[கார் நாற்பதில் கம்பராமாயணம் -15]
இந்தக்கொரோணா காலம் வந்தாலும் வந்திச்சி, செய்யும் எல்லா வேலையும், ”நாம அப்பவே சொன்னது தானே இதெல்லாம்!” எனச் சொல்வதெக் கேட்டுக் கேட்டு, காதெல்லாம் வலிக்குது. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். நாமெல்லாம அம்புட்டு அறிவாளிகள் இல்லைங்கிறத ஒத்துக்க, பலருக்குக் கஷ்ட்டமா இருந்தாலும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எனச் சிலராவது இப்பொ நம்ப ஆரம்பித்துள்ளனர். நாமளும் நம்ம பங்குக்குக் கார்த்திகை மாதம் ஏன் தீபம் ஏற்றும் வழக்கம் வந்தது, எனத் தேடி வைப்போமே! (வீட்டுக்காரி செய்யும் செயல்களுக்கே அரத்தம் புரியல்லே, காலம் காலமா செய்து வரும் செயலுக்குக் காரணம் புரியுமா என்ன?)
அடைமழை பெய்து ஓய்ஞ்சி, ஐப்பசி மாசம் முடிஞ்சி அப்புறம் வரும் மாதம் தான் கார்த்திகை. தொடர்ந்து பெய்த மழையினால் பூமியும் வானமும் ஜில்லென்று குளிர்ந்து, அப்படியே சிலு சிலுவென காற்று வீசும் போது, ஒளியும் ஒலியும் , (சாரி சாரீ…ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி) ஒளியும் வெப்பமும் தேவை என்பதை, அழகாகவும் மங்கலமாகவும் வெளிப்படுத்தும் திருநாள் தான் கார்த்திகைத் திருநாளாம். தங்களையும் அலங்கரித்துக் கொண்டு, மேலும் அழகாக்குவது அந்த தீபமேற்றும் அழகான குத்துவிளக்குகள், பார்ப்போரின் கண்களுக்கு ஓர் இலவச இணைப்பு.
இருளிலும் குளிரிலும் அல்லல்படும் சின்னஞ்சிறு உயிர்களுக்கு ஒளியும் வெப்பமும் தந்து அதுகளையும் வாழவிடும் பொருட்டே, கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலையிலும் மாலையிலும் வீடுகளின் முன்பாக வரிசையாக விளக்கேற்றி வைக்கும் வழக்கம் வந்ததாம். காலப்போக்கில் தீபம் ஏத்துங்க என்றால், கிண்டல் செய்யவும், அப்புறம் அதெ வச்சே மீம்ஸ் போடவும் இது பயன்பட்டு வருகிறது.
அகநானூறு, நற்றிணை, களவழி நாற்பது போன்ற சங்க இலக்கியங்களில் அறுமீன் என்று ஆங்காங்கே வருதாம்.
கார்த்திகை மாதமோ, காயலாங்கடை வியாபாரமோ, எந்த நேரத்திலும் சுட்டெரிக்கும் வெயிலில் மணலில் உக்காந்திருக்கும் இளம் (சிலநேரம் முது)சிட்டுக்களைப் பாக்கும் போது எப்படி இவர்களால் உக்கார முடியுது? எனத் தோன்றும் (அவனவன் வெயில் கூட தெரியாமெ இருக்கான். நீங்களும் இருக்கீகளே? இப்படிப்பட்ட கேள்வி வந்ததால், நான் என் இல்லத்தரசியை மெரினாவுக்கு அழைத்துச் செல்வதில்லை)
ஆனா இந்தமாதிரி மண்டைகாயும் வெயிலில் காதலியோட திரிவதும் நம்ம பண்பாட்டின் ஓர் அங்கம் போலத் தெரியுது. அகநானூறு பாடலில் ஒளவையார் கூட இந்தமாதிரி காட்சியெப் பாத்து சொல்லி இருக்காய்ங்க… காதலனும் காதலியும் தங்கள் ஊரையும் சுற்றத்தாரையும் விட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் வெம்மை மிகுந்த கானகத்தின் வழியே போறாகளாம்.அப்பொ கண்ணில் தெரியும் காட்சி பாருங்களேன்…
நம்ம வைகை மாதிரி நீரில்லா காட்டாற்றின் கரையோரம் மரங்களின் கிளைகள் தாழ்ந்திருக்க, அதன் நிழலில் உயர்ந்த மணல் மேடுகள் இருக்காம். வரிசையா நிக்கும் இலவ மரங்களின் எல்லா அரும்புகளும் செவேலென்று அழகாப் பூத்திருக்காம். அந்தக் காட்சி, இளம் பெண்கள் ஏற்றி வைத்த கார்த்திகை விளக்குகளின் நெடிய வரிசை போல இருந்ததாம்.
சிலப்பதிகாரம் கார்த்திகையை “அழல்’ என்று கூறுகின்றது (அப்பாடா என் பதிவைத் தவறாது படிக்கும் நண்பர் முத்துமணி அவர்கள் (சிலப்பதிகாரப் பிரியர்) மனம் மகிழ்வார்.
வைரமுத்துவின், “கவிதையே பாடலாக” என்ற மேடைப் பாடலிலும்
( கலைஞர் முன்னிலையில் எஸ்.பி.பி. குரலில் பாடிய பாடலில் ) கேட்கும் போதே, மார்கழி என்றால் குளிரும்; கார்த்திகை என்றால் அங்கே கதகதப்பாகவும் இருக்கும்.
”மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்..” இது திரைப்பாடலுக்கான வரி.
…..நீ என்னைக் கடந்த காலம்,
மனசெல்லாம் மார்கழி தான்,
தெருவெல்லாம் கார்த்திகை தான்…..
இது ’கவிதையே பாடலாக’ பாடல் வரி.
கார் நாற்பதின் பக்கம் நம்ம நினைவுக் காரின் கதவைத் திறப்போம். அட…அங்கும் கார்த்திகை தான்.
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; சிலமொழி!
தூதொடு வந்த, மழை. 26
சில சொற்கள் மட்டும் பேசும் தோழியே!
கார்த்திகை, தலைமையான திருநாள். நாட்டு மக்கள் எல்லாம் தெருவில் விளக்கு ஏற்றி வழிபடுவர். அந்தக் கார்த்திகை விளக்குப் போல நிலமெல்லாம் தோன்றிப் பூ பூத்துத் திகழ்கிறது. மழை பொழிகிறது. இது அவர் வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறி.
இனி நேரே நம்ம கம்பர் கிட்டேப் போய் பாட்டு கேட்டா… செமெ கடுப்பிலெ இருக்கார். ஆமா சுக்கிரீவன் சொன்ன நேரத்தில் வரலையாம்.. (அவரு வராங்காட்டி என்ன, கார்த்திகை வருதா இல்லையா? அது தான் நமக்கு முக்கியம்)
அன்ன காலம் அகலும் அளவினில்,
முன்னை வீரன், இளவலை, ‘மெய்ம்பினோய்!’
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ?
நமக்கெல்லாம் குளிர்காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் அடங்கிய கூதிர் எனப்படும் இலைகள் கூம்பி உதிரும் காலமாகும். அக்காலம் நீங்கியவுடன், இராமன் இலக்குவனைப் பார்த்து, வாரேன்னு சொன்ன சுக்ரீவன் வரலையே? நான்கு மாதம் கழிந்த பின்பும் வரலையே? என்ன செய்கிறார் அந்த சுக்ரீவன்? எனக் கேட்டாராம் இராமன் இலக்குவனிடம்.
மீண்டும் வருவேன்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (04-10-2020)