துளித் துளித் துளித் துளி மழைத்துளி



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17]

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)

விதியை விதியால் வெல்லலாம்


”என்ன இது, நம்மாளு ரொம்ப சீரியஸா “விதி” பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாப்ளெ” என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு அது அவ்வளவு சரியா வராது. (சந்தானம் ஒரு புதுப்படத்தில் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்க.., அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஹீரோ சொல்லி மீண்டும் அவரை காமெடியனாகவே கண்டீயூ செய்ததையும் சற்றே நினைவு கொள்க). ”ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்” என்று முன்னடியே நான் தான் சொல்லி வச்சேன் என்று முமு பாக்யராஜ் கோபப் படப் போகிறார். (முமு – முந்தானை முடிச்சு).

நான் சொல்ல வரும் விதி, விதிமுறை பற்றியது. (அப்பாடா… ஏதோ நியூட்டன் விதி பத்தி எழுதிடப் போகிறேனோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நிம்மதி). அப்துல்கலாம் ஐயா சொன்னதாக ஒரு செய்தி படித்தேன் வதனப்புத்தகத்தில் (முகநூல், மூஞ்சிப்புத்தகம் இதோட இதையும் உபயோகம் செய்கிறார்கள்). வெளிநாடுகளில் இந்தியர்கள், சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை பொது இடங்களில் சாப்பிட்டால், அதன் உறைகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் குப்பைக் கூடைகளில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களே, இந்தியாவிற்கு வந்தால் ஏர்போர்ட்டில் கூட புளிச் என்று துப்புவதாய் கலாமய்யா வருத்தப் பட்டாராம்.

நாமளும் செஞ்சி பாப்போமில்லெ, என்று அந்தமானில் வாக் போகும் போது யோசித்தேன். மற்ற ஊரை விட அந்தமானில் அவ்வளவு குப்பைகள் தெருவில் இருக்காது. (குப்பை போட ஆட்கள் குறைவு, என்பது தான் உண்மை. குப்பைகளை விட கார்களும், அதைவிட டிராபிக் போலீஸ்களும் தான் சமீபத்தில் அதிகமாய் மிரள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக, ஜங்கிலிகாட் பள்ளியிலிருந்து சாக்லெட் கவர் வைத்துத் திரிந்தேன் அபர்தீன்பஜார் வரை. ஒரு குப்பை கூடை சிக்கவில்லை. ஒரு கடைக்கு முன்னாடி இளநி வெட்டி அதை போடுவதற்காய் ஏற்பாடு செய்திருந்தார் சுத்தமாய் இருக்க முயற்சிக்கும் கடைக்காரர். நாலு இளநி உள்ளேயும் பத்து இளநி வெளியேயும் இருந்தது. கடைசியில் வீட்லெ வந்து தான், குப்பைக் கூடையில் போட முடிந்தது.

சமீபத்தில் சான்சங் என்று ஒரு கப்பலில் சென்று வந்தேன் கிரேட் நிகோபார் தீவு வரை. அது வெளிநாட்டுக் கப்பல். ஒப்பந்த அடிப்படையில் அந்தமானுக்கு சேவையில் வந்து சேர்ந்தது. நல்ல உல்லாசமான கப்பல் தான் அது. (சின்ன சைஸ் டைட்டானிக் என்று கூட சொல்லலாம்). அவ்வளவு ஆடம்பரமான கப்பல். (ஆனால் இருவர் பயணிக்கும் கேபினில் ஒரே ஒரு டபுள் பெட் இருந்ததை மட்டும் சிக்கலோடு தான் பார்க்க (படுக்க) முடிந்தது. ஒரே குடும்பத்தினருக்கும், கணவன் மனைவிக்கும் பாத்து பாத்து கேபின் அலாட் செய்ததாய் கேள்வி..( அது சரி.., மேரேஜ் சர்டிபிக்கேட் ஏதும் கேட்டாங்களா? நானும் அதை கேக்க மறந்துட்டேன்).

