படவா கோபியும் ஐயோ கம்பனும்…


Kuwait
என் பொறியியல் கல்லூரித் தோழரும், குவைத் தமிழ் சங்க தலைவருமான பழனிகுமாரிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நடக்கும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, நல்ல பேச்சாளர்கள் பெயர் சொல்லேன் என்று கேள்வியுடன் ஆரம்பித்தது அந்த உரையாடல். நானும் என் சிற்றறிவுக்கு எட்டிய, கேள்விப்பட்ட சிறிய, பிரபலமான பெயர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன். ஏறக்குறைய என்னால் பரிந்துரை செய்யப்பட்ட அனைவரின் பேச்சுக்களையுமே குவைத் தமிழ்வாழ் மக்கள் நேரில் கேட்டு இன்புற்றிருந்தனர் (நம்ம சரக்கும் அவ்வளவு தான் என்பதும் சொல்லனுமா என்ன).

 நான் ஒரு பெயர் சொல்வேன். சிரிக்கக் கூடாது என்று நண்பர் பழனி தொடர்ந்தார் (இப்பொல்லாம் வில்லங்கம் போன்லெ கூட வருமாமே?). நானும் லேசாக சிரித்தபடியே, சொல்லுப்பா என்றேன். ”அந்தமான் கிருஷ்ணமூர்த்தியை பேச அழைத்தால் என்ன?” என்றார் என் நண்பர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “என்னெயெ வச்சி காமெடி கீமெடி பன்னல்லையே” என்றேன் நான். லீவு வாங்கி, வெளிநாடு செல்ல அனுமதி வாங்கி (வீட்டுக்காரி கிட்டேயும் பெர்மிஷன் வாங்கி).. விசா வாங்கி… இப்படி இத்தனை….வாங்கி… இதெல்லாம் சாத்தியமா என்று தலை சுற்றியது. குவைத்லே வெயில் அதிகம் என்பதால் ஏதாவது கோளாறோ என்றும் யோசித்தேன். அத்தனையும் கச்சிதமாய்,  அதுவும் மிகக் குறுகிய நாளில் மளமளவென்று எல்லாம் முடிந்தன. மனைவியிடம் நல்ல பேர் வாங்க இந்த டிரிப்பை யூஸ் செய்யவும் ஒரு ஹிட்டன் அஜெந்தா மனதிற்குள் உருவானது.  ஹனிமூனுக்கு நல்ல எடமாக் கூட்டிட்டு போகலையே என்ற இல்லத்தரசியின் ஏக்கத்தை (கல்யாணம் ஆகி இவ்வளவு ஆண்டுகள் பின்னர்) அந்த இலக்கியப் பயணம் நிறைவேற்றியது.

 குவைத் முக்கிய நிகழ்வில் நான் மட்டும் வேட்டி கட்டிப் போய் நிற்க, எல்லாரும் கோட் சூட் என்று வந்து என்னை Odd Man Out ஆக்கி விட்டார்கள். (சமீபத்திய காரைக்குடி கம்பன் விழாமேடையில் நான் மட்டும் ஜீன்ஸ் போட்டுப் போய் அங்கும் வித்தியாசமாய் உணர்ந்தேன்..) டிரஸ் என்பதை எப்படி போடுவது என்று சொல்லிக் கொடுக்க கமல் ஆளை வச்சிருக்கிற மாதிரி நாமளும் ஆள் தேடனுமோ…. அல்லது கூட இருக்கும் ஆளை இதுக்கும் தயார் செய்யனுமோ??.

 பொதுவா விழா ஆரம்பித்தவுடன் சிறப்புப் பேச்சாளர் பேச அழைப்பு வரும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கலை நிகழ்ச்சிகள் கலைகட்டி செமெ கலகலப்பா போயிட்டு இருந்தது. படவா கோபியின் மிமிக்ரியும் இசை நிகழ்ச்சியும் டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போது லேசா பிரேக் விட்டு, என்னைப் பேச அழைத்தார்கள்.

எல்லை தாண்டிய தமிழ் பற்றி பேசினேன்… நடுவே, கடவுளையே திட்டும் தைரியம் கொண்ட தேவார ஆசான்கள் பற்றியும் குறிப்பிட்டேன். படவா கோபி பக்கத்தில் இருந்தார். பெயரே வித்யாசமாகப் பட்டது. படவா என்பதை திட்டுவதற்க்குத் தானே பயன் படுத்துவார்கள். அதுவே எப்படி பெயராக ஆகிவிட்டது.. அல்லது ஆக்கிக் கொண்டார். இவரைப் போல் கம்பர் இப்போது இருந்தால், ஐயோ கம்பன் என்று ஆகி இருப்பார் என்று கம்பரையும் சேர்த்து முடித்தேன். (இப்பொ எல்லாம் ஆஃபீஸ் காரியமாய் இருந்தால் கூட கடைசியில் கம்பராமாயணம் வந்து விடுகிறது)

 குவைத்தை இத்தோடு விட்டு விட்டு ரிவர்ஸ் கியரில் கொஞ்சம் கோவை பொறியியல் கல்லூரிக்கே போலாமே… அந்தக் காலகட்டம் தான் கவிஞர்வைரமுத்துதிரைக்குபாடல்எழுதத் தொடங்கிய நல்ல நேரம்.அவர் வரிகளில் மாணவர்கள் மத்தியில் ஒரு பலமான ஈர்ப்பு இருந்தது என்பதைமறந்திருக்கமுடியாது. அப்போதும்சரி இப்போதும் சரி எவ்வளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் பார்க்கத்தான் முடிந்தது. 
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ராதா அம்பிகா (இந்தக் கால சீரியலில் வரும் அம்பிகாவையும், ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் வரும் ராதாவையும் பாத்து ”என்ன அந்தக் காலத்து ரசனை?” என்று சண்டைக்கு வரவேண்டாம்) என்று ஜொள்ளு விடுவோர் மத்தியில் என் அறை முழுக்க வைரமுத்துவின் படம் ஒட்டி வைத்திருந்தேன்.. ஒரு அபிமானம்..& ஈர்ப்பு தான்.

