கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

பொய் சொல்லக் கூடாது காதலி…


காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)

காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).

காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:

பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..

ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.

ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…

வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.

உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.

ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??

உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.

கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.

ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.

கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)

”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”

கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”

என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”

”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.

நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.

ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..

எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..

கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.

பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.

”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)

சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.

நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.

எதிராளியை நண்பனாக்கு..


ரொம்பவும் தெரிஞ்ச (ஆனாலும் தெரியாத) நாலு விஷயங்கள் என்ன தெரியுமா? 1. நண்பரை நண்பராகவே தொடர்ந்து வைத்துக் கொள்வது.2. நண்பரே சில சமயங்களில் எதிரியாய் ஆவது. 3. எதிரி எதிரியாகவே தொடர்வது. 4. எதிரியாய் இருந்தவர் நண்பராய் மாறுவது

நண்பர்களா இருக்கிறதுக்கு என்ன தேவை… என்ன தேவை என்று கேட்பதற்கு முன்னரே இந்தா வச்சிக்க என்று தருபவன் தான் நண்பன். எதையும் எதிர்பார்க்காமல் வருவது. காதலுக்கும் இந்த definition ஐ கடல் ஓரமாய் கடலை போடும் போது கொடுத்துவிட்டு, பின்னடி அல்லாடும் கில்லாடிகள் பலர். ஒருவர் பொறுத்துப் போக வேண்டும் இருவரின் மத்தியில் நட்பு தொடர. யார் விட்டுக் கொடுப்பது என்பது கேட்காமலேயே நிகழ வேண்டும். அந்த நிகழ்வின் அச்சானியே இருவருக்கும் இடையே இருக்கும் பர்ஸ்பர நம்பிக்கை தான். நான் மட்டும் தானா எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி வந்தாலே நட்பு வட்டத்தில் லேசாய் விரிசல் வந்ததாய் வைத்துக் கொள்ளலாம். (ஏதோ தனிக் கட்சி ஆரம்பிக்கவோ அல்லது வேறு எங்கோ கூட்டனி வைக்கவோ கூட பிளான் இருக்கலாம் என்பதும் ஒரு வகையில் பொருள் கொள்ளலாம்)

நல்ல நண்பர்களை அடியாளம் கண்டு கொள்ள ஒரு பழைய கதை சொல்வார்கள். ”எடுக்கவா? கோர்க்கவா?” என்று கர்ணபரம்பரைக் கதை என்றால் ரொம்ப அரதப் பழசாயிடும். கொஞ்சம் புதுக்கதை (நண்பண்டா… என்ற ஸ்டைலில் சொல்லியும் படிக்கலாம்). ரெண்டு நண்பர்கள் ஜாலியா பீச்லெ வாக் போயிட்டு இருந்தாங்க. ஏதோ பிரச்சினை. ஒரு ஆளு டப்புன்னு அடிச்சிட்டார். அடி வாங்கின ஆளு அழுகாமெ மணல்லெ ”நண்பன் அடித்து விட்டான்” என்று எழுதி சமாதானம் ஆய்ட்டு இருந்தாராம். அப்பொ திடீர்னு ஒரு மாடு வேகமா முட்ட வந்திருக்கு. அடிச்ச அதே நண்பன் ஓடிப்போய் காப்பத்தி இருக்கார். குஷியா நண்பன் மறுபடியும் பக்கத்திலெ இருக்கிற பாறையில ”நண்பன் காப்பாற்றி விட்டான்” என்று எழுத ஆரம்பித்து விட்டாராம். (நம்மள மாதிரி எதையவது அப்பப்பொ எழுதுற பார்ட்டியா இருக்குமோ??)

