ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா??


அந்தக் காலம் ஆரம்பித்து, இந்தக் காலம் வரை ரீ மிக்ஸில் ஆட்டம் போட வைக்கும் அருமையான குத்துப் பாடல் இந்த “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா?”

ஆத்தாவை  ஆத்தோரமாய் அழைப்பது வாடிக்கை தான். ஆனால் இதில் இந்த “ஏ” எங்கிருந்து வந்தது??

ஏய் என்று அருகிலிருக்கும் உரிமையுள்ள மகளிரை தனிமையில் அழைக்கலாம். யாராவது கூட இருக்கும் போது அழைத்தால் வம்பில் வந்து முடியும்..

தமிழ் சினிமாக்களில் வில்லனும் கதாநாயகனும் ஏய் என்று உச்சமாய் கூப்பிட்டால்
தான் வணக்கம் போட முடியும் என்று தோன்றும் அளவுக்கு இந்த ஏய் மிகப் பிரபலம்.

ஏ புள்ளெ கருப்பாயீ…உள்ளே வந்து படுதாயீ என்று கிராமத்து காதலியை வைத்து
வந்த பாடலும் ஹிட் தான்.

ஆக மொத்தமாய் ஏ என்பது ராஜேந்திரகுமார் ங்கே என்று சொன்னமாதிரி தான் படுது.

ஹிந்தியில் சட்டுன்னு போய்ட்டு வந்திடரேன்னு சொல்றதுக்கு யூ கியா யூ ஆயா
என்பார்கள்…

சமீபத்தில் கம்பரின் வலைப் பக்கம் போனேன். (ஏன் அவர் மட்டும் பிளாக் போட மாட்டாரா என்ன??) அவர் என்ன ஏ க்கு சொல்றார்ன்னு பாத்தேன்..

பாத்ததை உங்களுக்கு சொல்லலைன்னா தலை வெடிச்சிடாது??

அவர் பாக்கிற களம் வித்தியாசமானது.

 ராம சகோதரர்களுடன் மோதி ஏகமாய் மூக்கு முழி எல்லாம் டேமேஜ் ஆகி 108 உதவி இல்லாம இலங்க்கைக்குத் திரும்பினாள் சூர்ப்பனகை. நகை போட மூக்கும்
இல்லை பாவம்.

அப்பொ கோபத்தில் ராவணன் பணியாளர்களை அழைக்கிறார்..

அப்பொ அந்த ஏ வருது..

ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும்

கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது என்று கேக்கிற மாதிரி..சட்டுன்னு பணி ஆட்கள்
வந்தாங்களாம்.

அப்பொ அப்படி  வரும் ஆட்களை மட்டும் ஏ ன்னு கூப்பிடலாமா??

யாரையுமே கூப்பிட முடியாதா??

அது உங்க சாமர்த்தியம்…

மீன்டும் சந்திக்கலாம்.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


 ரெண்டு பழைய ஹிட் பாட்டுகள்.

 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…(நான் பழைய ராஜா பத்திய பாட்டு தான் சொல்றேன்)
பறவைகள் .. பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..

 இதில் பார்வைகள் பலவிதம் என்பதும் வரும். அது என்ன?? பார்வைகள் பல விதம்.

ஆனா இன்னும் ஒருவரோ… பார்வை ஒன்றே போதுமே…பல்லாயிரம் சொல் வேணுமா?? என்றும் கேட்கிறார்.

ஆமாமா…ஒரே நபர் (பெண்ணாக இருந்தால்) சிறுமி, மாணவி, இளைஞி, வாலிபி, பிகர், செமகட்டை, மால், சகோதரி, மனைவி, ஆண்டி இப்படி எத்தனை விதமா பாக்குறொம்.. அப்போ பார்வை மட்டும் ஒன்னா எப்படி இருக்கும்???

பாசத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? –  இந்த மாதிரி வில்லங்க்கமான கேள்வியை ஒரு வாத்தியார் கேட்டார் பசங்க கிட்டே.. (கேட்டிருக்கக் கூடாது தான்)

பையன் சூப்பரா பதில் சொன்னான்.

சார்… நீங்க உங்க பொண்ணு மேலே வைக்கிறது பாசம். அதே நாங்க வச்சா … அதன் பேர் காதல்…

என்ன ஒரு வித்தியாசமான பார்வை பாத்தீங்களா??

