ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு


ஆர்டர்.. ஆர்டர்.. என்று சொல்லும் கோர்ட் சீன்கள் அடிக்கடி படத்தில் பாத்திருப்பீர்கள். அந்த சுத்தியல் வைத்து, கனம் நீதிபதியவர்கள் தட்டுவார். நான் பாத்த CAT, மாவட்ட நீதிமன்றம், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எதிலும் இந்த தட்டும் வழக்கத்தை பாக்க முடியலை. [ஒரு வழியா அலுவல் சம்பந்தமாய் படியேறி இறங்கிய நீதிமன்றங்களின் பட்டியல் முழுக்க காட்டி விட்டேன்]. ”ரெண்டு தட்டு தட்டினா, சரி ஆயிடுவான்” என்று சொல்கிறார்களே, அதைத் தான் இப்படி சிம்பாளிக்கா காட்டுறாங்களோ படங்களில்.. இன்னும் மூளையை கொஞ்சம் தட்டிப் பாக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இரண்டும் இரு பெரும் பிரச்சினைகள். ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்கின்றனர். பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர் என்பதும் தெரியும் தானே!! ஆக, இருவருக்கும் இதில் பங்கும் உண்டு. பொறுப்பும் உண்டு. எப்படி அதனைச் செய்வது? அடிச்சி சொல்லித் தரவேண்டுமா? அல்லது ”அன்பாலெ தேடிய என் அறிவு செல்வம்..” என்று பாட்டுப் பாடிச் சொல்லித் தருவதா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிறார்கள்.. (நம்ம ஆட்கள் தான் எல்லாத்துக்குமே பழமொழி வச்சிருக்காங்களே!!.. கட்டிங்கை நம்பினோர் கைவிடப்படார் என்று கூட புதுமொழி இருக்கு. நான் அதெல்லாம் சொல்ல மாட்டேன்)

அடியாத மாடு படியாது என்று மாட்டிற்கு இலக்கணம் வைத்திருக்கிறார்கள். BSc (Agri), BVSc ல் கூட இதனைச் சொல்லித் தருகிறார்களா என்று கேட்டுப் பாக்கனும். அடிச்சுத் தான் சொல்லித் தரணும் என்பதில் பிடிவாதக் காரர்கள் இவர்கள். இந்த ”ஐந்தில் வளையாததை” கொஞ்சம் வளைந்து பாத்தா, வேற அர்த்தம் வருது. ஆரம்பம் சரியில்லை என்றால் முழுக் கிணறை எப்படித் தாண்டுவது? ”ஐ” யே சரியா வளைத்து எழுதத் தெரியலை. ஐம்பது எப்படி எழுத முடியும்? இப்படியும் யோசிக்கலாமே. பெரியார் பக்தர்(??)களுக்கு இந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. ”அய்” என்ற எழுத்து போட்டு சமாளித்து விடுவர்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்கள். வெறும் கல்லிலிருந்து கூட, வேண்டாததை எல்லாம் அடிச்சி எடுத்துட்டு… அப்புறம் பாத்தா, நல்ல அழகான சிலை வந்துருமாமில்லெ… [அதுக்காக, மனைவியைப் பாத்து, ”அப்பொ ஏன் இப்படி வேண்டாததை மட்டும் வச்சி சிலை மாதிரி அனுப்பிட்டே” என்று பிரம்மன் கிட்டெ கேக்கக் கூடாது. ரம்பை ஊர்வசி எல்லாம் அவர்கிட்டெ இருக்கும்.. ”நமக்கு வாய்த்த அடிமை(கள்) புத்திசாலிகள்.. என்ன.. வாய் தான் கொஞ்சம் நீளம்” என்று இருந்துட்டுப் போக வேண்டியது தான்.

பெரும்பாலும் எனக்கு வாய்த்த PET மாஸ்டர்கள் அனைவருமே கையில் விசில் வச்சிருந்தாங்களோ இல்லையோ,கையில் பளபளப்பா மின்னும் கம்பு வச்சிருந்து மிரட்டுவார்கள். இதுக்குப் பயந்து நானு, அந்தப் பக்கமே போகாமெ இருந்துட்டேன். வேறு சில ஆசிரியர்களோ, அடியாத மாடு படியாது என்றார்கள். அவர்களை நம்ம பாலகுமாரன் என்ன சொல்கிறார் தெரியுமா?? (அடிச்சா…? அடிக்காமெயா?) இந்த மாதிரி கேக்கும் ஆசிரியர்கள், வாத்தியார் வேலையை விட்டுட்டு, பேசாமெ மாடு மேய்க்கப் போலாமாம். (என்ன பசங்களை மேக்கிறதெ விட அது ஓக்கேவா??)

