பக்கம் 1
அன்மையில் முன்னாள் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தமானுக்கு வந்திருந்தார். தமிழ் அமைப்புகள், இலக்கியம் தொடர்பான ஆட்களை சந்திக்க வேண்டும் என்றாராம் (அதை அவரும், தனது குடும்ப உறுப்பினர்கள் காது படாமல் ரகசியமா சொன்னாராம். வர வர இந்த இலக்கிய மன்றக் கூட்டம் கூட, ஏதோ மலையாளப் படம் பார்க்கும் ரேஞ்சுக்கு ரகசியமா போய் வரும் நிலமைக்கு போய்விடும் போல் இருக்கு). நம் இலக்கிய கூட்டத்துக்கு வந்தார். மனுஷர் சும்மா சொல்லக் கூடாது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பின்னி எடுத்தார். மருத்துவர் என்பதால் இலவச ஆலோசனை என்று ஆரம்பிக்க கடைசியில் ஸ்டார்டிங்க் டிரபிள் என்று அவரை மாத்ருபூதம் ஆக்கிவிட்டனர் நம் மக்கள்.
பெரும்பாலான டாக்டர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் தான் வாழ வேண்டி இருக்கிறது. (சிலர் பலான டாக்டர்களாகவும் இருந்து விடுகிறார்கள்). ஆக மருத்துவக் கல்வியை ஏன் தமிழில் கற்றுத்தரக் கூடாது என்ற கேள்வியை அன்று முன் வைத்தோம். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதாய் பதில் வந்தது. அடுத்த வாரம் கூடிய கூட்டத்தில் அதே தலைப்பில் கருத்துக்கள் கூற முடிவு செய்து அலசினோம். ஆரம்பக்கல்வி தமிழில் படித்து பின்னர் மேற்படிப்பில் ஆங்கிலத்தில் மாறும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி பேச்சு தான் மேலோங்கி இருந்தது. அந்தச் சிக்கல் தன் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்ற காரணத்திற்க்காய் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்ப்பதாய் (பல்வேறு காரணங்களோடும்) கூறினர்.
ஒரு கல்வி அதிகாரி தன் அனுபவத்தினை கூறினார். பள்ளி வரை தமிழ் வழியில் பயின்றவர் அவர். கல்லூரியில் ஆங்கில மீடியத்திற்கு (வேறு வழியின்றி) நுழைந்தார். கணிதப் பேராசிரியர் கணக்கை செய்து காண்பிக்கிறார் (ஆங்கிலத்தில் தான்). எல்லாம் புரிகிறது. கடைசியில் ஆமரெட் எங்கிறார் ஆசிரியர் (சாரி..சாரி… பேராசிரியர்). அவருக்கோ அந்த ஆம்ரெட் என்றால் என்ன என்றே விளங்கவில்லை. மற்ற வகுப்புத் தோழர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லையாம். ஒட்டு மொத்தமாய் ஆமரெட் என்றால் அந்தக் கணக்கு முடிந்துவிட்டது என்று தோராயமாய் புரிந்து வைத்திருந்தார்கள். பின்னர் தான் ஆம்ரெட் என்பது Am I Right? என்று ஆங்க்கிலத்தில் சொல்லி இருக்கிறார் என்று புரிந்ததாம். ஆமா மற்ற எல்லா மாணவர்களும் ஏன் எல்லாம் புரிந்த மாதிரி இருந்தார்கள் தொறந்த புத்தகமா??
பக்கம் 2:
புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பது நல்லது என்பார்கள் (யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியலை. நமக்கு எப்பொ எது சாதகமா இருக்கோ அப்பொ அதெ சொல்லிவிட வேண்டியது தான்) சின்ன ஊரில் அதிகாரியாய் இருப்பதில் சில சவுகரியங்கள். எந்த விழா என்றாலும் தலைமை தாங்க அழைப்பு வரும். மைக் கையிலும் வரும். கவனமா போன தடவை பேசியதை தவிர்த்து பேச வேண்டும். (மொத்த கூட்டமும் அடுத்து வரும் கலை நிகழ்ச்சிக்காய் காத்திருக்க, அவர்கள் முன்னால் பேசுவது கொஞ்சம் சிரமம் தான்).
சமீபத்தில் ஒரு மாணவர் அறிவியல் பொருட்காட்சியினை திறந்து வைத்து தலைமை தாங்கும் வாய்ப்பு வந்தது. மனதிற்குள் இப்படி வேசவேண்டும் என்று ஒரு முன்னோடம் விட்டிருந்தேன். (ஹிந்தியில் பேச வேண்டும் என்பதால் கூடுதல் கவணம் தேவைப்படுகிறது). அந்தக் காலத்தில் நான் சிறுவனாய் இருந்த போது, என் அப்பா, என்னிடம் தண்ணீர் கொண்டு வா என்பார். நான் உடனே ஓடிப் போய் கொண்டு வந்து தருவேன். ஆனால் இப்பொ… நீங்க ஏன் போய் எடுத்துக்கக் கூடாது? என்னை மட்டும் ஏன் கூப்பிட்றீங்க? அக்கா கிட்டெ ஏன் சொல்லலை? இவ்வளவு கேள்வி வருது. தண்ணீர் கொன்டு வரத் தயார். ஆனால் இப்பொ எல்லாம் இந்த தகவல் தேவைப்படுது பசங்களுக்கு. We are living in the age of Informations. கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்ப்பது தான் அறிவியல் பூரவமான வாழக்கை. அந்த மாதிரியான கேள்விகள் கேட்பது நல்லது..” இப்படி சொல்ல உத்தேசித்தேன்.
