நான்கு குடித்தனங்கள் சேர்ந்த வீட்டில் தான் என்னோட சின்ன வயது ஆரம்பித்தது. பெரிசுகள் எல்லாம் கதர் கட்டும் காங்கிரசுக்கு ஆதரவாய் இருக்கு இளசுகள் எல்லாம் சிவாஜி ரசிகர்கள் ஆக்கப் பட்டோம். (திராவிட கட்சி ஆதரவாளர்களின் பசங்க எல்லாம் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆனார்கள்)
இந்த சூழ்லில் வளர்ந்த நான், உலகமே பாத்து வியந்த உலகம் சுற்றும் வாலிபனைக் கூட பாக்க முடியாம போச்சி. சிறந்த நடிகர் விருது எம் ஜி ஆருக்கு வந்த போது கூட… அட… போங்கப்பா… பாபு படத்தில் சிவாஜிக்கு ஈடு வருமா என்று பேச வைத்தது விடலைப் பருவம்.
கல்லூரியில் காலடி வைத்த பிறகு தான் எம் ஜி ஆர் என்ற சக்தி பற்றிய தெளிவு பிறந்தது. அதை செய்தவர் கல்லூரி தோழர் பழனிச்சாமி. (அவரை நாம் எல்லோரும் எம் ஜி ஆர் பழனிச்சாமி என்று தான் அழைப்போம்). அவர் பிறந்த ஊர் விருது நகருக்கு அருகே உள்ள விளாம்பட்டி. எம் ஜி ஆர் உடல் நலம் இல்லாத போது அந்த ஊர்க்காரர் ஒருவர் தன்னோட கையை வெட்டி ஆண்டவனுக்கு காணிக்கை செய்தாராம். (சிவனுக்கு கண்கொடுத்த பரம்பரையாக இருக்குமோ??)
எம் ஜி ஆர் மேல் ஈடுபாடு வந்ததோ இல்லையோ, அருமையான பாடல்கள் மீது காதல் பிறந்தது. குமரிக்கோட்டத்தில் எங்கே அவள்; நான் ஏன் பிறந்தேனில் நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்; இப்படித் தொடரும் லிஸ்டில் வரும் இன்னொரு பாடல் தான் “தொடுக் கொள்ளவா??..” மட்டுக்கார வேலன் என்று நினைக்கிறேன். TMS சொல்லும் பாவனையுடன் இன்றும் இனிக்கும் பாடல் அது. தொட்டுக் கொள்ளவா?? என்று இந்த பாவத்துடன் கேட்டால் யாருக்குமே மறுக்கும் தைரியம் வராது.
இந்த வித்தையினை இவ்வளவு வருஷம் கழித்து ஒரு ஊறுகாய்க்கென பயன்படுத்திக் கொண்ட விளம்பரம் பாத்தேன்.. அசந்து போயிட்டேன். அதில் வரும் வரிகள் தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ளவா??
தொட்டுக்கொள்ளவா?? மட்டும் தான். இறுதியில் ஊறுகாய்… வாய்… தொட்டுக் கொள்ளத்தன் தோணும்.
அதே மாதிரி தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் என்றும் ஒரு தூள் கிளப்பும் விளம்பரம் பாத்திருப்பீங்க… தொடரும் பாரம்பரியம் என்று சொல்ல் இருந்தா மட்டும் போதாதா??? அது எதுக்கு “தொட்டு” என்ற செட்டப்பு?? சாதாரண சந்திப்புக்கும், கைகுலுக்களில் தொடங்கி அதே மாதிரி கை குலுக்கி முடியும் சந்திப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் அது.
இதே மாதிரி தொடர்ந்து வேறு என்ன வெல்லாம் இருக்கு??- இப்படி யோசிக்கலாமே?? ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன ஆகுமோ என்று ஏங்க வைத்த அந்தக் காலத்து சரித்திரத் தொடரின் “தொடரும்” மிகப் பிரபலம். சிறுகதை கூட ஹைக்கூ வடிவில் இருந்தால் தான் படிப்பார்கள் என்ற நிலை இன்று…(ஆமா..எந்த நம்பிக்கையில் நான் நீட்டி முழக்கி எழுதுகிறேன்??).
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் சிந்துபாத் லைலா என்ன ஆனாள் என்பதை அறியத் தூண்டும் கன்னித்தீவு தொடரும்… தொடர்ந்து போவதில் சிக்கலும் உண்டு.. கழுதைக்குப் பின்னாலும் ஆபீசருக்கு முன்னாலும் அதிகம் போகக்கூடாது என்பார்கள்… எப்பொ உதைக்குமோ..?? கடிக்குமோ என்ற கவலை தான் காரணம்..
யாரோ பின்னாடி தொடர்ந்து வர்ரது மாதிரி இருக்கே…!!! திருப்பிப் பாத்தா…அட…நம்ம கம்பர்.. Happy Deepawali Mr Kambar அவர்களே… Thanks & Same to U… ஆமா இன்னெக்கி என்ன டாபிக் அலசல்?? ஒண்ணுமில்லை… ஆபீசர் எப்படி இருக்கனும்கிற டாபிக்… ம்…உங்க காலத்திலெ அதுக்கு அவசியம் இருந்திருக்காது..நீங்க போங்க..
அப்படி சொல்லிட முடியாது கிமூ… நீ எப்படி சுத்தி வளைச்சி என்னோட ரமாயணம் கொன்டு வர்ரயோ..அதே பாணியில் நானும் அதெப் பத்தி எழுதி வச்சிருக்கேன்.. போய் நல்லா தேடிப் பாரு கிடைக்கும்…
தொடர்ந்து தேட …அடெ… கெடெச்சது… ஒரு ராஜா எப்படி இருக்கனும்னு கம்பர் ராமர் வாயிலா சொல்றார். யார் கேக்கிறா?? சுக்ரீவன் தான்.. நாம கேட்டாலும் அது நமக்கு suit ஆகுற மாதிரி இருக்கு.. அப்பொ இன்னும் நல்லா பாக்கலாமா??
அறிவுள்ள அமைச்சனை பக்கத்திலெ வச்சிக்க
ஒழுக்கம் உள்ளவனை படைத் தலைவனா ஆக்கு
குற்றமில்லாத வேலையை மட்டும் செய்யி
தப்பான காரியம் பன்னாதே..
அமைச்சர்களை ரொம்ப தூரமும் வச்சிக்காதெ..ரொம்ப கொஞ்ச்சிக் குலாவவும் வேணாம்.
நீ எல்லார்க்கும் சாமீ மாதிரி இருக்கனும் கன்னு…
என்று செமெ அட்வைஸ் செய்றார்…
இப்பொ இருக்கும் ஆட்சியாளர்க்கும் ஆபீசர்களுக்கும் கூட இந்த அட்வைஸ் பொருந்தும் தானே..???
வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரொடும்
தூய்மை சால்புணர்ச்சி பேணித் துகளறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய நிற்றி.
நீதி: ஃபிரியா கெடைக்கும் எல்லாமே தரம் இல்லாதது என்று விலக்கி விட முடியாது.. இந்த ஃபிரியா கெடைச்ச அட்வைஸ் கொஞ்சம் யோசிச்சி பாருங்க.
தேடல் தொடரும்…