இப்படி அடிச்சுப் பாத்தும் தேறாத கேசுகள் என்று முடிவு கட்டிய பல சின்னஞ் சிறுசுகள், பின்னாளில் பல சாதனையாளர்களா ஆயிருக்காகலாம். இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? ”இது பூட்ட கேசும்மா… இந்தப் பையனை நாம இந்த ஸ்கூல்லெ வச்சிருந்தா நம்ம ஸ்கூல் இமேஜே கானாமப் போயிடும்” என்று சொல்லி விரட்டியது ஒரு பையனை. பிற்காலத்தில், அந்தச் சிறுவன் இல்லாங்காட்டி உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல, ஒரு நிமிடம், ஒரு நாடு முழுதும் இருட்டாக்கி அவனை நினைவு கூறுதாம். அந்தப் பையன் வேறு யாடும் இல்லை.. தாமஸ் ஆல்வா எடிசன். [தமிழ் நாடும் இப்பொ அடிக்கடி அந்தச் சிறுவனை நினைவு கூறுது மணிக்கணக்கா]

கற்றுக் கொடுப்பதில் பள்ளியாகட்டும், வீடாகட்டும், இந்தச் சிக்கல் இருந்தபடியே தான் இருக்கும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான் என்பார்கள். அப்படிப் பாத்தா, வீடும் பள்ளியும், ஏன் உலகமுமே தண்டனை தரும் அந்தமான் செல்லுலார் ஜெயில் மாதிரி தான் இருந்தாகனுமா என்ன? தேவையே இல்லையே… தண்டனை தேவைப்படும் போது மட்டும் கையில் எடுக்கலாம். எப்போவும் அப்படி இருந்தால் என்னத்துக்கு ஆகும்? என் தந்தை எனக்கு தந்த மோசமான அடியில் நான் அவரிடமிருந்து விலகி, கிட்டத்தட்ட 15 வருஷமாச்சி அவர்கிட்டெ நான் அன்பாய் திரும்ப ஒட்ட… தேவையா இதெல்லாம்???

வாத்தியார்களை விடுங்க… அடிவாங்கியபடி ஒரு பாட்டு வருமே?? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? ”பட்டத்து ராணி… பார்க்கும் பார்வை” என்று சாட்டையடி வாங்கியபடி வரும் பாட்டு அது. எல் ஆர் ஈஸ்வரியின் குரல் அது. இவ்வளவு காலம் ஆனாலும் இன்னும் சலிக்காமல் கேக்க வைக்கும் பாட்டு அது.

அது சரி… தலைப்பெ உட்டு ரொம்ப தூரம் வந்துட்டோமோ?? சாதாரன அடியே இப்படி இருக்கறச்சே, ஓங்கி அடிச்சா எப்புடி இருக்கும்? ஒரு கிலோ படிக்கல்லை வச்சி அடிச்சாலே, மூஞ்சி மொகறெ பேந்து போகும். (அப்படியான்னு யாரும் செஞ்சி பாக்காதீங்க) அதுலெ 10கிலோன்னா எப்படி எப்பெக்ட் தரும். அதெ விடுங்க.. ஒன்றெ டன் (அதாவது 1500 கிலோ) எப்படி இருக்கும்? HP Horse Power மாதிரி இது TP டன்ஸ் பவரா இருக்குமோ??

