். பிரச்சினை சின்னது ஆகிவிடும். பிரச்சினைக்கான ஆதி காரணம் என்ன என்று பாத்தா.. பயம். ஏன் பயம்? அது பற்றிய அறிவு… தெளிவு இல்லாதது. ஆக அறிவை வளர்த்துக் கொண்டுவிட்டால் பயம் ஏது? பிரச்சினை ஏது?

உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்கிறது பழைய பாடல். காலில் செருப்பு இல்லையா? காலே இல்லாதவனைப் பார் என்கிறது தத்துவம். இன்னும் தெம்பு வர “ஒவ்வொரு பூக்களிலும்..” பாட்டு கேளுங்களேன். கொஞ்ச நேரம் பதுங்கிட்டு மறுபடியும் பாயத் தயாராயிடுங்க.

அந்தமானில் முன்பெல்லாம் தமிழர்களை அய்யாலோக் (ayyalog) என்பர் மிக ஏளனமாக. காலம் உருண்டது. தமிழர்களில் இப்போது தலைவர்கள் உருவானார்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் இப்படி உருவாக உருவாக, மரியாதை தானே வருகிறது தமிழர்களுக்கு. தரம் உயர, நம் தரம் உயர வேண்டும் என்பது மட்டும் நிரந்தரம்.

நம்மை நாம் விஸ்வரூபம் எடுத்து வைத்துக் கொண்டால் நம்மை நோக்கி வரும் துன்பங்களைக்கூட ஜாலியா எடுத்துக்கலாம். என்ன சுகம்..ம்..ம்.. என்றும் பாடலாம். அப்பாடா எப்படியோ தலைப்பைக் கொண்டு வந்தாச்சி.. இனி கம்பரையும் கொண்டு வரனுமே..!! இழுத்திட்டாப் போச்சி…

ஒரு மனிஷன் ஒடம்புலெ சாதாரண காயம் பட்டாலே அலறி அடித்து ஆர்ப்பாட்டம் செய்றோம். அம்பு பாஞ்சா எப்படி வெலெலெத்துப் போவோம்? ஓர் ஒடம்புலெ அம்பு படுது. அந்த அம்பு எப்பேற்பட்டது தெரியுமா? அனல் பறக்கும் அம்பாம் அது. அது ஒடம்புலெ படுது. பட்ட ஆளுக்கு வடிவேல் தூங்குற மாதிரி ஆனந்தமா இருக்காம். அப்படியே யாராவது வந்து சொறிந்து விட்டா எப்படி இருக்கும்? – னு ஏங்கும் போது, அம்பு வந்து தைத்ததே, சொறிஞ்ச மாதிரி சுகமா இருக்காம். யாருக்கு? விஸ்வரூபம் எடுத்து படுத்திருக்கும் அனுமனுக்கு. (உங்களை உயர்த்திக் கொண்டால் துயரம் ஏதும் இல்லை இது அனுமன் சொல்லாத கீதை… சாரி ஹீதை)

எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன
பொறிந்த எழு படைக்கலம் அரக்கர் போக்கினார்
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுறச்
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான்

கம்பன் சொன்னா அந்த ஆளு என்ன பெரிய்ய கொம்பனான்னு கேப்பீங்க. ஆனா ஷேக்ஸ்பியர் சொன்னா கேப்பீங்க தானே.. இதோ அவர் சொல்லும் வாழ்வில் வெற்றிபெற மூன்று வழிகள்:

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
பிறரைக்காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

வாழ்த்துக்களுடன்… மறுபடியும் சந்திப்போம்.

பறக்கும்… பட்டம் பறக்கும்…


ராசாத்தி ஒன்னெக் கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே…

இந்தப் பாடல் இன்று கேட்டாலும் தேனாய் இனிக்கும்.. மனதை நெருடும் ஒரு சோகம் இளையோடும் பாடல் அது.. ஜெயசந்திரன் குரல், விஜய்காந்துக்கு பொருந்தாவிட்டாலும் கூட, அந்த அசாத்திய நடிப்பில் அந்தக் குறையே தெரியாமலே போனதுதான் இதில் ஒரு சிறப்பான அம்சம்.

அதில் காத்தாடியை மட்டும் நாம வச்சிட்டு வெளியெ வந்து விடுவோம். ஏனென்றால் விஜயகாந்த இப்போது பரபரப்பாய் அரசியலில் பேசப் பட்டு வருகிறார். நமக்கெதுக்கு அந்த மதுரையோட பொல்லாப்பு??

