இப்பொ எல்லாம் எங்கெ பாத்தாலும் எலெக்சன் பத்தின நியூஸ் தான். அதனாலெ நாமலும் அதெப்பத்தி நாலு சங்கதி நாசூக்கா (ஆமா..இதுக்கு என்ன மீனிங்கு?) எழுதிட்டு அப்புறம் அப்படியே தூங்கப் போயிடலாம். அப்பொ இந்த எலெக்சன் பதிவில் கம்பர் வரமாட்டாரா? அப்பாடா ரொம்ப சந்தோஷம். ஹலோ..ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்ம போஸ்டிங்க்லெ வரும் கம்பர், ரஜினி மாதிரி. எப்பொ வருவார் எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்திலெ நச்சுன்னு வருவார்.
மத்த எலெக்ஷனுக்கும் இந்த எலெக்ஷனுக்கும் ரொம்பவே பெரிய வித்தியாசம் என்னன்னு கேட்டா (எவென் கேக்கிறான்?), இந்த சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் சமூக வலைத்தளங்களின் பதிவுகள் தான். அதுவும் ஒரு கட்சி விடாமல், நொந்து நோகடிக்க வைக்கும் பதிவுகள். கிண்டலில் உச்சக் கட்டத்தை அடைந்தன. தேர்தல் நிலவரங்கள் பற்றி டீவியில் பார்ப்பதை விடவும் சுவாரஸ்யமாய், ஜனரஞ்சகமாய் தந்தன அப் பதிவுகள். லேப்டாப்பில் பார்த்து சிரித்த மாதிரியே இருப்பதைப் பார்த்து வீட்டுக்காரியின், சந்தேகப் பார்வை பார்த்து தான், கொஞ்சம் அடங்க வேண்டி இருந்தது.
சட்டென்று ஒரு நொடியில் சிரிப்பை வரவழைத்தாலும், சில படங்கள் அதன் கேலியினையும் மீறி வருத்தப்பட வைத்தன. சம்பந்தமில்லாத நமக்கே இப்படி இருக்கே, சம்பந்தப்பட்டவன்களுக்கு எப்படி இருக்கும்? இப்படி வக்காலத்து வாங்க, காத்து வாக்கில் யோசித்து யோசித்து எழுதியது தான் இப்பதிவு. (இன்னுமா பதிவின் முன்னுரை முடியலை?)
நெளிவின் உச்சத்தை அடைய வைத்த படம், நம்ம (முன்னாள்) பிரதமரை ஒரு பூரி சுட வைத்து காட்டும் கிராபிக்ஸ் படம் தான். அவருக்கு இனி மேல் இந்த வேலை தான் என்று கமெண்ட் வேறு. அடப்பாவிகளா? ஒரு பொருளாதார மேதை. ஒரு காலத்தில் அவரோட கையெழுத்து ரூவா நோட்டில் கூட இருந்திருக்கு (இன்னும் பழைய நோட்டில் இருக்கும்). அவரோட நெலமை பாத்தா நமக்கே பரிதாபமா இருக்கு.
பள்ளிக்கூடத்திலெ படிக்கிறச்செ, அப்போதெல்லாம் இவ்வளவு பாப்புலர் ஆகாத பெயர் இந்த ”மன் மோகன் சிங்” என்பது. எனவே நம்ம நட்புப்படைகள் ஒரு ஐடியா செஞ்ஜோம். நல்ல கலரான, கவர்ச்சியான, நல்லாப் படிக்கும் ஒரு பொண்ணுக்கு இந்தப் பேரு வச்சிடுவோம். (அடிக்கடி நாம அந்தப் பொண்ணெப் பத்தித்தான் பேசுவோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?) அப்பொ இம்புட்டு பெரிய்ய ”மன் மோகன் சிங்” பேரை அப்படியே சுருக்கி ”எம் எம் எஸ்” என்று வைத்தோம். எப்பவுமெ மறக்காது. [இப்படி ஒரு பொண்ணுக்கு அல்டாமிஸ் என்று பெயர் வைத்தோம். அதனால் இன்றும் கூட, குதுப்பினாரைக் கட்டி முடித்தவர் யார்? என்று கேட்டால், எங்கள் நட்பு வட்டம் சட்டென்று சொல்லும் அல்டாமிஸ் என்று). ஆனா இப்படி எல்லாம் பெயர் வைத்திருந்ததை ஒரு எட்டப்பன் போட்டுக் கொடுக்க நாம் மாடிக்கொண்டு முழித்த கதை எல்லாம் நான் சொல்லப் போவதில்லை. இப்படி எல்லாம் யோசித்து ஞாபகம் வச்சி படிச்சும் நம்மளை விட அந்தப் பொண்ணுங்க மார்க் அதிகம் வாங்கினதெல்லாம் தனிக்கதை.