முதலில் அடிச்சி அப்புறம் காப்பாத்தின ஆசாமிக்கு ”டாடீ..எனக்கு ஒரு டவுட்டு” மாதிரி டவுட்டு வந்திடுச்சாம். ”ஏம்பா அடி வாங்கின சமாச்சாரத்தை மணல்லெயும், காப்பாத்தின சங்கதியெ பாறையிலேயும் எழுதினே?” என்று. பதில் சிம்பிள் தான். நட்பு காப்பாற்றப் பட இது தான் ஒரே வழி. பிறர் தனக்கு செய்த தீமைகளை மணல் மேல் எழுதியது போல் வைத்து மறந்து விடுங்கள். நல்லவற்றை மனதில் திடமாய் சேமித்து வையுங்கள், பாறை மேல் எழுத்தாய். நட்பும் மலரும். மனநிலையும் நல்லாவே இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் என்ன செய்றாய்ங்க… சிரமம் கொடுத்ததை ரொம்ப சிரமப்பட்டு ரீவைண்ட் செய்து செய்து மனதிற்குள் பாத்து பொசிங்கிப் போவாய்ங்க… ஆமா நீங்க எப்படி?? என்ற சுய ஆலோசனை செய்ங்க… (அதுக்குள்ளெ நானு அடுத்த கட்டத்துக்கு நொண்டி ஆடப் போறேன்).

நண்பன் விரோதி ஆகும் இடம் எப்படி?? ரொம்பவே சிம்பிள். மேலே சொன்ன விஷயங்களில் பிக்கல் பிடுங்கல் இருந்தால், நட்பு என்பது புட்டுக்கும். தோள் மேலே கை போட்டு போன காலமெல்லாம் போய், கோர்ட் வாசப்படி மிதிக்க வைக்கும் நட்பிரோதமான கதை எல்லாம் இருக்கு. நடு நிலை என்று சொல்லி ஒரு சார்பு இருக்கும் ஆட்களால் சிக்கல் அதிகம் வரும். அதுக்கு மொதல்லெயே சொல்லித் தொலைக்கலாமே? சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்த்ப்பொ சூப்பரா, நான் ஒரு சார்பில் தான் இருப்பேன் என்று சொல்லியே தனது பத்திரிக்கையை படியுங்கள் என்று சொன்னார். அது நண்பர்களை ஏமாற்றாது இருக்கும் பாருங்க.

அப்படியே, விரோதியினை விரோதியாவே வச்சிருக்கும் வித்தையை லேசா டச் செய்து பாக்கலாமே… நம்ம முன்னோர்கள் எல்லாத்துக்கும் பழமொழி வச்சிருப்பாங்களே… இதுக்குச் சொல்லாமலா இருப்பாய்ங்க. துஷ்டனைக் கண்டால் தூர விலகு. (ஆனா சில சமயம் துஷ்டர்களே மேலதிகாரிகளாகவோ, மனைவி அல்லது கணவனாகவோ வந்து வாய்த்து விடுவதும் உண்டு.) என்ன செய்ய, மழை பெய்யும் போது, அதெ நிப்பாட்டவா முடியுது? ஏதோ நம்மாலெ முடிஞ்ச, ரெயின்கோட் போட்டு மறைச்சிட்டு போற மதிரியே ஒரு செட்டப்பா, கெட்டப்பா, வாழ்க்கையெ ஓட்ட வேண்டியது தான்.

எதிரியை நண்பரா மாற்றும் பகுதிக்கு வதுட்டோம். முடியப் போகுது. அதனாலெ இதிலெ கண்டிப்பா கம்பர் வந்தே ஆகனுமே??..ம்…எந்த சீனுக்கு கூட்டிட்டு போலாம் உங்களை… யாராவது சண்டெ போட்டா, நாம ஓடிப் போயி எட்டித்தான் பாப்போம்? அப்பொ இந்த ராமாயணப் போர் நடக்கிற எடத்துக்கே போகலாம். ராவணன் ஒரு அம்பு உட்றாரு நம்ம லெட்சுமணன் நெஞ்செப் பாத்து. விபீஷணன் பாய்ந்து முன்னாடி வருகிறார். அதெப்பாத்து அங்கதன் முன்னடி வந்து நிக்கிறார். சுக்ரீவன் பாத்துட்டு சும்மா இருப்பாரா என்ன? அவரும் முன்னடி வந்து நிக்க, ஹனுமன் போங்கய்யா எல்லாரும் அந்தாண்டெ என்று நெஞ்சை காட்டுகிறார். புரோட்டாக் கடையில் 50 புரோட்டா சாப்பிடும் ஸ்டைலில் இலக்குவன், எல்லாம் அழிங்கப்பா நான் மொதெல்லேர்ந்து வர்ரேன் என்று சொல்லி, மீண்டும் இலகுவன் நிக்க, அம்பு தைக்குது மயங்குவது எல்லாம் வேறு வேறு கதை.

