Kamban – a Management Expert


ஆய்வுக் கட்டுரை - தொகுதி 3[காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்திய கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கில் அடியேன் முதன் முதலாய் படைத்த ஆய்வுக் கட்டுரை. இக்கட்டுரையினையும் ”வேறுள குழுவையெல்லாம் மென்ற மானுடன்: கம்பன்”- என்ற தலைப்பில் கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிய்ட்டுள்ள நூலில் வெளியிட்டுள்ளனர். வெளியீடு: கபிலன் பதிப்பகம். arunankapilan@gmail.com]

கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்

மேலாண்மைக் கோட்பாடுகள்:

மனித நாகரீகம் தொடங்கிய காலம் தொட்டே, குழுவுடன் வாழும் மனப்பாங்கும் ஆரம்பம் ஆனது. குழுவினரிடையே ஒரு சுமூக சூழல் நிலவத் தேவையான அனைத்தும் செய்திட வேண்டிய தேவையும் ஏற்பட, மேலாண்மை நிர்வாகம் என்ற பெயர் இடப்படாமலேயே அக்கலையும் (ஒரு வகையில் அறிவியலும் கூட) வளர்ந்தே வந்தது. காலத்திற்கேற்ப அதன் வரம்புகளும் மாறியபடியே இருந்து வருகிறது. ஆயினும் இன்று வரை மேலாண்மையின் மூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலாண்மைக் கண்ணாடி அணிந்து, கம்பராமாயணத்தை படிக்க ஆரம்பித்த போது தான், கம்பன் ஒரு மேலாண்மைத் திறனாளன் என்பதில் எந்த விதத்திலும் ஐயம் இருப்பதாய்த் தெரியவில்லை. கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த, காப்பியம் என்ற உண்மையினையும் மீறி எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் அதில் இருப்பதை ஆணித்தரமாய்க் கூற இயலும்.

இலக்கு நோக்கிய பயணம்:

நிர்வாகத்தின் பணிகளாக எதிர்காலமதை உத்தேசமாய்க் கணித்தல், சரியான திட்டமிடல், அதனைச் சரிவர செயலாக்கம் செய்தல், தலைமையேற்று நடத்தல், ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் ஆகியவை கூறத்தக்கவை ஆகும். இவை அத்தனையும் ஒன்றுசேர்த்து இலக்கை எட்டுவதை பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் தனது இராமாயணத்தில் பல இடங்களில் கையாண்டு இருக்கிறார்.

உதாரணமாக சீதையினைத் தேடும் முயல்வில் வானரங்கள் ஈடுபடும் செயலினை அவர்கள் எவ்விதம் செய்தனர் என்பதைப் பார்க்கலாம். செய்ய வேண்டியதில் தெளிவு, சீதையினை தென் திசையில் சென்று தேடிட வேண்டும் என்பதில் இருந்தது. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ, அதனைச் சரியாக பிரித்துத் தருதல். அனுமனை அதற்குத் தலைவனாயும் தேர்வு செய்தல். தேர்வு செய்த பின்னர் அவ்வேலை செவ்வனே செய்திடத் தேவையான அனைத்தும் தருதல். அதற்கு இரண்டு வெள்ளப் படை தருதல். திட்டமிடும் போதே இறுதியாய் இலக்கினை எட்ட முப்பது நாள் கெடுவாய்க் குறித்தல் இங்கே கவனிக்கத் தக்கது. இறுதியாய்ப் ’பணிகள் சரிவர நடக்கிறதா?’ என்பதை கண்கானிக்கவும் செய்தல். இவை அனைத்தும் சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 11)

இன்றைய காலகட்டத்தில்கூட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களில் தந்தே ஆக வேண்டும் என்ற முறை உள்ளது. செல்ல வேண்டிய தூரமோ அதிகம். சிக்கலும் சிரமமும் கூடவே உண்டு. சிதாபிராட்டியினையும் இது வரை கண்டதே இல்லை. ஆனால் கம்பன் விதித்த காலக் கெடுவில் எந்தத் தளர்வும் இல்லை.

