நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???
படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.
பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.
பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??
ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.
தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)
மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.
எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.
சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.
பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.
அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??