நம்ம பிடிக்கிற எடம் சுக்ரீவன் தன் உயிரைக்கூட பணயமாய் வைக்கும் இடம் தான். (ஒரு வேளை அங்கதனுக்காக வந்திருப்பாரோ??). ஆரம்பத்தில் வீடணன், ராம் கோஷ்டியில் சேத்துக்க Object செய்த முதல் பார்ட்டியே சுக்ரீவன் தான். பிரச்சினையான நேரத்துலெ உட்டுட்டு வர்ர ஆளை எப்படி நண்பரா நெனைக்கிறது?? விரோதி தானே என்கிறார் சுக்ரீவன். அப்புறம் பொதுக்குழு கூடி முடிவு எடுக்குது வீடணனை கூட்டனியில் சேத்துக்கலாம் என்று. அந்த நேரத்தில் வீடணனை எதிரியாய் பாக்கிறார் சுக்ரீவன். இந்த இருவரையும் நண்பராக்க ராமர் சூப்பரான ஐடியா வச்சிருக்கார். சுக்ரீவனையே பாத்து, போப்பா, அந்த ஆளை கூட்டியா என்கிறார்.

”ஒரு ஆளு அடைக்கலம்னு வந்துட்டா அதை அப்புறம் நோண்டி நொங்கெடுக்கக் கூடாது. ஏதோ என் மேலெ இருக்கிற பிரியத்திலெ வீடணனை வேண்டான்னு சொல்றீங்க. சூரியணின் மகனான சுக்ரீவனே (லேசா ஐஸ் கூட தேவைப்படுது ராமருக்கே). ஒரு குத்தமும் செய்யாத அந்த வீடணனை நீயே அழைத்து வருக” என்று ராமர் சொல்வதாக கம்பர் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லும் பாடல் இதோ:

ஆதலால் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம்ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்தகாதலான் இனிவேறு எண்ணக் கடவது எனகதிரோன் மைந்தகோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி என்றான்.

என்னங்க… நீங்களும் இந்த கம்பர் டெக்னிக்கை யூஸ் செஞ்சி பாருங்க… சந்தோஷமா இருங்க…

ஹீரோ, ஹீரோ தான்


வில்லன்கள் ஹீரோ ஆகலாம். ஆனா ஹீரோ வில்லன் ஆக முடியாது. அப்படியே ஆனாலும் அது ஆன்டிஹீரோ என்று தான் சொல்ல முடியும்.

ஆனா கமல் மாதிரி சில புண்ணியவான்கள் முயற்சியால்,காமெடி நடிகை, ஹீரோயின் ஆன சந்தர்ப்பங்களும் உண்டு.

வடிவேல் புலிகேசியாய் வலம்வந்தது … ஹீரோவா காமெடியா?? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

இதை அப்படியே விட்டுட்டு ரெண்டு கண்கள் பத்தி கொஞ்சம் பாப்போம். கண்கள் இரண்டும் என்றதுமே.. மனசுக்குள்ளாற ஒரு பழைய பாட்டு கண்டிப்பா ஓடியிருக்கனுமே…?

அது காதல் கண் பற்றிய பாடல். 

நான் இப்பொ சொல்ல வரும் கண் கடமைக்கண்.. (காதலோ கடமையோ.. எல்லாம் ஒன்னு தானே..சாரி ரெண்டு கண்ணு தானே?? ).  இதுலெ என்ன பெரிசா வித்தியாசம் வந்திரப் போகுது??)

It varies when you compare with others..

சரி எப்படி கம்பேர் பன்னலாம்.

உங்க மனைவி அல்லது காதலி அல்லது Girl Friend கிட்டே போய் “நீ சிரிச்சா தமன்னா மாதிரி இருக்கே…சிரிக்காட்டியும் கூட ஐஸ்வர்யா மாதிரி தான்” என்று ஐஸ் வைக்கலாம். அதெ விட்டுப்போட்டு எக்கு தப்பா ஒரு வில்லி கூட கம்பேர் பன்னி பேசினா, உங்க கதி அதோ கதி தான்.

அன்னா ஹஜாரே காந்தி மாதிரி உண்ணாவிரதம் இருந்து சாதிச்சார். இப்படிச் சொன்னா ஹஜாரேக்கும் பெருமை. காந்திக்கும் பெருமை.