 அலைகள் ஓய்வதில்லை படத்தில் “விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்ற வைரமுத்துவின் வைரவரிகள் வரும். பாடலின் முடிவில் “…காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்” என்று முடியும். என்ன தான் வைரமுத்துவின் பரம ரசிகன் என்றாலும் ஒரு நல்ல கவிதையின் ஊடே, (கடைசியிலாகட்டும் இப்படி) ”போட்டான்” என்று கவிஞர் போட்டதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை அப்போது.

 இப்பொ அப்படியே…. கம்பன் கவிதைகளை மேலோட்டமாய் படித்தபோது (எதையுமே முழுசா படிக்க மாட்டியா? – என்று யாரும் கேட்டு விட வேண்டாம்) ’போட்டான்’ போலவே ’போனான்’ என்பதும் கொஞ்சம் சறுக்கின மாதிரி தெரியுது… (கொழுப்புடா உனக்கு…அவனவன் 40 50 வருஷம் கம்பனைப் படிச்சிட்டு சும்மா இருக்காய்ங்க… நீ குத்தமா சொல்றே… இதுவும் வேண்டாமெ ப்ளீஸ்..) ஏதோ மனசுலெ பட்டது. சொல்றேன்.. அவ்வளவு தான்.

அடிக்கடி வந்து தலையைக் காட்டி விடாமல் போனாலும், இந்த ’போனான்’ கம்பனின் கவிதையிலும் அவ்வப்போது தலை காட்டுகிறான் தான். “குன்றுக்கப்பால் இரவியும் மறையப் போனான்”, ”..பழிச்சொடும் பெயர்ந்து போனான்”. இப்படி சிலவும் வந்து போகுது. கம்பரின் பாடல்களில் அதிகம் எடுத்தாளப்படும் ஒரு பாட்டிலும் அந்தப் போனான் வருது என்பது தெரியுமா? அதையும் தான் பாப்போமே…

 வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளுடன் இளையோனுடனும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயொ இவன் வடிவென்பது அழியா அழகுடையான்..

 இதில் ஐயோ என்பது கவிஞர்கள் பயன்படுத்த தயங்கிய ஒரு வார்த்தை. கம்பர் ஐயோவும் பயன் படுதுகிறார். கூடவே போனான் என்பதையும் பயன்படுத்தி, அப்பாடா.. வைரமுத்துவுக்கும் வக்காலத்து வாங்கிட்டார்.. அது சரி நானு இப்பொ கம்பருக்கு என்னும் கொஞ்சம் வக்காலத்து வாங்கிட்டு வாரேன்..

 ஏதோ..இராமன், சீதை இலக்குவன் ஆகியோருடன் போனான்… என்று மட்டும் பார்க்காமல், இராமன் அழகை வர்ணிக்கத் திணறும் கம்பர் என்பதையும் தாண்டி, கம்பர் ஒரு குறுந்தாடி வைக்காத சைண்டிஸ்ட் என்று சொன்னால் நம்ப மாட்டீங்க… வெளக்கம் சொன்னா நம்புவீக தானே..

 முதல் வரியின் பொருள் கொஞ்சம் பாக்கலாம். கதிரவனின் ஒளி, தன் உடம்பிலிருந்து வரும் கதிர். ரெண்டும் சண்டை போட்டு சூரியன் செத்துப் போச்சாம்.. கருப்பான (இராமன் கலருதான்) உடலில் சூரியக் கதிர்கள் ஈர்க்கும் என்பதை அன்றே சொன்னவன் கம்பன்..

அடுத்து ராமனுக்கு உதாரணம் சொல்லும் மூன்றாவது வரி பாருங்களேன்..

மையோ, மரமகதமோ, மறிகடலோ, மழைமுகைலோ… ஏதோ கம்பன் மானாவுக்கு மானான்னு கிறுக்குனமாதிரி நம்ம மர மண்டைக்குத் தோணும். ”ம” சீரீஸில் வரனும். கருப்பாவும் இருக்கனும். ஏதோ சொல்லனும்னு வருகிறார் நம் கம்பர்.

மரகதம் – ஒரு திடப் பொருள்;

மறிகடல் – திரவம்

மழைமுகில் – வாயு

அட..அடடெ… அப்புறம் மை – செமிசாலிட்..

ஐயோ இப்படி ஒன்னுலையுமே ஒன்னையே கம்பேர் செய்ய முடியலையே ராமா…என்று முடிக்கிறார்.
[ரெண்டாவது வரி என்ன பாவம் செய்தது? அதிலும் வெளெயாடுகிறார் கம்பர்… ”பொய்யோ எனும் இடையாளொடும்” – இடை இருக்கு என்றால் அது பொய்யாம்…ஐயோ..ஐயோ…]

கம்பரா கொக்கா..

