கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.
இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…
வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?
தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]
நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.
ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)
சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..
இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..
கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)
வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?
எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…
வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி
மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…