அந்தக் கப்பலில் சின்ன கப்களில் டீ கொடுத்தார்கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் ரெஸ்டாரெண்டில். நம்ம லுங்கி கட்டிய ஆட்கள் கூட டீ குடிச்சி முடிச்சதும், சூப்பரா அந்த கப்பை கொண்டு போய் குப்பை கூடையில் போடுவதை பாக்க முடிஞ்சது. அட, இந்தியா முன்னேறிடுச்சே என்று விளக்கம் கேட்ட போது தான் விபரம் தெரிந்தது. எச்சில் துப்பினாலொ, டீ கப்பை வெளியில் தூக்கிப் போட்டாலோ, 100 முதல் 500 வரை அபராதம் என்று ஒரு வருடமாய் பழக்கிய பின்னர் தான், நான் கப்பல் ஏறி பாத்திருக்கும் இன்றைய நிலமையாம்.

ஆக, இந்தியர்களிடையே கூட சுத்தமாய் இருக்க இயலும். (அந்தமானை மினி இந்தியா என்பதால், அந்தமான் அனுபவங்களை வைத்து இப்படி சொல்ல முடிகிறது). இப்படி மாற்றங்கள் வர மூன்று தேவைகள் கட்டாயம்.
ஒன்று: தண்டனைகள் கடுமையானதாக இருத்தல் வேண்டும்.
இரண்டு: தண்டனைகள் தருவோர் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
மூன்று: விதிமுறைகள் கடைபிடிக்க ஏதுவான சூழலை அமைத்தல் வேண்டும்.

விதிகளுக்கு ஏற்ப வேலையா? அல்லது வேலைக்கு தகுந்த மாதிரி விதிகளா? இந்தக் குழப்பம் அடிக்கடி வரும். ஒரு வேலையை செய்வது தான் அந்த நிர்வாகத்தின் கடமை. வெறுமனே ரூல் மட்டும் தான் பாப்பேன். வேலை நின்னாலும் பரவாயில்லை என்பது எந்த வகையில் சேத்தி?. அதுக்காக ரூல்களை காத்திலெ பறக்க உட்டுட்டு வேலை செய்ய முடியுமா என்ன? அப்புறம் ஆடிட், விஜிலென்ஸ், சிபிஐ இவங்களுக்கு யார் பதில் சொல்வது? ஆக, வேலையும் நடக்கனும். விதிகளையும் பாத்துக்கனும். நீ கொஞ்சம் இறங்கி வா. நானும் கொஞ்சம் ஏத்துறேன் என்ற விலை பேரம் பேசுற மாதிரி தான் இதுவும்.

Sustainable Development என்று ஒரு வாசகத்தை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். செம அடி அடிக்கனும். ஆனா சாவக்கூடாது. வலிக்காத மாதிரி அழுவது. இப்படி பல வடிவமா அதை தமிழ்ப்படுத்தலாம். ஆனா முக்கியமான அமசம் “பொது நலன்” Public Interest இது தான் அதன் ஆணி வேர் (சுயநலம் சேராத பொது நலன்.. இது கொஞ்சம் இன்னும் பெட்டர்). பெரும்பாலும் ”சுற்றுச் சூழலுக்கு குந்தகம் வராமல் எப்படி கட்டுமானம் அமைப்பது?” என்ற கேள்விக்குத்தான் இந்த Sustainable Development என்பதை பதிலாகச் சொல்வார்கள். (தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூட இந்தப் பொதுநலன் என்ற வார்த்தைகள் அடிக்கடி வந்து போகும்).

கம்பர் கனவில் வந்து, அவர் காட்டிய (ராமர் கட்டிய)பெரிய கட்டுமானத்தை சொல்லிவிட்டுப் போனார். காலையில் எந்திரிச்சி, கம்பராமாயணத்தை படிச்சபோ, இந்த மாதிரி Environmental Clearance வாங்குவது போன்ற சூழல் தெரியுது. ராமனுக்கு வந்ததோ இல்லையோ, நம்ம கம்பனுக்கு வந்திருக்கு. ஆமா.. கோல் மைனிங் என்றெல்லாம் இப்பொ அடிக்கடி பேப்பர்லெ வருதே, அதே மாதிரி இலங்கைக்கு பாலம் கட்ட மைனிங் செய்து தானே கல்லை எடுக்க வேண்டும்? அந்தப் பெரிய கட்டுமானம் நடக்கிறது. கம்பர் யோசிக்கிறார். எவராவது பிற்காலத்தில் கேள்வி கேட்டால்?? பதிலும் அவரே சொல்கிறார்.