ஆமா இவ்வளவுக்கு அப்புறமும் கம்பர் வரலைங்கிறது வருத்தமா இருக்கத்தான் செய்யும். (இதுக்கு ”இல்லை” என்பது உங்கள் பதிலாய் இருந்தாலும் என்னோட பதில் தொடரத்தான் செய்யும்). நம்ம ஆளுங்க சினிமா படத்திலெ பன்ச் டயலாக் சொல்ல ஒன்னறை டன்னுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா இதே மாதிரி ஒரு சீன் கம்பராமாயணத்திலெ வருது. எவ்வளவு வெயிட்டு இருக்கு என்ற கேள்வியும் வருது. எங்கே? எப்பொ? தெரியுமா? இரணியன் வதைப் படலத்தில் வருது. இரணியனைப் பிடிச்சி நரசிம்ம அவதாரத் திருமால் கையால புடிக்கிறார். அது எம்புட்டு ஃபோர்ஸ் தெரியுமா? பெரிய்ய பெரிய்ய கணக்கு வாத்தியாருங்க, புரபஸருங்கு எல்லாராலெயும் கூட, சொல்ல முடியாதாம் அதை. இது எப்படி இருக்கு?

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்புகைசெயா நெடுந்தீப் பொங்க உருத்து எதிர் பொருந்தப் புக்கான்தொகை செயற்கரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்மிகைசெய்வார் வினைகட்கு எல்லாம் மேற் செயும் வினையம் வல்லான்.

உங்களுக்கும் கோபம் வந்து வெயிட்டா ஏதாவது தூக்கிட்டு அடிக்க வந்துடாதீங்க… அன்பே சிவம். அன்பு தான் எல்லாம்..ம்..எல்லாம் தான்.

தூது செல்ல ஒரு தோழி…


மொபைல், இன்டர்நெட், இமெயில் எல்லாம் வராத காலத்தில் நம்மை ஒன்று சேர்த்த பெருமை தபால் துறைக்குத் தான் சேரும். கோவையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மதியம் சாப்பாடு மெஸ்ஸில் கட்டு கட்டு என்று செமையாய் கட்டி விட்டு, எல்லாரும் மறுபடியும் வகுப்புக்கே போக, நான் மட்டும் ஹாஸ்டல் ரூமுக்கு போவேன். கதவைத் திறந்து பார்த்தால் கீழே விழுந்து கிடக்கும் கடிதங்களைப் பார்த்தாலே பரவசமாய் இருக்கும். (உள்ளே Draft இருக்கும் கடிதங்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்)

கடிதங்கள் இப்போது அப்போதைய மவுசை இழந்து இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்தமானுக்கு வந்த புதிதில் கிரேட் நிகோபார் தீவில் தான் பணி. அது கன்னியாகுமரியை விட தெற்கே உள்ள இந்தியப் பகுதி.. (சந்தேகமிருந்தா மேப் பாருங்க.. பெண்கள் மேப் பார்க்க விரும்புவதில்லை என்று சொன்ன ஒரு மேல் நாட்டு புத்தகம் சக்கை போடு போட்டு விற்கிறது – இது கொசுறுத் தகவல்) அப்போதெல்லாம் போட்டி போட்டு (இப்போது பிளாக்கில் எழுதுவது மாதிரி) எழுதுவோம். 64 பக்கங்களுக்கு எல்லாம் கடிதம் வந்துள்ளது.

பாலகுமாரன் நாவல் மூலம் அறிமுகமான ஒரு நண்பிக்கு அதிகம் கடிதம் எழுதி இருக்கிறேன். பெண்கள் புத்திசாலிகள் என்பதை பாலசந்தர் படமும் பாலகுமாரன் நாவல்களும் தான் காட்டும் என்பதில்லை. பாலகுமாரன் ரசிகைகளும் அதில் அடக்கம். கலயாணத்திற்கு பெண் பார்த்து வந்த பிறகு வழிந்து வழிந்து காதல்(????) கடிதம் எழுதியதை இப்பொ நெனைச்சா சிரிப்பா இருக்கு. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்று பாலகுமாரன் மாதிரியே கேட்டு சமாளிக்க வேண்டியது தான்.

அந்தக் காலத்தில் கடிதம் என்பது ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரமா இருந்திருக்கும். சாதாரண மக்களுக்கு எட்டாத ஒரு சாதனமாய் இருந்திருக்கும். அதனாலெ தான் தூது சொல்லும் வழக்கம் தோதாக வைத்திருப்பார்கள் என்பது என் ஊகம். அதுக்கு வண்டைக்கூட நம்ம ஆட்கள் விட்டு வைக்கலையே..!!! வண்டா?? என்ன இது வம்பா இருக்கே என்கிறீர்களா?? திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) பாடி, நக்கீரரிடம் உதை வாங்காமல் வரும் பாட்டு தான் அது. தும்பி விடும் தூது அது.

