ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு


ஆர்டர்.. ஆர்டர்.. என்று சொல்லும் கோர்ட் சீன்கள் அடிக்கடி படத்தில் பாத்திருப்பீர்கள். அந்த சுத்தியல் வைத்து, கனம் நீதிபதியவர்கள் தட்டுவார். நான் பாத்த CAT, மாவட்ட நீதிமன்றம், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எதிலும் இந்த தட்டும் வழக்கத்தை பாக்க முடியலை. [ஒரு வழியா அலுவல் சம்பந்தமாய் படியேறி இறங்கிய நீதிமன்றங்களின் பட்டியல் முழுக்க காட்டி விட்டேன்]. ”ரெண்டு தட்டு தட்டினா, சரி ஆயிடுவான்” என்று சொல்கிறார்களே, அதைத் தான் இப்படி சிம்பாளிக்கா காட்டுறாங்களோ படங்களில்.. இன்னும் மூளையை கொஞ்சம் தட்டிப் பாக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இரண்டும் இரு பெரும் பிரச்சினைகள். ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்கின்றனர். பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர் என்பதும் தெரியும் தானே!! ஆக, இருவருக்கும் இதில் பங்கும் உண்டு. பொறுப்பும் உண்டு. எப்படி அதனைச் செய்வது? அடிச்சி சொல்லித் தரவேண்டுமா? அல்லது ”அன்பாலெ தேடிய என் அறிவு செல்வம்..” என்று பாட்டுப் பாடிச் சொல்லித் தருவதா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிறார்கள்.. (நம்ம ஆட்கள் தான் எல்லாத்துக்குமே பழமொழி வச்சிருக்காங்களே!!.. கட்டிங்கை நம்பினோர் கைவிடப்படார் என்று கூட புதுமொழி இருக்கு. நான் அதெல்லாம் சொல்ல மாட்டேன்)

அடியாத மாடு படியாது என்று மாட்டிற்கு இலக்கணம் வைத்திருக்கிறார்கள். BSc (Agri), BVSc ல் கூட இதனைச் சொல்லித் தருகிறார்களா என்று கேட்டுப் பாக்கனும். அடிச்சுத் தான் சொல்லித் தரணும் என்பதில் பிடிவாதக் காரர்கள் இவர்கள். இந்த ”ஐந்தில் வளையாததை” கொஞ்சம் வளைந்து பாத்தா, வேற அர்த்தம் வருது. ஆரம்பம் சரியில்லை என்றால் முழுக் கிணறை எப்படித் தாண்டுவது? ”ஐ” யே சரியா வளைத்து எழுதத் தெரியலை. ஐம்பது எப்படி எழுத முடியும்? இப்படியும் யோசிக்கலாமே. பெரியார் பக்தர்(??)களுக்கு இந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. ”அய்” என்ற எழுத்து போட்டு சமாளித்து விடுவர்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்கள். வெறும் கல்லிலிருந்து கூட, வேண்டாததை எல்லாம் அடிச்சி எடுத்துட்டு… அப்புறம் பாத்தா, நல்ல அழகான சிலை வந்துருமாமில்லெ… [அதுக்காக, மனைவியைப் பாத்து, ”அப்பொ ஏன் இப்படி வேண்டாததை மட்டும் வச்சி சிலை மாதிரி அனுப்பிட்டே” என்று பிரம்மன் கிட்டெ கேக்கக் கூடாது. ரம்பை ஊர்வசி எல்லாம் அவர்கிட்டெ இருக்கும்.. ”நமக்கு வாய்த்த அடிமை(கள்) புத்திசாலிகள்.. என்ன.. வாய் தான் கொஞ்சம் நீளம்” என்று இருந்துட்டுப் போக வேண்டியது தான்.

பெரும்பாலும் எனக்கு வாய்த்த PET மாஸ்டர்கள் அனைவருமே கையில் விசில் வச்சிருந்தாங்களோ இல்லையோ,கையில் பளபளப்பா மின்னும் கம்பு வச்சிருந்து மிரட்டுவார்கள். இதுக்குப் பயந்து நானு, அந்தப் பக்கமே போகாமெ இருந்துட்டேன். வேறு சில ஆசிரியர்களோ, அடியாத மாடு படியாது என்றார்கள். அவர்களை நம்ம பாலகுமாரன் என்ன சொல்கிறார் தெரியுமா?? (அடிச்சா…? அடிக்காமெயா?) இந்த மாதிரி கேக்கும் ஆசிரியர்கள், வாத்தியார் வேலையை விட்டுட்டு, பேசாமெ மாடு மேய்க்கப் போலாமாம். (என்ன பசங்களை மேக்கிறதெ விட அது ஓக்கேவா??)

