நான் எக்செல்காரன்..எக்செல்காரன்..(எக்செல் பாடம் – 6)


நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன் ஸ்டைலில் எக்செல்காரன் என்று பாடினால் என்ன என்று யோசிச்சேன்.. (எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு யாரும் கேக்க மாட்டேங்கிறீங்க…அதான் அப்படி யோசிக்கிறேன்)

அந்தப் பாட்டின் நடுவில் இசுக்கு என்னா இசுக்குத்தான்..என்பதை இஃப்புக்கென்னா இஃப்புக்குத்தான் என்று மாற்றி பாடும் போது தான் இந்த IF சமாச்சாரம் பத்தி எழுதினா என்ன???… தலைப்பு ரெடி… மேட்டர்..கீழே படிங்க..

லாஜிக்கே இல்லாமெ படம் எடுக்கிறாய்ங்க என்று சில படம் பாத்திட்டு வந்து நாம பேசுவோம் அல்லது லாஜிக் ஒதைக்குதுன்னு சொல்றதை கேட்டிருப்போம்.

இதுக்கு சரியான தமிழ் தர்க்கம் என்று கோணார் இ- அகராதி சொல்கிறது.

நீ நல்லவனா? கெட்டவனா?? என்ற கேள்விக்கு பதில் நல்லவன் அல்லது கெட்டவன் இவ்வளவு தான் இருக்கணும். தெரியலையே என்று பதில் வந்தால் சங்கடம் தான்.

வீட்டுக்காரியிடமிருந்து இந்த மாதிரி பதில் வரும்… ஆமா..அந்த கல்யாணத்துக்கு போகணுமா??? இது என் கேள்வி.. போலாம்னு தான் நெனைக்கேன் என்று இழுத்தால்… ஆமாமும் இல்லை. இல்லையும் இல்லை.

எக்செலில் அந்த இழுவை இல்லாத தர்க்கம் லாஜிக்கல் கேள்வி இருந்தா அதை அந்த IF வச்சி தூள் கிளப்பலாம்.

ரொம்ப சிம்பிளா ஒரு பசங்களோட மார்க்கை entry செய்வோம். 35 அல்லது அதுக்கு மேலும் எடுத்தா பாஸ் இல்லாட்டி பூட்டுகிச்சி என்று வரணும்.. செய்யலாமே.. அப்படியே நாமலும் எக்செல் கத்துகிட்ட மாதிரி ஆச்சி.

உதாரணமா இப்படி Data type செய்யுங்களேன்:

A1 Name
A2 Kuppan
A3 Suppan

(வேறு பெயர்களும் வைக்கலாம் தப்பே இல்லை… கத்துகணும் என்பது முக்கியம்..பெயரை விட)

அப்படியே குப்பன் எடுத்த மார்க் 61 என்பதையும் சுப்பன் எடுத்தது 16 என்பதையும் போடுங்க.. எப்படி..இப்படித்தான்.

B1 Marks
B2 61
B3 16

வித்தை ஆரம்பிக்கலாமா???

C1 ல் Result போட்டுவைங்க.

C2 ல் குப்பன் பாஸா, பூட்டகேஸான்னு பாக்கணும். C2 லெ ஒரு சின்ன சூத்திரம் எழுதுங்க..(கம்பனைப் பத்தி இவ்வளவு எழுதினீங்க..இது தான் கம்ப சூத்திரமா???)

=IF(B2>34,”பாஸ்”,”பூட்ட கேஸு”)

இங்கே தான் எக்செல் லாஜிக்கா ஒரு கேள்வி கேக்குது. பையன் 34க்கு மேலே வாங்கிட்டானா??

அந்தக் கேள்விக்கு ஆமா என்றால் பாஸ் என்பதை Double quote க்குள் போடுங்க.

அதே கேள்விக்கு பதில் இல்லை என்று வந்தா…??? இருக்கவே இருக்கு.. Fail அல்லது பூட்டகேஸு..எதை வேணாலும் எழுதுங்க..ஆனா..அந்த Double quote மறந்திராதீங்க.

இதையே எல்லா ரிசல்ட் பாக்கவும் புடிச்சி இழுத்து பயன்படுத்தலாம்.

அப்பொ Home Work தரட்டுமா??

D1 Class  போடுங்க..

D2 ல் குப்பன் எந்த Class ல் Pass செய்துள்ளான் என்று வர வேண்டும்.

இதுக்கு முன்னாடி சில லாஜிக்கல் கேள்விகள்.

ஆளூ Fail ஆ…?? ஆமா..அப்பொ No Class.

60 க்கு மேலே வாங்கின நல்ல புள்ளையா???  கண்டிப்பா First Class.

50 முதல் 59 க்குள் – Second Class.

50க் கும் கீழே – இருக்கவே இருக்கு Third Class.

இந்தா புடிங்க ஃபார்முலா…

=IF(C2=”பூட்ட கேஸு”,”No Class”,IF(B2>59,”First Class”,IF(B2>49,”Second Class”,”Third Class”)))

Mark மாத்தி மாத்திப் போடுங்க…. Result & Class மாறுதா???

செஞ்சி பாருங்க சரியா வருதான்னு சொல்லுங்க..