அதே மாதிரி.. ரெண்டு பேர் பொண்ணு பாத்துட்டு வந்திட்டு பாடும் பாட்டு இருக்கே…

நான் பாத்த பெண்ணை நீ பார்க்கவில்லை… நீ பாத்த பெண்ணை நான் பார்க்கவில்லை…

இதுவும் ஒரு மாதிரியான கண் பார்வை தான்…

அப்படியே கொஞ்சம் காவிய காலத்துக்கு கொஞ்சம் பயணிக்கலாமே … (No air fare…all trips are free..free..free)

இலங்கைக்கு விசிட் வந்துட்டோம்… அப்படியே பேசிட்டே… அங்கே ரெண்டு பார்வைப் போர் நடக்குது.. (இலங்கைன்னா போர் தானா??)

ஒரு ராஜா சொல்றார்: வாவ்.. வாள் மாதிரி கூர்மையா இருக்கு… ஆனாலும் மை போட்டதாலே கூலா இருக்கே…இது யாரு??

ராஜாவோட தங்கை: எனக்கு என்னமோ கண்ணு தாமரை மாதிரி இருக்கு… வாய் பழம் மாதிரி இருக்கு. அப்புறம் கம்பீரமா இருக்கிற அந்த ஆளைப் பாத்த ஆண் மாதிரி தெரியுதே…

என்ன ஆச்சரியம்…!!! ரெண்டு பேரும் பாத்தது ஒரு நபர்… ஆனால் ஒருத்தருக்கு பெண்ணா தெரியுது. இன்னொருவருக்கு ஆண் போல் தெரியுது…

நாமளும் பாக்கலாமே.. அது யாருன்னு??

அந்த ராஜா: இராவணன்

தங்கை: சூர்ப்பநகை

ராஜாவின் பார்வை சீதை பக்கம்

தங்கையின் பார்வையோ ராமனின் பக்கம்… மேலும் படிக்க நீங்க போங்க கம்பராமாயணத்தில் சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம் பக்கம்..

அது சரி… உங்க பார்வை இப்போ யார் பக்கம்?? எந்தப் பக்கம்???

சந்தோஷமா இருப்பது எப்படி???


ாஜபார்ட் ரங்கதுரைன்னு ஒரு படம். சிவாஜியின் நடிப்பை எல்லா விதங்களிலும் காட்டிய அற்புதமான படைப்பு. அதில் வந்த ஒரு பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கு.

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க… என்று சொல்லி வைத்தார் வள்ளுவரு சரிங்க…

 இடுக்கன் வருங்கால் நகுக என்பதின் எளிய அருஞ் சொல் பொருள் விளக்கம் அது தான்.

 அதெப்படி கஷ்டம் வரும் போது சிரிப்பது? அடுத்தவன் என்ன நினைப்பானோ என்பதற்காகவே அழுது தொலைக்க வேண்டியிருக்கே….!!!

 அந்தமான் தீவில் நண்பர்கள் யாராவது ஊருக்கு கப்பலில் கிளம்பும் போது அவரின் மனைவி வழி அனுப்ப கப்பலடிக்கு (அதை ஜெட்டி என்கிறார்கள்.. நல்லாவா இருக்கு??) வருவார்கள்.. சும்மா ஜாலியா இருக்கும் அவர்களை, நாம் சீண்டுவோம். என்ன இது?? உங்க புருஷர் (அட… மரியாதை !!!) உங்களை உட்டுட்டு போறார்.. நீங்க ஜாலியா இருக்கீங்க??? உடன் கண்ணீர் பொங்கும்..

 ஆனா வள்ளுவர் டிரிக்ஸ் தனி.. கஷ்டமே வந்தாலும் ஜாலியா இருங்க என்கிறார் அவர். இது சாத்தியமா?? சத்தியமா சாத்தியம் தான்.

ஒரு Mind Set மாத்தி வச்சிட்டா போதும். அது என்ன மைண்டு? செட்டு??

 சீன் 1:

 நீங்க ஒரு பொண்ணு பாக்க போறீங்க.. (வாங்க ஜாலியா போவாம்)

(இந்த ஃபேஸ் புக், வீடியோ சாட்டிங்க் உலகில் இன்னுமா நடக்குது அந்தக் கூத்து??) பொண்ணு அழகா.. கலரா.. சூப்பரா இருக்கும்ன்னு கனவோடு போறீங்க. போய் பாத்தா கொஞ்சம் சுமார். மாநிறம். பரவயில்லை ரகம். உங்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? இந்த சீனில் நீங்க சிரிப்பது கஷ்டம்.

