காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)
காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).
காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:
பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..
ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.
ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…
வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.
உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.
ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??
உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.
கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.
ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.
கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)
”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”
கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”
என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”
”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.
நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.
ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..
எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..
கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.
பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.
”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)
சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:
ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.
நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.