மன்மோகன் கதையை விட்டுவிட்டு, மோடி கதைக்கு வருவோம். ஆஜ்தக் டீவியில் ஸோ ஸா…..ரி என்று சொல்லி கிராபிக்ஸ் மூலம் செமெ கலக்கல் செய்து வந்தார்கள்… இன்னும் செய்து வருகிறார்கள். கவனமாய் அதிலும் அதிகம் வந்தவர் மோடியாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் டீ மாஸ்டர் என்றும், மறுபக்கம் குப்பை கூட்டும் வகையில் இருக்கும் போட்டோவும் அடிக்கடி இணையத்தை வலம் வந்தன. எனக்கென்னவோ இதனை கிண்டல் செய்வது, அவ்வளவு சரியாகப் படலை. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் அதிபரான அமெரிக்கக் கதையை, இந்தியக் குழந்தைகள் படிக்க, பாடமாய் இருக்கும் போது, இந்த டீ எம், பி எம் ஆன கதை ஏன் மக்களுக்குக் கசக்கிறது?
அதை விட இன்னொரு படம் அத்வானி & மோடியுடன் இருக்கும் பழைய படம். அமைதிப்படை அமாவாசை ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பு கிடையாது என்று பொறுப்பான கமெண்ட் வேறு. இதனை ஒட்டி பல கார்ட்டூன்கள் கிராபிக்ஸ்கள் வந்து கொண்டே இருக்கு. (ரிசல்ட் வந்ததுக்கு அப்புறமும் கூட). இந்த கம்பேரிஷன் கூட எனக்கு அவ்வளவா நல்லதாப் படலை. அவர்களின் வாதம் என்ன வென்றால், அத்வானியைத் தள்ளிவிட்டு விட்டு மோடி அதைப் பறித்துக் கொண்டார் என்று சொல்லாமல் சொல்ல வந்தது தான். இதே அர்த்தம் காட்டும் ஸோ ஸாரி கார்ட்டூன் படமும் பல மாதங்கள் முன்பே ஆஜ்தக் போட்டுக் காட்டி நம் மக்களுக்கு வழிகாட்டி உள்ளது.
தலைமை என்பதும் தலைமைப் பண்பு என்பதும் வேறு வேறு. தலைவரிடம் தலைமைப் பண்பு இல்லாமல் இருக்கலாம். தலைமைப் பண்பு இருக்கும் நபர், தலைவர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது. அதுவும் அவரிடம் அடக்கம் பணிவு அதாங்க சிம்பிளிசிட்டி… இதெல்லாம் இருந்திட்டா மெகா வெற்றிதான். இது தான் மோடியின் வெற்றிக்குக் காரணமாய் இருக்குமோ? யார்கிட்டெ கேக்கலாம். நமக்கு இந்தமாதிரி ஏதாவது டவுட் வந்தா நேரா கம்பர் கிட்டெ தான் போவேன். கம்பர் இப்பொ வாட்ஸ் அப்பிலும் இருக்கார்.
கேட்டேன். உடன் பதில் வந்தது. ”அனுமன் சுகிரீவன் மாதிரி ஓரளவு கம்பேர் செய்யலாம்” என்று. நெட் வழக்கம் போல் சொதப்பிவிட்ட்து. அந்தமானில் ஃபோனும் நெட்டும் சூப்பர் ஸ்டார் மாதிரி… எப்பொ வரும் எப்பொ போகும்னு யாருக்கும் தெரியாது.
சுக்ரீவன் சீனியர் தான். அரசன் தான். அவரின் படை மட்டும் இல்லாவிட்டால், இராமனுக்கு வெற்றியே இல்லை தான். ஆனாலும் இன்னும் இராமன் மனதிலும், மக்கள் மனதிலும் அதிகம் இருப்பவர் அனுமன் தான். அதுக்காக சுக்ரீவனை அம்போவென்று விட்டு விடவில்லையே. இது ஒரு இலக்கு நோக்கிய கூட்டு முயற்சி. அனுமனின் பலம் என்ன?