சிறு வயதில் காத்தாடி விட்டு மகிழாத ஆட்களே மிகக் குறைவு என்றே சொல்லலாம். K for Kite என்று படிக்கும் எல்லா இளைய தலைமுறையும் கூட அதை ஒரு முறையாவது விடாமலா போய் விடுவார்கள். மொட்டை மாடியிலும், கடற்கரைகளிலும், கிரவுண்ட்களிலும் பார்க்கலாம்.

அந்தமானில் இல்லாத சிலவைகள் என்று பட்டியல் போட்டால் கமுதை குதிரை எல்லாம் இருக்கும். (அதாவது இங்கு இல்லை). பட்டம் விட்டு விளையாடும் பழக்கும் கூட இங்கு இல்லை. ஒரு வேளை 8 மாதம் மழை பெய்வதால் இது எடுபடாமல் போயிருக்குமோ?? (ஆனா கருவாடு மட்டும் செமயா தயாராவதாய் தகவல். அது எப்படி மழையிலும்.. மலைப்பாத்தான் இருக்கு)

காத்தாடி விடும் நிகழ்வை இன்றும் ஒரு திருவிழாவாக ஆக்கி மகிழ்கிறது மோடியின் குஜராத் அரசு. இதற்கு பக்க பலமாய் வண்ண வண்ண காத்தாடிகளோடு அமிதாப் கூட விளம்பரத்திலேயே அசத்து அசத்து என்று அசத்துகிறார்.

காத்தாடி ராமமூர்த்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதனை இங்கே சொல்லாமல் விடுகிறேன். (அப்பொ இங்கே சொல்லப்பட்ட மத்த சேதி எல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன?? என்று நீங்கள் கோபப் பட வேண்டாம்..ப்ளீஸ்).. அப்பொ சொல்லிட்டா பிரச்சினை இல்லை தானே?

மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி இந்தப் பேர் எல்லாம் எப்படி வந்தது? அவர்கள் நாடகத்தில் நடித்த பாத்திரத்தின் பெயர் தான் பின்னர் நிலைத்துவிட்டது. காத்தாடி என்ற பாத்திரத்தில் நடித்து கலக்கிய ராமமூர்த்திக்கு காத்தாடி பறக்காமல் ஒட்டிக் கொண்டது தான் ஆச்சரியம்.
எனக்கு அந்த கவலை இல்லை.. கல்லூரி நாடகத்தில் பெண் வேடம் போட்டு தான் நடித்திருந்தேன்.. கலக்கினேன் என்று நானே எப்படி சொல்ல முடியும்? நண்பர்கள் கிரங்கித்தான் போனார்கள் (என் மேக்கப் பார்த்து..)

காத்தாடியின் இன்னொரு பெயர் தான் பட்டம். ரொம்பவும் மண்டையை ஒடெச்சி படிச்சி வாங்குறதுக்கும் பட்டம் என்கிறார்கள்.. ஆனா ஜாலியா செஞ்சி விளையாடற பொருளுக்கும் பட்டம் என்கிறார்கள். என்ன இது பெரிய்ய வெளெயாட்டா இருக்கே… விருதுக்கும் கூட பட்டம் தருகிறார்கள் என்றும் சொல்வதுண்டு..

இந்த பட்டம் என்றவுடன் ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வரும்.

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல் போலே..

பட்டம் போல் அவர் பள்பளப்பார்…
நூல் போலே இவர் இளைத்திருப்பார்..

இரு வேறு உலகம் இது என்றால்..
இறைவன் என்பவன் எதற்காக??

இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன் தான் படைத்தானா?

இந்தப் பாடல் தரும் சேதியினைத்தான் நம்மூர் உலக நாயகன் கமல் சொல்றார் இப்படி: “அனாதை என்பவர்கள் கடவுளின் குழந்தை என்பது உண்மையாக இருக்குமானால், அந்த கடவுளுக்கே குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்”

முரட்டுத்தனமான நாத்திக வாதமாய் இருப்பினும் கூட, உண்மை அதில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

என்னாலெ காத்தாடி பத்தி, இப்படி நடிகர் திலகம் வரை தான் யோசனை செய்ய முடியுது. ஆனா… இதே மேட்டரை Mr கம்பர் யோசிச்சா…? அவர் எப்படி யோசிப்பார்? அங்கும் ஒரு திலகம் வருகிறது. கொஞ்சம் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு தான் வருவோமே!!