ராமாயணத்தில் ஒரு சோகமான் இடம்.

இராமன், மனைவி பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலை. ராமனை ஏமாத்தி அப்படி செய்ததால் கூடுதல் கடுப்பு வேறெ. அவங்க அப்பாவோட தோழர் ஜடாயுவின் மரணம். இந்த மூணும் சேந்து ராமனை ராத்திரி முழுக்க தூங்கவே விடலையாம். அந்த கண் எப்படி இருந்ததாம்??

நம்மளை கேட்டா Weekend கொண்டாட்டம் கழிச்சி வந்த மாதிரின்னு தான் சொல்ல முடியும். இல்லையா?? ராத்திரி கண்முழிச்சி மிட்நைட் மசலா பாத்த மாதிரி…(இதை தாண்டி நம்மாள யோசிக்க முடியாது..)

கம்பர் உணர்ச்சி வசப்பட்டு அந்த சோகமான ராமனோட கண், லட்சுமணன் கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாரு..  அப்புறம் அவருக்கு ஞாபகம் வருது..அட்டா… ராமன் ஹீரோவாச்சே… எப்படி லக்குவன் கூட கம்பேர் பன்னிட்டு வம்பிலெ மாட்ட முடியும்??

ஒரு பிட்டு நடுவுலெ சொருகுறார்..

இராமன் ஒரு நாள் முழிச்ச கண்..இலக்குவன் வனவாசம் வந்த நாள் ஆரம்பிச்சி இன்னெக்கி வரைக்கும் தூங்காத கண்ணு.

ரெண்டும் ஒரே மாதிரி இருக்காம்…

சுகமோ, துக்கமோ ஹீரோவுக்கு தனி மரியாதை தான்.

பாக்கியராஜ் ஒரு படத்தின் கிளைமாக்ஸில் சொல்ற மாதிரி… ஹீரோ ஹீரோ தான்..

பாவம் லட்சுமணன் நாள் கணக்கா கண்விழிச்சி, கடைசியில் ஒரு நாளில் ஹீரோ ராமன் பேர் தட்டி விட்டார்..

ம்…ஹீரோ ஹீரோ தான்.

இதோ கம்பரின் வரிகள்:

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் அவர்கள் சிந்தை
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே.

ஆதாரம்: அடப்பாவிகளா… தூங்காமெ கண் விழிச்சி யோசிச்சி எழுதுறேன்..ஏதோ சுட்ட பழம்ன்னு நெனைச்சீங்களே… ராமன் மேலே சத்தியம்.. சொந்தச் சரக்கு தான் (எந்தச் சரக்கு???).

அந்தமான் அதிகாலை 4 மணிக்கு எழுதியது

அடைந்தால் மஹாதேவன்..இல்லையேல்


தமிழ் சினிமாவிலெ வரும் சில பாட்டுக்கள் பாத்தா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ – ன்னு தான் யோசிக்கத் தோணுது..

சாதாரணமா இருக்கிறதை ஏதோ காதலிக்காக ஆகுற மாதிரி சொல்றது பழைய சரக்கு தான்.. பழைய செய்யுள் சொன்னா “ஒரு மண்ணும் புரியலைன்னு” கமெண்ட் வரும்.

 ஆனா சினிமா பாட்டு புரியும். தெளிவுரை பொழிப்புரை தேவையில்லை.. (தேவை இல்லைன்னு சொல்லியே இம்புட்டு வியாக்யானம் எழுதுறெ??).. சரி விஷயத்துக்கு வர்ரேன்.

அச்சமில்லை அச்சமில்லைன்னு ஒரு படம். சரிதா நெல்லைத் தமிழ் பேசி கலக்கிய படம். தமிழ் படத்திற்கே Sub Tittle தேவைப்படும் அளவுக்கு நெடுநெல்லைத்தமிழ்.

(நான் நெல்லை நண்பர் ஒருவரை பக்கத்தில் வைத்து தான் ஓரளவு புரிந்து கொண்டேன்) அதில் ஒரு பாட்டு வரும். கதாநாயகியப் பாத்து வெக்கப்பட்டு செவ்வெந்திப் பூ சிவப்பாச்சி..

பாடல் பதிவின் போது அதனை செவ்வெந்திப் பூவும் சிவப்பாச்சி.. என்று மேலும் மெருகு ஏத்துனாங்களாம்.