இனிமே யாரும் ஐயோ ஐயோன்னா…சிரிக்காதீங்க..சிந்திங்க

நீங்களும் ஆகலாம் சைண்டிஸ்ட் கம்பர் மாதிரி..

 

இடையோ இல்லை, இருந்தாலும்…


சமீப காலமாய் வரும் பஞ்ச் டயலாக்குகள் திகைக்க வைக்கின்றன. “நான் இப்பொ கெளம்பிட்டா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” இது சமீபத்திய டயலாக். நானும், என் பேச்சை கேட்கும் நானும் வேறு வேறா?? அய்யா சாமி கொழம்புதே.. இதுக்கு பேசாமெ அத்வைதம் துவைதம் இப்படி ஏதாவது படிச்சி போற நேரத்திலெ புண்ணியமாவது தேடிக்கலாமெ!!!

இப்படித்தான் ஒரு படத்தில் செந்தில் உதைபடும் காட்சி வரும். அதான் எல்லா படதிலும் வந்ததே… அது என்ன புதுசா? என்று கேட்க வேண்டாம். ராமராஜனுடன் காரைத் தள்ளும் ஒரு கலக்கல் காமெடி. “அதெ என்னைப் பாத்து ஏன்டா கேட்டெ?” என்று திரும்பத் திரும்ப உதைக்கும் சீன் அது.

கேட்ட விஷயத்தை, விட தன்னிடம் கேட்டது தான் வீரியம் அதிகம் என்பது தான் நான் இப்பொ கையில் எடுத்திருக்கும் சங்கதி… அதில் நாம் காண வேண்டிய நீதியும் இருக்கு.

கோபம் வந்துட்டா நான், நானாகவே இருக்க மாட்டேன் என்பார்கள் சிலர். அது எப்படி ஒரு ஆள் என்பது என்ன… ஒன்பது ஆட்கள் குடி இருக்கும் வீடா என்ன?? நேரத்துக்கு நேரம், மாறி மாறி எடுத்து விட. மனம் போல் மாங்கல்யம் என்பர். அது போல் குணம் போல் மனிதன். எல்லாராலும் கோபமாய் கத்திவிட முடியாது. அதுபோல் அத்தனை பேராலும் சாந்தமாயும் பேசிவிட முடியாது.

பெண்கள் வேலை செய்யும் இடங்கள்ல சிக்கல்கள் அதிகம். ஆண் ஊழியரை திட்டுவது போல் அவர்களை திட்டிவிட முடியாது. (ஆமா அவர்கள் வீடுகளில் திட்டு தருபவர்களாய் அல்லவா இருப்பர்!!) ஒரு கட்டை குரல் உயர்த்தி சொன்னால் போதும், அணை உடைந்து வருவது போல் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து வரும். எப்போதும் எப்படித்தான் அப்படி தயாராய் கண்ணில் ஸ்டாக் வைத்திருப்பார்களோ!!! அந்த பெண் தேவதைகளுக்குத் தான் வெளிச்சம்.

சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். என்ன? என்று விசாரித்ததில் ஒரு நபர் அவரை ஊனமுற்றவர் என்று சொல்லி விட்டாராம். நான் கேட்டேன், நீங்கள் ஊனமுற்றவர் தானே? ஆம் என்று பதில் வந்தது. உண்மையை ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இல்லை என்னை கேவலப் படுத்துவதற்குத் தான் அந்த வார்த்தையை பயன் படுத்தினார்.

சரி அது நியாயமான வாதம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் பேசுகிறார். வருத்தப்பட்டால் வந்தவர் ஜெயித்த மாதிரி. நாம் சகஜமாய் அதனை எடுத்துக் கொண்டால் நாம் ஜெயிக்கலாம் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

சில மாநிலங்களில் ஊன்முற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று தான் அழைக்க வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளதாம். இதே போல் ஹிந்தி தெரியாத ஆட்களை அஹிந்திபா4ஷி என்று சொல்லி வந்தனர். இப்போது அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு ஹிந்தி தெரியாத இடத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லச் சொல்கிறது அரசு.

ஊனமுற்றவர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே அந்த ஊனத்தின் உபாதையிலிருந்து மீண்டு வர முடியும். அட..ஊனம் இருந்தாலுமே…. இப்படியா??? என்று உலகம் மூக்கில் கை வைத்து வியக்கும்படி செய்ய வேண்டும்.

சிறுபிள்ளைக் காலத்தில் என்னை பூனைக் கண்ணா என்று கேலி செய்வர், அதே பெயரிலும் அழைப்பர். ஆரம்பத்தில் கோபம் வந்தது. பின்னர் அவர்கள் சொன்னது உண்மை தானே என்று எடுத்துக் கொள்ள கிண்டலும் கேலியும் குறைந்து விட்டது. இப்போ ஐஸ்வர்யா ராயின் ஐஸ் என்று ஐஸ் வைக்கிறார்கள் எனக்கு முன்பாக. (பின்னாடி பூனைக் கண்ணன் என்றும் பேசி வரக்கூடும்)

உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் என்பது மட்டும் தான் பொதுவான உண்மை. நான் யார் என்பதை அறிந்து விட்டால் யார் தான் நம்மை காயப்படுத்த முடியும்? முதலில் நம்மைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வோம். அது பிறரின் சங்கடமான வார்த்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றும்.