திருவாசகத்தில் நம்ம மானிக்கவாசகர் என்ன செய்றார் தெரியுமா? இந்த மாதிரி சாதாரண தும்பி எல்லாம் கதை ஆவாது என்கிறார். ஆமா மத்த ஆளுங்க காதலிக்கு தூது விடுவாங்க.. இந்த மா வாசகரோ இந்த காதலிகளைப் படைத்த ஆண்டனுக்கே தூது போகச் சொல்றார். (அவங்க ஆத்தாளுக்கு தாவனி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் என்ற டயலாக் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்குது). துளியீண்டு தேன் இருக்கிற பூவை எல்லாம் ஏம்ப்பா கொஞ்சுறீங்க… நினைக்கும் போதும், பாக்கும் போதும் பேசும் போதும் ஆனந்த தேன் தரும் சிவபெருமானின் பாதமலரைப் போய் கொஞ்ச்சுங்கப்பா..கோதும்பிகளா என்கிறார். (கோ – அரசன் என்று பொருள் கொள்க. ஓஹோ கோ பட்த்தோட அரத்தம் இதானா??)

கம்பர் இங்கே உதயமாகிறார்.

“என்ன கிருஷ்… இப்பொ என்னையெ கலட்டி விட்டு மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கே??”. அதெல்லாம் இல்லை ஐயனே… நீங்க இந்த கால டைரக்டர் ரவிகுமார் மாதிரி..கடைசிலெ தான் வருவீங்க.. கொஞ்சம் பொறுங்க… உங்களை அப்புறமா கவனிக்கிறேன். கம்பர் மறைந்து விட்டார்.

இந்த தூது விடும் நம்ம பழைய ஆட்கள் எல்லாம், ஏன் மரம், மட்டை, குளம், குட்டை, நிலா, தென்றல், அலை, மேகம் என்று தூது விட்டார்கள்?. ஆட்களை நம்ப முடியுமா என்ன? அர்விந்தசாமி மாதிரியான Handsom ஆட்கள் தாடி வைத்த பிரபுதேவா மாதிரி ஆட்களை தூது போகச் சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சி? தூது போறேன் தூது போறேன் என்று சொல்லி தோது பன்ன கதை எல்லாம் இப்பவே இருக்கே?? அப்பொ நம்ம ஆட்கள் நல்லா யோசிச்சு தான் செஞ்ச்சிருப்பாங்களோ.. இருக்கும்..

தூது போகும் ஆளை “ஒழுங்கு மரியாதையா சேதி சேக்கலே..தெரியும் சேதி” என்று மிரட்டலாம். ஆனா ஆறு மேல் கோபமாய் மிரட்டிய சேதி தெரியுமா?? Mr கம்பரே… இப்பொ உங்களை வரவழைச்சிட்டேன். சந்தோஷம் தானே..??

அனுமன் சீதையிடம் விலாவாரியாக (அப்படி என்றால் என்ன அரத்தம் என்று தெரியலை) சொல்லும் இடம். இராமன் சீதையின்றி சோகத்தில் தவிப்பதை ஆதாரத்தோடு சொல்லும் சிரமமான வேலை அனுமனுக்கு. சொல்கிறார். “ கோதாவரி ஆறைப் பாத்து, தினமும் சூரியன் உதயமாகும் போது இங்கே குளித்த்து உண்மையென்றால் நீயே அவளைத் தேடிக் கண்டுபிடித்து விடு. இல்லையென்றால் அம்பு விட்டு ஆறை அனலாக மாற்றி விடுவேன்” என்றெல்லாம் வருந்தினார் என்கிறார் அனுமன்.

போது ஆயினபோது உன தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா பவளக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! என்னா
கோதாவரியைச் சினம் கொண்டவன் கொண்டல் ஒப்பான்.

உங்களுக்கு இப்படி யார் மேலாவது கோபம் வந்திருக்கா?

