பாமரன் பார்வையில் ஃபாரின் – 87


மலேசியாவின் அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டதை அறிவிக்கும் தினசரியினை வைத்திருந்தனர். 1965 களில் சிங்கப்பூருக்கு நடந்த அல்லது திணிக்கப்பட்ட அநீதி என்றே சொல்லலாம்.

ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தும் வேலை தான் ஒரு நாட்டுக்கும் வந்து வாய்த்தது.

எனக்கு என்னமோ 1968 இல் கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே

பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்

அந்தப்பாடலை சிவாஜிக்குப் பதிலா லீ குவான் பாடுவதா நினைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தும் வார்த்தைகள். ஒரு வளமும் இல்லாத இடமாய் சிங்கப்பூர். அட…. குடிக்கத்தண்ணி கூட மலேசியா தந்தாத்தான் உண்டு.

எப்படி இருந்த சிங்கப்பூர்… இன்று… உச்சத்தில்.

வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் லீக்கு வணக்கம் சொல்லியே ஆகணும்.

இப்படியும் பார்க்கலாமா?


TNK with Dr Saraswathi Ramanathan at A

[பாமரத்தனமாய் கம்பனை எழுத ஊக்கம் அளித்து, என நூலான பாமரன் பார்வையில் கம்பனுக்கு முனைவர் சரசுவதி இராமநாதன் அளித்த அணிந்துரை…. சாரி… மிகப் பெரிய கௌரவம்… இதோ உங்கள் பார்வைக்கு)

இப்படியும் பார்க்கலாமா?

(முனைவர் சரசுவதி இராமநாதன்.
தமிழ்ப் பேராசிரியை – பணி நிறைவு, பள்ளத்தூர்.
தலைவர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.
தலைவர், இசைப்பிரியா, திருவாரூர்.
தலைவர், சரசுவதி இராமநாதன் அறக்கட்டளை, பள்ளத்தூர்.
தலைவர், ஔவைக்கோட்டம், திருவையாறு)

ஒன்பது வயதில் காரைக்குடி கம்பன் திருநாளில் பாட மேடையேறி, 10 முதல் 12 வயது வரை நடனம் ஆடி, அதே மேடையில் 22 வயது முதல் இந்த 74 வயதிலும் பேசிவரும் பேறு பெற்ற ஒரே பேச்சாளர் நானாகத்தான் இருக்க முடியும். அது குறித்து நான் இறையருளையும், குருவருளையும் வணங்கி மகிழ்கிறேன். பலப்பல கோணங்களில் கம்பனை அணுகி ஆராயும், அல்லது அரைத்த மாவையே அரைக்கும் எந்த அறிஞரும் சிந்திக்காத புதுக் கோணத்தில் கம்பரை அணுகிப் பல கட்டுரைகள் தந்துள்ள அந்தமான் தமிழ்நெஞ்சன் கிருஷ்ணமூர்த்தியை உளமார வாழ்த்துகிறேன். [ ”என்ன பார்வை உந்தன் பார்வை” என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதலாமா என எண்ணினேன்! சரிதானே?]

அந்தமான் தமிழர் சங்கத்துடன் எங்கள் ஔவைக்கோட்டம் இணைந்து மாநாடு நட்த்திய போது அறிமுகமான சிரித்த முகத்துத் தமிழ்நெஞ்சனின் மடிக்கணினி (அதாங்க லேப்டாப்) கம்பனை கலகலகம்பர் என அறிமுகப் படுத்தியது. கம்பன் கலகலக்க வைத்தாரோ இல்லையோ, கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகள் கலகலப்பாக, பாமரனையும், கம்பனையும் இணைத்து மகிழ்கிறது. எளிய யாவரும் அறிந்த திரைப்பாடல் வரிகளைத் தலைப்பாக்கி, நடைமுறைப் பேச்சுத் தமிழில் எழுதி அரிய செய்திகளைக் கம்பன் வழி நின்று விளக்கும் அற்புதக் கலவை இவரது கட்டுரைகள்! புதிய சிந்தனைகளை நூல்கள் வழி வெளியிடுவோர் (தேவகோட்டை) மணிமேகலைப் பிரசுரம், எங்கள் அண்ணா தமிழ்வாணனின் அன்புக் குடும்பம் வாழ்க! வளர்க!

