கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.