பாமரன் பார்வையில் ஃபாரின் – 87


மலேசியாவின் அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டதை அறிவிக்கும் தினசரியினை வைத்திருந்தனர். 1965 களில் சிங்கப்பூருக்கு நடந்த அல்லது திணிக்கப்பட்ட அநீதி என்றே சொல்லலாம்.

ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தும் வேலை தான் ஒரு நாட்டுக்கும் வந்து வாய்த்தது.

எனக்கு என்னமோ 1968 இல் கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே

பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்

அந்தப்பாடலை சிவாஜிக்குப் பதிலா லீ குவான் பாடுவதா நினைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தும் வார்த்தைகள். ஒரு வளமும் இல்லாத இடமாய் சிங்கப்பூர். அட…. குடிக்கத்தண்ணி கூட மலேசியா தந்தாத்தான் உண்டு.

எப்படி இருந்த சிங்கப்பூர்… இன்று… உச்சத்தில்.

வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் லீக்கு வணக்கம் சொல்லியே ஆகணும்.

யாரது?? யாரது??? யாரது????


யாரது?? யாரது??? யாரது????

என்று விஜய் காவலன் படத்தில் அப்பாவியாய் பாடுவது கொஞ்சம் சிரிப்பாத் தான் இருக்கு..

என்னதான் காவலாய் கத்தினாலும் கூட, அந்த… பழைய முகம் காட்டாமல்… பாட்டெல்லாம் பாடி காதலித்த “ஹலோ மை டியர் ராங்க் நம்பர்” பாட்டும், “நம்ம ஊருசிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம்..” பாட்டும் தேவையில்லாமல் ஞாபகம் வந்து
தொலைக்குதே..??

இதே மாதிரி யாரதுன்னு யார் யார் தேடினாங்கன்னு ஒரு அலசல் அலசலாமா??

யார் யார் யார் அவர் தானோ!!  ஊர் பேர் தான் தெரியாதோ… ன்னு இப்பொ கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல் அது.

“யாருக்கு மாப்பிள்ளை யாரோ.. அவர் எங்கே ஒளிந்திருக்கிறாரோ” என்றும் ஒரு பாடல் புது மாப்பிள்ளையைத் தேடுகிறது.

பாடலை விட்டு விட்டு ஒரு வெற்றி பெற்றவர் யாரதுன்னு மிஸ்டர் ஜேம்ஸ் வில்ட் கிட்டெ கேட்டா அந்த மனுஷன் ஒரு ஃபார்முலா தருகிறார்.

நல்ல எண்ணம் + முறையான விடாமுயிற்ச்சி + தொடர்ச்சியான கடின உழைப்பு =வெற்றி

ஓ.. இது தான் சக்சஸ் ஃபார்முலாங்கிறதா??

யாரது – ன்னு கேட்டு ஒரு யுத்தத்தில் ஜெயித்த கதை தெரியுமா??

இந்தியாவுக்கு படை எடுத்து வந்த பாபர், ஒரு நாள் தன்னோட படை பட்டாளத்துக்கு லீவு வுட்டு கங்கை கரையில் தங்கினார்.

அக்கரையில் இரண்டு இடங்களில் புகை வந்து கொண்டிருந்தது.

யாரது – அக்கரையில்? அக்கரையொடு கேட்டார் பாபர்.

இக்கரையிலிருந்து வந்த பதில்: உங்களோட சண்டெ போட சண்டேலா மன்னன் வந்திருக்கான். சைவம் & அசைவம் தனித் தனியே சமையல் வேலை நடக்குது.

பாபர் சொன்னாராம்… சாப்பாட்டிலேயே ஒண்ணா இல்லையா!!! அப்பொ வெற்றி நமக்கே…

உண்மையில் நடந்ததும் அதானே…

கம்பராமாயணத்தில் ஓரிடம் யாரது – ன்னு கேள்வி கேட்டு வருது.

ராமனின் வருங்கால மாமனார் கேட்கும் கேள்விதான் இது. இடம் மிதிலை.

கூட்டி வந்த முனிவர்.. நல்லவரு .. வல்லவருன்னு சொல்றமதிரி வரும் பாட்டு. பாட்டு மட்டும் பாருங்க… அர்த்தம் புரிஞ்ச்சா சரி.. புரியலையா… அங்கவை சங்க்கவையொடு பழகுங்க… தன்னாலே புரியும்.

“இருந்த குலக்குமரர் தமை இரு கண்ணும் முகந்து அழகு பருக நோக்கி
அருந்தவனை அடி வணங்கி யார் இவர்கள் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெருந்தகைமைத தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றார்”

இனி மேல் காவலன் படத்தின்
“யாரது” பாட்டு கேட்டா உங்களுக்கு மேலே உள்ள ஏதாவது ஞாபகம் வரனும்… ஒன்னுமில்லையா… மொக்கெ போஸ்டிங்க்ன்னு நெனைச்சாலும் …என் ஞாபகமாது வரணும்.

வரட்டுமா???