1. பாத்தவுடன் ஆட்களை எடை போடும் குணம். (முதல் சந்திப்பில் இராமனை கண்டு கொண்டது.)
2. தன் எஜமானனுக்கு விஸ்வாசமான ஊழியர். (சுக்ரீவன் சொன்னசொல் கேட்டல்)
3. எதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என்பதில் தெளிவு (நான் அனுமனைத்தாங்க சொல்றேன்)
4. எதுவும் பேசாத போதே “சொல்லின் செல்வர்” என்று சபாஷ் வாங்கியவர்.
5. குறித்த காலத்தில் குறிப்பிட்ட வேலையினை முடித்தல்.
6. ABC of Comminication skills தெரிந்திருத்தல்.
7. ஒரு செயலைச் செய்யும் முன்னர் SWOT (Strength Weakness Opportunities Threat) ஆகியவற்றை ஆய்ந்து செய்தல்.
8. UN Resolution சொன்னதை போரில் அப்போதே, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்து காட்டியவர்.
9. 1990 களில் சட்டமாய் வந்த Sustainable Development ஒட்டி பாலம் அமைத்தவர்.
10. 2005ல் சட்டமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கூறுகளை அன்றே அமல் செய்தவர்
மீண்டும் WhattsApp ல் கம்பர் ஒரு மெஸேஜ் அனுப்பி இருந்தார். ”முக்கியமான ஒண்ணு சொல்ல விட்டியே… அதான் பணிவு…” நன்றி கம்பரே, உங்க பாட்டே, அதெ வச்சித்தான் போடலாம்னு இருந்தேன்.
அனுமனின் எல்லா குவாலிட்டியையும் விட அந்த சூப்பரான குவாலிட்டி ஐஸ்கிரீம் போன்ற ஒரு குணம் அந்த பணிவு. நாமெல்லாம், தெரியாத ஒரு நபர்கிட்டெ அறிமுகம் செய்து கொள்ளும் போது எப்படி பீலா விடுவோம். மதவங்களை விடுங்க. நானு… ரெண்டு நிமிஷம் தமிழ்ல்ல யாராவது பேசிட்டா போதும் என் ஜாதகம் அவங்க கைக்கு மாறி இருக்கும். என் புத்தகம் அவர்கள் கையில் இருக்கும். ஐய்ய்ய்யோ…எனக்கு டமிழ் படிக்க வராதே என்று அவர் சொல்லும் போது என் முகத்தில் அசடு வழியும்…
கம்பராமாயன காப்பியத்தில் வணக்கம் போடுவதற்க்கு கொஞ்சம் முன்னாடி வரும் ஒரு காட்சி. 14 வருடம் வனவாசம் முடிந்து, இராமன் வரப் போவதை அனுமன் மூலம் பரதனிடம் சொல்வது தான் கம்பன் ஸ்கிரீன் பிளே. பரதன் கிட்டெ அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் சீன் இப்படி வருது.
மன்னவனே (அழலாமா….? இது அனுமன் சொல்லாமல் விட்டது), நானு ஒரு கொரங்கு. இந்தக் காத்துக்கே ராசாவான வாயு கீறாரே, அவரு மூலமா ஒரு நல்ல புள்ளெ வேணும்னு அஞ்சனை அம்மா கேட்டுக்க, அப்பாலெ அப்புடியே பொறந்து, உங்க அண்ணாருக்கு கீழே அடிமையா ஜோலி செய்யற வேலைக்காரன் நானுப்பா…
எப்படி கீது??
எப்பேற்பட்ட குணங்கள் உள்ள அனுமன், எதையும் சொல்லாமல் தன்னையே தாழ்த்திக் கொள்ளும் பணிவு.. அடக்கம். இது தான் அனுமனுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. அது தான் மக்கள் மனதில் இன்னும் இருப்பதற்க்கான காரணம். அப்படியே அந்தப் பாட்டையும் பாத்திடலாமே…
காற்றினுக்கு அரசன்பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்திதித்து நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாள்ணேன்
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான்.
இன்னும் வேறு கோணத்தில் கம்பரை வம்புக்கு இழுப்போம்.