அமுதைப் பொழியும் நிலவே…


“இரவின் மடியில்” போன்று பல்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். மெகா டீவி தான் இந்த பழைய பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து முதலிடம் தந்தது என நினைக்கிறேன். பின்னர் இதர சேனல்களும் அதனை வேறு வேறு விதமான பெயர்களைச் சூட்டி மரியாதை செய்யத் தொடங்கினர். எப்படி இருப்பினும் எந்தச் சேனலிலும் இந்த “அமுதைப் பொழியும் நிலவே” பாடல் இல்லாமல் இருக்காது.

சமீபத்தில் புது தில்லி சென்ற போது ஹிந்திப் பழைய பாடல்கள் மட்டும் ஒளிபரப்பி ஒரு சேனல் கலக்கி வந்தது பார்க்க முடிந்தது. ஜல்வா என்று அந்த சேனலுக்கு பெயர். எப்பொ வேண்டுமானாலும் பாக்கலாம்.. சாரி.. கேக்கலாம். தமிழிலும் இப்படி ஒரு சேனல் இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்ற ஏக்கம் வரத்தான் செய்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம அந்த அமுதைப் பொழியும் நிலவைப் பிடித்து சற்றே வம்புக்கு இழுப்போம். (ஆமா.. நமக்கு வேற என்ன வேலை இருக்கு அதைத் தவிர!!!). அமுதம் என்பதே மரணத்தை மறக்கடிக்கும் மந்திர மருந்து. அது தூரமாய் இருந்தால் என்ன? அருகில் இருந்தால் தான் என்ன? ஏன் இந்த விபரீத வேண்டுதல்? இப்படியே யோசிக்க வைத்தது. (எதுக்கு இப்படி யோசிக்கனும்? சும்மா உங்களுக்காய் எழுதுறதுக்குத்தான் சார்..)

பொழிகிறது என்பதை பெரும்பாலும் மழைக்குத்தான் சொல்வார்கள்… அல்லது மழை போல் இருப்பதையும். அந்தி மழை பொழிகிறது… என்ன இன்னெக்கி ஒரே பாச மழை பொழியுது? அன்பு மழையில் நனைந்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அமுதை மழை போல் பொழிகிறது. இந்தப் பாடலில் பொழிவது யார்? தன் காதலி. காதலியின் பார்வை மழை மாதிரி எல்லார் மேலும் பட்டால் நல்லாவா இருக்கும்?? எனக்கு.. எனக்குத்தான் என்று தானே எல்லா காதலனும் நினைப்பார்கள்? இதற்கு ஏற்ற மாதிரி வந்த பாடல் தான் இது என்று நினைக்கிறேன்.

Possessiveness என்று சொல்கிறார்களே.. அது காதலுக்கும் சரி.. கடவுள் பக்திக்கும் சரி எல்லாமே பொருந்தும் என்று நினைக்கிறேன். அன்பின் உச்சம், பக்தியின் உச்சம் இப்படி இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்களும் இப்படி அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்காத குறையாக இருப்பவர்கள் தான்.

இதற்கு மறுபக்கமும் ஒன்று இருக்கிறது. உலகத்து பிரச்சினைகளை சந்திக்க பயந்து, தவறான முடிவுக்கு வருவது. அதுவும் அவசர முடிவை எடுக்கும் உச்சம். பெரும்பாலும் தற்கொலைகள் என்பது ஒரு emotional quick decision என்பார்கள். சமீபத்திய அந்தமான் தீவில் நிகழ்ந்த நிகழ்வு அதனையே கேள்விக்குறி ஆக்குகிறது. ஒருவன் தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தொங்கிய பரிதாபம். அந்தக் காலத்து நல்லதங்காளை நினைவிற்கு கொண்டு வருகிறது. உலகத்தில் நாய் நரி எறும்பு எல்லாம் வாழும் போது நம்மால் மட்டும் வாழ முடியாது என்று எப்படி முடிவு எடுக்க முடிகிறது.
இந்த மாதிரி நடக்காமெ இருக்க அமுதை பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தான் தோன்றுகிறது. சும்மா இப்படி ஏதாவது யோசிக்கிறது தான் தெரிஞ்ச விவரமாப் போச்சே என்று முனகுவது எனக்கும் கேக்கத்தான் செய்யுது.

பிரச்சினைகளுக்கு பயந்து இப்படி ஓட நினைப்பவர்களைப் பார்க்கும் போது, அப்படிப்பட்ட அமுதைப் பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இப்படி எல்லாம் இருக்கும் சாத்தியம் இருக்குமா?? கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தத்தில் பதில் கிடைத்தது.

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அனுமன் முதல் இன்னிங்க்ஸில் விளாசு விளாசு என்று வெளுத்துக் கட்டும் நேரம். வாலில் சூடு வைக்க, அது அரக்கர்கள் மீது பட்டு துவம்சம் செய்கின்றன. அந்தச் சூடு சந்திரன் வரைக்கும் தொட்டதாம். (சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்று பாட்டுப் பாடி கேக்க முடியாது) சந்திரனும் கொஞ்சம் உருகி அமுதை அப்படியே பொழிந்ததாம். அது இறக்கும் தருவாயில் இருக்கும் அரக்கர் மேல் விழுந்ததாம். அரக்கர்கள் உயிர் பெற்று வந்தார்களாம்.

நெருக்கி மீ மிசை ஓங்க்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்றுஉற
அரக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.

இனிமேல் இந்த அமுதைப் பொழியும் நிலவே பாடல் கேட்கும் போது இன்னும் இனிமையாய் இருக்கும் உங்களுக்கு. என்ன சரி தானே??