எதையாவது எழுதி அப்படியே இடையிலே கம்பராமாயணம் கொன்டு வருவது என்பதும் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாற்றுத் திறனாளியாக சீதையை சொல்லும் இடமும் வருது. சீதையா?? எப்படி? எப்படி? என்கிறீர்களா? சூர்ப்பநகை மூக்கு இல்லாமல் இருக்கும் போது, நானும் சீதையும் மாற்றுத் திறனாளிகள் தானே என்கிறார். நீங்க கேட்ட மாதிரி, ராமனும் எப்படி? எப்படி? என்கிறார். ஆமா… சீதைக்குத்தான் இடையே இல்லையே…

இடை பற்றி இன்னொரு இடமும் வருது. அசோக வனத்தில் சீதை வாடி வதங்கிப் போனாராம். எப்படி? எப்படி? இப்படி நீங்க கேக்கனும். கல்லுக்கு நடுவிலே ஒரு சொட்டு தண்ணியும் கெடைக்காமெ, வளரும் நல்ல மருந்துச் செடி மாதிரி வாடி இருந்தாராம். முன்னர் இடை மட்டும் தான் மெலிந்திருந்தது. இப்போது இடை போல் எல்லாம் இளைத்து துரும்பானாராம். எங்கே இருந்தார்? பெருத்த இடை வைத்திருக்கும் அரக்கியர் நடுவில் இருந்தாராம். கம்பர் பார்வை எங்கே போகுது பாருங்க…

வன் மருங்குல் வாள் அரக்கர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்க எழுந்த என்று ஓர் துளி வரக் காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்.

அது சரி உங்க பார்வை எங்கே போகுது??

இடைத்தரகர்கள்


அன்பு நெஞ்சங்களே…

இடை என்பதில் ஒரு கவர்ச்ச்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இடை பத்தி
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் இடைத்தரகர்கள் பத்தி எழுத வந்திருக்கேன்.

இடைத்தர்கர் என்றதுமே, என்னடா இது… இவனும் 3ஜி சமாச்சாரம் ஏதோ எழுத வந்துட்டானேன்னு நெனைச்சிப் பயந்துராதீங்க… நானு அந்த டாபிக்குக்கு
கொஞ்சம் indirect ஆ வர்றேன்.

தரகர்களின் தேவை எதுக்கு?

ஒரு சேவை தேவைப்படும் நபருக்கும் அது வழங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்பவர்கள் தான் தரகர்கள். அவர்கள் இடையில்
இருப்பதால் இடைத்தரகர்கள். அம்புட்டுத்தான்.

விளைவிக்கும் விவசாயிக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஆனால் மார்க்கெட்டில் ரூ 300க்கு அந்த பொருள் விற்கும். அப்பொ 250 ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் அந்த
இடைத்தரகர்கள்.

புரோக்கர் மாமா பூஜாரி Lobbiest Facilitator Contractor இப்படி செய்யும் தொழில்
வைத்து பெயர்களும் மாறுபடும்.

(இந்தப் பில்டப்புக்கு அப்புறம் கண்டிப்பா ஒன்னோட… இலக்கிய அறிவை எடுத்து
உடுவியே…சொல்லு..சொல்லு.. அப்பத்தானே இந்தப் போஸ்ட் சீக்கிரம் முடியும்!!)

இந்த நீனா ராடியா போன்ற இடைதரகர்கள் அந்தக் காலத்திலும் இருந்திருப்பாங்களா?…
யோசிச்சிகிட்டே கொஞ்சம் கப்பல் ஏறுவோம்.

போர்ட்பிளையர் முதல் லிட்டில் அந்தமான் வரை கப்பல் பயணம். சுமார் 9 மணி நேர பயணம். ஜாலியா படிக்க ரெண்டு பெரிய்ய புக் எடுத்துட்டு கிட்டுக் கிளம்பினேன். ரெண்டு பெட் இருக்கும் கேபினில் இன்னொருவர் வந்து சேர்ந்தார்.
இங்கிருக்கும் ஒரு மிருக வைத்தியர் (கன்சூமர் கோர்ட், கம்ப்ளைண்ட் என்று ஏதும்
செய்யாத மிருகங்களுக்கு வைத்தியம் செய்வதில் சுகம் என்றார்)..

ரொம்ப போரில்லை.. 9 மணி நேரம் …

அப்படி ஒன்னுமில்லை… நான் புக் வச்சிருக்கேன். – இது நான்.

என்ன புக்கு அது..இவ்வளவு பெரிஸ்ஸ்சா? (கேட்டவர் மலையாளி மிருக வைத்தியர்)

கம்ப ராமாயணம். பாடல்கள் மட்டும் ஒரு புக்.. அர்த்தம் தெரிய இன்னொரு புக் என்றேன்.

டாக்டர் ஒரு மாதிரி பாத்தார்… இதெல்லாம் சுத்தமா ஒரு எடத்திலெ இருந்து தானே
படிப்பாங்க. இப்படி ஜாலியா படிக்கிற புக்கா இந்த ராமயணம்??

அவருக்கு நான் சொல்லிய பதில் தான் உங்கள் முன் சொல்ல வருகிறேன்..

ஜாலியான சமாச்சாரங்கள் நிறைய இருக்கு இந்த கம்ப ராமாயணத்தில். இடைத்தரகர்கள் இல்லை என்றால் ராமன் இல்லை. ராமன் இல்லையெனில் ராமாயணம் ஏது??

தசரதனுக்கு குழந்தயே இல்லை. என்ன செய்றதுன்னு கைனக்காலஜிஸ்ட்களிடம்
பேசினார். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இந்த டெஸ்ட் செய்யின்னு சொல்ற மாதிரி ஒரு யாகம் செய்யனும்னு ஒரு சின்னதா பிரஸ்கிரிப்ஷன்.