மேடை ஏறிய பின்னர் தான் தெரிஞ்சது, மேடைக்கு முன்னர் எல்லாம் பிரைமரி ஸ்கூலில் படிக்கும் பசங்க.. எனக்கு குஷி ஆய்டுத்து. நான் அப்பா சொன்ன பேச்சைக் கேட்டேன்.. என்று ஆரம்பித்து, உணர்ச்சிவசப்பட்டு அப்பொ நீங்க?? என்று கூட்டத்தைப் பாத்து கேட்டேன். கேப்போம் என்று பதில் கோரஸா வந்தது. (இப்படி திறந்த புத்தகமா இருக்க்காகளே..).. சிலர் கேக்கிறதில்லை என்கிறார்கள் என்று சமாளித்து முடித்தேன்.
பக்கம் 3
அந்தமானில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு சிவ கார்த்திகேயன் தொகுப்பாளராய் வந்திருந்தார். (அவர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நடந்த கதைங்க இது). நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் இரண்டு வரிசைகளிலும் விஐபிகள் கொண்டு நிறைத்திருந்தார்கள். சிவ கார்த்திகேயன் தகிடுதத்தம் செய்து பார்க்கிறார். முதல் ரெண்டு ரோ ஆட்கள் சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நரசிம்ம ராவ் அளவில் இருக்கிறார்கள். நாம அப்புடி இல்லீங்க.. சிரிப்பு வந்தா சிரிச்சி வைச்சிடுவோம்.. (சில சமயம் மயாணத்தில் யாராவது ஜோக் அடிக்க அங்கும் சிரித்த கொடுமை நடந்துள்ளது).
கடுப்பான சிவ கார்த்திகேயன்..உண்மையிலேயே உங்களுக்கு காது எல்லாம் கேக்காதா? அல்லது வாய் பேச வராதா?.. ஆமா அப்படி வாய் பேசாதவங்க எப்படி சிரிப்பாங்க தெரியுமா என்றார். நானும் என் குடும்பத்தாரும் மொழி படத்தில் ஜோதிகா செய்ததை செய்து காட்டி.. அட இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே என்று சபாஷ் வாங்கினோம்.
இலக்கியப் பக்கம்:
மேனேஜ்மெண்ட் குரு என்று பலரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராமர் தான் சரியான மேனேஜ்மெண்ட் குரு என்று வட நாட்டு புத்தகம் சொல்லி அது தமிழிலும் வந்துள்ளது. (ராம்ஜெத்மலானி ராம் நல்ல கணவர் இல்லை என்கிறார்). ஆனா சீதை என்ன சொல்றாங்க என்று பாக்கலாம். (எங்க ஆத்துக்காரருக்கு அவ்வளவு வெவரம் பத்தாது என்று நோபல் பரிசு வாங்கியவரின் மனைவியே சாதாரணமாய் சொல்லும் சூழலையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க..)
ஒரு தலைவன் (அல்லது மேனேஜர்) எப்படி இருக்க வேண்டும்?. எல்லா சூழலிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மெமொ அடுத்த அளுக்கு தரும் போதும் சரி.. தான் மேலதிகாரியிடம் டோஸ் வாங்கும் போதும் சரி.. ஒரே மனநிலையில் இருக்கனும்(அதாங்க திறந்த புத்தகமா… ஓஹோ.. கல்லுளிமங்கன் அப்படியும் சொல்லலாமோ..சொல்லிக்கிங்க.. நீங்களாச்சி..உங்க மேனஜராச்சி). இப்படி ராமர் இருந்தாராம். யாரு சொல்றாங்க.. சீதையே சர்டிபிகேட் தர்ராங்க.
தலைக்கு கிரீடம் வருகிறது என்ற போதும் சரி… காட்டிற்கு போக வேண்டும் என்ற போதிலும் சரி இரண்டையும் ஒரே மாதிரி பார்த்த முகம் அந்த ராமரின் முகம். அவரின் முகம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மாதிரியே.. (நம்ம பாஷயில் திறந்த புத்தகமா) இருந்தாராம். அப்படி இருந்த ராமரை இலங்கையில் இருக்கும் போது நினைத்தாராம் சீதை. அதை படம் பிடித்துக் காட்டுகிறார் நம் கம்பர்.
மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித் திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத் திருக்கும் முகத்தினை உன்னுவாள்
இப்பொ சொல்லுங்க.. மேனேஜ்மெண்ட் குரு யாரு? ராமர்? சீதை? கம்பன்?