வைரமுத்து வரவுக்குப் பிறகு வார்த்தை ஜாலங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. மனுஷனுக்கு வேத்துக் கொட்டினா, தண்ணியால கழுவலாம். “தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே..” இது வைர வரிகள்…

சாத்தியமா இதெல்லாம்…மூச் .. கேக்கவே கூடாது.

பயணங்கள் முடிவதில்லை. இதில் ஒரு பாட்டு

“கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அடித்ததினால்
கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ??”

அந்தமான்ல எங்கே பாத்தாலும் தண்ணி தான்..(நீங்க நெனைக்கிற அந்த தண்ணியும் தான்)..கடல் முழுக்க தண்ணி.. இருந்தாலும் ஈரம் இல்லையான்னு கேக்கிறார் கவிஞர்.

எல்லாம் ஒரே காதல் பத்தி நெனைச்சாலே இப்ப்டித் தான் எழுத வருமோ??

இதெல்லாம் தூக்கி சாப்பிட்ற மாதிரி வந்திருக்கும் சமீபத்திய கற்பனை.

ஆத்தி..ஆத்தி..ஆத்தி. அதில்

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா?” என்று கவிஞர் கேக்கிறார்.

வெள்ளாவியில வச்சி வெளுத்தா இன்னா ஆகும்?? சரி.. நமக்கு எதுக்கு அந்த வம்பு??

அது சரி … தலைப்பு ஏதோ.. அடைந்தால் மஹாதேவியை உல்டா பன்னி எழுதின மாதிரி இருக்கு. அதைப் பத்தி மூச்சே விடலை.
ஓகே..ஓகே.. வந்துட்டேடேடேன்ன்ன்ன்ன்ன்…

இதெல்லாம் டூப்பு… நான் தான் டாப்பு என்று சொல்ற மாதிரி ஒரு கவிஞர் கற்பனை ஓடுது.

ஒரு பெண் ஒரு ஆணை அசைப்படரா.. (எம்ஜிஆர் படத்து சீன் மாதிரி). உன்னை அடையனும் இல்லையேல் சாகனும். இதெல்லாம் எல்லாரும் அடிக்கிற டயலாக் தானே! இந்த நபர் கொஞ்சம் மேலே போறார்.

சாகிற மனுஷி எதை குடிச்சி சாவா? விஷம் தானே.. விஷம் குடிச்சி சாகுற மாதிரி எழுதிட்டா சாதாரண கவிஞர்.

 கவிச் சக்கரவர்த்தி எழுதினா எப்படி இருக்கும்? அமிர்தம் குடிச்சே செத்துப்போவேன் என்கிறார். ஆத்தி…ஆத்தி..எம்புட்டு புளுகு..)

அமிரதம் சாப்பிட்டா சாவே கிடையாது..அதை குடிச்சுட்டு சாவேன்னு சொல்ற அந்த கிறுக்கி யாருன்னு நீங்க தெரிஞ்ச்சிக்க வேணாமா??

சூர்ப்பனகை.

ஹீரோ???????

ராமன் தான்

ராமனைப் பாத்து கிறங்கும் இடத்தில் கம்பர் போட்ட பிட்டு இது..

ராமனோட அகன்ற மார்பைப் பாத்தாளாம் சூர்ப்பனகை. அப்படியே தழுவனும் இல்லாட்டி அமுதம் சாப்பிட்டாவது சாவனும் ன்னு அந்த சிச்சுவேஷனை எழுதுறார் நம்ம கம்பர்

பாட்டு இதோ:

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்குஇனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்.

நாளைக்கு வேற ஏதாவது கலாய்க்கலாம்..

ஒரு தலைக்காதல்


எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல்கள் பழைய சினிமா பாடல்கள்…. அதுவும் எல்லா லைட்டையும் அணைத்துவிட்டு ரம்மியமாய் குளிரும்படி ஃபேன் ஓட விட்டு லேசா கண்ணை மூடி பழைய பாட்டு கேட்டு பாருங்க… ஒரு கிறக்கமே வரும்.

என்ன… தூக்கம் வருமா???

மனுஷன் தூக்கம் வர்ரதுக்கு என்னென்னொமோ பண்றான்… தூக்கம் வந்துட்டா வந்துட்டுப் போகுது???