நம்ம டாக்டர்கள் தெரிஞ்ச லேபில் ரெக்கமண்ட் பண்ற மாதிரி ஒரு வில்லங்கமான
முனிவரை வச்சி யாகம் செய்யனும்னு வம்பில் மாட்டி விட்டார்.

அந்த முனியோ சொஞ்சம் அப்படி இப்படி ஆளு.. ஆனா அவரோட அப்பாவோ,
மக்களை விலங்கு மாதிரி நெனைக்கிற ஆசாமி..பயங்கர முனி.. இந்த நேரத்லெ தான் நம்ம ராஜாவுக்கு (தசரதனுக்கு) ஓர் இடைத்தரகர் தேவைப்பட்டார்.
அது ஸ்பெட்ரம் மேட்டரை விட  கொஞ்சம் பெரிய்ய மேட்டர் என்கிறதினாலெ கொஞ்ச பேரை பிடிச்சாரு நம்ம தசரதன். யாரு அந்த இடைத்தரகர் தெரியுமா…
ஸ்…ஸ்.. யார்கிட்டேயும் சொல்லாதீங்க.. கொஞ்ச்சும் பெண்கள் சிலர்.

அவங்க எப்படி இருந்தாங்க தெரியுமா??

பிரைட்டான நெத்தி… கருப்பா நீளமா கண்ணுங்க… ரத்தச் சிவப்பா லிப்ஸ்
இருக்கும் வாய்.. முத்துப் பல்லுக்காரிகள்.. மென்மையான இரு மார்புகள்..
இப்படியெல்லாம் இருக்கும் விலைமகளிர்…

இவங்களை அனுப்பி கலைக்கோட்டு முனிவனை கலக்கி கூட்டிவந்து யாகம் நடத்தி … ராமன் பிறந்து… இப்படி வந்தது ராமாயணம்…

டாக்டர் தூங்க ஆரம்பிச்சிட்டார்… நீங்க இன்னும் தூங்கலையா?? பாட்டு கேட்டு தூங்குங்க…

“சோதி நுதல் கரு நெடுங் கண் துவர்
இதழ் வாய் தரள நகை துணை மென்
கொங்கை மாதர் எழுந்து யாம் ஏகி
அருந்தவனைக் கொணர்ந்தும் என வணக்கம் செய்தார்.”

என்ன மக்களே… இது தப்பு இல்லையா??

இல்லவே இல்லை… நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே
தப்பில்லை.

நீங்க என்ன சொல்றீங்க???

இடை இருக்கா இல்லையா???


சின்னப் புள்ளையா இருக்கிறச்சே நிறைய விளையாட்டுகள் ஆடியிருக்கலாம். நான் ஆடிய ஆட்டம் ஒண்ணு இன்னும் ஞாபகத்திலெ  இருக்கு. “படம் இருக்கா இல்லையா” என்ற விளையாட்டு தான் அது.

என் கையில் பழைய குமுதம் விகடன் ஏதாவது புத்தகம் இருக்கும். (காமிக்ஸ் & அம்புலிமாமா ஆகியவை இந்த விளையாட்டில் தடை செய்யப்பட்டவைகள்) அடுத்தவர் கண்ணுக்கு தெரியாத மாதிரி புத்தகத்தைப் பிரித்து அதில் எத்தனை படம் இருக்கும்? என்பதை அடுத்தவர் சொல்ல வேண்டும்.

படம் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு பதிலாக, “இருக்கு” அல்லது “இல்லை” தான் வர வேண்டும்.

படம் இருக்கும் போது இருக்கு என்று பதில் வந்தால் “வலதா” “இடதா” எந்தப் பக்கத்தில் என்ற கேள்வி தொடரும்.

அதுவும் சரியாக இருந்தால் எத்தனை படம் என்று கேட்டு ஆட்டம் முடியும். ஜெயிப்பவர்களுக்குப் பாயிண்ட்.

Logical Thinking வளர்வதற்கு உதவும், லாஜிக்கே இல்லாத விளையாட்டு தான் இது. கரண்ட இல்லாத நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்கள்… லாஜிக்கலா யோசிக்க உதவும். (பொண்டாட்டியோடவும் ஆடலாம்… அடுத்தவன் பொண்டாட்டியுடனும் ஆடலாம்..அதற்கு முன் உங்கள் &  அடுத்தவரின் உறவு துரியோதணன் கர்ணன் மாதிரி இருக்கா என்ற லாஜிக்கான கேள்வி கேட்டு ஆரம்பிங்க..)

தொழிலாளி Vs முதலாளி, Boss Vs Subordinate இவர்களுக்குள் வரும் மோதல்களின் ஆதாரம் இந்த லாகிக்கை சரிவர புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கும் நிலை தான். இதை தான் Management  புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பாஷைகளில்  மாத்தி மாத்தி தருகிறார்கள்.