வந்தாரய்யா ஜுனியர் வந்தாரய்யா


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும். இதெல்லாம் வாரிசுகளுக்காய் வரிஞ்சு கட்டிச் சொல்லும் வாக்கியங்கள். இது முற்றிலும் உண்மை தானா? காந்திஜியோடொ பிதாஜீ, விவேகானந்தரோட டாடி, சுஜாதவோடொ தோப்பனார் எல்லாம் யார் என்று கேட்டால் பலருக்கு அவர்களின் பெயர் கூட தெரியாது. இதே மாதிரி பல பிரபலங்களின் வாரிசுகளின் பெயர்களும் தெரியாமலேயே போனதும் உண்டு. இன்னொரு பக்கம் தகப்பனை மிஞ்சி மேயும் வாரிசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரையுலகில் வாரிசுகள் வந்து கொண்டிருக்கிறார்கள். பலர் கலக்கிக் கொண்டிருக்க, மண்ணைக் கவ்விய மைந்தர்களும் உண்டு தான். அரசியலில் வாரிசுகளுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பெரிய்ய நிர்வாகத்திறமை, கடின உழைப்பு என்று சப்பை கட்டு கட்டினாலும், உன்னிப்பா கவனிச்சா ஒரு பொறி தட்டும். ஒரு பிரபலத்தின் வாரிசு, சிறு வயதில் ஏதாவது ஒளறும். அந்த வார்த்தைக் கோர்வைகளைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் அந்த வட்ட மாவட்ட சுற்றுகள். அந்த வாரிசு, பாம்பாக இருந்தாலும் அது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு. அதனால் நிர்வாகம் மிக எளிதாக ஏதுவாகி விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுது??

திருவாசகம் பற்றிச் சொல்லும் போது சுகி சிவம் அவர்களிடமிருந்து ஒரு சுட்ட பழம், பறித்து உங்களுக்குப் பரிமாறலாம் என்று இருக்கேன். அந்தக் காலத்தில் ராசாவோட மகன் மக்கா இருந்தாலும் ராசா ஆய்டுவான். ஆனா மந்தரி மகன் மந்திரி ஆகிவிட முடியாது.. புத்திசாலியா இருந்தா தான் மந்திரி ஆக்குவாங்க (அந்தக் காலத்தில்). மந்திரி மகன், புத்திசாலியா இருந்தாத் தான் மந்திரி ஆக முடியும். அப்படி ஒரு மந்திரி தான் வாதவூரான்.. பிற்காலத்தில் மணிவாசகர் ஆனவர்.

வாரிசு வேண்டும் என்றும், அதுவும் அந்த வாரிசு நல்லபடியா பிறக்க வேண்டும் என்றும் பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள். அதனை நிறைவேற்றி வைக்கவும் சில பல Gynacologist கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பிறக்கும் கொழந்தைக்கும் சாமி பெயரும் வைப்பார்கள். நானும் அப்படி வேண்டுதல் வைத்தேன். எங்கள் சார்பில் கர்ப்ப ரக்சாம்பிகையிடம் இமெயில் அனுப்பப் பட்டது. மாமியார் சார்பில் சப்தகன்னி அம்மனுக்கு கூரியரும் தரப்பட்டது. குழந்தை வரம் கிடைத்தது. அப்புறம் ரெண்டு சாமிக்கும் கோபம் வராத மாதிரி, பொண்ணுக்கு சப்தரக்சிகா என்று பெயர் வச்சி, ரெண்டு சாமியையும் கூல் செஞ்சிட்டோம்.
அபிமன்யூ மாதிரி வயித்தில் இருக்கும் போதெ கத்துக் கொண்டு, அதி புத்திசாலிக் குழந்தை பிறக்கவும் இந்த பரமக்குடிக்காரர்கள் முயற்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெற்றது வெற்றியா என்று சகல கலா வல்லவர்தான் சொல்ல வேண்டும். ஆனா பழுத்த ஆன்மீகக் குடும்பத்தில் நிகழ்ந்த வேண்டுதல் ஏன் இப்படி ஒரு நாத்திகனை உருவாக்கித் தந்தது? இதற்க்கு அந்தக் கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மஹாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை நீதிமன்றத்துக்குப் போனாராம். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம் (நீதிபதி உட்பட). அந்த அளவு மரியாதையின் உச்சத்தில் இருந்தவர் அவர். பின்னர் ஒருகட்டத்தில் ஒரு குற்றவாளி அதே நீதிமன்றத்தில் வந்தார். அவரின் பெயர் கேட்டபின்னர், அப்பா பெயர் கேட்டனர். அவர் சொன்ன பதில், தேசத்தின் தந்தை பெயர். ஆடிப் போய் விட்டனர் அனைவரும். (அப்புறம் மன்னித்து விட்டது தனிக்கதை). தேசப்பிதாவிடம் இதைப்பற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் தெரியுமா நண்பர்களே.. “அந்தப் பையன் பிறக்கும் சூழலில் நானும் அப்படித்தான் இருந்தேன்”. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தேசப்பிதாவால் மட்டுமே தர முடியும்.