எடுத்தவுடனேயே “காக்கா பிடித்த” விசுவாமித்திரர் நமக்கு அறிமுகமாகிறார். நமக்குத் தமிழ் நெஞ்சன் பாடம் சொல்கிறார், “யாராவது காக்கா பிடித்தா உண்மைன்னு நம்பிடாதீங்க. தள்ளி நின்னு ரசிங்க.” (பக்கம் 4)

டி எம் எஸ் என்ற மாபெரும் இசைக்கலைஞன் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்றும், ‘என் கதை முடியும் நேரமிது’ என்றும் பாடியது தான் அவரது திரையிசைப் பயணத்தை முடித்ததா? தசரதன், “இத்தனை நாள் மன்பதை காத்து நான்பட்ட வேதனைகளை இனி என் மகன் இராமன் படட்டும்” என்று சொன்ன வேளைதான் இராமனின் துன்பங்களுக்கு ஆளானதோ? சிந்திக்க வைக்கிறார். எதையும் எதையும் முடிச்சுப் போட வைக்க முடிகிறது. (பக்கம் 6)

வரமா – சாபமா – தசரதன் புத்திர சோகத்தால் மரணம் அடைவான் என்று சலபோசன முனிவன் சாபம் கொடுத்தான். அப்போது தசரதனுக்குப் பிள்ளை இல்லை. ஆகவே பிள்ளை பிறப்பா என மகிழ்ந்தான். அது வரமாயிற்று என்றது அழகு! இப்படி கட்டுரை வருவது ‘வரமா? சாபமா?’ (பக்கம் 9)

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்த அகத்தியன் குறுமுனி. இராமனோ நெடுமையால் உலகளந்த நெடியோன். இருவரும் தழுவிக் கொண்டனர். கம்பனின் வார்த்தை ஜாலம் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றாகப் புலப்பட்டிருக்கிறது. நமக்கும் காட்டுகிறார். (பக்கம் 13)

ஒரு மாலையால் நிலத்தைக் குழி விழச் செய்ய முடியுமா? அவ்வளவு அழுத்தமாகப் பந்து வீசும் “பௌலரா” கூனி என்று கூஇயின் ஆத்திரத்தின் வேகத்தை நாம் அறிய வைக்கிறார் கம்பர்; இல்லை; தமிழ் நெஞ்சன். (பக்கம் 21)

‘பெர்முடாஸ்’ என்ற அரைக்கால் சட்டை நாகரீகம் எங்கும் பரவிவிட்ட்து. குகன் அப்படித்தான் போடு வந்தான். ’காழம் இட்ட குறங்கினன்’ என்ற தொடரின் விளக்கம் நன்று. (பக்கம் 25)
‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற வீரப்பனின் வசனம் – சூர்ப்பனகை வாயில் ’உல்டா’ ஆகிறது. (நானும் தமிழ் நெஞ்சன் நடைக்கு வந்து விட்டேனா?) மண்ந்தால் மாதவன் அன்றேல் மரணதேவன் – என்கிறாளாம். (சூர்ப்ப – முறம், நாகா – நகம்) (பக்கம் 31)

‘பெண் பிறந்தேனுக்கென்றால் என்படும் பிறருக்கு?’ என்ற கம்பன் வரி, ‘ செந்தமிழ்த்தேன் மொழியால்’ பாட்டில் ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?’ என வைத்த்து என்கிறார். சரிதான். ‘கம்பன் கொடுத்த கவிப்பிச்சை ஓரளவு’ என்று கவியரசரே பாடியுள்ளாரே!