இப்படி அடிச்சுப் பாத்தும் தேறாத கேசுகள் என்று முடிவு கட்டிய பல சின்னஞ் சிறுசுகள், பின்னாளில் பல சாதனையாளர்களா ஆயிருக்காகலாம். இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? ”இது பூட்ட கேசும்மா… இந்தப் பையனை நாம இந்த ஸ்கூல்லெ வச்சிருந்தா நம்ம ஸ்கூல் இமேஜே கானாமப் போயிடும்” என்று சொல்லி விரட்டியது ஒரு பையனை. பிற்காலத்தில், அந்தச் சிறுவன் இல்லாங்காட்டி உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல, ஒரு நிமிடம், ஒரு நாடு முழுதும் இருட்டாக்கி அவனை நினைவு கூறுதாம். அந்தப் பையன் வேறு யாடும் இல்லை.. தாமஸ் ஆல்வா எடிசன். [தமிழ் நாடும் இப்பொ அடிக்கடி அந்தச் சிறுவனை நினைவு கூறுது மணிக்கணக்கா]

கற்றுக் கொடுப்பதில் பள்ளியாகட்டும், வீடாகட்டும், இந்தச் சிக்கல் இருந்தபடியே தான் இருக்கும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான் என்பார்கள். அப்படிப் பாத்தா, வீடும் பள்ளியும், ஏன் உலகமுமே தண்டனை தரும் அந்தமான் செல்லுலார் ஜெயில் மாதிரி தான் இருந்தாகனுமா என்ன? தேவையே இல்லையே… தண்டனை தேவைப்படும் போது மட்டும் கையில் எடுக்கலாம். எப்போவும் அப்படி இருந்தால் என்னத்துக்கு ஆகும்? என் தந்தை எனக்கு தந்த மோசமான அடியில் நான் அவரிடமிருந்து விலகி, கிட்டத்தட்ட 15 வருஷமாச்சி அவர்கிட்டெ நான் அன்பாய் திரும்ப ஒட்ட… தேவையா இதெல்லாம்???

வாத்தியார்களை விடுங்க… அடிவாங்கியபடி ஒரு பாட்டு வருமே?? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? ”பட்டத்து ராணி… பார்க்கும் பார்வை” என்று சாட்டையடி வாங்கியபடி வரும் பாட்டு அது. எல் ஆர் ஈஸ்வரியின் குரல் அது. இவ்வளவு காலம் ஆனாலும் இன்னும் சலிக்காமல் கேக்க வைக்கும் பாட்டு அது.

அது சரி… தலைப்பெ உட்டு ரொம்ப தூரம் வந்துட்டோமோ?? சாதாரன அடியே இப்படி இருக்கறச்சே, ஓங்கி அடிச்சா எப்புடி இருக்கும்? ஒரு கிலோ படிக்கல்லை வச்சி அடிச்சாலே, மூஞ்சி மொகறெ பேந்து போகும். (அப்படியான்னு யாரும் செஞ்சி பாக்காதீங்க) அதுலெ 10கிலோன்னா எப்படி எப்பெக்ட் தரும். அதெ விடுங்க.. ஒன்றெ டன் (அதாவது 1500 கிலோ) எப்படி இருக்கும்? HP Horse Power மாதிரி இது TP டன்ஸ் பவரா இருக்குமோ??

ஆமா இவ்வளவுக்கு அப்புறமும் கம்பர் வரலைங்கிறது வருத்தமா இருக்கத்தான் செய்யும். (இதுக்கு ”இல்லை” என்பது உங்கள் பதிலாய் இருந்தாலும் என்னோட பதில் தொடரத்தான் செய்யும்). நம்ம ஆளுங்க சினிமா படத்திலெ பன்ச் டயலாக் சொல்ல ஒன்னறை டன்னுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா இதே மாதிரி ஒரு சீன் கம்பராமாயணத்திலெ வருது. எவ்வளவு வெயிட்டு இருக்கு என்ற கேள்வியும் வருது. எங்கே? எப்பொ? தெரியுமா? இரணியன் வதைப் படலத்தில் வருது. இரணியனைப் பிடிச்சி நரசிம்ம அவதாரத் திருமால் கையால புடிக்கிறார். அது எம்புட்டு ஃபோர்ஸ் தெரியுமா? பெரிய்ய பெரிய்ய கணக்கு வாத்தியாருங்க, புரபஸருங்கு எல்லாராலெயும் கூட, சொல்ல முடியாதாம் அதை. இது எப்படி இருக்கு?

