சரக்கு பேசுது


நண்பர்களே…

அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கும் வாசகம் இது. “அது அவன் பேசலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு பேசுது…”. அப்பொ சரக்குக்கும் வாய் உண்டா பேசுறதுக்கு??

நாம நிதானமா ஏதாவது பேசும் போது அதன் பின் விளைவுகள் ஏதும் இருக்குமான்னு யோசிச்சி பேசுவோம்…

சில நேரம் சில பின் விளைவுகள் வருவதற்காகவும் பேசுவோம்.. போட்டுக் கொடுக்கும் வேலைகள்..

மேடைப் பேச்சாளர்கள் நீண்ட நேரம் பேச இந்த சரக்கு ஏத்திட்டு பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… நேரில் பார்த்தும் இருக்கிறேன்.

முழுமையான ஈடுபாடு, பேசும் பொருளின் ஆளுமை, நல்ல ஒத்திகை இவைகள் எல்லாம் தராத ஒரு தைரியத்தை ஒரு ரெண்டு பெக் சரக்கு தரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

மக்களின் ரியாக்சன் தெரியாது பேச வேண்டுமா?? சரக்கு அடிச்சிட்டு பேசலாம்..

பேச பயமா இருக்கா…சரக்கடிச்சா… அந்த பயம் போகும் (எங்கே போகும்???..அந்த பயம் இருப்பது தெரியாமல் போகும்…ஆனா…மீண்டும் வரும்).

ஆக மொத்தம் சரக்கு ஏத்திட்டுப் பேசினால் உண்மைகள் தான் வரும் அல்லது உண்மை விளம்பிகளாக மாறி விடுவார்கள்.

அது சரி நம்ம சரக்குக்கு வருவோம்..

பேசுறவன்.. சரக்கு அடிக்கலாம்…உண்மை பேசலாம்… இதை ஒரு வகையில் நாட்டு நடப்பென்று ஒத்துக்கலாம்.

ஊமையன் சரக்கு அடித்தால்…

(சுத்தி வளைச்சி ஏதோ இலக்கியம் சொல்லனும்.. அவ்வளவு தானே… சொல்லுப்பா…)

ஆமாம்….

மறுபடியும் கம்பன். கோசலை நாட்டை வர்ணிக்க இயலும் போது தான் இப்படி ஊமையன் சரக்கடிச்ச மாதிரி, எப்படி சொல்றதுன்னு தெரியலையேப்பான்னு சொல்றார்..

ஆனா ஒரு சின்ன வித்தியாசம்…

நம்மாளுக பட்டை முதல் பாரின் சரக்கு வரை அடிப்பானுங்க..

நம்ம கம்பன் அடிச்சது என்ன சரக்கு தெரியுமா??
கள்ளு.. ஆமா…கள்ளு தான்..

அன்பு என்னும் கள்…

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்

(நாட்டுப்படலம் – பாடல் எண் -33; கோசல நாட்டு வளம்)

நாமளும் அந்த அன்பு எனும் கள் தினமும் பருகலாமே???

யானை வரும் பின்னே


நண்பர்களே…

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இது பழமொழி.

சுனாமி வரும் பின்னே பூகம்பம் வரும்முன்னே. இது புது மொழி.

பொங்கலுக்கு முன்பே வரும் போகியை வைத்து விவேக் ஒரு படத்தில் கலக்கு கலக்கென்று கலக்கி இருப்பார். நல்ல சேதி சொன்ன காமெடி அது.

அரசு ஊழியர்களுக்கு போகி எப்பொ தெரியுமா?? ஏதாவது என்கொயரி ஆரம்பிக்கும் போது. அல்லது டிரன்ஸ்பர் ஆர்டர் வருவதாய் தகவல் வரும் போது. எல்லாம் கொளுத்தி துடைத்து விடுவார்கள்.. (ஒவ்வொரு வருஷமும் கிளீன் செய்யும் ஆட்களை பாத்திருக்கேன்- டிரன்ஸ்பர் தான் வந்த பாடில்லை)

அந்தமானில் 2004ல் சுனாமி வந்தது. அது இங்கிருந்து 1200 கிமீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து சென்னை சேர்ந்த்து. தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு ஒரு நபர்  இங்கே வந்து கட்டி ஏறினார் எல்லாரையும். பொறுப்பில்லாத ஆட்கள்… நீங்கள் ஒரு ஆள் கூட சென்னைக்கு தகவல் தரலையேன்னு.. அந்தமான் & சென்னை சுனாமி நேர வித்தியாசம் 20 நிமிஷம் இருந்திருக்கேன்னு…

2004 ல் வந்திருப்பது சுனாமி என்று நமக்கு தெரியவே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. (கமல் ரசிகர்கள் – அன்பே சிவம் படம் பாத்தவர்களுக்கு சுனாமி தெரிந்திருந்தது)

இப்பொ சுனமி வரும் முன்பே தமிழகத்தை காக்க ஏற்பாடுகள் ஆகி விட்டது. அந்தமானில் கடல் மட்டம் எதிர்பாராத வகையில் உயர்ந்தால் சென்னைக்கு தானாக
தகவல் தந்து விடும்.