நைய்யாண்டியா?

ஏங்க! கிருஷ்ணமூர்த்தி மட்டும் திரைப்பாடல், பட்த்தலைப்புகளை எடுத்தாளலாமா? நான் செய்யக் கூடாதா? கிண்டலில் சமுதாயச் சிந்தனைகளைத் தருவது நல்ல கலைஞர்களுக்கு அழகு! வெறும் சிரிப்பலைகளை மட்டும் வீசாமல் அந்தமான் ஆழ்கடல் பவளம் போல அழகான சமுதாயச் சிந்தனைகளைத் தந்துள்ளமை போற்றற்குரியது. “மனசு முழுக்க மனையாளை வச்சிக்குங்க! பார்க்க நல்லது. பர்சுக்கும் அல்லது” – காலத்திற்குத் தேவையான புத்திமதி இது! ( வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே – பாட்டின் விளக்கம் தொடங்கி, சூர்ப்பநகை இராவணனிடம் பேசுவது வரை கலகலப்புத்தான்.)

’எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்’ விவேக் ‘காமெடி’ எய்ட்ஸ் த்டுப்புக்கான விளம்பரமாயிற்று! தசமுகன், சீதையின் அழகில் மயங்கி உடம்பு பருத்துவிட்டானாம். அவள் கிடைப்பாளா, மாட்டாளா என்ற ஏக்கத்தில் இளைத்து விட்டானாம்!

“வீங்கின, மெலிந்தன வீரத்தோள்களே!” என்றார் கம்பர். தமிழ்நெஞ்சன் ஒரு காலத்தில் கம்பனைக் கிண்டல் செய்தவர் தான்! பத்துத்தலை எந்த வரிசையில் இருந்தாலும் ’பேலன்ஸ்’ ஆகாதே!” என்றவர்! இப்போது இராமாயணத்தை வரிவரியாக விழுந்து விழுந்து படித்து நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். “எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?”

அறை சிறை நிறை

கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்த்து என்று தொடங்கி, சடாயு என்ற் கழுகு, இராமனுக்குக் கோபத்தை அடக்கு என்ரு அறிவரை சொன்னதை வளர்த்து,கம்பனின் பாதை அறப்பாதை, அமைதிப் பாதை என முடித்த்து அருமை! லார்ட் மயோ கொலை, அந்தமான் செல்லுலார் சிறை என்று அனைத்தையும் இணைத்து விட்டாரே! அபார மூளை!

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம தோணுதடி’ என்ற பாட்டில் வெற்றிலை இடிக்கும் சத்தம் இடையிசையாக வரும். அதிலே மனம் லயித்து, ‘கொட்ட்டைப் பாக்கும் கொழுந்து வெத்திலை’ குஷ்புவின் ஆட்ட்த்தில் ஈடுபட்டு, அப்பாவின் வெற்றிலை போடும் பழக்கத்தினை அசை போட்டு, ஊரெல்லாம் வெற்றிலையை மென்று வீதியுல் துப்பும் நம் (துப்பு உள்ள துப்பு கெட்ட) மனிதரை நினைத்து வருந்துகிறார். அரக்கிமார் வீசி எறிந்த நகைகள் அனுமனை நடக்க விடாமல் தடுத்ததாம் இலங்கையில் – கம்பர் காட்சிக்கு வம்பர் எங்கெல்லாம் போய் விளக்கம் தருகிறார் பாருங்கள்!

சோகத்திலும் சிரிக்கலாம் – கடவுள் துணையிருந்தால், கடவுள் கூடவே இருந்தால்!

கம்பரைப் படிக்கணும், அன்போடு, இன்னும் அன்பு சேர்ந்து படிக்கணும்.

கம்பன் கணக்கில் புலி. வெள்ளம் என்பதன் விளக்கம் நமக்கு அதைக் காட்டுகிறது.