அனுமனின் வீரதீரச் செயல் பார்வையில் படுது நம்ப கம்பருக்கு. உத்துப் பாத்தார்.. சாவே வராத வரம் வாங்கிய தலைவருக்கெல்லாம் திலகம் மாதிரி இருந்தாராம் நம்ம அனுமன். (இப்பொ தெரியுதா..?? நம்மாளுங்க ஏன் நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் பெயர் வைச்சாங்க என்று!!)

அந்த வீரன், அரக்கியின் வாயில் புகுந்து குடல்களைச் சுற்றிக் கொண்டு வானத்தே உயர எழுந்தானாம். அதைப் பாத்த கம்பனுக்கு கயிறு நிலத்திலிருந்து புறப்பட்டு உயரப் பறக்கும் காத்தாடி மாதிரி இருந்ததாம்..

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி சுடர்கொண்டு உடன் எழுந்தான்
மாகால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்.

அது சரி…. உங்களுக்கும் எதைப் பாத்தாவது
இப்படி காத்தாடி ஞாபகம் வருதா?? வந்தா சொல்லுங்க…

நம்பிக்கை (குழந்தை) நட்சத்திரங்கள்…


இப்போதெல்லாம் நம் காதுகளில் அடிக்கடி விழும் வாசகங்கள் என்ன தெரியுமா???

… வரும் காலம் எப்படி இருக்குமோ!!!

….குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ!!!

இதற்கு ஒரு பதில் கிடைத்தது.

லிட்டில் அந்தமனில் பட்டர்ஃபிளை என்ற ஒரு குழந்தைகள் முன்னேற்ற தொண்டு நிறுவனம் பள்ளி குழந்தகளுக்கான பெயிண்டிங் & மாடல்களின் கன்காட்சி நடத்தியது.

Engineering Drawing Subject- குறைவான் மதிப்பெண் வாங்கிய நான் அந்த டிராயிங் கன்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது, கை கொஞ்சம் நடுங்கியது.

என் ஜி ஓ மேலும் குழந்தைகள் மேலும் நம்பிக்கையின்றித்தான் உள்ளே நுழைந்தேன்..கிட்டத்தட்ட 80க்கும் மேலான ஓவியங்கள் 15க்கும் அதிகமான மாடல்கள் என்று பசங்கள் அசத்திவிட்டனர்.

ஓவியங்களை ஒரு பார்வை பார்த்ததில், தண்ணி அடிக்கும் அப்பா, அம்மாவை அடிக்கும் அப்பா, ஆறுதல் சொல்லும் அம்மா, அப்பா அம்மா போடும் சண்டையில் படிக்க முடியாமல் தவிப்பு, குழந்தகளின் உரிமை, பாலியல் வன்மம், தூங்கும் வாத்தியார்… இப்படி தம்மை பாதித்த பல….

மாடலகள் மட்டும் குறைவா என்ன?? அரசு சார்பில் ஒரு மாடல் தயாரிக்க விசாரித்ததில் ஒரு லட்சம் ஆகும் என்றனர். இங்கே.. பசங்க பூந்து கலக்கி இருந்தாங்க.

இங்கே சின்ன பசங்க கையில் கிடைத்த சரக்கை வைத்து ஜெயில், காலனி, எரிமலை, பூகம்பம்…இப்படியும் கலக்கி இருந்தனர்.

விழா நிறைவில் குட்டி கதையுடன் முடித்தேன்:

சத்ரபதி சிவாஜியை கொல்ல ஒரு இளைஞன் வந்தானாம். இடையே மாட்டிக் கொண்டான். சிவாஜி அந்த இளைஞனை அழைத்து ஏன் என்னை கொல்ல வந்தாய் என்று கேட்டாராம்.

இளைஞனோ, தான் வறுமையில் வாடுவதாகவும் தன் தாயாரின் மருத்துவ
செலவுக்கும் பணம் தேவைப்பட்டதால் அதனை சிவாஜியின் எதிரிகள் பயன் படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தான்.

அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி ஆகிவிட்டது.

இளைஞன் சாவதற்கு முன் தன் தாயிடம் ஆசி வாங்கி வர ஆசைப்பட்டான்.
மந்திரிமார்கள் அனுமதி மறுக்க, அவனை நம்பி தனியே சிவாஜி அனுப்பி வைத்தாராம்.

நம்பிக்கை பலன் தந்தது. தாயிடம் ஆசி வாங்கி உடனே திரும்பி வந்தான்.
மரண தண்டனை கேன்சல் ஆகி தளபதி ஆனான்..

இதே போல்… உங்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்…
நீங்கள் முன்னேற தயாரா??? என்று கேட்டேன்..

தயார் ஹை… என்று ஒருமித்த குரலில் பதில் வந்தது.