 அடுத்த சீன் 2:

நீங்க மறுபடியும் பொண்ணு பாக்க போறீங்க..

பொண்ணு சுமாரா மாநிறமா பரவாயில்லை ரகமா இருந்தா போதும்ன்னு போறீங்க. போய் பாத்தா அப்படியே நீங்க எதிர் பாத்த மாதிரியே இருக்கு. உங்களுக்கும் பரவாயில்லை.. மகிழ்வும் இல்லை. வேதனையும் இல்லை. இங்கே… சிரிப்பது கொஞ்சம் முயற்சிக்கலாம்.

கடைசி சீன் 3:

நீங்க மறுபடியும் (மறுபடியுமா??) பொண்ணு பாக்க போறீங்க..

எனக்கு என்ன பெரிய தமண்ணாவா கத்திருக்கப் போறா… என்னோட மொகத்துக்கு ஏதோ போதும்ன்னு போறீங்க. போய் பாத்தா அதே கொஞ்சம் சுமார். மாநிறம். பரவயில்லை ரகம். உங்களுக்கோ பரம திருப்தி. இங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை.

பாக்கப் போனா….  பாக்கப்போன மூனு சீனிலும் சுமார். மாநிறம். பரவயில்லை பொதுவா இருக்கு. ஆனா முதல் சீன் சோகம். இரண்டாவதில் நார்மல். மூன்றாவதில் சந்தோஷம்.

உங்களை சந்தோஷமாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் இருக்கு. இது தான் மைண்ட் செட்டின் மகத்துவம். ஏதும் தப்பா சொல்லி இருந்தா மைண்ட் செய்யாதீங்க… ப்ளீஸ்.

சங்கடங்களில் தான், கடவுள் கூட வருவார்.

கடவுள் கூட, சங்கடங்களில் தான் வருவார்.

கடவுள் இருப்பதே, கஷ்டம் வரும் போது தானே ஞாபகம் வருது.

சோகமா இருக்கும் சமயம் ஒரு மனுஷனுக்கு குறி சொல்றாய்ங்க.. நீ என்னப்பா பெரிய யோகக்காரன். யாருக்குமே தெரியாம இருக்கும் இந்த ஜாதகக்காரன் யோகம் உலகத்துக்கே தெரிஞ்சி பின்னி பெடலெடுக்கப் போவுது.

சோகமா கேள்வி வருது. எப்போ வரும் அந்த நல்ல காலம்?

ஒரு ஆளு வருவார்.. எப்போ எப்படி வருவார்ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா… வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார். 

சரீ….  நான் எப்படி அவரை கண்டுகிறது ??

உனக்கு கஷ்டமான காலத்தில் அவர் வருவார். அவரை பாத்ததும் கண்டதும் காதல் மாதிரி அன்பு ஊற்றெடுக்கும்.

சொன்னப்போ எந்தப் பயலுகளும் நம்மலை.

ராமன் வந்தப்போ நம்பாம இருக்க முடியலை அனுமனால்.

சோகத்திலும் சிரிக்கலாம். கடவுள் துணை இருந்தால். கடவுள் கூடவே இருந்தா?? அது அனுமன் பெற்ற பாக்கியம்.

ராமனைப் பாத்த அனுமன் அன்பால் ஐஸ்கிரீம் உருகுறது மாதிரி உருகுகிறான். அதில் நொடியில் உடல் இளைத்து, எலும்புகளும் காணாமல் போயிடிச்சாம்..

ஆஹா… ரெண்டு கிலோ உடம்பு இளைக்க என்னென்ன செய்ய வேண்டி இருக்கு. கம்பரோ எலும்பையே உருகும் யுத்தி சொல்றார். அன்பு தான் அது.. ராமன் மீது அனுமர் காட்டிய அன்பு தான் அது.

துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவான் எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப

அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை

என்பு தோன்றல உருகினஎனின் பிறிது எவனோ.

இன்னும் கம்பரை படிக்கனும் அன்போட… இன்னும் அன்பு சேர்த்து. 

