அந்தமான் என்றாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது ஜெயில்தான். இந்த பிளாக் ஆரம்பிச்சி 145 போஸ்ட் தாண்டி ஓடும் போது தான் இந்த சிறை பத்தி எழுதாம விட்டது தெரியுது. (அது சரி இன்னெக்கி என்ன ஆச்சி?? அந்த திடீர் ஞானோதயம் என்று கேக்கீகளா??… இருக்கு… அதையும் தான் சொல்லாமெலெயா போயிடுவேன்??)
அந்தமானில் அந்த கூண்டுச்சிறை உருவாக வேண்டும் என்ற சூழல் உருவான இடத்துக்கு இன்னெக்கி போனேன். ஆனா நீங்க அப்படியே காலச்சக்கரத்தை பின்னாடி சுத்தி இதே மாதம் 8ம் தேதி.. ஆனா வருஷம் மட்டும் 1872க்கு வரணும்.
அந்தமானின் தீவுகளில் மவுண்ட் ஹரியட் எனப்படும் ஓர் உயரமான இடம் அது. (இப்போது கூட அந்த இடம் மத்த இடங்களை விட ரொம்ப கூலா இருக்கும். ஹனிமூன் ஜோடிகளுக்கு உகந்த இடம் என்பது ஒரு கூடுதல் தகவல்). லார்ட் மயோவுக்கும் அந்த இடம் ரொப்பவும் பிடிச்சிருந்தது.. இருக்காதா பின்னெ…?? ராணியும் தான் கூடவே வந்திருந்தாகலாம். (ராணி தானா என்பதற்கு வரலாற்று சான்று தேட வேண்டும்)
ஒரு தேனிலவுக் கூடம் கட்டலாமா என்று யோசிக்க வேண்டிய நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சான்டேரியம் கட்டலாமே என்று யோசித்தாராம் அந்த மனுஷன். ஒரு வேளை ராணியை தனியே உட்ரலாம் என்ற எண்ணமா இருந்திருக்குமா?? யாருக்கு தெரியும்??
அதே யோசனையில் 15 நிமிடம் பயணம் செய்து திரும்புகிறார் லார்ட் மயோ. ஹோப் டவுன் என்ற இடத்தில் நல்ல ஒரு வரவேற்பு காத்திருக்கிறது அவருக்கு. ராணியை சொகுசான உயரமான இடத்தில் உக்கார வைத்து தனக்கு கொடுக்கப்பட இருக்கும் வரவேற்பை ஏற்க தெம்பாக நடக்கிறார். அது அவரது கடைசி நடை என்பது அவருக்கே அப்போது தெரியாது.
வரவேற்பு ஏற்பாடு சரியாக ராணியால் பார்க்க முடிந்ததோ இல்லையோ ஒரு கொலையை அவரால் தெளிவாய் பார்க்க முடிந்தது. ஆம் கொலை செய்தவர் ஷேர் அலி. பரிதாபமாய் உயிர்விட்டவர் வேறு யாரும் அல்ல… லார்ட் மயோ தான் அது. கணவரின் கடைசி வார்த்தைகளை உயிர் பிரியும் போது கேட்க முடியவில்லை ராணியால். ஏனென்றால், அவரரோ கொலையைப் பாத்து மயங்கி கிடந்தார்.
அந்த ஒரு உயிர் பலி தான், அதுவரை இருந்த “அந்தமான் ஓபன் ஜெயில்” என்ற கான்செப்டை குழி தோண்டி புதைக்க வைத்து, கூண்டுச்சிறை என்னும் கொடுஞ்சிறை தோன்ற அஸ்திவாரம் போட்டது. எண்ணம் ஈடேற 24 ஆண்டுகள் ஆனது. 1896ல் செல்லுலார் ஜெயிலின் அஸ்திவாரம் தோண்டும் பணி ஆரம்பம் ஆனது.
அங்கு அப்போது கணபதி ஹோமம் செய்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால் அந்த லார்ட் மயோ கொல்லப்பட்ட பகுதியில் அந்த ஹோமம் நடந்தது இன்று. முத்து மாரியம்மன் கோவில் ஒன்று தமிழர்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் வரை இனிதாய் இன்று நிகழ்ந்தது.
எல்லா கும்பாபிஷேக நிகழ்விலும் தவறாது கருடன் வருவதாய் சொல்கிறார்கள். இன்றும் 20 நிமிட மந்திரங்களுக்குப் பின்னர் ரெண்டு கருடர்கள் வந்து வட்டமிட்டது இன்றைய ஹைலைட் சமாச்சாரங்கள். கருடன் வந்தது இருக்கட்டும்… கருடன் சொன்ன சேதி பத்தி எதும் தெரியுமா உங்களுக்கு??
அதெச் தெரிஞ்ச்சிக்க இன்னும் கம்ப காலம் வரைக்கும் போயே ஆக வேண்டும். அடிக்கடி கோபப் படுவோர்கள் கவனத்திற்கு… இனி மேல் ஏன் இப்படி லொள் என்று விழுகிறீர்கள்? என்று யாராவது கேட்டா, தைரியமா சொல்லுங்க.. அந்த ராமனுக்கே கோபம் வந்திருக்கே என்று.
ராமர் கோபப்பட்ட இடம் அந்த ஜடாயு என்ற கருடன் சொன்ன செய்தி (சீதையினை ராவணன் வஞ்சித்து எடுத்துப் போன தகவல்) கேட்ட போது தான்.
இந்த மூ உலகத்தையும் இந்த சினம் கொண்ட அம்பினால் அழிப்பேன் என்ற ராமனின் கூற்றுக்கு ஜடாயு பொறுப்பாய் சொன்ன பதில்: ஓர் அற்பன் தீமை செய்தால் அதுக்காக தீமை செய்யாத உலகத்தையா அழிப்பது?? கோபம் வேண்டாம்… இராமன் சீற்றம் குறைந்தது…
சீறி இவ்உலகம் மூன்றும் தீந்து உக சினவாயம்பால்
நூறுவென் என்று கையில் நோக்கிய காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி
ஒரு லார்ட் மயோவின் மறைவுக்கு பின்னால் எழுந்த கோபம், எத்தனை எத்தனை கொடுமைகளை அந்த சிறையால் அனுபவிக்க வைத்தது… ஆனால் நம்ம கம்பர் சொல்லும் சேதியோ.. அமைதிப் பாதை…
என்ன நான் சொல்வது சரி தானே??