அது சரி… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை வரும். அந்தமானுக்கு யார் தகவல் தருவார்?? என்று அப்பாவியா கேட்டேன். பதில் இல்லை..

சரி… நமக்கெதுக்கு வம்பு?? நம்ம பாட்டுக்கு கம்பரை பிடிச்சி கலாச்சிக்கிட்டு இருக்கலாம் சுனாமி வரும் வரை.

சுனாமி வந்தால் தானே ஆபத்து.. அது வரும் முன்னேயே அப்படி ஆபத்து ஏதும் வருமா??

டிஎன்கே : சுனாமி விடுங்க. ஒரு சேதி …அது காதில் விழுமுன் வருத்தம் தருமா?

கம்பர்: தந்ததே.

டிஎன்கே: வேறெ என்ன செய்தது?

கம்பர்: வருத்தம் தந்தது; வாட வைத்தது; திகைக்க வைத்தது; மன துயரம் பெருக வைத்தது; அழ வைத்தது; நிலத்தில் விழ வைத்தது.

டி என்கே: அது எப்படிப்பட்ட சேதி?

கம்பர்: அது சொல் இல்லை… சுடுநெருப்பு.

ராமன் காட்டுக்கு போவனும்கிற சேதியான் நெருப்பு கோசலையின் காதுக்கு சேறும் முன்பே இப்படி எல்லாம் செய்ததாம்..

ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல்குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ.

கம்பனோடு உரையாடல் மீண்டும் வரும்…

ஹிந்தியில் பான்ச் பான்ச்


அன்பு நெஞ்சங்களே…

ஒரு விஷயம் பத்தி ரெண்டு பேர் ரெண்டு விதமா புரிஞ்சிகிறதை பலதடவை கேட்டிருப்பீங்க…

வடிவேல் காமெடி ஒன்றில் வரும் காட்சி:

ஒருவர்: என்ன எப்படி இருக்கீங்க?
வடிவேல்: ஏதோ வண்டி ஓடுது.
ஒருவர்: வண்டி ஓடுதா???…அப்பொ வாங்கின கடனைக் கொடு
வடிவேல்: வாழ்க்கையைச் சொன்னேனப்பா..

1987 களில் அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போயிடுவேன் என்பேன். கேப்பவர்கள்.. மூ…ன்று நாளான்னு … பெரு மூச்சு விடுவார்கள்..

அதே போல் இங்கு பேசும் ஹிந்தியினை பூனேயில் பேசிவிட்டேன். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

ஹிந்தியில் இருக்கும் இலக்கன விதிகளான…

மை வந்தால் ஹு வரவேண்டும்
தும் க்கு ஹோவும்
ஹம் என்று ஆரம்பித்தால் ஹைன் என்று முடிப்பது
இவைகள் எல்லாம் இங்கிருக்கும் உத்திர பிரதேச மக்கள் கூட இங்கே மறந்து விட்டார்கள்.

எனக்கோ பூனேயில் பெருத்த அவமானமாய் பட்டது.

இதை விட நம்பர்களை ஹிந்தியில் சொல்லுவதைப் போன்ற கொடுமையான விஷயம் ஒண்ணு கிடையவே கிடையாது. தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும்.

ஆனால் ஹிந்தியில் ஏக் சே லேகர் சௌ தக் மனப்பாடம் செய்தாக வேண்டும்.. மார்க் வாங்க அதை படிக்கலாம். மார்க்கெட்டில் இருக்கும் தமிழ் மக்கள் என்ன செய்வார்கள்… பாவம்!!

அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்…

15  சொல்ல பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்
47  சொல்லனுமா?  சவுந்தாலீஸ் (சரி தானா??) சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

மெயில் டைட்டில் வந்தாச்சி..முடிச்சிரலாமா..?? அப்படி முடிச்சா கம்பர் ஏமாந்து விடுவாரே..  அவரையும் வம்புக்கு இழுக்கலாம்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு.

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பத்தி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்கிறார்.

பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது நல்லதாய் தான் படுது.

இனிமே பச்பன் கபி நஹி… பான்ச் பான்ச் தான்..

( T-3 ல் 36வது கேட்டுக் போனால் பிரீபெய்ட் டாக்சி வரும் பலர் சொன்னதை என்னால் விளங்கி கொள்ள முடியலை… அங்கே தீன் சே என்று யாரும் சொல்லலை)

இருந்தாலும் கம்பன் சொல் விளையாட்டுகள் தொடரும்.

T N Krishnamoorthi