செந்தமிழ் தேன் மொழியாள் … பாட்டு.. எப்போ கேட்டாலும் இனிக்கவே செய்யுது… வார்த்தைகளுக்கு அடி பணிந்து நிற்கும் இசை தான் இதுக்கு காரணமா இருக்கலாமோ…

ரஹுமான் பாட்டும் மெலோடிகள் மட்டும் காலத்தை விஞ்சி நிக்கிறதுக்கும் இதுவும் ஒரு
காரணமா இருக்கலாமோ…

அது ஒரு பக்கம் இருக்கட்டும்… நாம மறுபடியும்… செந்தமிழ் தேன்மொழியாளுக்கு
போவோம்…அதுலே ஒரு வரி வரும் ..

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ!!!

நாயகனின் காதலி அழகி… அதிலும் பேரழகி. அவளைப் பாத்தா எல்லா ஆண்களுக்கும் ஆசை வரும்.. அது மட்டுமா..?? அவளைப் பாத்தா பெண்களுக்கும் கூட ஆசை வருமாம்…

ஒரு பெண் எவ்வளவு தான் அழகா இருந்தாலும்.. இன்னொரு பெண்ணுக்கு பிடிக்காது.. இது தான் உலக நியதி… அதையும் மாத்தி யோசிக்கிறாங்க நம்ம கவிஞர்கள்…

Objection TNK…

எவ அவ…

இன்னொரு Objection…. நான் அவ… இல்லை…அவர்.

கம்பர் என் பேர்…

“ஏன் அடிக்கடி நானு ஏதாவது கலாய்க்கிறப்போ வர்ரீங்க??”

என்னோட மேட்டர் எடுத்து உட்டா நான் வர மாட்டேனா..??  ஏதோ அந்தக் காலத்துலே காப்பி ரைட் இல்லை…அதனால அப்பொப்போ வந்து சொல்ல வேண்டி இருக்கு…

கம்ப ராஜா…சாரி…சக்ரவர்த்தி.​.. இப்போ என்ன சொல்ல வாரீக…?. சமாதானமாய் நான்.

ஏதோ பொண்ணுக்கு பொண்ணு ஆசைப்பட்டது பத்தி எழுதிட்டே போறே..?.

ஆமா… அது என்ன தப்பா…? – இதுவும் நான் தான்.

கம்பர் தொடர்கிறார்:

இதை நாமளும் தான் எழுதி இருக்கோமில்லை… அதை படிக்காமே… பழைய பாட்டுன்னு
கதை உட்றே….. நீ மொதல்லே என்னோட பழைய்ய்ய்ய்ய்ய பாட்டு படி…அப்புறம் எழுது…

ஐயா கம்பரே..இவ்வளவு சொல்லிட்டீக… கொஞ்சம் ஹெல்ப் பண்ணப்படாதா???

பாக்குறதுக்கும் நோக்குறதுக்கும் வித்தியாசம் தெரியுமா???

என்ன வெளையாட்டு இது கம்பரே…ஏதோ தமிழ்லே எழுதிட்டா… இப்புடி எல்லாம்
கேக்கிறதா??? தெரிஞ்சதை சொல்றேன்…

சாதரணமா  பாக்குறது..

எல்லாத்தையும்..​. மனசுலே பதியற மாதிரி பாக்குறது நோக்குதல்..

என்ன ஓகேவா???

வாத்தியார் மாதிரி கம்பர்:

ஓரளவுக்கு ஓகே தான்… நம்ம காவியத்திலே ஒரு சீன் வருது. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணே பாக்குறா… நோக்குறா… ரொம்ப நேரம்…எது எது எப்படி எப்படி இருக்கனுமோ…அல்லாம் அப்படி அப்படியே இருக்கேன்னு. தெகெச்சிப் போனா… பொண்ணான என்கண்ணே வெளியே எடுக்க முடியாமே இருக்கே…ஆம்புளைங்க என்ன பாடு படுவாங்க…??

கம்பரே… இது ஏதோ…சூர்ப்பநகை சீதையெப் பாத்த கதையா இல்லே இருக்கு…!!!

அதே கதை தான்.. விடாதே பிடி…பாட்டு வேணுமா?? இதோ பிடி… ஆளை வுடு.

பண்பு உற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை அல்லால்
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள்
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள்.

மீண்டும் கலாய்ப்போம்.