கத்தி முனையில் …


ஒரு இளைஞன் சாமியாராக நினைத்து தன் அம்மவிடம் அனுமதி கேட்டான். (அப்புறம் முதல்வர் அம்மாவிடமா கேட்க முடியும்?)

அம்மா பையனுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வச்சாங்க. ஒரு சின்ன கத்தியை எடுத்து வரச் சொன்னாங்க. பையனும் கத்தியை கொண்டு போய் கொடுத்தான். உடனே அம்மா, நீ சாமியாராக போவதற்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். என்றார். கொஞ்ச நாள் போனது. மீண்டும் கத்தி சோதனை தொடர்ந்தது. மீண்டும் அதே முடிவு… மூன்றாம் முறை அம்மாவிடமிருந்து உத்திரவு கிடைத்தது.. சாமியாராக போலாம் என்று..

இளைஞன் கேட்டான்…என்ன இது சோதனை?? எப்படி தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார் அந்த இளைஞர். கிடைத்த பதில் என்ன தெரியுமா?? முதல் இரண்டு முறையும் கைப்பிடி இளைஞன் கையிலும் கூரான முனை அம்மாவை நோக்கியும் இருந்ததாம். மூன்றாம் முறை கூரான முனை கையில் வைத்து தந்த காரணத்தால் அனுமதி கிடைத்தது.

அடுதவர் நலம் தான் சாமியாராய் போக முதல் தகுதி என்று அந்த அம்மா நினைத்திருக்கலாம்..

அதை விடுங்க… புகை ஒழிப்பு தினத்தன்று என் கையில் மைக் கிடைத்தது. நான் புகை பிடிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்களை நாய் கடிக்காது என்றேன்..

ஒரே சிரிப்பு.. விளக்கம் சொன்னேன்… அதிகம் புகை பிடித்தால்… நுரையீரல் பாதிப்பு அடையும்.. அதனால் கூன் விழும்… கையில் தடி ஊன்றி நடக்க நேரும்.. தடி இருந்தால் எந்த நாய் தான் கடிக்க வரும்??

தடியினை விட்டு மறுபடியும் ஒரு கத்தி கதைக்கு வருவோம்…

முல்லா நஜ்ருதீன் தன் இளம் மனைவியோடு ஒரு ஓடத்தில் போய்க் கொண்டு இருந்தார். திடீரென்று ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார். வேடிக்கைக்காகத்தான்…

ஆமா..கல்யாணம் ஆன ஆரம்பத்தில் தானே இப்படி எல்லாம் விளையாட முடியும்… அப்புறம் கத்தி தான் மனைவி கையில் போய் விடுமே!!

இளம் மனைவி புன்முறுவலோடு இருந்தார். முல்லா கேட்டார்…என்ன பயமாய் இல்லையா என்று?? இளம் மனைவி சொன்ன பதில் தெரியுமா?? கத்தி கொடுமையான ஆயுதம் தான்… ஆனால் ஒரு முனை கொடூரமானதாய் இருப்பினும் இன்னொரு முனை அன்பே உருவான உங்களின் கை அல்லவா இருக்கு.. நான் ஏன் பயப்பட வேண்டும் என்றார்… கத்தி முனையில் அன்பு என்னும் ஆயுதம்…

இதே போன்ற ஒரு சிச்சுவேஷன் ராமாயணத்தில் வருது… கம்பர் அதனை எப்படி கத்தி வைத்து கையாள்கிறார் என்று பாக்கலாம்… இங்கு கத்திக்குப் பதில்…. அம்பு..

சுக்ரீவனுக்கு வந்திருப்பது ராமன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. (ராமனுக்கே இந்த identity crises…) ஒரே அம்பில் ஏழு மரம் துளைத்துக் காட்டினால் தான் இராமன் என்பது நிரூபனம் ஆகும்.. Proof ஆகி விடுகிறது… அந்த வேகம் பாத்து அனைவரும் பயந்து போய் விடுகின்றனர்… ஆனாலும் அறத்திற்கு உறு துணையாய் இருப்பவர் உடன் இருப்பதால் கவலை லேது என்று ஜாலியா இர்ந்தாகலாம்…

ஜாலியா பாட்டும் பாக்கலாமே…

அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன் என்னும் தன்மையை நோக்கினர் யாவரும்…..

தொடரும்….