எதிர்காலத்தில் நிகழ்காலமாய் நினைத்துத் தேசத்திற்கு விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியாரைத் தினம் நினைவு கொள்வோம்.

பொண்டாட்டி இல்லாத நேரத்தில் அதிக்க் கவனம் தேவை!

மனப்பாடமா வாய்ப்பாடுகள் சொல்லும் இந்தியாவின் மனக்கணக்குத்திறன் உஅலக அரங்கில் அவனை உயர்த்தியுள்ளது.

ஏழ்மையைக் கழித்து, செழுமையைக் கூட்டி, சமதர்ம்ம் பெருக்கிட வழி செய்வோம்.

பேசித் தீருங்க பிரச்சினைகளை!
பிரச்சினைகளை அலசிப் பார்த்து முடிவெடுங்க!

நியூட்டனின் விதி – 3 ‘ஒவ்வொரு விசைக்கும் அதற்க்குச் சம்மான எதிர் விசை உண்டு’ என்பது. வாலி சுக்ரீவனைப் போருக்கழைக்குமிட்த்தில் (கிட்கிந்தா காண்டம் – வாலி வதைப்படலம்) இதைக் கம்பன் முன்னரே சொல்லி இருக்கானே! என வியக்கிறார் ஆசிரியர். ‘வாழைப்பழத்தில் ஊசி’ நுழைந்த மாதிரி வாலியில் மார்பில் இராமபாணம் சென்றது. பின் நின்றது! இதை வாழைப்பழ (கரகாட்டக் காரரின் கவுண்டமணி செந்தில்) நகைச்சுவைக் கலாட்டாவில் தொடங்கி, விளங்கிவிட்டு, ஆமாம் எது வாழைப்பழம்? எது ஊசி? என்று கலாய்க்கிறாரே! அழகு!

கழுதைக்குப் பின்னாலும், ஆபீசருக்கு முன்னாலும் அடிக்கடி போய் நிற்காதே! – நல்ல அறிவுரை.

அரசு அலுவலகத்திற்குப் போன கடிதம் மாதிரி ஒரு பதிலும் இல்லை. நல்ல அங்கதம் (Satire). கலைஞரை வாலியும் வைரமுத்துவும் புகழ்வது போல எனக் கிண்டல் வேறு!

மென்மையாகக் காலைப்பிடித்துக் கொடுத்து எழுப்பினால், (கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்) எழுப்பிப் பாருங்கள் சண்டை சச்சரவே இருக்காது. நல்ல தீர்வு! காலில் விழும் கலாச்சாரம் – கம்பனில் நிறைய உண்டு.

தேவையில்லாத கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்! சீதையைப் பிரிந்த இராமன் இயந்திர மனிதன் (Robot) மாதிரி இயங்கினான் எபதால் கம்பனுக்கு எந்திரன் பற்றித் தெரிந்திருக்க்க் கூடும் என்கிறார்.

நொடிப் பொழுதில் விபத்து. ரேஷன் கார்டிலிருந்து அவன் பெயரே நீக்கப்படுகிறது.

திமிங்கில கிலங்கள் (திமிங்கிலங்களையே கொன்றுவிடும் கடல்வால் உயிரினம்) என்று கம்பன் குறிப்பது வியப்புக்குரியது.

நிறைவாக்க் கம்பன் மேலாண்மை குரு என்று கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறார். இன்று காலம், ஆற்றல், மனாழுத்தம் எல்லாவற்ரிற்கும் மேலாண்மை தேவை என்கிறோம். அவையனைத்தும் கம்பநாடனின் இராமகாதையிலே உள்ளன என்றுஇந்த நிர்வாக மேலாண்மையாளர் சொன்னால சரியாய்த்தானே இருக்கும்!

இன்னும் எழுதுக!

எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது அத்தனை செய்திகள்! அதுவும் எளிய இனிய நடையில்! பாமரனிடம் கம்பனைக் கொண்டு செல்லும் அரிய முயற்சி இது! தமிழ்நெஞ்சனே! இனிய கம்பநேசனே! அந்தமானைப் போன்ற அழகான நூலைத் தந்த உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க! இன்னும் எழுதுங்கள்.

என வாழ்த்தும்,
சரசுவதி இராமநாதன்

மனிதன் Vs கவலை


கவலை இல்லாத மனிதனை நீங்கள் பாத்திருக்கீங்களா? இந்த கேள்விக்கு உடனடியாக கிடைக்கும் பதில் என்ன தெரியுமா? கருவறையில் இருக்கும் பிறவாத குழந்தைக்கும், கல்லரையில் இருப்பவனுக்கும் தான் கலையே இருக்காது என்பது தான். நீங்கள் கவலையில் இருக்கும் போது என்றைக்காவது “ஏன் இப்படி கவலையோடு இருக்கிறேன்?” என்று யோசித்தது உண்டா? அப்படி யோசிக்கும் அந்தக் கணமே அந்தக் கவலை உங்களை விட்டு ஓட ஆரம்பித்து விடும்.

நம்முடைய கவலைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தால், அது ரொம்பவும் அல்பமான ஒன்றாக இருக்கும். சிலவற்றை பட்டியல் போடலாமே:

1. தாம் நினைக்கும் ஒன்று நடக்காத போது. (நீங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று சட்டமா என்ன? அந்தந்த சூழலுக்கு ஏற்ற நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு நடக்கிறது. நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?)

2. தாம் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது. (இது தான் நடக்க வேண்டும் என்று Project Management ல் போட்டுப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் Project அல்லவே?? நடக்கும் செயல்கள் எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கிறதை விட்டுட்டு கவலைப் படுவானேன்.)

3. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத விஷயத்துக்கு முகம் சோர்ந்து போதல். (அப்பா… சென்னை வெய்யில் மண்டையெப் பொளக்குதே…; சே..என்ன இது கரண்ட் கட்?…; ஊரெல்லாம் ஒரே குப்பை?… காசு இல்லாமெ ஒரு காரியமும் ஆகாதா?.. இதுக்கெல்லாம் நீங்க என்ன செய்ய முடியும்? வசதி இருந்தா AC, Invertor போட்டுக்குங்க.. இல்லையா? செருப்பு கொடை சகிதம் வீட்டை விட்டு கிளம்புங்க… முடிஞ்சா நீங்க உங்க ஏரியாவை சுத்தமா வச்சிக்குங்க… காசு இல்லாமெ நடக்கும் வித்தையை நாலு பேத்துக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க)

4. தான் நினைப்பது மட்டுமே நடக்க நினைத்தல். (முதலாவதுக்கும் இதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம். நீங்கள் பரீட்சையில் முதல் வகுப்பில் பாஸாக நினைப்பது முதல் வகை. அதில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம். யாரிடமாவது உதவிக்கு போகிறீர்கள். இதில் வெற்றி பெறும் சாத்தியம் ??? சொல்ல முடியாது. வரும்… ஆனா வராது மாதிரி தான். இன்னொரு பக்கமும் இருக்கு என்பதை யோசித்தாலே போதும். கவலையின் ரேகையை கலட்டி விடலாம்.)

ஒட்டு மொத்தமாய் கவலை இல்லாமல் இருக்க நல்ல வழி… எந்த செயலையும் மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. போனா மயிறு என்ற கொள்கையில் செய்வது தான் சரி என்று படுகிறது.

கவலை இல்லாத மனிதன் என்று ஒரு படம் வந்தது. கண்ணதாசன் சொந்தத் தயாரிப்பு அது. அந்தக் காலத்திலேயே ஐந்தாறு லகரங்களுக்கு அவரை கடனாளி ஆக்கிய படம் அது. அந்தப் படமே, என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்து விட்டது என்று அவரே பின்னர் புலம்பி இருக்கிறார். அதுக்கு மேலும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை அந்த கவியரசருக்கு விட்ட பாடில்லை. தவறு செய்து விட்டு, அதைத் தவறு என்று தெரிஞ்சும் மீண்டும் அதே தவறைச் செய்தேன் என்று பின்னர் அவரே வாக்குமூலம் தந்தார்.