உங்களுக்கு மிக நெருக்கமான மனைவியின், தூரத்து உறவு வீட்டுல் திருமணம்.. (வழக்கம் போல் உங்களுக்கு போக இஷ்டம் இல்லை). வீட்டுக்காரியின் அனத்தல் காரணமாய் உங்க மொதலாளியிடம் லீவு கேக்க போறீங்க.. இது ஒரு சிச்சுவேஷன்,

முதலாளியிடம் இருக்கும் இரண்டு லாஜிக்கான பதில்கள்: லீவு தரலாம். தராமலும் இருக்கலாம். ஆனா உங்க எதிர் பார்ப்பு இந்த லாஜிக்கை விட்டு விலகி இருக்கு.. உங்களுக்கு லீவு கெடைச்சே ஆகனும்.. (முதலாளியை அப்புறம் காக்கா பிடிச்சிரலாம்.. வீட்டுக்காரியை கால் அல்லவா பிடிக்க வேண்டி வரும்)

 100  முறை நீங்கள் கேட்ட போதெல்லாம் லீவு தந்தவர்தான் அந்த தங்கமான முதலாளி. ஆனால் இந்த முறை தராவிட்டால் அவருடன் மோதல் வெடிக்கும். இதேபோல் பல சமயங்களில் உங்க Boss கூட லாஜிக்கை மறந்து எதிர் பார்ப்பார், சில வேலைகளை உங்களிடம். இப்பொ புரியுதா மோதலின் ரகசியம்??

இதில் பிளைக்கும் வழி என்பது, உங்கள் திறமயை வளர்த்துக் கொள்வது தான். உங்களை விட்டா அந்த வேலையை எந்தக் கொம்பனும் செய்துவிட முடியாது என்று உங்க Boss உணரும் அளவுக்கு உங்கள் திறமை இருக்கனும்.

இல்லையா.. இருக்கவே இருக்கு யூனியன்.. என்ன ஒரு அருமையான பெயர் தெரியுமா அதுக்கு?? Colective Bargaining. நான் கொஞ்சம் இறங்கி வாரேன்.. நீயும் இறங்கு என்று சொல்லும் இடம் அது.

சரி பிரச்சினைகள் தான் எல்லா எடத்திலும் இருக்கே?? ஆனா தீர்வுகள்??

ஒரே பிரச்சினையை இருவர் எப்படி வித்தியாசமாய் முடிவு எடுக்கிறார்கள் என்று சொல்லட்டுமா??

ஒரு சின்ன வீடு சமாசாரம் தான். ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும் நிலையில், அவரோட சின்ன வீட்டிற்கு பென்ஷன் மீதும் ஆசை.. (ஆசை அறுவது நாள் என்பது சின்ன வீட்டுக்கு செல்லாதோ!!) எந்த நாதாரிப்பய குடுத்த ஐடியாவோ வச்சி ஒரு லெட்டர் போட்டு விட்டார்.. காதலன் ஆபீசுக்கு. உயர் அதிகாரிக்கு லட்டு மாதிரி மேட்டர் கிடைக்க பென்ஷனுக்கே அல்வா குடுத்துட்டார்.

இன்னொரு அதிகாரி கையிலும் இதே மாதிரி கடிதம் கிடைக்குது. அவரோ இதை பெரிசுபடுத்தினா அந்த மனுஷன், பெரிய வீடு, சின்ன வீடு, குழந்தைகள் எல்லாருக்கும் சிக்கல். எல்லரையும் கூப்பிட்டு பென்ஷனில் சின்ன வீட்டுக்கு 30% தர முடிவு செஞ்சி பிரச்சனையை முடித்தார். (அரசுப் பணியிலும் கூட நாலு பேருக்கு நல்லது செய்ய எதுவுமே தப்பில்லை என்று நெனைச்சிருப்பாரோ??) இந்த இடத்தில் ..தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டு பிண்ணனியில் ஓடிருக்குமே!!

ஊழியர்களின் பிரச்சனையில் எழுத்துபூர்வமான டாக்குமென்ட்கள் & சாட்சிகளின் வாக்குமூலம் தான் முக்கியம்.

சரி இங்கே ஒருவர் ரொம்ப நேரமா Call waiting லே இருக்கார். அவரோட பிரச்சினை… ஹீரோயினுக்கு இடை இருக்கா இல்லையா என்பது தான். என்பது கிலோ எடை இருந்தால் இந்த கேள்வியே தேவைப் பட்டிருக்காது.

சரி..நமக்குத் தெரிந்த அதே லாஜிக்கை வச்சி யோசிக்கலாமா???

Documental Evidence: இல்லையே.. அந்த இடைக்கு உவமையா எதுவுமே சிக்கலை..அதனாலெ யாருமே அதைப் பத்தி எழுதி வைக்கலையே!!

அப்பொ சாட்சி: ஹீரோ தான். சாதாரன கண்களால் அந்த இடையை பாத்துட முடியாதாம். தடவிப் பாத்து அட… இடெ இருக்கே என்று சொல்லத்தான் முடியுமாம்.

இந்த பிரச்சினைக்கு தீர்ப்பு நீங்களே சொல்லுங்க…

நான் அந்த ஹீரோயின் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல பாக்கி இருக்கு. யாராவது படம் வரையனும்னா ஒரு மாடல் வச்சி வரைவாங்க.. ஆனா இவங்க இவங்களோட அழகைப் பாத்தே எவ்வளவு அழகான மகளிரையும் படைச்சிடுவாங்களாம். பிகரே இல்லை என்று கவலைப்படும் தெருவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கச் சொல்லலாமா??

அது சரி அந்த ஹீரோ ஹீரோயின் யாரு தெரியுமா?? Call Waiting ல இருப்பது யார்னு பாத்தா வெளங்கிடும்… அட..நம்ம…கம்பர்… அப்பொ ஹீரோ ராமர். ஹீரோயின் சீதை.. விளங்கி விட்டதாஆஆஆஆஆஆ???

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.  