நம்பிக்கை சுடர் தெரிகிறது.. உங்களுக்கு???

சீதை எத்தனை சீதையடா


ராமன் எத்தனை ராமனடி என்று தான் எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க.. அது ஒரு சூப்பர் படம்… சிவாஜி காக்கா வலிப்பு வந்த மாதிரி ஆரம்பிச்சி அப்புறம் நடிகனாகி பெரிய ஹீரோ ஆகி கலக்கும் படம் அது.

தமிழக மக்களுக்கே ஆளுயர மாலையை அறிமுகம் செய்தது அந்தப் படம் தான்.

ராமன்…எத்தனை ராமனடி என்று ஒரு பாட்டும் உண்டு. ஆனா அது அந்த ராமன் எத்தனை ராமனடி படத்தில் கிடையாது. அது லட்சுமி கல்யாணம் படத்தில் வரும் பாட்டு.

அந்தப் பாட்டில் சிவராமன் ரகுராமன் என்று ஊரில் இருக்கும் எல்லா ராமன் பத்தியும் வரும். ஆனா சாப்பாட்டு ராமன் பத்தி மட்டும் வராது.

சாப்பாட்டு ராமன் கேரக்டரத்தான்,  ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார்.

ஹீரோ டாமினேட்டட் உலகில் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மரியாதை இல்லை தான். என்னைக்காவது அன்னக்கிளி, ஆட்டுக்கார அலமேலு என்று பட டைட்டில் வைப்பதோடு சரி..

மூன்றாம் பிறை… ஒரு அருமையான படம். படம் ஆரம்பித்த இடத்திலிருந்து கடைசி வரை நடிப்பில் சூரப்புலியாய் மின்னுபவர் ஸ்ரீதேவி. ஆனால் படம் முடியும் போது ஒரு சின்ன அலுமினிய சட்டியை வைத்து ஆட்ரா ராமா… ஆட்ரா ராமா.. (அட ராமா அங்கேயும் ராமா தானா??) சொல்லி ரெண்டு மூனு பல்டி அடிச்சி, ஜனாதிபதி அவார்ட் வரை வாங்கிட்டார் பரமக்குடியார். (பின்னெ பரமக்குடியா கொக்கா..??… நமக்கு சொந்த ஊரும் பரமககுடிங்க.)

நாம எப்பவுமே ஹீரோ பக்கம் தானா??

கம்பர் கிட்டே கேட்டான்..

நான் அப்படி இல்லை – என்றார்.

ஆதாரம் தேடினேன்.. கிடைத்தது.

அமைச்சர்களை மாண்புமிகு என்று சொல்வதைப் போல்… நாம வொர்க் பண்ற ஆபீஸின் பாஸைப் பத்தி சொல்லும் போது Manager Sir, Director Saheb என்று தான் சொல்வோம்.

அடுத்த துறை ஆட்களை அவன் இவன் என்போம்..(அது வேறு கதை).

சீதை பற்றி எப்போது எழுதும் போதும் ஏதாவது ஒரு மாண்புமிகு வைத்து தான் கம்பர் எழுதி  இருக்கிறார்.

தசரதன், கைகேயி, ராமன், கூனி, பரதன், லட்சுமணன், ராவணன் இப்படி எல்லாரையும் பலதடவை மொட்டையாய் சொன்ன கம்பர் சீதையை ஒரு படி தலையில் வைத்து தான் ஆடியிருக்கார்..

பாட்டு சொல்ல ஆரம்பித்தால், என் போஸ்டிங்க் அளவில்  100போஸ்டிங்கள் போடலாம்.  சும்மா சாம்பிளுக்கு கொஞ்சம் பாக்கலாமே..

  1. எழுதிய சித்திரம் போன்ற (சீதை)..: எழுது பாவை அனையாள்
  2. குரா மரத்தின் அரும்பும் கொங்கு மரத்தின் குவிந்த அரும்பும் கூந்தலில் மலரப் பெற்ற பூங்கொம்பு போன்ற சீதை: குரவம் குவி கோங்க்கு அலர் கொம்பினொடும்
  3. பெண் மானைப் போன்ற சீதை: மானே அனையாளொடு
  4. பெண் மானின் கண் அழகைப் பெற்ற சீதை: நவ்வியின் விழியவளோடு
  5.  பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய சீதை: இந்து நன்னுதல்

இப்படி சொல்லுதற்கு பதிலாய்… சீதை எத்தனை சீதையடா என்கிறேன் நான்.

நீங்க என்ன சொல்றீங்க??