கற்களை எடுக்கும் மலை எப்புடி இருக்காம்?? சும்மா குளு குளுன்னு இருக்காம். பெரிய்ய காய்களையும், கனிகளையும் தினமும் கொடுக்குதாம். தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்கள் இருக்கறச்சே, இந்த கட்டுமானம் காரணமாய் மலை தகர்ப்பு (வெடி வைக்காமலா) நடக்கிறது. முனிவர்களுக்கோ dislocate ஆகனுமே என்று கோபமும் வருது. ஆனா பின் விளைவுகள் பத்தி யோசிக்கிறாய்ங்க.. தீயோர் இறக்க, நல்லோர் நலம் பெற Public Interest இருப்பதால் அவர்கள் கோபப்படலையாம்.

கனிதரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிதருங் தவம் நொய்தின் இயற்றலால்
பனிதருங் கிரிதன் மனம் பற்று அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.

ஆக, இந்த sustainable development போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்தியாவுக்கு 1990களில் தான் வந்தது என்று யாரும் நெனைச்சிடாதீங்க. கம்பர் அப்பவே சொல்லிட்டார்.

இரண்டாம் கொலெவெறி…


அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை… இந்த கொலெவெறி பாட்டு ஒரு தடவை கேட்டாலே போதும்.. அப்படியே முனுமுனுக்க வைக்குது.. பாக்கப்போனா… இல்லை.. இல்லை.. கேக்கப்போனா.. ஏதோ சிம்பிளான பாட்டு தானே என்று Y dis kolaveri kolaveri kolaveri kolaveri di என்று முனுமுனுத்தேன்..

என் பையன் நக்கீரன் ஆகி விட்டான். மூனு தடவெ தான் கொலெவெறி வரும். நீங்க என்ன நாலாவதா சேத்துப் பாட்றீங்க… அட.. ஆமா.. அந்த ரெண்டாம் கொலை வெறியெ தூக்கிப்….. படிச்சா தான் மூனு வெறியில் அந்தப் பாட்டு அடங்கும்.

இந்தப் பாட்டில் எத்தனை தடவை கொலைவெறி வருது என்பதை யாராவது எண்ணிப் பாத்தாங்களா?? அல்லது இப்படி யாராவது என்னியாவது பாத்தாங்களா?? பாத்து வைங்க யார் கண்டா?? கோன் பனேகா குரோர்பதி கேள்வியாகவும் வரலாம்..

கொலை பற்றிய ஆய்வு செய்யும் ஒருவர் என்னிடம் வந்தார். (ஏன் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் என்னையெ பாக்க வரனும்??) இந்த கொலெவெறி பாட்டுக்குப் பிறகு கொலைகள் அதிகமாகும் என்றார்.. நான் நடுவில் புகுந்து..அட இது வடிவேல் டயலாக்.. டம்மி பீஸ், அவனா நீ, பன்னாடை, கொலெவெறி, வடை பொச்சே, மறுபடியுமா??, ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…இப்படி தத்துவங்களை சொல்லி சமாளிச்சேன்.. என்ன செய்ய தமிழன் மானம் கப்பல் ஏறி போயிடக்கூடாதுன்னு தான்.

ஆமா சமீபத்திய இண்டியா டுடே ஹிந்தி பதிப்பில், ஒரு பக்கத்துக்கு கொலெவறிப் புராணம் பாடி வைத்திருக்கிறது.. சரி அது மீடியாக்கள் பாடும் பாடு. படுத்தும் பாட்டு. நாம நம்ம பாட்டுக்கு பாட்டுகள் பாப்போமே!!

பாட்டுக்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. இது பலருக்குத் தெரியும். கொஞ்சம் உள்ளே போய்ப் பாக்கலாமே???
கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாட்டுக்கள், அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். வின்னுக்கு மேலாடை எது? என்று கேட்கும் சுரதா பாடல் செமெ ஹிட். ஆண்களில்லாத உலகத்திலெ பெண்களினாலே என்ன பயன்? இப்படியும் கேள்வி கேட்டு பாட்டில் பதில் தேடுவது பழைய கலை.

ஒரு பொண்ணைப் பத்தி பையன் பாடுவதும், ஒரு பையனைப் பத்தி பொண்ணு பாடுவதுமாய் பாட்டு வரும். அப்புறம் கிளைமாக்ஸில் அது நீதான் என்று முடியும் வகையான பாடல்கள் கடுப்பேற்றும் பாடல்கள்.. ஆனா கடைசியில் சுபம் கியாரெண்டி.