தமிழக எழுத்தாளர்களில் சுஜாதாவை விட்டு விட்டு பட்டியல் போட முடியுமா என்ன? அவரது வாரிசுகள் யாராவது அப்படி எழுதுகிறார்களா? தெரியலையே?? தமிழ்வாணன் வாரிசுகளில் லேனா தமிழ்வாணன் மட்டும் அப்படியே அதே பாணியில். அது சரி.. அவரின் வாரிசு..? எழுதுவதாய் தெரியவில்லை.. ஆமா இப்பத்தான் ஐடி வந்தாச்சே..எதுக்கு மத்த வேலைகள் எல்லாம்? காமெடி நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர். பழைய நடிகர் ஜெய்சங்கரின் வாரிசு கண் டாக்டர். ஆனா கண்டக்டரா இருந்து நடிக்க வந்து ஹா..ஹா.. கலக்கிட்டிருக்கார் வாரிசுகளோட..

தலைமுறை இடைவெளி என்ற வார்த்தை யார் தான் கண்டுபிடிச்சாங்க என்றே தெரியவில்லை. நம்ம வாரிசுகளை நம்மாள ஒழுங்கா திட்டக் கூட முடியலை. நாங்கல்லாம் அந்தக் காலத்திலெ, காலுக்கு செருப்பில்லாமெ, நடந்தே போயி…. இப்படி நாம படிச்ச விவரத்தெ முழுசா கேக்கவும் தயாரா இல்லை இப்பொ பசங்க. உடனே எதிர்க் கேள்வி வரும்… அப்பா உங்கப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.. உங்களுக்கு செருப்பு வாங்கித் தரலை.. ஆனா எங்கப்பா ஒரு இஞ்ஜினியருப்பா… செருப்பு ஷு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கித் தரணும்ப்பா… என்ன பதில் சொல்ல??

ராமாயணத்தில் இப்படி ஒரு சூழல் வருகிறது. (அங்கே சுத்தி இங்கே சுத்தி வந்தாரய்யா ராமாயணத்துக்கு என்று பாடுவது கேக்குது). இலங்கையில் அனுமர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சண்டையின் முன்னோட்டம். எதிரில் இந்திரசித்தன். இ சி அம்பு எய்கிறான் அனுமன் மீது. அடச்சீ என்று கோபம் வருது நம்ம வானர தூதனுக்கு. இந்திர சித்தனை தேரோடு தூக்கி வானத்திலெ வீரமா வேகமா எறிஞ்சி வீரப்பா சிரிப்பு சிரித்தாராம்.

இது வரை எல்லாம் ஓகே தான். கம்பர் ஒரு இடைச் செருகல் வைக்கிறார். கோபம் & தேரைத் தூக்கி எறிதல்.. இந்த ரெண்டுக்கும் நடுவுலெ சின்ன கேப். அதில் அனுமன் வேகமாமாமாமாப் போனாராம். வேகம் என்றால் வேகம், அது எப்பேற்பட்ட வேகம் தெரியுமா? ராமனின் அம்பு தான் வேகமானது. இதை அனுமனிடம் கேட்டா என்ன சொல்வார்?? ஆமா… ஆமா… Boss is always correct. ராம் தான் அனுமனின் Boss. கம்பர் சொல்லி இருக்கலாம் ராமன் அம்பு மாதிரி வெரெஸ்ஸாப் போனார் என்று.. சொல்லலையே

கம்பர் கலையே ஓவர் பில்டப்தானே… ராமன் அம்பைவிட அதி வேகமாக விரைந்து போனாராம். கொஞ்ச Gap ல என்ன வெளையாட்டு காட்டுகிறார் பாத்தீகளா??