அந்தமானில் தமிழ் புத்தகம் எழுதுவது என்பது, நஷ்டம் வரும் என்று தெரிந்தே செய்யும் வியாபாரம் என்பது என் கவலையான ஒரு கருத்து. இதனை சில தமிழகத்து தமிழ் அறிஞர்கள் அந்தமானில் வந்த போது தெரிவித்தேன். அந்தமானில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் அதே நிலைமை தான் என்று அவர்களின் கவலையையும் பதிவு செய்தனர். [ ஒரு வேளை ஆறுதல் சொல்வதற்காய் இப்படிச் சொல்லி இருப்பாரோ??.. சரி உடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை…?]

மனிதன் ஒருபக்கமும் கவலை ஒரு பக்கமும் நின்று கடைந்து அதற்கான காரண அமிர்தம் கண்டு எடுத்தால்… நம் கையில் கிடைப்பது “தோல்வி” தான். தோல்விகள் தான் கவலைகளின் ஒட்டு மொத்த காரணம். என்னவோ, தோல்விகள் தான் வெற்றியின் முதல்படி அப்படி இப்படின்னு எப்படி எப்படியோ சொல்லிப் பாத்த போதும், பலரால் இந்த தோல்விகளை தாங்க முடிவதில்லை. தோல்வியினை மேனேஜ் செய்வது எப்படி என்பதினை வீட்டிலும் சொல்லித் தருவதில்லை. School களில் இதெல்லாம் out of syllabus.

வாழ்க்கை என்பது Chess விளையாட்டு மாதிரி. ஒருபக்கம் நீங்கள். மறுபக்கம் இயற்கை, கடவுள், விதி, காலம் இப்படி ஏதோ ஒன்று உக்காந்து ஆடும். நாமெல்லாம் புதுசா யாருக்காவது Chess விளையாட்டு சொல்லித்தரும் போது வேணும்னே நம்ம தோப்போம். புதுசா கத்துக்கிறவா நன்னா கத்துக்கட்டும் என்ற கரிசனத்தில். இப்படித்தான் உங்களின் ஆரம்ப வெற்றிகள்.. அப்புறம் சில சமயம் டிரா.. அல்லது தோல்வி.. அப்படியே ஆட்டம் தொடரும். எல்லாம் விளையாட்டா எடுத்து ஜாலியா போக வேண்டியது தான்.

இப்பொ என்னோட கவலை எல்லாம், கம்பரை இங்கே எப்படி இழுக்கிறது என்பது தான்… யோசிச்சா.. சிக்காமலா போகும்… சிக்கிடுச்சே…

இலங்கையில் அனுமன் ஏரியல் வியூ பார்க்கும் நேரம்.. பளிங்கினால் ஒரு மாளிகை அல்ல.. பல மாளிகைகள்.. எங்கு பாத்தாலும் சோலை.. அதில் கற்பக மரங்கள்.. அதில் தேன் சொரியும். அது தவிர்த்த இடங்களில் என்றுமே Week End கொண்டாட்டம் மாதிரி குடித்து செமையா பார்ட்டியில் மகிழும் அரக்கர்கள். ஹைலைட் சமாச்சாரம் ஒன்று. கவலையான ஒரு ஆளையும் காணோம்.

பளிங்கு மாளிகை தலந்தொறும் இடம் தொறும் பகந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள் தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடிநர் பாடிநர் ஆகி
சளிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்.

கவலையில்லா உலகம் படைக்க ஆசையா? மொதெல்லெ நீங்க கவலைப் பட்றதை விடுங்க.. என்ன சந்தோஷமா??