மெட்டு பாடினால் பாடல் பாடும் வகையும், போட்டி பாடலின் அடுத்த வகை.. கமல் ஸ்ரீதேவி பாடும், சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்பது அந்த வகை.

புதுக் கவிதையை போட்டு வாங்குவதாய் பாட்டும் வந்தது.
சமீபத்தில் விதண்டாவாத வகையாய், எது சொன்னாலும், என்ன சொன்னியா என்பது போல்… ஆனா கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமெ பாடும் பாட்டு, ஒரு புது ரகம்.. இதெய் இப்பொ செத்தெ விரிவா பாக்கலாமே…

காதலனுக்கு, காதலி தலை முடியைப் பாத்தா.. கரிகாலன் கருகிய கால் ஞாபகம் வருதாம்; சொன்னா நாம ஒத்துக்குவோமா?? இல்லெ..இல்லை.. அது தாஜ் மஹால் நிழல் இது காதலியின் பதில்.

சரி இப்படியே காதலன் சொன்னதுக்கு கொஞ்சமும் சளைக்காமெ சொன்ன அடுத்தடுத்த வீம்பான, ஆனா ஆனந்தமான கற்பனை வர்ணனை வரிகள்.

காதலன்: சேவலேட செவப்புக் கொண்டெ தான் உன் உதடு.
காதலி: No…No… அது மந்திரிச்ச தகடு.

கழுத்து வலம்புரி சங்கு மாதிரி ஹீரோவுக்கு தெரிஞ்சா.. ஹீரோயினுக்கு அது கண்ணதாசன் எழுத்து மாதிரி இருக்காம்… ஜாலியா இருக்கு இல்லை.. இல்லையா?? டன்டன டக்கன டன்டன டக்கன பாட்டை உத்து கேட்டல் உங்களுக்கே அந்த திரில் புரியும்.
இன்னும் ஒரு வித்தியாசமான ரகம்.. கடைசியில் எதையாவது சொல்லி முடிப்பது. உதாரணமா.. எவ அவ?? என்னைக் கணக்கு பன்னேன்டா???.. இப்படி

கணக்கு என்பது பிரச்சினை.. தீர்ப்பது என்பது விடை வெளியே கொண்டு வருவது. கணக்கு பண்றது என்றால்… முட்டி மோதி தலைய ஒடைச்சிக்கிறதா… அல்லது கணக்கோட மூழ்கி இருப்பதா??
இதை அப்படியே ஓரம் கட்டி வைத்து இதே மாதிரி ஒரு சிச்சுவேஷனுக்கு கம்பர் என்ன சொல்றார் என்று பாத்துட்டு வரலாமே..

அரக்கர் Vs அரக்கியர் – உயிருக்குயிராய் இருப்பவர்கள்; அரக்கர்கள் கள் சாப்பிடுகிறார்கள் (கவனிக்கவும்… அரக்கர் தான் சரக்கடிப்பாய்ங்க… நான் சொல்லலை… கம்பர்; நமக்கு எதுக்கு அந்த வம்பு?)அனா யார் கலக்கிக் கொடுத்தா தெரியுமா?? (இப்பொ எல்லா படத்திலும் சந்தானம் தான்.. அப்பொ கம்ப காலத்தில்??) அரக்கியர்.. அட.. பெண்களுக்கு எல்லா உரிமைகளும் அப்பொவே குடுத்திருக்காங்களோ??

வேறு என்ன சாப்பிட்டாய்ங்க?? இசைத் தேனையும் சேர்த்து.. அடடே அப்புறம்??

லிப் டு லிப் கிஸ் (நாகரீகமா சொன்னா செவ்வாயின் அமுதம் பருகினர்).

சொன்ன பேச்செல்லாம் கேட்டனர். காலில் விழுந்து வணங்கினர்.. திட்டினாலும் கேட்டு சும்மா இருந்தாகலாம்.

ஒரு வேளை… என்னைக் கணக்குப் பன்னேன்டாடாடாடா என்று சொல்லி இருப்பாங்களோ?? யார் கண்டா?? பாத்த அனுமனுக்குத் தான் வெளிச்சம்.

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செவ்வாய்
ஊறல் மாந்தினர் இன் உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர்த் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர் அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கியர்.

அது சரி.. நீங்க யார் கிட்டேயாவது நல்லா வாங்கிக் கட்டிகிட்டது உண்டா??