அப்படி இப்படீங்கிற பேச்சுக்கே இடம் கெடையாது என்பார்கள்… கம்பரோ அதுக்கும் மேலே போய்… இல்லை இல்லை எறங்கி… சொல்லுக்கே இடம் கிடெயாது என்கிறார்..

ஆமா… நாட்டாமைகளே..உங்க தீர்ப்பு என்ன???

கிண்டல்கள்….கவிதைகள்..கள்…கள்…கள்….


கவிஞர் வாலிக்கு வயது ஆனாலும் அவரது வார்த்தைகள் என்றும் இளமையா இருக்கும்… அவரோட பழைய கவிதை. காதலி எழுதிய கடிதம் படித்து காதலன் எழுதுவது….இதோ (பொய்க்கால் குதிரைகள் தொகுப்பில் வந்தது. அக்னி சாட்சி படத்திலும் வந்த ஒன்று அது)

படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர அரங்கம் முழுதும் –
உந்தன்
பேனா முனையின் நடனம்.

சாதாரணமா துளி தேன்..அவ்வளவு சுவை..படி நிறைய தேன் எப்படி இருக்கும்??

அதே போல் கள் & அமுதம் இரண்டும் சேர்ந்து கொடுக்கிறார்கள்..
கள் அதிகம் குடிக்கலாம்… அதிக நாள் உயிர் வாழ முடியாது..
அமுதம் கொஞ்சமா குடிச்சாலே அதிக நாள் உயிர் வாழலாம்..

கள் அமுதம் என்றால்…போதையும் இருக்கும்..அதிக நாள் இருக்கலாம்…மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் எல்லாம் இங்கே கிடையாது… என்ன மாதிரியான கிண்டல் பாத்தீங்களா??

சரி அது அப்படியே கிடக்கட்டும். சமீபத்தில் முகநூல் ஒன்றில் படித்தது:

உன் முகம் profile photo போல்
இருக்கும் என்று நினைத்தேன்
ஆனால்..அது
வாக்காளர் அட்டையில்
உள்ள படம் போல் இருக்கே…???

இது கிண்டல் தானே???

ஒரு நண்பர் கேட்டார்… நீங்க இருப்பது லிட்டில் அந்தமான்…அதாவது சின்ன அந்தமான். அந்தமானில் உள்ளவர்கள் சின்ன வீடு வேண்டுமென்றால் அந்த சின்ன அந்தமானுக்கு வருவாங்களா?? என்றார்.
இடைவெளியே விடாமல்..அப்போ சின்ன அந்தமானில் இருப்பவங்க எங்கே போவாங்க?? என்றும் கேட்டார்…

கிண்டல் என்பது அவருக்கு கைவந்த… இல்லை.. இல்லை… வாய் வந்த கலை.

டிங்க்டிங்க்டிங்க்……

என்ன இது ஃபோன்…??

ஒரு நிமிஷம்.. நம்பர் இல்லாத கால்….

வணக்கம்…கிருஷ்ணமூர்த்தி..
வணக்கம்.. நீங்க???

போன் குரல்: கம்பர் இப்பக்கம்….ஏதோ கிண்டல் பத்தி கிண்டல் பண்றதா தெரிஞ்சது…

நான்: (மூக்கிலே வேத்திடுச்சா…) நீங்க சீரியஸா..10000 பாட்டு எழுதி இருக்கீங்க… எதுக்கு உங்களை வம்புக்கு இழுக்கனும்னு தான்??

போன் குரல்: இந்த தடவை பாட்டு நம்பர் சொல்றேன்: நீ ஒன்னோட ஸ்டைல்ல எழுது. சூர்ப்பணகைப் படலம் – பாடல் 357…

டொய்ங்க்ங்க்ங்க்

(இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது)

அடடே..அங்கே..செம கிண்டல் ஒண்ணு கீதப்பா… கம்பரா..???  கொக்கா???

சூர்ப்பணகை இலக்குவனோடு சேத்து வைக்க எவ்வளவோ கேக்கிறா… ராமன் கிட்டே…

ராமன் என்ன மாமாவா??? அண்ணன்… அல்லவா?? தப்பான ரூட்…

கடைசியில் சூர்ப்பணகைக்கு ஒரு ஐடியா வருது… நேரே ராமனைப் பாத்து,

ராமனே…எல்லாத்துக்கும் முடியாதுன்னு சொல்லிட்டே…என்னையே ஒரு handicaped quota வில் கன்சிடர் செய்யலாமே – என்கிறாள்..(மூக்கு இல்லாத காரணத்தால்).

ராமனுக்குப் புரியவில்லை… மூக்கை இழந்தவள் மூளையே பிசகி விட்டதா என்று… அரக்கியே இது கோட்டாவே இல்லாத காலம் ஆளை விடு…என்கிறான் ராமன்..

ஏ..ராமா… பொய் சொகிறாய் நீ… நான் என்னவோ..10% தான் ஊனமானவள்…
ஆனால் நீ 100% ஒரு உறுப்பை ஊனமானவளை கூடவே வைத்துள்ளாயே??

ராமனுக்கு புரியவில்லை….

சூர்ப்பணகை தொடர்கிறாள்…”உன் சீதையைப் பார் … இடையே இல்லையே..”

இது எப்படி இருக்கு?? கிண்டலின் உச்சமா இல்லே…

இளையவன் தான் அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும்
உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்க்கு இலாதவளோடும் அன்றோ நீ
நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்.