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவக்க னன்றான்
வித்தகன் சிலை விடு கணைவிசையினும் கடுகி
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்.

மீண்டும் ஒரு கம்பர் கலாட்டாவோடு சந்திப்போம்…..

வள்ளுவன் வள்ளுன்னு விழுவாரா???


என்ன இது ஐய்யன் வள்ளூவன் பத்தி இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வரலாமா? – ன்னு யோசிக்கீகளா??

வள்ளுவன் நாய்னா வாசுகி ஆன்டியெ… அடியே வாசுக்குட்டி என்று செல்லமா அழைக்க, ஓடி வந்தாங்களாமே ( மத்த கதை எல்லாம் எல்லார்க்கும் தெரியுமே)

என் சந்தேகம்.. ஏன் அப்படி ஓடி வரனும்?

அட கிணத்தாண்ட தண்ணி இஸ்துகினு கிடக்கேன்…செத்த நேரம் கம்முன்னு கெட என்று வாசுகி ஆண்டி சொல்லலையே…

வள்ளுவனும் வள்ளுன்னு விழும் பார்ட்டியோ???

அவர் கோபத்தை ரெண்டா பிரிக்கிறார்.

எனக்கு பயங்கர கோபம் …யார் மேலே தெரியுமா??

சுரேஸ் கல்மாடி மேலே காமன்வெல்த் ஊழல்
மன்மோகன்சிங் மேலே விலைவாசி ஏற்றம்
தனுஸ் மேலே.. என்ன மூஞ்சி அது ஹீரோவா??

ஆனாலும் அடக்கி வச்சிருக்கேன்.. அதை யார்கிட்டேயும் காண்பிப்பதில்லை.

வள்ளுவன் இதற்கு இட்ட பெயர் : செல்லாக் கோபம்.

தன் கீழ் வேலைசெய்பவர் மேல் வரும் கோபம் (அரசு வேலை தவிர)

மனைவி மேல் கணவன் காட்டும் கோபம் (தைரியசாலிகள்)

குழந்தைகள் மேல் பெற்றோர்கள் காட்டும் கோபம்.

இவைகள் செல்லும் கோபமாம்- வள்ளுவன் சொன்னது.

ரெண்டையும் சொல்லி சாலமன் பாப்பையா ரேஞ்சில் தீர்ப்பும்
சொல்லுது வள்ளுவம்.

செல்லும் கோபத்தை அடக்கு… செல்லாக்கோபம் கம்முன்னு கிடக்கும் .

சரி இப்பொ சொல்லுங்க..

வள்ளுவன் வள்ளுன்னு விழுவாரா???

கோபமான ரோஜாவே…


ஈரமான ரோஜாவேன்னு தான் கேள்விப்பட்டிருப்பீங்க.. அது என்ன கோபமான ரோஜா?? அது ஒன்னுமில்லை…

ரோஜா – ஈரம் = கோபமான ரோஜா.

அது சரி.. கோபம் பத்தி நம்ம சுகி சிவம் கருத்து பாக்கலாமா??

சுகி சிவம் தனது வீட்டில் நெளிந்து போன அலிமினியத் தட்டை ஃபிரேம் போட்டு வரவேற்பு அறையில் வைத்துள்ளாராம். தன் கோபம் ஒரு தட்டை என்ன பாடு படுத்தியுள்ளது என்று தினம் ஞாபகப்படுத்தவாம்.

இப்பொ அவர் “எப்படி இருந்த நானு இப்படி ஆயிட்டேன்”னூ நினைச்சிக்குவாரோ??!!!

சுகி சிவம் கோவத்தை அடக்கும் கலையினை கற்றுத்தருகிறார்.

ஒரு சம்பவம் சொல்கிறார். ஒரு தொழிலதிபர் அழுதபடி வந்தாராம்.

தொழிலதிபர்: என் நண்பர் ஒருவர் என் தாயை விபசாரி என்ற பொருள் படும்படி திட்டி விட்டார்.எனக்கு கோவம் தலைக்கு ஏறிவிட்டது.

