ராசாத்தி ஒன்னெக் கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே…
இந்தப் பாடல் இன்று கேட்டாலும் தேனாய் இனிக்கும்.. மனதை நெருடும் ஒரு சோகம் இளையோடும் பாடல் அது.. ஜெயசந்திரன் குரல், விஜய்காந்துக்கு பொருந்தாவிட்டாலும் கூட, அந்த அசாத்திய நடிப்பில் அந்தக் குறையே தெரியாமலே போனதுதான் இதில் ஒரு சிறப்பான அம்சம்.
அதில் காத்தாடியை மட்டும் நாம வச்சிட்டு வெளியெ வந்து விடுவோம். ஏனென்றால் விஜயகாந்த இப்போது பரபரப்பாய் அரசியலில் பேசப் பட்டு வருகிறார். நமக்கெதுக்கு அந்த மதுரையோட பொல்லாப்பு??
சிறு வயதில் காத்தாடி விட்டு மகிழாத ஆட்களே மிகக் குறைவு என்றே சொல்லலாம். K for Kite என்று படிக்கும் எல்லா இளைய தலைமுறையும் கூட அதை ஒரு முறையாவது விடாமலா போய் விடுவார்கள். மொட்டை மாடியிலும், கடற்கரைகளிலும், கிரவுண்ட்களிலும் பார்க்கலாம்.
அந்தமானில் இல்லாத சிலவைகள் என்று பட்டியல் போட்டால் கமுதை குதிரை எல்லாம் இருக்கும். (அதாவது இங்கு இல்லை). பட்டம் விட்டு விளையாடும் பழக்கும் கூட இங்கு இல்லை. ஒரு வேளை 8 மாதம் மழை பெய்வதால் இது எடுபடாமல் போயிருக்குமோ?? (ஆனா கருவாடு மட்டும் செமயா தயாராவதாய் தகவல். அது எப்படி மழையிலும்.. மலைப்பாத்தான் இருக்கு)
காத்தாடி விடும் நிகழ்வை இன்றும் ஒரு திருவிழாவாக ஆக்கி மகிழ்கிறது மோடியின் குஜராத் அரசு. இதற்கு பக்க பலமாய் வண்ண வண்ண காத்தாடிகளோடு அமிதாப் கூட விளம்பரத்திலேயே அசத்து அசத்து என்று அசத்துகிறார்.
காத்தாடி ராமமூர்த்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதனை இங்கே சொல்லாமல் விடுகிறேன். (அப்பொ இங்கே சொல்லப்பட்ட மத்த சேதி எல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன?? என்று நீங்கள் கோபப் பட வேண்டாம்..ப்ளீஸ்).. அப்பொ சொல்லிட்டா பிரச்சினை இல்லை தானே?
மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி இந்தப் பேர் எல்லாம் எப்படி வந்தது? அவர்கள் நாடகத்தில் நடித்த பாத்திரத்தின் பெயர் தான் பின்னர் நிலைத்துவிட்டது. காத்தாடி என்ற பாத்திரத்தில் நடித்து கலக்கிய ராமமூர்த்திக்கு காத்தாடி பறக்காமல் ஒட்டிக் கொண்டது தான் ஆச்சரியம்.
எனக்கு அந்த கவலை இல்லை.. கல்லூரி நாடகத்தில் பெண் வேடம் போட்டு தான் நடித்திருந்தேன்.. கலக்கினேன் என்று நானே எப்படி சொல்ல முடியும்? நண்பர்கள் கிரங்கித்தான் போனார்கள் (என் மேக்கப் பார்த்து..)
காத்தாடியின் இன்னொரு பெயர் தான் பட்டம். ரொம்பவும் மண்டையை ஒடெச்சி படிச்சி வாங்குறதுக்கும் பட்டம் என்கிறார்கள்.. ஆனா ஜாலியா செஞ்சி விளையாடற பொருளுக்கும் பட்டம் என்கிறார்கள். என்ன இது பெரிய்ய வெளெயாட்டா இருக்கே… விருதுக்கும் கூட பட்டம் தருகிறார்கள் என்றும் சொல்வதுண்டு..
இந்த பட்டம் என்றவுடன் ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வரும்.
உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல் போலே..
பட்டம் போல் அவர் பள்பளப்பார்…
நூல் போலே இவர் இளைத்திருப்பார்..
இரு வேறு உலகம் இது என்றால்..
இறைவன் என்பவன் எதற்காக??
இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன் தான் படைத்தானா?
இந்தப் பாடல் தரும் சேதியினைத்தான் நம்மூர் உலக நாயகன் கமல் சொல்றார் இப்படி: “அனாதை என்பவர்கள் கடவுளின் குழந்தை என்பது உண்மையாக இருக்குமானால், அந்த கடவுளுக்கே குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்”
முரட்டுத்தனமான நாத்திக வாதமாய் இருப்பினும் கூட, உண்மை அதில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
என்னாலெ காத்தாடி பத்தி, இப்படி நடிகர் திலகம் வரை தான் யோசனை செய்ய முடியுது. ஆனா… இதே மேட்டரை Mr கம்பர் யோசிச்சா…? அவர் எப்படி யோசிப்பார்? அங்கும் ஒரு திலகம் வருகிறது. கொஞ்சம் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு தான் வருவோமே!!
அனுமனின் வீரதீரச் செயல் பார்வையில் படுது நம்ப கம்பருக்கு. உத்துப் பாத்தார்.. சாவே வராத வரம் வாங்கிய தலைவருக்கெல்லாம் திலகம் மாதிரி இருந்தாராம் நம்ம அனுமன். (இப்பொ தெரியுதா..?? நம்மாளுங்க ஏன் நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் பெயர் வைச்சாங்க என்று!!)
அந்த வீரன், அரக்கியின் வாயில் புகுந்து குடல்களைச் சுற்றிக் கொண்டு வானத்தே உயர எழுந்தானாம். அதைப் பாத்த கம்பனுக்கு கயிறு நிலத்திலிருந்து புறப்பட்டு உயரப் பறக்கும் காத்தாடி மாதிரி இருந்ததாம்..
சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி சுடர்கொண்டு உடன் எழுந்தான்
மாகால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்.
அது சரி…. உங்களுக்கும் எதைப் பாத்தாவது
இப்படி காத்தாடி ஞாபகம் வருதா?? வந்தா சொல்லுங்க…