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்புகைசெயா நெடுந்தீப் பொங்க உருத்து எதிர் பொருந்தப் புக்கான்தொகை செயற்கரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்மிகைசெய்வார் வினைகட்கு எல்லாம் மேற் செயும் வினையம் வல்லான்.

உங்களுக்கும் கோபம் வந்து வெயிட்டா ஏதாவது தூக்கிட்டு அடிக்க வந்துடாதீங்க… அன்பே சிவம். அன்பு தான் எல்லாம்..ம்..எல்லாம் தான்.

மைனஸ் X ப்ளஸ் = ப்ளஸ்


மணியடிச்சாச் சோறு அது மாமனாரு வீடு என்பார்கள். அப்படீன்னா.. அந்தக் காலத்து கடிகாரங்களில் அரை மணிக்கு ஒரு தரம் மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும். அப்போ மாமனார் வீட்டுக்குப் போன மாப்பிள்ளைக்கு, அரை மணிக்கு ஒரு தரம் ஏதாவது திங்கத் தீனி வரும் என்று அர்த்தமா? ஒரு வேளை மணியடிச்சாச் சோறு அது மாமியாரு வீடா இருக்குமோ!! அங்கே வேணும்னா மணி அடிச்சா சோறு தருகிறார்களோ என்னவோ. அந்தமானில் கைதிகளை ஏற்றி வந்த கப்பலில் இதே வழக்கம் இருந்திருக்குமோ.? இன்றும் கூட பயணிகள் கப்பலில் மணி அடித்துச் சோறு போடும் வழக்கம் மாறாது இருக்கிறது. மற்ற பயணிகள் கப்பலில் எப்படி என்பதை வேறு யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாய் இருக்கும்.

என்னோட மாமனார் வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் சொல்றேனே.. அந்தமானை இன்னும் பலர் வெளிநாடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். (ஒரு வேளை எனக்கும் இதே தப்பான அபிப்பிராயத்தில் தான் பொண்ணு குடுத்திருப்பாரோ?). அந்தமானை பல நேரங்களில் இந்திய வரைபடத்தில் காட்டாதது ஒரு காரணமாய் இருக்கலாம். (ஆமா டீவி அளவுக்கு இந்தியா மேப்பைச் சுறுக்கினாலே, அதில் அந்தமான் மங்கலாத் தெரியும். அதில் டீவி விளம்பரத்துக்கு இடம் விட்டு காட்டும், இந்தியா மேப்பில் அந்தமான் கானாமலே போயிடும்). பாஸ்போர்ட் வாங்கிட்டுதான் அந்தமான் வரணுமா? ரூபா அங்கே செல்லுபடியாகுமா? அங்கும் இங்கும் எவ்வளவு டயம் வித்தியாசம்? என்று பாமரத்தனமாய் கேள்விகள் கேட்கும் எத்தனையோ விவரமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேவா இருக்க முடியும்? அவனவன் எடுக்கிற முடிவு, நமக்கு சாதகமா இருக்கு என்று விட வேண்டியது தான்.

அந்தமானில் அதிகாலை காலை 4.30 க்கே நல்லா விடிய ஆரம்பித்து விடும். அதே மாதிரி மாலை 4.35 வாக்கில் இருட்டத் தொடங்கிவிடும். இங்கே தொழிலளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வருவர். (டியூசன் கலாச்சாரம் 4.30க்கே ஆரம்பித்து விட்டது) இந்த மாதிரியான நேரங்களில் சாப்பிட்டு தூங்கிப் பழகிய (25 வருடங்களுக்கும் மேலாய்) எனக்கு மாமனார் வீட்டுக்கு போனால் சிரமம் தான். காலை 5 மணிக்கே நான் மட்டும் முழித்து.. திரு திரு முழித்துக் கொண்டு கிடப்பேன். இரவு 10.30 க்கு படுக்க தலையணை தேடுவேன். எல்லா சீரியலும் முடிந்தால் தான் சமயல் அது தமிழக கலாச்சாரம். பத்தாக் குறைக்கு, மதுரையில் தண்ணீ வருவது நள்ளிரவு 12 மணிக்கு. மணியடிச்சா சோறு எனக்கு சரிப்படலை.

வடிவேல் ஒரு படத்தில் மணியடிப்பவராக வருவார். இந்திக் காரர்களிடம் ஏதோ எக்கு தப்பாகச் சொல்ல அந்த ”பெல்பாய்”, என இருந்தவர் உடனே “Bad Boy” ஆக பெயர் பெறுவார். அந்த மாதிரி Bell Boy பற்றிய ஒரு கதை அனேகமா எல்லாரும் கேட்டிருப்பீங்க. அதாங்க், படிக்கலைன்னு அவரை சர்ச் விட்டு விரட்டப் போக, அவர் சூப்பரா, சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சி கோடீஸ்வரன் ஆயிட்டார். படிக்காமெயே இப்பிடி ஆயிட்டீகளே, நீங்க மட்டும் படிச்சிருந்தா?…. அவர் சொன்ன பதில் “நான் பெல்பாயா இருந்திருப்பேன்.