சுகி சிவம்: சரி உங்கள் தாய் விபசாரியா??

தொழிலதிபர்: என்ன நீங்களும் இப்படி கேட்கிறீர்கள்???

சுகி சிவம்: அப்பொ.. அது பொய்…அதில் நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? அவள் விபசாரியாய் இருக்கும் பட்சத்தில், உங்கள் நண்பர் உண்மை தானே பேசுகிறார்.. நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும்??

ஆக உங்களுக்கு ஆறிவே இல்லை என்று யாராவது திட்டினால், உங்களுக்கு கோபம் வருது… ஏன்?? … நீங்கள் உங்களுக்கு அறிவு இருப்பதாய் இரு இமேஜ்… கற்பனையில் வாழ்கிறீர்கள்… யாராவது அந்த நினைப்பிற்கு எதிராய் பேசும் போது உங்களுக்கு கோபம் வருது… ஆமா…எனக்கு உண்மையில் அறிவு இருக்கிறதா? என்ற கேள்வியை உள் நோக்கி கேட்க ஆரம்பித்தால் கோபம் தவிர்க்கலாம்.

ம்… நெனைப்புத்தான் பொழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்… அது இது தானோ!!!

என்னோட சரக்கும் எழுதலைன்னா எனக்கும் தூக்கம் வராதே!!

நீங்கள் கோபப்பட வேண்டுமா?? ஒரு நிமிடம் யோசியுங்கள்… அது அடுத்தவர்களை காயப்படுத்தும் திட்டம் தானே?? அது சாத்தியப் படுகிறதா??

இந்த நாயி இப்படித்தான்…லொன்னு விழும் – என்ற நினைப்பில் உங்களிடம் ஒருவர் திட்டு வாங்கினால், அதில் தோற்றவர் நீங்கள் தான்.

கோபப்படும் போது சந்தோஷமா, ஜாலியா இருக்கா ?? (சாடிஸ்ட் ஜாதி)..நீங்கள் தாராளமா கோபப்படலாம்..

எல்லாராலும் கோபப் பட முடியாது. ஒரு வார காலமாய் வீட்டில் வாஷிங்க் மிஷின் வேலை செய்யலை. வாங்கிய புதிது தான். டீலரோ இந்தா அந்தா என்றதில் ஒரு வாரம் ஆகி விட்டது. கோபமா ரென்டு வார்த்தை கத்திட்டு வாங்கண்ணு மனைவி சொல்ல… வீரமா கெளம்பீட்டேய்யா… கிளம்பிட்டேய்யா…

என்ன தான் நெனைச்சிட்டீங்க?? என்று Starting நல்லா தான் போயிட்டு இருந்தது. நடுவுல… ஒரு பிட்டு போட்டேன்…

உங்க வீட்லெ வாஷிங்க் மிஷின் ரிப்பேர் ஆகட்டும்… விவாகரத்தே ஆயிருக்கும்.. தெரியுமா??

கடைகாரர் சந்தோஷமா அப்படியா??? என்று சிரித்து விட்டார். ரொம்ப எதிர் பாத்த செய்தியா இருக்குமோ?? (10 நிமிடத்தில் வாஷிங்க் மிஷின் சரியானது வேறு கதை)

உங்களுக்கு உறுப்படியா கோபப் படக்கூடத் தெரியலையேன்னு என் மனைவியின் பார்வை சொல்லியது. ஆமா இதுக்கெல்லாம் டிரைனிங்க் தருவாங்களா என்ன??

கோபமானால் கை கால் நடுங்குகிறதா?? சத்தம் போடுகிறீர்களா?? வியர்க்கிறதா??? இதயம் படபட்க்கிறதா??…சாமி… உங்களுக்கு எதுக்கு இந்த கோபமெல்லாம்??? போயி ஜாலியா வலைபூ படிங்க…

உங்களை கோபமாக்க சிலர் முயற்சிப்பர்… அந்த வலையில் விழுந்து நீங்கள் கோபமானால் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகி விடுவர். நீங்கள் பொறுமை காட்டினால் அவர்கள் தோற்றுப் போவார்கள்.

இப்பொ சொல்லுங்க… நீங்க ஜெயிக்கனுமா???
மற்றவர்கள் ஜெயிக்கனுமா??