தேடல் தொடரும்…

வச்சிக்கவா ஒன்னே மட்டும் நெஞ்சுக்குள்ளே…


இந்தப் பேனாவை கொஞ்ச்சம் வச்சிக்கிங்க…இதில் எந்த தப்பும் இல்லை. நான் சிவப்புக் கலரில் ஒரு கார் வச்சிருக்கேன்…இதூம் தப்பே  இல்லை.. நான் ஒரு ஆளை வச்சிருக்கேன்…வேலைக்கு..என்று சொன்னால் கூட… கெட்பவர் ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்!! (நீங்களும் இப்படி சிரிச்சிருப்பீங்களே!!)

இந்த அள்வுக்கு அந்த “வச்சிக்கவா” ரொம்ப பாப்புலர்….

வச்சிக்கா உன்னே மட்டும் நெஞ்ச்சுக்குள்ளே..சத்தியமா நெஞ்சுக்குளே..ஒண்ணும் இல்லே..இது செமெயான ஒரு குத்துப்பாட்டு… எந்த கச்சேரி மேடைகளிலும் களை கட்டும்.

நம்ம கல்லூரி சில்வர் ஜுப்ளியில் கூட இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது ஞாபகம் இருக்கு.

மேடையிலும் கீழும் (தண்ணி போடாமல்) நம்மளும் ஆட..செமஜாலியான சங்கதி தான்…

வச்சிக்கவா பாட்டுக்கு அவ்வளவு மவுசு…இதை மட்டும் மனசுலே வச்சிக்கிங்க…

வாயை வச்சிட்டு சும்மா இருக்கியா? என்பது நான் அடிக்கடி வாங்கிய திட்டு…ஆனா
இதுக்கு ஒரு பழைய கதை ஒன்னு சொல்லட்டுமா?? (வேணாம்னா ஒண்ணும் விடப் போவதில்லை..).

ஒரு காடு…அம்மா மானும் குட்டி மானும் விளையாடி களைத்துப் போய் தாகத்துக்கு தண்ணிக்காய் அழைந்தனராம்.. அப்போ..ஒரு சின்ன குட்டையில் கொஞ்சூண்டு தண்ணி
இருந்ததை பாத்தாகளாம். ரெண்டு பேரும் குடிக்க வாய் வைத்தனர்… 

நேரமாக..நேரமாக…கொஞ்சமும் தண்ணி கொறையவே இல்லையாம்.. அம்மா மான் குடிக்கட்டும் என்று குட்டி மான் நினைக்க…குட்டிமான் குடிச்சிட்டு போவட்டும் என்று அம்மா மான் நினைக்க ..இதை நான் அந்தமானில் இருந்து எழுதாமல் சென்னை வந்து எழுதுறேன்…. ஆனா இதை தலைவனை பிரிந்த காதலி பாத்து ஆகா…என்று நெகிழ்ந்ததாக ஒரு சங்கப் பாடல் போகுது…

இது இப்படி இருக்க..சிலர் வாயை வச்சிட்டு சிரிச்சித் தொலைப்பாய்ங்க…தேவை இல்லாத நேரங்களில்..அது அதை விட வம்பு..

[சின்ன இடை சொருகல்: நீங்க கல கல டைப்பா அல்லது முசுடா?? நீங்களே
தெரிஞ்ச்சிக்கணுமா?? இப்போ கலகலப்பா இருக்கும் நம்ம நண்பர் கூட கொஞ்ச நேரம் பேசுங்க…ஒரு தடவை கூட நீங்க சிரிக்கலையா??? உங்களுக்கு முசுடுண்னு மத்தவங்க பேரு வச்சிருப்பாங்க..]

சிரிக்கக் கூடாத நேரத்தில் பாஞ்சாலி சிரித்ததால் தான் மகாபாரதமே உருவானது… அதே போல் பிள்ளைகள் விளையாடிய விளையாட்டை விளையாட்டா நெனைக்காமல், இது என்ன வெளெயாட்டான்னு சிரிக்காம விட்ட கூனி காரணம் தான் இராமயண கதையின் திருப்பு முனை.

எப்படியோ கஷ்டப்பட்டு ராமாயணம் கொண்டு வந்தாச்சி..அப்படியே..கம்பரைக்
கூப்பிட வேண்டியது தான்..

சிவன் ஒருத்தியை பாதியாவே வச்சிருக்கான்…இன்னொரு கடவுள் நெஞ்ச்சிலே
வச்சிருக்காக… கலைமகளை நாவில் வச்சிருக்கும் கடவுளு கீறாக…சிற்றிடை சீதையை
…ஆமா…அண்ணா.. உனக்குக் கெடைச்சா…எங்கெப்பா வச்சிக்கப் போறே??? இது இராவணனைப் பாத்து சூர்ப்பனகை பாடும் வச்சிக்கவா பாட்டு…

பாட்டும் இதோ:::-

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத தோள் வீர பெற்றால் அங்ஙனம் வைத்து வாழ்தி

நீதி ??? அது இல்லாமலா…:

அவன் சொல்றான்.. இவ சொல்றான்னு யாரையாவது வச்சிக்க கிளம்பிடாதீங்க…(சொல்றது கூடப் பிறந்த தங்கையாவே இருந்தாலும் சரி)…மனசு முழுக்க மனையாளை மட்டுமே வச்சிக்கிங்க…பாக்க நல்லது…பாக்கிறவங்களுக்கும் நல்லது…முக்கியமா பர்ஸுக்கும் நல்லது..

வரட்டுமா….மீண்டும் வருவேன்