அந்த பெல்பாய் வேலையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது ஒரு மைனஸ். வியாபாரத்தில் ஈடுபடுதல் ஒரு ப்ளஸ். இப்போது பழைய நிலமையை விட முன்னேறி இருப்பது ப்ளஸ். [ஆகக்கூடி, மைனஸ் ப்ளஸ் ப்ளஸ் = ப்ளஸ் என்று தானே ஆகிறது என்று கணக்குப் புலிகள் சண்டைக்கு வர வேண்டாம்.]

இந்த டிசம்பர் வந்து விட்டாலே அந்த சுனாமி வந்து சென்ற அந்தக் கருப்பு ஞாயிறு ஞாபகம் வந்து விடும். 2004 டிசம்பரில் வானம் பார்த்து நடுத்தெருவில் படுத்தது இன்னும் நினைவில் இருக்கு. உயிர் பொருள் இழப்புகள் அத்தனையும் அந்தச் சுனாமி தந்து விட்டுச் சென்றது. இப்போது அனைவருக்கும் வீடு என்ற அளவில் அரசின் சலுகையினை அந்தத் துயரில் கலக்கம் அடைந்தோர்க்கு கிடைத்துள்ளது. இருக்க இடமின்றி இருந்த, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இப்போது வீடு சொந்தமாய் விட்டது. இங்கும் அதே கணக்குப் பார்முலா தான். [ Minus X Plus = Plus].

ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வீழ்வது தவறே இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. அந்த துயரிலிருது வெளியே வர நாம் எடுக்கும் முயற்ச்சிகள் .. அதுவும் பாசிட்டிவான முயற்சிகள், நம்மை நிச்சயம் மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் என்பது தான் இங்கே சொல்ல வரும் சேதி. தவறி விழுந்து நடை பயிலாத குழந்தை உண்டா என்ன? ஆனால் நம்மில் பலர் ஏதாவது சோதனை வந்தால் உயிரே போன மாதிரி ஆகின்றனரே! சமீபத்தில் காதல் தோல்வியில் இருவரும் தற்கொலச் செய்தி வந்தது. இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமே அந்த காதல் கத்தரிக்காய் திருமணம் தானா?? (நான் காதலுக்கு எதிரி இல்லை. காதல் தற்கொலையால், காதலை கொலை செய்பவர்களுக்கு எதிரி).

இந்த மேட்டரை இந்த வெத்து வேட்டே இப்படி நீட்டி முழக்கி எழுதினா, கம்பர் அதனை கம்பராமாயணத்தில் டச் செஞ்சிருக்க மாட்டாரா என்ன?? இருக்கே… அனுமன் இலங்கையில் முதல் சுற்றில் துவம்சம் செய்து திரும்பிய நேரம். பார்க்கிறார் இராவணன். (நம்ம சுனாமி துவம்சம் செய்ததை சரி செய்ய TRP – Tsunami Rehabilitation Programe ஆரம்பித்த மாதிரி இராவணன் ARP – Anuman Rehabilitation Programe ஆரம்பித்திருப்பாரோ). தெய்வத் தச்சன் மயனோட மேற்பார்வையில், பிரம்மனே களத்தில் இறங்கி, இராவணன் சொன்ன படி, சொன்ன Target Date ல் செய்து முடித்தாராம். எல்லா வேலையும் முடிச்சிட்டு, இலங்கேஸ்வரன் அப்படியே அன்னாந்து பாத்தார். அந்த வானலோகத்தில் இருக்கும் அமராவதியை விட இலங்காபுரி சூப்பரா இருக்காம். கடைசியா ஒரு பன்ச் டயலாக் வேற… அட.. ஏற்கனவே இருந்த இலங்கையை விடவும் நல்லா இருக்கே!!!!. இப்பொ நீங்களே சொல்லுங்க… Minus X Plus =????

பொன்னினும் மணியுனும் அமைந்த பொற்புடைநன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்முன்னையின் அழகு உடைத்து என்று மெய் கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.

மிஸ்டர் கம்பர் அவர்களே, அந்த மயன் அவர்களோட மெயில் ஐடி எப்படியாவது வாங்கிக் கொடுங்க.. இன்னும் சில TRP வேலைகள் அந்தமானில் முடிக்கனும்.