”காலணா காசு என்றாலும், கவர்ன்மெண்ட் காசு” என்று சொன்னார்கள் ஒரு காலத்தில். அதே காலணா சம்பளம் அரையணா என்று ஒசந்தவுடன், “அரையணா சம்பளம் என்றாலும் அரசாங்கச் சம்பளம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். கவர்ன்மெண்ட் ஸ்கூலா?, நோ எண்ட்ரி, அரசு பஸ்ஸா…? வேண்டாமெ,,, தர்மாஸ்பத்திரி…? லேது.. பில்குல் லேது என்று மக்கள் சொன்னாலும் இந்த அரசு வர்க்கத்திற்க்கு கல்யாண மார்க்கெட்டில் மட்டும் நல்ல பேரு.. (அவ்வப்போது ஃபாரின், ஐடி மாப்பிள்ளைகள் முந்திக் கொண்டு போனாலும் கூட) முதல் சாய்ஸ் நமக்குத்தான். (நான் ஒரு அரசு ஊழியன் என்று சொல்லவும் வேண்டுமோ) ஆகஸ்ட் 15 ல் மோடி அவர்கள் தன்னை, ப்ரதான் மந்திரி என்பதை விட ப்ரதான் சேவக் என்று சொல்லவே விரும்புவதாய்ச் சொன்னார். அப்படிப் பாத்தா, டெபுடி சீஃப் இஞ்ஜினியரான அடியேன், உப முக்ய சேவக் என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.
நாமெல்லாம் சேர்ந்து தான் அரசாங்கம். நமக்காகத்தானே அரசு என்பதெல்லாம், ஏன் இன்னும் நம் மனதில் ஏறவில்லை? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. 100 ஆண்டுகளுக்கு மேலாய் அடிமைப்பட்ட காரணம் என்று சொன்னாலும் கூட, மனமாற்றம், விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட தென்படலையே!! கல்லூரியில் படிக்கும் போது, ஹஸ்டலில் ஏதோ பிரச்சினை என்று கும்பலாய் வார்டன் ஆஃபீஸை உடைத்தோம். உடைத்த பணத்தை கணக்கு செய்து, அடுத்த மாசம் டிவைடிங் சிஸ்டத்தில் நம் மெஸ் பில்லோடு வந்து விட்டது.
நாம் உடைக்கும், எரிக்கும் பஸ்களும், உடைக்கும் கடைகளும், சாலை மறியல்களும், ஏதோ ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம் தானே தரும்!. அது பின்னர் வேறு வகையில், நம் தலையில் தானே விடியும்?. கவர்ன்மெண்ட் தானே என்று எவ்வளவு தடவை சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்போதும் அரசு வேறு, நாம் வேறு என்று தானே நினைக்கிறோம். நாமே அரசை ஏமாத்தி, கோல்மால்கள் செய்து, (நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு) அப்புறம் இலவசங்கள் பஞ்சப்படிகள் வாங்கிட்டு, விலைவாசியும் ஏத்திகிட்டு கடைசியில் என்ன இலாபம் நமக்கு?
என்னோட 28 வருட அரசு உத்யோகத்தில் கண்டறிந்த உண்மை இது தான். தவறான முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டு, அதனை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரு எந்திரன் தான், அரசு இயந்திரம். (பொதுவாய்ச் சொல்கிறேன்…யாரையும் குறிப்பிட்டு இல்லை…) சரி எது? தவறு எது? என்று தெரியாத, புதிதாய் பணிக்கு வரும் ஒரு நபர், தவறுகள் ஒன்றினை மட்டுமே கற்றுக் கொண்டு, அதனையே காலம் காலமாய் சரி என்று நம்பி வேலை செய்வோர் பலர். அதிலும் அரசு வேலையில் இரு பிரிவுகள் இருக்கும். தனக்கு ஆதாயம் தரும் வேலை. (அது பணமோ, மரியாதையோ, செல்வாக்கோ இப்படி எதுவானாலும் சரி). இன்னொன்று (தனக்கு) ஆதாயமற்ற வேலை. இதில் இந்த முதல் தர வேலை செய்ய, பலர் தயாராய் இருக்க, இரண்டாம் தர வேலை எப்போதும் ரெண்டாம் பட்சம் தான்.
அரசு, ஓர் அரசு ஊழியரிடம் எப்படி நடந்து கொள்கிறது? என்று பார்த்தாலே, அது பாமர மக்களிடமும் எப்படி நடந்து கொள்ளும்? என்பதை எளிதாய் விளங்கிக் கொண்டு விடலாம். இப்படித்தான் ஓர் அரசு ஊழியர், தன்னுடைய சர்வீஸ் புத்தகத்தைப் பார்வையிட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரினார். (இவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை தான்) தனது துறை இயக்குனரிடம் கேட்டு பதில் சொல்வதாய் பதில் வந்ததாம் அவருக்கு. தன் கீழ் பணி புரியும் ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் இரண்டு காப்பிகள் தயார் செய்தல் வேண்டும். ஒன்றை அரசும், மற்றதை அரசு ஊழியரும் வைத்திருக்க வேண்டும். வருடம் ஒரு முறை அவரிடம் அரசு காட்டி கையொப்பமும் பெற வேண்டும். ஊழியரின் பிரதியினையும் அப்டேட் செய்திட வேண்டும். இது தான் அரசு நியதி. அந்த விதியையும் பின்பற்றாமல் சக ஊழியரை அடிமைகள் போன்று நடத்தும் தவறான பாவம் தொடர்வது தான் உண்மை. இத்தனைக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல தெரியாமல் இருப்பதும் கண்கூடு. நிலை இப்படி இருக்க பாமரன் பாடு பெரும்பாடு தான்.