வரமான சாபம்

இடுக்கண் வருங்கால் நகுக என்கிறது உலகப் பொதுமறை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது. வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்திக் கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் தந்தை “நீயும் இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று சாபம் தருகிறார்.. இதை கேட்டு தசரதனுக்கு துயரம் ஒரு பக்கம். தனக்குக் குழந்தைப் பேறு இல்லையே என்ற கவலை ஒழிந்தது குறித்து மகிழ்ச்சி மறுபக்கமாம். சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் மனோநிலையின் நிர்வாகக் கலையினை கம்பர் கற்றுத் தருகிறார்.

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 87)

கனிவான சொற்கள்:

வள்ளுவரின் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதினை உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகச் சிக்கலின் பெரும்பாலான காரணங்களைத் தேடிப் பார்த்தால் அதில் பரிமாரிய வார்த்தைகளின் தன்மை தான் மேலோங்கி நிற்கும். ஒரு சூழலில் பயன்படுத்தும் சொற்கள் மற்றவர்க்கும் இதமாய் இருக்கும் போது, செய்ய வேண்டிய செயல் இலகுவாய் முடியும். இல்லாவிடில் ஈட்டியாய் குத்திய வார்த்தைகள் காயப் படுத்தும் பணி தவிர்த்து, வேறு எந்த வினையையும் ஏற்படுத்தாது. அந்தமான் தீவுகளில் வழங்கும் மொழி வழக்கை வைத்து கம்பன் பார்வையில் சற்றே இதனை நோக்கலாம்.

அந்தமான் தீவுகளில் வழக்குமொழியாக ஹிந்தியினைப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி மொழி தெரியாமல் தான் வருவர். அதுவும் அவர்களுக்கு ஹிந்தியில் எண்களைப் பயன் படுத்துவது மிகச்சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு பின்னர் இருபது, முப்பது என மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர்.

15 க்கு ஹிந்தியில் “பந்தரா” என்று சொல்வதற்குப் பதிலாக ஏக் பான்ச் (ஒன்றும் ஐந்தும்). இதே போல் 55 ஐ சொல்லிட தமிழர்க்கு ”பச்பன்” தேவைப்பட வில்லை. ”பான்ச் பான்ச்” (ஐந்தும் ஐந்தும்) என்பதே போதுமானதாய் இருக்கின்றது. இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறார். அது என்ன “பத்தும் நாலும்” தானே என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு முறையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் நீங்களே சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே?
எத்தைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ? என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 21)

அந்தமானிற்கு கப்பலில் மூன்றே நாளில் சென்று விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர இந்தக் கம்பன் யுத்தி உதவுகிறது. நிர்வாக சிக்கலினை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளப் பழக வேண்டும் என்பதையும் கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும். தவிர்க்க இயலாத மாற்றங்கள் வரும் சமயத்தில் அதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது தான் மேலாண்மைக் கோட்பாடு. மாறி வரும் சூழலில் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. அதை ஏற்றுக் கொள்ளும் இதம் மனதளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் இந்த திறனாளன் எவ்வளவு கவனமாய் இருந்திருக்கிறான்?

ஆதாரங்களின் தேவைகள்:

ஒரு பணியினைச் சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு, செவ்வனே செய்திடும் கலையினைத் தான் மேலாண்மை கற்றுத்தருகிறது. அதனால் வரும் சிக்கல்களையும் அது எதிர்பார்க்காமல் இல்லை. ஆனால் திறனாளனுக்கு அந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கண்டிப்பாய் இருத்தல் அவசியம். கம்பனிடம் இல்லாமல் போகுமா என்ன? ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமானதாய் இன்றளவும் கருதப் படுகின்றது. இந்தச் செய்தியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை, கம்பனின் மேலாண்மைத் திறனாளன் பதவிக்கு சான்று சொல்லும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படி வருகிறது கம்பனின் வரிகள்.

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 38)

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக் கட்டுரையின் நோக்கம்.