அப்படி இல்லாம மாத்தி யோசிச்சி, வித்யாசமாய் சகாயம் மாதிரி இருக்கப் பாத்தா, வித்தியாசமாய்ப் பாக்கிறாய்ங்க. அரசு ஊழியர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று, அவுட் ஸோர்ஸிங் முறையைக் கொண்டு வந்தார்கள். அதன் அவுட்புட் எப்படி இருக்கு?ன்னு பாக்கலாமே. எங்க ஆஃபீஸ் செக்கிருட்டி வேலையினை அவுட் ஸோர்ஸ் செய்திருந்தோம். ஏகமாய் புகார்கள். சரி ஒரு நாள் நாம செக்கீருட்டி வேலையெப் பாப்போம்னு நைட்டு 12.30 க்கு கிளம்பினேன் வீட்டைவிட்டு. பத்து இடங்களில் போனதில் 9 இடங்களில் ஜம்மென்று தூங்கிக் கொண்டிருந்தனர். இது கூட பரவாயில்லை. நைட்டுன்னா தூங்கப் படாதா? என்று கேள்வி வேறு. நடவடிக்கை எடுத்தால், தமிழனுக்கு தமிழன் நண்டு வேலை செய்கிறான் என்று பழி வேறு. என்ன செய்ய?
எல்லாம் மேலதிகாரி ரொம்ப மோசம். அவரு மட்டும் சரியா இருந்தா, டோட்டல் சிஸ்டம் சரியாயிடும். இப்படி ஒவ்வொருவரும் அதிகாரி புரோமோஷன் வரும் வரை தர்க்கம் பேசிட்டு, அப்புறம் எப்பொ ரிடையர்மெண்ட் வரும் என்று பென்சன் கணக்கு பாத்துட்டு இருப்பாய்ங்க.
அப்பொ அதிகாரி உண்மையில் எப்படித்தான் இருக்கணும்?
இதோ உங்களுக்காய் ஒரு பட்டியல்:
1. தன் கீழே வேலை செய்யறவங்க ரொம்பவே புத்திசாலிகளா இருப்பாய்ங்க என்கிறதை நம்பணும் மொதல்லெ.
2. புகையெப் பாத்தே, எங்கே நெருப்புங்கிறதெ சூப்பரா கண்டுபிடிக்கிற அறிவாளிகள் அவங்க ஊழியர்கள் என்கிறதெச் புரிஞ்சிக்கனும்.
3. சிலசமயம் அவங்கள விடவும் அறிவாளியாவும் இருக்கலாம்.
4. ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கனும்.
5. வெணும்ங்கிறவாளுக்கு ஒரு மாதிரிருயும், வேண்டாமெங்கிறவாளுக்கு வேற மாதிரியும் செய்யத் தெரிஞ்சிருக்கனும் (வக்கனையா வஞ்சனையா அதே ரூல்ஸ் வச்சி).
6. எதிர்க்கின்ற ஆட்களுக்கும் அவரவர் தகுதி அறிந்து பயன் தர்ர மாதிரி இருக்கனும்.
7. எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருக்கலாம் தப்பில்லை.
8. பேச்சு எப்பவுமே நல்ல பேச்சாவே இருக்கனும்.
கம்பரிடமிருந்து ஏதோ நோட்டிஃபிகேஷன் வந்ததாய் நல்ல சத்தம் ஒன்று சொன்னது. உடனே போய் திறந்து பாத்தேன்..
என்னப்பா… என்னோட சங்கதியெ சுட்டு எழுதிட்டு, ரொம்ப பீத்திக்கிற மாதிரி கீதே??
இல்லை…. கம்பர் அன்னாத்தெ…. உங்க பேரு சொல்றதுக்கொசறம் இருந்தேன்…அதுக்குள்ளெ… நீங்க வந்துட்டீக… இப்பொ சொல்லிடறேன்…
ஆமாம்ப்பா…ஆமாம்…. இந்த பாய்ண்ட் எல்லாம் கம்பர் கிட்டே தான் சுட்டது. கம்பர் காலத்திலெ எங்கே கவர்ன்மெண்ட் இருந்தது? ன்னு பாக்கீகளா?
அப்பொ வேகமா போய், கிட்கிந்தா காண்டத்தின் அரசியற் படலம் பாருங்க. சுக்ரீவனுக்கு இராமன் சொன்ன அட்வைஸ்… லேசா மாத்தி யோசிச்சா… அப்படியே அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்…
அப்பொ பாட்டும் படிக்கலாமே…
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு என்றுன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால்.
வேறு ஏதாவது சரக்கு கெடெச்சா வாரேன்… வரட்டுமா…